கொப்பித்தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?

ஆழியாள் அவுஸ்ரேலியா

 என்ர ஊர் சின்ன ஊர்

பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா
அத்தை சித்தி சித்தப்பாக்களாலும்,

கிளி மாமி, விஜி மாமி
வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி
சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.
அம்மம்மா, அம்மப்பாவும்
அப்பப்பா, அப்பம்மாவும்
தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள்.

ஒரு நாள்
மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை
மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள்.

பெரிய மாமாவும், ராஜி அத்தையும்
வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர்.  

பிறகு
ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார்.

வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா.

சேகர் சித்தப்பா காணாமல் போனார்.

சித்தி சின்னாபின்னமாகிச் செத்துப்போனா
(என்ரை ஆசைச் சித்தி)
ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள்.

சொக்கா அங்கிள் துரோகியாய்த் தொங்கினார்.

நோர்மல் சாவு அப்பப்பாவுக்கு.

சுவிஸில் கிளி மாமி
விஜி மாமியும் மாமாவும் கனடா.

இரண்டு பக்கமும்  ஷெல் அடிச்சு பல தலைகள் சிதறிப் போச்சு.

இப்ப
பென்னாம்பெரிய உலகத்தில் இருக்கிறேன் நான் – என்போல
நிறையச் சிறுவர்களோடு.

எங்களைச் சுற்றிலும் முள்வேலி 
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி – எங்க
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி.

 30ஃஜூன்ஃ2009

இக்கவிதை காலம் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது

     

     

     

2 Comments on “கொப்பித்தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?”

  1. கொப்பித்தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?
    என்ற தலைப்பிலமைந்த ஆழியாழின் கவிதை பிடித்திருக்கிறது. இக்கவிதை எனக்குள் நூதனமாய் வலிகொள்ளச் செய்கிறது. இந்த கவிதையை தந்த ஊடறுவுக்கு பணிதொடர வாழ்த்துக்கள்.

    – சுதேசிகன்

  2. இந்த கவிதையை தந்த ஊடறுவுக்கு பணிதொடர வாழ்த்துக்கள்.

    ஒரு மூன்று மணி நேர சினிமாவில் ஆரம்பக் காட்சியில் தந்தையை கொன்ற வில்லனை கடைசியில் கொல்லும்போது கைதட்டுகிறீர்கள். ஒரு இனத்தையே அழித்ததை எப்படி மறந்துவிட முடியும்

    thanks – anpudan Nadhesh Nadheshalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *