சந்தியா (யாழ்ப்பாணம்,இலங்கை)
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் ஏன் அமைதியாய் இருக்கின்றனர் என மனித உரிமை ஆய்வுகளுக்கான இல்லத்தின் ((Home for human rights research)) தலைவர் செரின் சேவியர் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று மிகவம் அதிகமாகவே பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் கிறிஸ் பூதங்கள் என்ற மர்மமனிதன் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதே வேளை பெண்களுக்கான ஊடக சேகரிப்பு இயக்குனர் குமுதினி சாமுவேல் (Director for women media collective), செபாலி கொட்டகொட, ரோஹினி விஜேயசிங்க ஆகியோரும் இதன் போது கருத்துத் தெரிவித்தனர்.
கஹவத்தையில் இரண்டு வயோதிபப் பெண்களின் கொலையை அடுத்து பெண்களுக்கெதிராக விளைவிக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் பாரியளவிலான பேச்சுக்கள் இன்று பரவலாக எழுந்துள்ளன. குறிப்பாக கஹவத்தையில் 2006ஆம் ஆண்டிலிருந்தே பெண்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.அப் பகுதியில் நீதி உண்மையில் செயற்பட்டிருந்தால் இன்று அப் பகுதியில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்திருக்கும்.
நீதியை நிலை நாட்ட வேண்டிய பொலிஸார் என்ன செய்கின்றனர் என வினா எழுப்ப வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.இன்று உடனடியாக தோன்றியது ஒன்றல்ல இவ் கிறிஸ் பூதங்கள். கடந்த பல வருடங்களுக்கு முன்னமே இவ் கிறிஸ் பூதங்கள் கொழும்பில் நடமாடித்திரிந்துள்ளன.ஆனால் அந்த வருடங்களோடு அவை அடிபட்டு போன விடயங்களாகவே உள்ளதையொழிய அதற்கு காரணமாணவர்கள் யார் என்பது வெளிவரவில்லை.
பொதுமக்கள் பொலிஸார் மீது வைத்துள்ள நம்பிக்கை இவ் கிறிஸ் பூதங்களின் சம்பவங்களால் படிப்படியாக குறைந்த வண்ணமுள்ளன.எனவே கிறிஸ்பூதங்கள் தொடர்பிலும் அதற்கு காரணகர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாக பொலிஸார் கண்டுபிடித்து தம் மீது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவர்களது கடமையாகும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.