உலகமயமாக்கம்: இந்தியாவில் பாற்பண்ணை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு
சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி ஷூட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.உலகமயமாதல் என்பது அதனால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்கள் குறித்து கண்மூடித்தனமான இருக்காமல் மனித உரிமைகளையும் அவற்றின் நீடித்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளில் உலகமயமாதலில் மனித உரிமைகள் சார்ந்த விழுமியங்களை உறுதிப்படுத்துவது புதிய கோணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடற்ற உலகமயமாதலின் அடையாளங்களாக உலகில் பரவலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது குறித்து இப்போதாவது கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைத்துவிடுகின்ற இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக நாடுகளுக்குள் உலகமயமாக்கம் நுழைகின்றது. இவ்வாறான இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கைகள் உலகஅளவில் 6000 வரை அதிகரித்திருப்பதை ஐநா சுட்டிக்காட்டுகின்றது.
இந்தியாவில் ஒன்றரை கோடிப் பேரின் வாழ்வாதாரம்
உலகமயமாக்கம்: இந்தியாவில் பாற்பண்ணை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு
நாடுகள் இவ்வாறான உடன்பாடுகளை எட்டும்போது, மனித உரிமைகள் விவகாரத்தில் அவை எந்தளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதை மதிப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று உணவுக்கான உரிமைகள் தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார். பொருளாதார நிலைமை மாறுகின்ற தருணத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அந்த முதலீட்டுத் திட்டங்கள் எவ்வாறான இலக்குகளை வைத்திருக்கின்றன என்பதை ஹியுமன் ரைட்ஸ் இம்பெக்ட் அஸஸ்மென்ட் என்கின்ற மனித உரிமைகள் தொடர்பான மதிப்பீடு உறுதிப்படுத்தவேண்டும் என்பது அவரது கருத்து.
உணவுக்கான உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையுள்ள அரசுகள், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது ஐநா நிபுணரின் கோரிக்கை. ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் வரும் மார்ச்சில் கூட இருக்கின்றது. இதன்போது, இவ்வாறான மதிப்பீட்டுக்கான வழிகாட்டல் நெறிகளை ஐநா நிபுணர் சமர்ப்பிக்கவுள்ளார்.
இவ்வாறான மதீப்பீடொன்றை அமுல்ப்படுத்துவது குறித்து இப்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேசிவருகின்றன. இந்தியாவில் பாலுற்பத்தி மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலை மட்டுமே வாழ்வதாரமாக நம்பியிக்கின்ற சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் ஏழை மக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக வரிச்சலுகைகள் பாதித்துள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.