ஊடகவியலாளர் சுவாதி
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் வேதனை அடைந்தேன் |
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் வேதனை அடைந்தேன் என மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுவிஸ் சூரிச் நகரில் சிவராம் ஞாபகார்த்த மன்றம் நடத்திய சிவராம் நினைவு கருத்தரங்கில் ’யுத்தத்தின் பின்னான இலங்கையில் நீதியும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பில் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ உரையாற்றினார். இந் நிகழ்வில் பல ஊடகவியலாளர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் நிமல்கா பெர்னாண்டோ உரையாற்றுகையில், சிறிலங்காவில் இன்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகிய வண்ணம் உள்ள யுத்தத்தின் பின்னான யுத்தத்திலும், குடிமக்களின் செயற்பாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ள உயிர் வாழும் உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்காகவுமாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் சிவராம் எம்மோடு தொடர்ச்சியாக இணைந்திருந்தார். சிவராம் தான் நம்புவதை அல்லது தான் எதற்காகப் பிறந்தாரோ அதை கூறவும் எழுதவும் செய்தார்.
தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமைக்காவும், தன்னுடைய இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அந்த மனிதரை இலங்கையில் சட்டம் இயற்றும் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் சடலமாக மீட்டோம். சிவராமை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. சிவராமை படுகொலை செய்தவர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம், ஆனால் கிருஷாந்தியை கொலை செய்தவரை தவிர வேறு எந்த கொலையாளிக்கும் தண்டனை வழங்கப்பட்டது கிடையாது. அதற்கு விதிவிலக்காக கொலையாளிகள் மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களுக்கு பதவி உயர்வுகளும், இராஜதந்திரிகள் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் யுத்தத்தின் பின் இலங்கையில் நடக்கும் யுத்தம்.
இந்த முரண்பாட்டின் பல்வேறு கட்டங்களிலும் பயணித்த ஒரு சமாதான செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சமாதானமென்பது வெறுமனே எதிராக கருத்து கூறுபவர்களின் குரல்களை அடக்குவது அல்ல எனவும், பதிலாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலும் ஏற்றுக்கொள்வதும், சமமான உரிமைகளுடன் ஏனைய சமூகங்களுடன் வாழ்வதுமே என்பதை தெற்கில் உள்ள சிங்கள சமூகத்திற்கு விளக்க முயற்சித்தேன்.
இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாறியுள்ள ஒரு நாட்டில் இருந்து வருகை தந்த துயருறும் சமூகமாக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம். உங்களில் பலர் உண்மைகளை சொன்னதற்காக, மனித உரிமைகளை பேசியதற்காக நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்களாக உள்ளீர்கள். சிறிலங்காவை யுத்த களமாக மாற்றிய அரசியல் தலைவர்களையும் அவர்களது குண்டர்களையும் சகோதரர்களையும் சுட்டிக்காட்டவும் அம்பலப்படுத்தவும் அச்சமற்றவர்களாக உள்ள போதிலும் நாமும் கூட இந்த பொறுப்பை ஓரளவு ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
யுத்ததிற்கு முதலில் பலியாகும் விடயங்களில் ஒன்று உண்மை. யுத்த பிரதேசத்திற்கு செல்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததுடன், வெளிப்படையாக பேசுபவர்கள் குறிவைக்கப்பட்டனர். தான் கொலை செய்யப்படலாம் என ஒரு சில தினங்களுக்கு முன்னரே எதிர்வு கூறியிருந்த லசந்த விக்கிரமதுங்காவின் கொலையானது இத்தகைய தாக்குதல்களுக்கான ஒரு மனதை நெருடும் காட்சியாக விளங்குகிறது.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் யுத்தத்தின் பின்னான இலங்கை எது? குறியீடுகளின் நாடு, குதூகலிக்கும் நாடு, பால்சோறு உண்ணும் சிங்கக்கொடி ஏந்திய மக்களை கொண்ட, உலக கிண்ண போட்டிகளின் போது கன்னங்களில் சித்திரம் வரைந்த மனிதர்களைக்கொண்ட நாடு, கடந்த கால நிகழ்வுகள் ஒரு அரசவை நிகழ்வாக மாற்றப்பட்டு மாளிகையில் உள்ள கோமாளிகளால் மணி முடியொன்று உருவாக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம்.
யுத்தத்தின் பின்னான காட்சிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை குறுகிய வளமற்ற முகாம்களில் சிறை வைக்கப்பட்டதையும், ஆயிரக்கணக்கானோர்; இனந்தெரியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்படுவதையும், தினமும் பல நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் இருந்து காணாமற் போவதையும் ஊடகவியலாளரக்ள் கொல்லப்படுவதையும் தாக்கப்படுவதையும் எமது கண்களில் இருந்து மறைத்து விட்டன. யுத்தம் முடிவடைந்து விட்டது.
ஆனால் யுத்த செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2010இல் 201 பில்லியன் ரூபாவாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2011 இல் 214 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. தர்க்க ரீதியில் யுத்தத்தின் பின்னான சூழலில் பாதுகாப்பு நிதியில் இத்தகைய அதிகரிப்பு நிகழக்கூடாததும் அவசியமற்றதுமாகும். ஆனால் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டது மட்டுமன்றி இராணுவத்தின் எண்ணிக்கையும் 3 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி யாவும் எங்கு செல்கிறது என இலங்கையில் உள்ள அரசியல்வாதி ஒருவரிடம் கேட்டேன். யுத்த தளபாடங்களை வாங்கவும் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படுவதாக சாதாரணமாக பதில் கிடைத்தது. இது ஒரு அசாதாரணமான வேற்றுமை. இலங்கை ஒன்றல்ல இரண்டு துரித பரிமாணங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு தோல்வியுற்ற ஜனநாயகத்திலிருந்து குடும்ப ஆட்சியை நோக்கி மட்டுமன்றி ஒரு தேசிய பாதுகாப்பு அரசை நோக்கியும் அது சென்று கொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னான இலங்கையில் வடக்கில் இராணுவ மயமாக்கம் துரிதகதியில் நடைபெறும் அதேவேளை தெற்கில் உறுதியான மற்றொருவகை உத்தியில் இராணுவ மயமாக்கம் நடைபெறுகிறது.
வடக்கில் தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப் படுகின்ற அதேவேளை புதிய முகாம்கள் நிறுவப்படுவதுடன் இராணுவ குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இராணுவ தினத்தில் இராணுவ கொடிகளுக்கு ஆசி வேண்டி சிறிலங்கா மகாபோதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக்குறைந்தது ஒரு இராணுவ டிவிசனையாவது நிறுத்துவதுடன் ஒரு விசேட அதிரடிப்படை முகாமை நிறுவப்போவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
வன்னியில் மீளக்குடியேற்றம் என்பது கூட ஒருவகையில் இராணுவ மயப்படுத்தலாகவே அமைக்கப்பட்டு வருகிறது. வன்னிக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலையையும் இராணுவ மயமாக்கலின் அளவையும் எமக்கு உணர்த்துகின்றன.
மீளக்குடியமர்வு என்பது வன்னியில் இராணுவ மயமாக்கலின் ஒரு பகுதியே. துரித மீள்குடியேற்றம் பற்றி அரசாங்கம் பேசிக்கொண்டிருக்கையில் உண்மையில் மீளச்செல்லும் மக்களின் கிராமங்களைச்சூழவுள்ள நிலங்கள் இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படுகின்றன.
மீள்குடியேற்றம் செய்யப்படுபவர்கள் நாடமாடும் சுதந்திரம் அற்றவர்களாக உள்ளதுடன் தீவிர கண்காணிப்புக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த பகுதிக்கு செல்பவர்கள் அனுமதி பெற வேண்டி உள்ளதுடன் சிலவேளைகளில் இராணுவத்தினர் அவர்களை கையடக்க தொலைபேசிகளில் படமும் பிடிக்கின்றனர். அங்குள்ள சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தையே எனக்கு நினைவூட்டுகிறது என கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தனது உரையில் தெரிவித்தார்.