khjtp Fl;bapd; fijfs; – உதயசங்கர்
மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் பரவிப் பெருகியோடுவதைப் படிப்பவர்களால் உணர முடியும். |
மாதவிகுட்டியாகவும், கமலாதாஸ் ஆகவும் தமிழில் வாசகர்களுக்குப் பரிச்சயமாகியிருக்கிற ஒரு மலையாள மொழிப் படைப்பாளியின் சின்னஞ்சிறுகதைகள் ,இருபத்தி ,இரண்டின் தொகுப்பு ,இது. தமிழில் தந்திருப்பவர், நமது மொழியின் மிகச் சிறந்த சிறுகதைக்காரர்களுள் ஒருவரான உதயசங்கர்.
மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் பரவிப் பெருகியோடுவதைப் படிப்பவர்களால் உணர முடியும். தொகுப்பு, அளவில் மிகச்சிறியது. கையடக்கமான ஒரு வடிவில் 86 பக்கங்கள். பெரும்பாலான கதைகள் இரண்டு மூன்று பக்கங்களில் முடிந்து விடுகின்றன. இத் தொகுப்பிலேயே நீண்டதாக உள்ள ஒரே ஒரு கதையும்கூட ஐந்து பக்கங்களைத் தாண்டவில்லை. ஆனால், கமலாதாஸின் இந்தக் கதைகளில் அடங்கியிருக்கிற மனித வாழ்க்கையின் கூறுகள் மிகப் பிரம்மாண்டமானவை யோசிக்க யோசிக்கத் தீராதவை. ‘சிறுகதைகள்’ என இவற்றை ஒரு வசதிக்காகச் சொன்னாலும், விசுவரூபமெடுத்துப் பரவிநிற்கும் வாழ்க்கையின் துண்டுச் சித்திரங்களே இவை. கோட்டுச் சித்திரங்கள் .ஒன்றிரண்டு கோடுகளில் மிக அனாயாசமாகக் கமலாதாஸ் தீட்டியிருக்கிற உயிரோவியங்கள்.
அன்பிற்காக ஏங்குகிற -யாசிக்கிற மனிதர்கள். ஆனால், பெரும்பாலும் நிராதவராகத் தவித்தே தீர வேண்டுமென விதிக்கப்பட்டிருப்பவர்கள். ‘மனப்பிறழ்ச்சி’ கதையின் அருணாவால், தனக்குத் துரோகமிழைக்கும் கணவனை விட்டுப் பிரிய முடியாத மனநிலை. அவளைப் பைத்தியக்காரி என்று அவள் பெற்ற குழந்தையே அறைவாசலில் நின்றபடி கூறிவிட்டுப் போகிறது. ஏன் அவள் அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்குப் போய் விட முடியவில்லை? கதையின் முடிவில் அருணாவே அதற்கான காரணத்தைச் சொல்லும் போது, தோழி விமலாவோடு சேர்ந்து நாமும் அதிர்ந்துதான் போகிறோம். ‘மதிப்பிற்குரிய ஒரு திருமண உறவு’ கதையிலும் இதே போல் ஓர் ‘உத்தம’ மனைவியின் சித்திரிப்பைப் பார்க்கிறோம். ‘கிழட்டு ஆடு’ கதையில், உழைத்து உழைத்து ஓடாகிப்போன ஒரு பெண் இயந்திரம், மருத்துவமனை அறைக்குள் கொண்டு போகப்படுகிற போது, ‘அய்யோ…பருப்பு கருகிப் போச்சு..’ என அரற்றுகிறது. அதைக் கேட்கிற கணவரின் கண்கள் மட்டுமா நனைகின்றன..?
‘தண்டனை’ கதையின் அம்மு, ‘இன்னும் கொஞ்சம் நல்லா, படிச்சிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று ஆதங்கமேற்படுத்துகிறாள். ஆவள் மீது பாட்டிக்கு அனுதாபம் தான். ஆனாலும் பதினைந்தே வயதான தன் பேத்தியை எழுப்பி, ”அம்மு, அவன் காத்திருப்பான்.. நீ இங்கே படுத்துக் கிடந்தா அவன் என்ன நெனைப்பான்?” என்றுதான் சொல்லமுடிகிறது பாட்டியால். இந்தச் சமூகம் அம்மு போன்ற குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுந்தண்டனை விதித்திருக்கிறது என ஆற்றாமை பொங்கிவரச் செய்கிற கதை.
முதுமையின் தலைவாசலில், இயலாமையின் விளிம்பில் தத்தளிக்கும் ஓர் ஆத்மா, தன் உடம்பில் குடிகொள்ள வந்திருக்கிற வேதனைகளை வரவேற்கிற படிமம்தான் ‘ஓர் அரண்மனையின் கதை’ நண்பர் ஒருவருக்கு, நடுங்கும் கையெழுத்தில் கமலாதாஸ் எழுதிய ஒரு கடிதத்தின் இந்த வரிகள், கதையைப்
படிக்கிறபோது மனதில் ஓடுகின்றன: ”மூட்டுவலி என் எழுத்தை நிறுத்திவிட்டது ஒரு புதிய ஆவி என் உடம்பில் வாழுவதற்காக வந்திருக்கிறது..” -ஒன்றரைப் பக்கம்தான் இக்கதை உலுக்கி எறிந்து விடும் வகையிலான கூர்மை!
‘சந்திர கிரணங்கள்’ கதையின் இக்பால், தன்னை ஒரு தரித்திரனாக உணருகிறான். நண்பனோ செல்வந்தனாகத் தோற்றமளிக்கிறான். சந்திரகிரணங்களைத் தின்றே வளர்ந்த தான், இனி எப்படி வாழ்வது என்ற திகைப்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். சூட்சுமமிக்க, சிக்கலான உறவுப் பிரச்சனையை இக்கதை அனாயாசமாகச் சொல்லி விடுகிறது. இது போல் பல கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றும் இக்கதைகள் வாசிக்க வாசிக்க தீராத புதிர்ச்சுழல்களாய் மையங்கொள்கின்றன.
இரத்தப்புற்று, 565-ம் எண் அறையில் ரோகிணி, ஐந்து லட்சம் ரூபாய், மாதவியின் மகள் – நான்கு கதைகளிலும் வருகிற அம்மாக்களையும் -மகள்களையும் நினைத்து அழாமல் இருக்க முடியாது. குறிப்பாக ‘மாதவியின் மகள்’ கதை. வயிற்றுப் போக்கின் தீவிரப் பாதிப்பால் துவண்டு கிடக்கும் மகளைப் பார்க்க ஒரே ஒரு நாள் லீவு கேட்டுக்கொண்டு வந்திருக்கிற மாதவி, அன்றிரவு மட்டுமாவது மகளின் பக்கத்தில் படுத்து உறங்க வேண்டுமென முடிவு செளிணிகிறாள். ஒரு வேளை இனி அந்த மாதிரி உறங்க முடியாமற் போனால்…? படிக்கும் நமது நெஞ்சில் அறைகிறது வாழ்க்கை.
புனிதப்பசு, தெய்வத்தை நிராகரித்த குழந்தையின் கதை, புனித நூல் – ஆகிய மூன்று கதைகளுமே ஒரே பிரச்சனையை மூன்று வௌ;வேறு சூழல்களில் வைத்துப் பரிசீலிக்கிற கதைகள். கெட்ட மாமன், ராணி, உதயத்தின் ரகசியம், சிவப்பு பாபு, உண்மையான உரிமையாளர், ஐந்து லட்சம் ரூபாய் – போன்ற பிற கதைகளிலும் கமலாதாஸின் எழுத்துத் தூரிகை தீட்டியிருக்கிற குறுஞ்சித்திரங்கள், வன்மையும் – மென்மையுமிக்க வாழ்க்கை நிகழ்வுகளின் வெளிப்பாடுகள்.
உதயசங்கரின் மொழியாக்கம் நுண்ணிய வேலைப்பாடுகள் பொதிந்தது. வாசிப்பதற்குச் சுலபமான மொழிநடை. கதைகளின் தேர்வு பாராட்டத் தகுந்ததாக அமைந்துள்ளது.
கமலாதாஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகிறார். விவரணைகளே இல்லாத – அல்லது – மிகக் குறைந்த விவரணைகளுடன் அமைந்த கதைகள். குறுகத் தரித்த இக்கதைகளின் வடிவ நேர்த்தியும் – கச்சிதமும் தமிழுக்குப் புதிதாகவே தோற்றமளிக்கின்றன.
நூல் அறிமுகம்
கமலாதாஸ்
தமிழில் : உதயசங்கர்
வம்சி புக்ஸ்
திருவண்ணாமலை
பக். 86 | ரூ.70