யோகா-ராஜன்
இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே! இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் மறைக்கப்பட்டிருக்கும். |
ஊடறு சக விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இக் கவிதைத் தொகுதி குறித்து தமது மறைமுகமான எதிர்வினைகளை வௌ;வேறு வடிவங்களில், வேறுபட்ட முறைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் ஐரோப்பிய மாற்றுக் கருத்தாளர்கள் சிலர்! இவர்களது இந் நடைமுறை இதுவரை புலிகளிடம் மட்டுமே உறைந்திருப்பதாகக் கருதிவந்த “கறுப்பு-வெள்ளைச்´´ சிந்தனைமுறை” மாற்றுக் கருத்தாளர்களிடமும் புரையோடிக்கிடக்கிறதா என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது!
அதேவேளை புலி ஆதரவுசார் அமைப்புக்கள், பத்திரிகைகள் இந் நூல் வெளியீட்டாளர்கள் குறித்த எவ்வித பிரக்ஞையும் இன்றி, விதையிருக்க சதையை மட்டும் கவர்ந்திழுத்து பெருமிதமடைகின்றனர்.
இந்நிலையில் இங்கு எமது பணி தவறுகள், குறைபாடுகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் இந் நூல் குறித்த முக்கியத்துவத்தை ஆய்வதே!
ஒரு கோடி கவிதைகளால்
உலகம் போற்றும்
பெருங் கவிஞன் எனநாமம்
பெற்று விட்டால் – அஃது
ஒருசொட்;டு இரத்தத்தினை
உரிமைப் போரில்
தருபவன் முன்னே – வெறும்
தூசு… தூசு… தூசு…
1968, 70களில் நிகழ்ந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்தின் போது கவிஞர் சுபத்திரனின் உணர்வுகளில் பிறந்த தற்பெருமையிலா வரிகள் இவை.
பெயரிடாத நடச்சத்திரங்கள் கவிதைத் தொகுதிக்குரிய இப் பெண்கள் சார்ந்திருந்த அமைப்பின் அல்லது இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகளைக் கடந்து அவர்களது விடுதலை உணர்வுகளும், தியாகங்களும் மதிப்புக்குரியவை. மேலும் இந்நூலை அலங்கரிக்கும் அவர்களது ஆக்கங்கள் அவர்களது கொள்கைகளைப் பிரகடனம் செய்பவை அல்ல. இன்று இவற்றை வாசிக்கின்றபோது மிகுந்த கவலையைத் தருவனவாகவும், மனதில் ஏமாற்றங்களை நிரப்புபவையாகவுமே அமைந்துள்ளன. அத்துடன் இக் கவிதைகள், இப் பெண் போராளிகளின் உணர்வுகளைப் பதிவு செய்கின்றன! போர் நிகழ்வுகளை விவரணம் செய்கின்றன! இப் பெண்களின் பெண் ஒடுக்குமுறை சார் சுய அனுபவங்களையும் பகிர்கின்றன! இவற்றையெல்லாம் மனங்கொள்வதன் மூலமே இந் நூலின் முக்கியத்துவம் குறித்து எம்மால் உணரமுடியும்.
அடிப்படையில் இது, ஈழப் பெண்களுக்கான ஒரு வரலாற்றுப் பதிவு. உலகப் பெண் போராளிகள் வரிசையில் தமிழ்ப் பெண்களையும் இணைத்துக்கொள்வதற்கான முன்முயற்சி. கட்டுப்பெட்டித்தனமான தமிழ்க் கலாச்சாரச் சூழலை உடைத்துக்கொண்டு வெளிவந்த பெண்களின் துணிச்சலைப் பறைசாற்றுகிறது இது என்பதிலும் சந்தேகமில்லை. இன்றும் கிடுகு வேலிக்குள் இறுகிக் கிடக்கும் எமது இளந்தலைமுறைப் பெண் உறவுகளை துணிச்சலுடன் சிந்திக்கத் தூண்டு வதற்கும் இந்நூல் துணைபுரியும் என்பதையும் மறுத்துவிடமுடியாது.
இவை அனைத்தையும் விட இன்றைய சூழலில் இந் நூலின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதற்கான அளப்பரிய காரணமாக சமூகத்தில் இவர்களுக்கிருக்கும் அங்கீகாரமின்மையை நோக்கலாம்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பெண் போராளிகளுக்கான தேவையை உணர்ந்து, அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கு முனைந்தபோதும், பெண்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகள் குறித்து பெரிதாகச் சிந்தித்தவர்கள் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!
இதன் விளைவு, ஈழவிடுதலைப் போராட்டம் தோல்விநிலையை அடைந்ததைத் தொடர்ந்து சமூகத்தில் இப் போராளிகளுக்கான அங்கீகாரம் குறித்து நோக்குகின்றபோது மிகவும் வியப்பாக இருக்கிறது. புலிகள் பலமாக இருந்துபோது எள்ளைக் கேட்டால் எண்ணையைக் கொடுப்பதற்குத் தயாராக இருந்து, கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்த இச் சமூகம், இன்று அரசினால் அங்கீகரிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களைக் கூட தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு பெருஞ் சிரமப்படுகிறது! குடும்பத்தின் தேவை கருதியும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஆண் போராளிகளை இலகுவில் இணைத்துக்கொள்ளும் இச் சமூகம், பெண் போராளிகளை அங்கீகரிப்பதில் மிகுந்த சிரமத்தைக் காட்டி வருகிறது. அவர்களை ஒதுக்கிவைப்பதையே முடிவாகக்கொள்கிறது!
சமூகத்தில் பெண் போராளிகள் மீதான இவ் ஒதுக்குதல் நடவடிக்கைகள், சமூக நெறிகளுக்கு அப்பாற்பட்ட முறைகளில் அவர்களைச் செயற்பட வைக்கின்றன என்பதை பல செய்திகள் மூலமும் வேறுபல வழிகளிலும் நாம் அறிந்துகொள்கிறோம். மேலும் விரக்தி மனநிலையை உருவாக்கக்கூடிய இந் நடவடிக்கைகள் அவர்களை, சமூகத்தின் மீதான வன்முறையாளர்களாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் இப் பெண்கள் சார்ந்திருந்த அமைப்புக்கும் அவர்களுக்கும் இடையிலான விமர்சனங்களைத் தூர வைத்துவிட்டு, அவர்களை சமூகத்துடன் மீள் இணைவாக்கம் செய்வதற்கான முன்முயற்சிகளில் ஈடுபடுவதே தமிழ்ச் சமூகத்தின் முன்னேறிய பிரிவினர்கள் (பெண்கள், ஆண்கள்) அனைவரதும் உடனடிக் கடமையாகும். அத்தகைய அவசியமும் அவசரமும் மிக்க பணியினைத் தொடர்வதற்கும், முன்னோக்கி நகர்த்துவதற்கும், (எமது தமிழ்ச் சகோதரிகளின் ஆற்றல்களை விவரணம் செய்யும்) போராளிப் பெண்களது இக் கவிதை நூல் மிகுந்த உதவிபுரியும் என்பதே இந் நூலின் இன்றைய முக்கியத்துவம் ஆகும்.
இருந்தபோதும் நாட்டில் எமது சமூகத்தின் மத்தியில் இக் கவிதைகளைக் காவிச் சென்று இப் பெண்கள் பற்றிய திறன்களைப் பரப்புரை செய்வதிலேயே இதன் முழுமை தங்கியிருக்கிறது. இத்தகைய சமூகக் கடமையை நிறைவுசெய்வதற்கு, வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும், பெண்கள் அமைப்புக்களும், சமூக இயக்கங்களும் முன் வரவேண்டும். அப்போதுதான் அரசிடமிருந்து வரக்கூடிய எதிர்வினைகளுக்கும் முகங்கொடுக்க முடியும். இல்லையேல் பத்தோடு பதினொன்றாக இந் நூலும் நூல்நிலையங்களிலோ, தனிநபர் வீடுகளிலேயோ உறங்கு நிலைக்குச் சென்றுவிடும்.
வரலாற்றுப் பதிவு என்ற வகையில் இந் நூல் சில வரலாற்றுத் தவறுகளையும் சுமந்துகொணடுதான் வெளிவந்திருக்கிறது என்பதும் உண்மையே! புலிகளினால் தடைசெய்யப்படுவதற்கு முன்புவரை விடுதலை உணர்வு மிக்க பெண்கள் பலர் வௌ;வேறு இயக்கங்களுடன் தம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டனர். அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் தம்மைத் தியாகித்துக்கொண்ட பெண்களும் உளர். இவர்களில் சிலர் சிறந்த எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் கூட அறியப்பட்டனர். இவர்களின் ஆக்கங்களை இந் நூலில் இணைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச தேடலைக்கூட ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு கண்கூடு. இத்தகைய போராளிக் கவிஞர்களில் நன்கு அறியப்பட்டவர் கவிஞர் செல்வி அவர்கள். (புலிகளின் வதைகளுக்குட்பட்டு இவர் இறந்தார் என்பது பலரும் அறிந்த செய்தி.) இவரது கவிதைகளில் சில வரிகளைக்கூட ஈழப் பெண்போராளிகளின் இக் கவிதைத் தொகுப்பு தாங்கியிருக்கவில்லை என்கின்றபோது அவர் (செல்வி) ஈழப் பெண்போராளிகள் வரிசையில் இருந்து இயல்பாகவே தூக்கி வீசப்படுகிறார். இதை மிக வருத்தத்துக்கும் வேதனைக்குமுரிய வரலாற்றுத் தவறாகவே எண்ணமுடிகிறது.
இன்றைய சூழலில் தனித்து விடப்பட்டிருக்கும், இளந்தலைமுறைப் பெண்போராளிகளின் நலன்களை கருத்தில்கொண்டு, அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை முன்னிறுத்தி, மேற்படி தவறுகளை அசைபோட்டுக்கொள்ளும் அதேவேளை இந் நூலின் முக்கியத்துவத்தை உணர்வோம்! உயர்த்துவோம்!
இன்னொருவகையில் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே! இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அவ்வகையில் இத் தொகுப்பு ஊடறு சக விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தமையை மனதில் கொண்டு மாற்றுச் சிந்தனையாளர்கள் திருப்திப்படவேண்டும்.