உமா மகேஸ்வரி (இந்தியா)
துவைத்துத் துவைத்துத் துவண்ட சிவப்புக் கரையிட்ட நீலப் புடவை. காதில் எண்ணெய் இறக்கிய பவளக் கம்மல்கள். பெரிய வட்டமாகக் குங்குமம் இட்ட நெற்றி.. சிறிய நோட்டு ஒன்றில் பென்சிலால் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கும் பழக்கம் செல்லிப் பாட்டிக்கு. உண்மையில் பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அப்புறம் என்னதான் எழுதுகிறாள்? தலையணைக்கு அடியிலேயே இருக்கும் நோட்டு. பகலெல்லாம் அவள் நடமாடும்போது முந்திச் சேலையில் முடிந்து வைத்திருப்பாள். அந்த நோட்டில் என்ன இருக்கிறதென்பது யாருமே அறியாத ரகசியம். அவள் கதையெல்லாம் வாய்மொழியில் தான்.
வெற்றிலையைப் பித்தளை உரலில் இடித்துக்கொண்டே, “குழந்தைகளா, இன்னிக்கு நான் உங்களுக்கு ஒரு புதுக் கத சொல்லப் போறேன்” – என்று அவள் ஆரம்பிக்கும் போது அனிதாவும் பூங்குழலியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நமட்டுப் புன்னகை செய்து கொள்வார்கள்.
“புதுக் கதையா பாட்டி?”
“ஆமா கண்ணுகளா, ரொம்பப் புதுசு. இதுவரை யாருமே யாருக்குமே சொல்லாதது”
“அப்படியா” – என்று ராகமிழுத்தார்கள் அனிதாவும் பூங்குழலியும்.
பாட்டிக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே கதை. ஒரேயொரு கதை அதயே விதவிதமாக புதிது புதிதாக சொல்லுவாள். பிள்ளைகள் பாட்டியை அலட்சியப் படுத்தக்கூடாது என்று நினைத்தாலும் அடக்கமாட்டாமல் கேலிச் சிரிப்பு பீறிட்டு வரும்.
“வயக்காட்டுப்பட்டி ஊரில் தான் நான் பொறந்து வளர்ந்தது வாக்கப்பட்டது எல்லாமே. அப்பல்லாம் இந்த வீடு இவ்ளோ பெரிசில்லே. சின்னதாக ஓடு வேஞ்ச ரெண்டு கட்டு வீடு தான்”.
நிறுத்திவிட்டு இடுங்கிய கண்களுடன் பேத்திகளை உற்றுப் பார்த்தாள் பாட்டி. ஒன்று தலையைச் சொறிந்துகொண்டு தரையைப் பார்த்தது. இன்னொன்று, “விட்டா போது, டி.விக்கு ஓடிடலாம்” என்பது போல் முகத்தைப் பரபரப்பாக வைத்திருந்தது.
’ம்..ம்..’ கொட்டினாத்தான் சொல்லுவேன். பாட்டி பிகுவோடு தாடையைத் தூக்கியதைப் பார்த்ததும் பிள்ளைகள் குபீரென்ற சிரிப்போடு ‘ம்..ம்..’ என்றன. ”பொழுது விடிஞ்சு பொழுது போற வரைக்கும் அடுப்படி, காலைல வாசல் பெருக்கிக் கூட்டி மெழுகிக் கோலம் போட்டு ஆரம்பிச்சா அரைக்கிறது, கரைக்கிறது, அவிக்கிறது, வதக்கிப் பொரிக்கிறது, தாளிச்சுன்னு எல்லாப் பெண் ஜென்மங்கள் வாழ்க்கை மாதிரித்தான் போச்சு எங்காலமும்…”
பாட்டிக்குப் பெருமூச்சு. பிள்ளைகளுக்குக் கொட்டாவி.
‘சரி பாட்டி.. நீ கதைக்கு வா. இல்லாட்டி நாங்க போகட்டா”. –
எழுந்திருந்து ஓடப் பார்த்தவளிடம் கவுனைப் பிடித்திழுத்து உட்கார வைத்தாள் பாட்டி.
“இப்படியே நாளும் கிழமையும் போயிட்டிருந்துச்சா… அப்பத்தான் ந்ம்ம ஊருக்குள்ள தமுக்குச் சத்தம் டமடமன்னு. ஊரே கூடிப்போச்சு. நானும் அடுப்படி ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். தண்டோராக்காரன் – ”நீங்க தண்டோராவைக் கண்டிருகீங்களோ என்னமோ?” சத்தமாச் சொல்றான்.
“இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா மாட்சிமை தங்கிய, மாண்புமிக்க, மாதர்குல திலக, தேவமங்கை, பேரரசி, மகாராணி, சக்கரவர்த்தினி – இந்த மாசம் இருபத்தியெட்டந் தேதி நம்ம ஊருக்கு உலா வந்து தெருத்தெருவா பவனி வரப் போறாங்க. ஆமா, இந்த நற்செய்தியைக் கேட்டுக்கங்க”
தெருத் தெருவா சொல்லிடே போறான் தண்டோராக்காரன். ஜனங்க பிரமிச்சுப் போய் அங்கங்கே கூட்டம் கூட்டமா நின்னு பேசிக்கிட்டாங்க”
”பேரரசியை ராஜதர்பாரில் கூடப் பார்க்க முடியாதே, அவங்களா இந்த வயல்காட்டுப் பட்டிக்கு வராங்க? எதுக்குன்னு தெரியலையே!”
கிசுகிசுவென்று பேசினாள். “அந்தப்புரத்தில அடைபட்டு மகாராணிக்கு அலுப்பாயிடுச்சோ என்னமோ” என்றது ஒரு குரல்.
“ம்ம்! அப்புறம்?”
”பிறவென்ன, ஊரே விழாக்கோலந்தான். ரோடெல்லாம் மெத்தி, வழுவழுன்னு தேச்சு, ஓரஞ்சாரத்தில் அடர்ந்து கிடந்த கள்ளி கருவேலத்த எல்லாம் சுத்தம்பண்ணி, புதரை வெட்டி, காணும் தோரண வாசலுமாக் கட்டி, விளக்குக் கம்பங்கள் என்ன, மண்டபங்கள் என்ன…. ஊரே அல்லோலகல்லோலப் பட்டுப்போச்சு. கண் கொள்ளாக்காட்சி… ஆனா…
“அனா, ஆவன்னா, இனா….ஈயன்னா”
“ச்சீ, சும்மாயிரு…” அனிதாவை அடக்கினாள் பூங்குழலி.
“பேருதான் பெத்த பேரு. வயல்காட்டுப்பட்டின்னு. புல் பூண்டத்த ஊரு இது. ஒரு வயலில்லை, ஆறில்லை, கிணறில்லை, தோணிப் பார்த்தாலும் நிலத்தடியில் தண்ணியில்ல. மரமில்ல. செடியில்ல. தோப்புத்துரவில்ல. ஒரு கொடம் தண்ணிக்குன்னு எட்டு மைல் தூர நடக்கணும் நம்ம ஊருப்பெண்கள். பசுமை, ஈரம், மழை என்பது அறவே இல்லை. என்ன சாபக்கேடோ என்னவோ, மண்ணிலா, வானத்திலா, மனசிலேயேதானா,…. எங்குமே ஈரமத்து வறண்டு காய்ஞ்சு காச்சுப் போயிடுச்சு. பாட்டியின் குரல் நைந்து இளகியது.
“நானும் நடப்பேன், நடப்பேன்; இடுப்பில் ஒண்ணு தலையில் ஒண்ணு குடத்தோடு எட்டுமைல் தூரம். காட்டுப்புரத்தூருக்கு. தண்ணி கொண்டு வர. அடுத்த ஊரெல்லாம் பச்சைப் பசேல்னு பயிர்களோடு தெரியும். ஆவாரம் பூ பொன்னாப் பூத்துக் கிடக்கும். நெல், நாத்தெல்லாம் பால் பிடிச்சு பச்சைப் பிள்ளைகளா நிக்கும்! மாமரங்கள் தங்கம் தங்கமா பழுத்துத் தொங்கும். கொய்யாப்பழங்கள் கனிந்து தொடுவாரற்றுக் கிடக்கும். தென்னைகள் சலசலத்து என்னோடு பேசும். தினந்தோறும் தண்ணீரோடு நிறைய சின்னச் சின்ன விதைகளையும் பொறுக்கிச் சேர்த்துட்டு வருவேன். எதுக்குனு தெரியாம….”
“என்னைக்கு பேரரசி நம்ம வயல்பட்டிக்கு வராங்கன்ணு கேட்டா பக்கத்து வீட்டுக்காரங்க சிரியோ சிரின்னு சிரிக்கிறாங்க. “எந்தப் பேரரசி? எப்ப”-ன்னு.
இதில ஒண்ணு பாரு, அந்தத் தமுக்குச் சத்தம் எனக்கு மட்டும்தான் கேட்டுது. வேற யார் காதிலயும் அது விழல. அப்படியொரு தண்டோராச் சேதி வந்தது கூட இந்த முட்டாள் ஜனங்களுக்குத் தெரியல” –
இப்போது பிள்ளைகளின் சிரிப்பு எப்பாடு பட்டும் அடக்க முடியாஅல் தெறிச்சுச் சிதறியது. உடல் வில்லாக வளைந்து குனியக் குபீரென்று சிரித்தாள் அனிதா. முகம் சிவக்கக் கண்ணில் நீர் வரக் கையால் வாய் பொத்திச் சிரிப்பு பூங்குழலிக்கு.
“ஒருவேளை அவ ராணியோ, வன தேவதையோ, வானத்துத் தெய்வமோ, வயல் காத்த அம்மனோ. அவ வரப்போற சேதி என் காதுக்கு மட்டும் கேட்டுருக்கலாமில்ல”
பாட்டி கெஞ்சுதலோடு கேட்டாள். அதுவும் சரிதானே என்று பிள்ளைகள் முகமும் கனிந்து விட்டது.
“வீட்டுக்குத் தண்ணீரோடு மண்ணில் கெடக்கிற விதைகள், சின்ன நாத்துக்களையும் கொண்டு வந்தேன். வீட்டுப் பின்பக்கம் ஊனி வச்சு, கொடத்துத் தண்ணியில அதுக்கும் கொஞ்சம் ஊத்துவேன். ஒங்க தாத்தாவுக்கோ கோபமான கோபம் வரும். நான் குடிக்கிற தண்ணியில ஒரு மடக்கு ஊத்தினா தப்பா? என் பாசத்தைப் பிடிச்சுக்கிட்டு வளர விடாம அவரு கோபத்தாலதான் அத்தனை நாத்தும் கருகுச்சொ என்னமோ”
… கவலை தோய்ந்த பிள்ளைகள் பாட்டியின் மூடிஅ இமையை உற்று நோக்கின.
பாட்டி பேச்சற்றுப் போனாள். அவள் மறுபடி தொடருவாள் தொடருவாள் என்று எதிர்பார்த்துப் பிள்ளைகள் அயர்ந்து விட்டார்கள்.
“மேல என்னாச்சு சொல்லு பாட்டி” – என்றாள் அனிதா.
”ஆனாக் கூட விதைகளைச் சேர்க்கறத நான் விட்டுடல. நிதந்தோறும் வைரத்தையும் மணியையும் கண்டெடுத்தாப்போல பொருக்கியெடுத்து எ நகைப்பெட்டியில பூட்டி வைப்பேன்”.
பாட்டியின் விழிகளில் திடீரென்று பளபளப்புக் கூடியது. முகம் பிரகாசத்திற்கு மீண்டது.
“அந்த நாளும் வந்தது. மேள தாளம் முழங்க பூத்தூவிய பாதையில் ராணி வந்தாள். ரோஜா நிறப் புறாப் போலிருந்தது பல்லக்கிலிருந்து இறங்கிய அவள் பாதம். அழகுன்னா அவள் அழகு வெறும் தோல் நிறமோ, கண்ணோட நீள அகலமோ, கூந்தலோ இல்லை. கோவிலில் கர்பக்கிரகத் திரை விலகும் போது அவ்வளவு நகைகளையும் மீறி பிரகாசிக்குமே அந்தக் கருணை; அருள். ‘நான் இருக்கேங்’கற உத்தரவாதம்’. அப்படியொரு அழகு அவ”
“சொன்னா நம்ப மாட்டீங்க. நான் பிரமிச்சு நிக்கும்போதே அவள் பட்டாடை சரசரக்க நம்ம வீட்டை நோக்கி வந்தா. நல்ல நாற்காலிய நான் சுத்துமுத்தும் தேடிக்கிட்டிருக்கப்பவே சிறுமி போல் தாவி அடுப்பு மேடையில உட்கார்ந்தாள்.
“குடிக்க ஏதாவது வேணும்” ன்னவளுக்குத் தர பழந்தண்ணிச் சோறுதான் இருந்தது. ஒரு அகப்பை. அதை அமுதம் போல் ரசிச்சுக் குடிச்சா. நான் ஓட்டமா ஓடி என் விதைகளைச் சேர்த்த சுருக்குப் பையை அவ கிட்ட குடுத்தேன். பிரிக்கவும் இல்ல. பார்க்கவுமில்ல;
‘இதெல்லாம் பயிராகணும்; அவ்வளவுதானே?” – என்று விட்டுப் போய்விட்டாள். ஒரே நொடியில் மாயக்கதிராக.
மடியில் சுருண்ட குழந்தைகளைன் தலையைச் நீவிய பாட்டி,
“ஊர்க்காரங்களும், உங்க தாத்தாவும் சிரிப்பாச் சிரிச்சாங்க. சாமியாம், ராணியாம். வந்தாளாம். இவளுக்கு புத்தி கித்தி பிசகிப் போச்சா? மருதுப்பட்டி வைத்தியர் கிட்டக் காட்டிட்டு வாங்க” – ன்னு ஒரே கிண்டல்.
”ஆனா, நான் நம்புனேன். அந்த விதைகள் செடியும், கொடியும், தோப்பும், காடுமாகி பசுமை பொங்கியிருக்கும். நான் கண்டதெல்லாம் கனவில்லையே? காணுற முகத்திலெல்லாம் கடவுளைப் பார்க்குறது தப்பில்லையே….. நீங்க சொல்லுங்க கண்ணுகளா, சாமிகளா, என் விதைகள் என்னாயிருக்கும்?”
குழந்தைகள் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு கணம் அமைதியாய் இருந்துவிட்டு
“எல்லாம் வளர்ந்து காடாகி, வயலாகி, தோப்பாகி இருக்கும் பாட்டி. நீ தூங்கு” – என்று பாட்டியைப் படுக்கையில் தள்ளி போர்வையைப் போர்த்தின.
பாட்டி நிம்மதியாகக் கண்களை மூடித் தூங்கிவிட்டாள்.
எவ்வளவோ வருடங்கள் கழித்து அன்றிரவு வானம் அசைந்தது. அதனுடைய ரகசியங்களை அறியாத மனித மனம் அது மழையாகப் பொழிகையில், கருணை காட்டுவதாகவும், மோனகாயிருக்கும் போது இறுகி விட்டதாகவும் உழல்கிறது. இயற்கையின் மாயச் சுழற்சியை யாரும் அறிவதில்லை. மழையோ உலகிற்கு எப்பேர்ப்பட்ட கேடு விளைந்தால் பொழியலாம் என்பதை அறிந்தே இருக்கிறது. மனிதர் இதை ஒருவாறு ஊகிக்கலாமே தவிர தீர்மானிக்க முடியாது. வல்லவர்கள் என்று தம்மை நினைக்கும் கொடியோர் தர்மசீலர்களிடமும், தவறே செய்யாத பலவீனமான உயிர்களிடமும் அக்கிரமமாக நடந்து கொண்டால் தர்மம் சீரழிய அதர்மம் தலை விரித்தாடுகிறது. இதுவே தான் திறக்க வேண்டிய தருணம் என்றுணர்ந்த வானம் இளகியது. முதல் துளி பூத்தது. மழை அமுதச் சாரல்களாகக் கொட்டியது. வரண்டு வெடித்த நிலத்தில் இடையறாத நீரின் கருணை பெருக்கெடுத்து ஓடியது. பாதாளத்தில் உறங்கிய விதைகள் அனைத்தையும் புத்தம் புதியதாக விழித்துக் காத்திருந்தன, பாட்டியின் உறக்கம் கலைய. புத்தம் புதுத் தளிர்கள் சூரிய ஒளியில் அசைந்தாடின, நிரந்தர உறுதியோடு.
நன்றி சிக்கிமுக்கி தாராகணேசன்