-சந்தியா கிரிதர் –
—
எத்தனை முறை துப்பாக்கிகளுக்கு
இறையாக வேண்டும்
எத்தனை முறை வெடிகுண்டுகளுக்கு
சதைப்பிண்டமாக வேண்டும்
எத்தனை முறை வெறுப்பு பிழம்புக்கு
சாம்பலாக வேண்டும்
எத்தனை முறை கொடூர வன்மத்துக்கு
பலியாக வேண்டும் எத்தனை முறை கறைபடிந்த சாலையில்
பயணிக்க வேண்டும்
எத்தனை முறை வெறிச்சோடிய வீதியில்
நடைபிணமாக வேண்டும்
எத்தனை முறை யாருமற்ற நடுத்தெருவில்
நிற்கதியாக வேண்டும்
எத்தனை முறை கண்களை கண்ணீரில்
ஈரமாக்க வேண்டும்
எத்தனை முறை உடமைகளை இழந்து
தவிக்க வேண்டும்
எத்தனை முறை பிணங்களுக்கிடையில்
உறவுகளை தேட வேண்டும்
எத்தனை முறை வன்முறை கொடூரத்தை
பொறுக்க வேண்டும்
எத்தனை முறை இதயவலி துடிப்பை
உணர வேண்டும்
சலனமற்ற ஆகாயத்தில்
மதியிழந்த சில பறவைகள்
சுதந்திர பறத்தலுக்காக
தொடரும்
எத்தனை போராட்டங்கள்
எத்தனை அடிதடிகள்
எத்தனை இடிபாடுகள்
எத்தனை கலவரங்கள்
எத்தனை வன்முறைகள்
இவைகளிலிருந்து
விடுதலையாகி
நிற்க வேண்டுமென்று
ஏங்கும் இந்த தாயகப்பறவைகள்