சை.கிங்ஸ்லி கோமஸ்
மகளிர் தின சிறப்புக் கட்டுரை Unforgettable Sri Lankan female poet Gajamon Nona இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் கூட்டத்தினரை சிறுமைப்படுத்துவதற்காக |
இலங்கை வரலாற்றில் களனி திஸ்ஸ அரசனின் புதல்வியான விகாரமகா தேவியை சித்தரிப்பது தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்துவதற்காக துட்ட காமினி என்னும் வீரப் புதல்வனை தவமிருந்து பெற்ற அன்னை என்னும் கருத்தினை மாத்திரம் மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்காக என்பதனை கண்டுள்ளோம் .மகா வம்சம் முதற் கொண்டு பாடப் புத்தகங்கள் வரை வரலாறுகள் இனவாத அடிப்படையில் திரிபு படுத்தப் பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். சிங்கள வரலாறும் அதில் பொதிந்திருக்கக் கூடிய மனித நேயங்களும் போராட்ட வரலாறுகளும் தனித்துவங்களும் தமிழ் மக்களால் உள்வாங்க இயலாமைக்கு முக்கிய காரணம் இந்த இனவாத செயற்பாடுகளே என்றால் மிகையாகாது.
இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் கூட்டத்தினரை சிறுமைப்படுத்துவதற்காக அல்லது நோகடிப்பதற்காக முயற்சித்திருப்பது தங்களின் இனவாத பிரதேச வாத மதவாத வர்க்க வாத உட் பதிவுகளை வெளி கொணர்வுகளானது எம்மில் பதிந்த கசப்பான அனுபவங்களாகும்.
இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துள்ள பெண் கதாப்பாத்திரங்களில் இலங்கைக்கு வெள்ளரச மரத்தினைக் கொண்டு வந்த சங்கமித்தை, தன்னை பொய்யான பழிச் சொல்லுக்கு உட்படுத்தியவர்களுக்கு எதிர்ப்பினைக்காட்டுவதற்காக நதியில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சமுத்ரா தேவி ,தமிழ் ஆக்ரமிப்பாளர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்து வந்த வலகம்பா என்னும் அரசனை கொல்வதற்கு துரத்தி வந்த போது குதிரை வண்டியில் இருந்து பாய்ந்து தமிழ் ஆக்ரமிப்பாளர்களை தனது புத்தி சாதூர்யத்தால் சோமா தேவி என்னும் பெண்ணே திசை திருப்பியதாக வரலாறுகள் எழுதப்பட்டுள்ளது இவரது பெயரால் சோமா வதி சைத்திய என்னும் பௌத்த ஸ்துபி கட்டப்பட்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது இந்த பெண்கதாப்பாத்திரங்களின் தியாகம் வீரம் ஆளுமை என்பவற்றை நாங்கள் குறைத்து மதிப்பிடலாகாது கொழும்பில் காணப்படும் விகாரமகா தேவி பூங்காவும் சோமவதி பௌத்த ஸ்துபியும் ஆண்கள் பெண்களை மதித்து அவர்களை வரலாறு பேச வேண்டும் என்ற காரணத்திற்காக நிர்மாணிக்கப் பட்ட அடையாள சின்னங்களே.;
இவர்களைத் தவிர சித்ரா தேவி, தோனா கத்தரினா ஆகிய பெண் கதாப்பாத்திரங்களும் இலங்கை வரலாற்றில் காணப் படுகின்றனர் இவர்களைத் தவிர இலங்கை வரலாற்றில் இடம் பெற்ற மற்றும் ஒரு பெண் கதாப் பாத்திரம் குவேனி அல்லது குவன்னா என்று அழைக்கப்பட்ட ரக்ச குலத்தைச் சேர்ந்த பெண்ணின் வரலாறாகும் விஜயன் என்னும் அரசனால் கைவிடப்பட்ட இந்த அபலைப் பெண்ணின் சோக வரலாறானது மனித இனத்தின் மறக்க முடியாத கரைப் படிந்த காவியமாகும் பெண்ணடிமைத்தனத்தின் கசப்பான ஒரு வரலாறாகும்.
சிங்கள இலக்கிய பரப்பில் மற்றும் ஒரு புரட்சிகர கதாப்பாத்திரமான மாத்தரை இலக்கியத்தின் மட்டற்ற கவிஞை என்று அழைக்கப்படும் கஜமன் நோனா பற்றிய ஆய்வு காலத்தின் தேவையாகும். தோனா இஸபெல்லா பெருமாள் கொர்நோலியா என்ற இயற் பெயர் கொண்ட கஜமன் நோனா சிங்கள இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழைப் பெற்றவராவார் 1758 ஆம் ஆண்டு கொள்ளுப் பிட்டியில் வீரதா முல்ல தொன் பிரான்சிஸ்குசேனாரத்ன குமாரப் nருமாள்;, பிரான்சிஸ்கோரு நோனா பபா ஆமினே ஆகியோரின் புதல்வியான இவர் தனது தந்தையின் தொழில் காரணத்தினால் கொழும்பில் பிறந்தாலும் அவர் வாழ்ந்ததும் வளர்ந்ததும் அம்பந் தோட்டை, மாத்தரை போன்ற பகுதிகளிளேயாகும். 1750 காலக்கட்டம் இலங்கை சிங்கள இலக்கியத்தின் இருண்ட காலம் என்று சித்தரிக்கப் படுகின்றது ஆங்கிலேயரின் ஆட்சியின் இரும்புக் கரங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் அல்ல கலைக் கலாச்சார பண்பாடு என எல்லாவற்றையும் பிடித்துவைத்திருந்த காலமாகும் இவர் சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் பெயர் பெற்றவராக இனங் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் “சிறு பிள்ளையான கஜமன் நோனா ஒருநாள் நீர் எடுப்பதற்காக கிணற்றிற்கு சென்று தனது செப்புக் குடத்தில் நீரை எடுத்து கிணற்று ஓரத்தில் வைத்து விட்டு இயற்கையை ரசித்துக் கொண்டு இருக்கும் போது அந்த குடம் மாயமாய் மறைந்ததனைக் கண்டு அவர் உடனடியாக பாடிய கவிதை
“சின்ன செப்புக் சின்ன செப்புக் சின்ன செப்புக் குடம்
நீரை அள்ளி கிணற்றின் விளிம்பின் மீது வைத்தக் குடம்
மானம் அற்ற கயவன் ஒருவன் மறைத்த இந்த குடம்
வீடு போக வேண்டும் அதனால் வேண்டும் எனது குடம்”
என்ற கவிதையே அந்த ஊர் மக்கள் அவர் ஒரு சிறந்த கவிஞை என்று அடையாளப் படுத்திய கவிதையாகும்
சோக மாலய என்னும் இவரது கவிதைத் தொகுப்பு மிகவும் புகழ் வாய்ந்த ஒரு தொகுப்பாகும் இதைத் தவிர இயற்கையை நேசித்த இவர் இயற்கை தொடர்பான பல படைப்புக்களை பாடியுள்ளார் என்று துனுபிடியே நுகருக மேகிளா என்னும் ஆய்வாளர் தனது எழுத்துக்களில் கூறியுள்ளார் காட்டு யானை ஒன்றின் தாக்குதலுக்குள்ளாகி அகால மரனமடைந்த தனது தந்தையாரின் நினைவாக இவர் எழுதிய கவிதைகள் நெஞ்சை உருக்கும் படைப்புகளாகும்.
தமிழ் பண்பாட்டு கலாச்சார அம்சங்களுக்கு ஈடாக சிங்கள கலாச்சாரத்திலும் பெண்ணடிமைத்தனமும் பிற்போக்கு கருத்தியல்களும் எவ்வாறு பெண்களை கொடுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த உதாரணமாக கஜமன் நோனா காணப்படுகின்றார் முதலாவது முறை திருமணமாகி இளம் வயதிலுயே கணவனை இழந்த இவர் மீண்டும் ஒரு முறை திருமணம் முடித்தும் அவரது திருமண வாழ்க்கைத் துணைவர் மரணமடைந்துள்ளார் அது மாத்திரம் அல்லாது அவரது மூன்று புதல்வர்களும் அகால மரணமடைந்ததன் காரணத்தினால் சமூகம் இவரை ராசியில்லாத பெண் என்று புறக்கணித்தது இவரது இலக்கியங்களில் வெளிப்படுகின்றது.
இவரது அனேகமான கவிதைகள் எதிர்ப்பாட்டு பாணியில் படைக்கப்பட்டவை என்பது மற்றும் ஒரு சிறப்பம்சமாகும் ஆனாதிக்க கவிதைப் படைப்புகளுக்கு எதிராக படைக்கப் பட்ட பல கவிதைகளிளே விமர்சன பாங்கும் போராட்ட குணாம்சமும் துணிச்சலும் பதியப்பட்டுள்ளமை வியத்தகு விடயமாகும்.நாகரீக ஆடைகளை அனிந்து கவிதை படைப்புக்களை இலக்கிய உலகிற்கு படைத்த கஜமன் நோனா சமூகத்தின் பார்வையில் ஒடுக்கப்பட்ட பெண்ணாக இருந்தமையே அவரது படைப்புக்கள் உடைப்பினை ஏற்படுத்தக் கூடிய புரட்சிகரப் படைப்புகளாக பிரசவிக்கக் காரணமாகியது எனலாம்.
1871 ஆம் ஆண்டுபோலந்து நாட்டில் பிறந்து சிறு வயதிலேயே கவிதை படைத்து உலக புகழ் கவிஞை ரோசா லுக்ஸம்பர்க் தனது 13 ஆவது வயதில் ஜெர்மனிய சக்கரவர்த்தி முதலாம் வில்கெம் வந்திருந்த போது அவருக்கு நையாண்டி கலந்த வரவேற்பு கவிதை ஒன்றினைப் பாடியதாக வரலாறு கூறுகின்றது. ரோசா லுக்ஸம்பர்க் ஒரு கம்மியுனிச போராளி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாட்டின் ஒப்பற்ற கவிஞை கஜமன் நோனாவினது கவிதைகளும் கூட ரோசாவின் கவிதைகளுக்கு சமாந்தரமா காணப்படுவது அவதானிக்க வேண்டிய விடயங்களாகும் தனது இறுதி காலங்களிலே சமூகத்தின் விமர்சனங்களால் துன்புறுத்தப்பட்ட கஜமன் நோனா தனிமையில் வாழ்ந்து 1814 ஆம் ஆண்டு டிசம்பர்15 ஆம் திகதி இயற்கை எய்தினார்.இவரது மறைவிற்கு பின் சிங்கள இலக்கியத்தில் இவரது பெயர் புகழின் உச்சத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
மனித குல வரலாற்றில் எதிர்ப்பினைக் காட்டுவதற்காகவும் ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் குரல் கொடுத்தவர்களுமே வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள்.இதற்கமைய அனைத்து கணவனையிழந்தவர்களுக்காகவும் கலாச்சாரத்தின் பேரில் ஒடுக்கப்படும் பெண்களுக்காகவும் தனது கவிதைகளின் மூலம் மீறலை ஏற்படுத்திய கஜமன் நோனாவின் கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டு எல்லோராலும் வாசிக்கப் பட வேண்டியதும் கட்டாயமாகும். பெண்களை கௌரவிக்கும் மகளிர் தினங்களின் போது கஜமன் நோனா போன்ற துணிவு மிக்க பெண்கள் ஞாபகப் படுத்த வேண்டியதும் எமது பொறுப்பாகும்.
உசாத்துணைகள்
மகாவம்சம் -சமுதாயம் பப்டலிகேசன் சென்னை
சிர லங்காவே சிரேஸ்ட காந்தாவோ- ஆர்.எம்.எச். எஸ்.ரத்நாயக்க
ஈழத்தின் கதை-கே.வி.எஸ் வாஸ்
கஜமன் நோனா சரிதய
ரோசா லுக்ஸம்பர்க்- என்.சீ.பி.எச்