அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தின் அழைப்பின்பேரில் அங்கு கூடிய மட்டு நகர் பெண்கள் அமைப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடங்கியிருக்கும் கிறிஸ் மனிதன், மர்ம மனிதன் பற்றிய நிலவரங்கள் கிழக்கு மாகாண பெண்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கிறிஸ் மனிதன் பல பெண்களை துரத்தி அவர்களை பயமுறுத்துவதாகவும் இதனால் பல இளம் பெண்கள் பீதியில் வாழ்வதாகவும் மர்ம வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒருமித்த குரலாக ஒலித்தன.
இவ் வன்முறைகளில் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் வைத்தியசாலையிலும் பொலிஸ் நிலையங்களிலும் மிகவும் அநாகரீகமாக நடத்தப்படும் நிலை பற்றி சுட்டிக்காட்டிய பெண்கள் அமைப்புக்கள் தங்களது கண்டனத்தையும் தெரிவத்துக் கொண்டனர்.