இலங்கையில் அண்மைக்காலமாக ”கிறீஸ் பூதங்கள்” என்ற பெயரில் சில மர்ம நபர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.ஆகவே இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பெண்கள் அமைப்புக்கள் கோரியுள்ளன. இது குறித்து கொழும்பில் பெண்கள் அமைப்புக்களால் செய்தியாளர் சந்திப்பு ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டிருக்கின்றது. ‘மர்ம மனிதர்களால் பெண்களுக்கே பாதிப்பு’
இலங்கையில் ”கிறீஸ் பூதம்” என்ற மர்ம மனிதர்களால் பெண்களே பாதிக்கப்படுவதாக பெண் உரிமைச் செயற்பாட்டாளர் மேகலா சண்முகம் கூறுகிறார். இலங்கையில் பல பகுதிகளிலும் கிறீஸ் பூதங்கள் என்ற பெயரில் தொடருகின்ற வன்செயல்கள் பெரும்பாலும் பெண்களையே இலக்குவைத்து நடத்தப்படுவதால், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் செய்தியாளர் சந்திப்பில் கோரப்பட்டுள்ளது.
அது மாத்திரமால்லாமல், இந்த விவகாரம் மேலும் இடங்களுக்கு பரவுவதும் தடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் அரசாங்கமும், பொதுமக்களும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து தமிழோசையிடம் பேசிய பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரான மேகலா சண்முகம், சமூகத்தில் பலவீனமான நிலையில் உள்ள பெண்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதன் மூலம் மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப முயலுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.