சந்தியா எக்னெலிகொட (காணாமற் போன ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி
கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார்,
அலரி மாளிகை,
கொழும்பு 01
*****
மதிப்பிற்குரிய அம்மையாருக்கு,
இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் எழுதுகோலையும் தூரிகையையும் பயன்படுத்திய காரணத்தால் 2010 ஜனவரி 24ம் திகதி காணாமல் போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி ஆவேன்.இப்பொழுது ப்ரகீத் காணாமல் போய் 500 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களை நான் ஒருபோதுமே சந்தித்திரா விடினும், என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். 2010 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நான் உங்களைச் சந்திக்க பெரிதும் முயற்சித்தேன். 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி அனோமா ஃபொன்சேகா அம்மையாரைச் சந்தித்தேன். நீங்கள் மிகவும் கருணைமிக்கவர் என்றும், உங்களுடன் கதைத்தபின் போய்ச் சந்திக்கும்படியும் கூறி அவர் உங்களது கைத்தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தந்தார். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களது கைத் தொலைபேசிக்கு அழைத்தேன். அதற்கு பதிலளித்த நபர்கள் என்னை வெவ்வேறு தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மாற்றினர். அதன்பிறகு நான் உங்களது செயலாளர் மூலமாகவும், மதஸ்தாபனம் மூலமாகவும், வெவ்வேறு ஊடக அன்பர்கள் மூலமாகவும் உங்களைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பமொன்றை வேண்டிப் பாடுபட்டேன். எனினும் இந்த எல்லா முயற்சிகளுக்காகவும் நானும் எனது பிள்ளைகள் இருவரும் உங்கள் அனைவரிடமிருந்தும் வெற்றுப் பதில்களையே பெற்றுக் கொண்டோம்.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓர் நாள் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.விக்டர் ஐவனை சந்தித்தேன். எனது கணவரான ப்ரகீத்தை இவ்வாறான ஆபத்தான வேலைகளிலிருந்து தடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லையென அவர் என்னிடம் வினவி நின்றார். அப்பொழுதிலிருந்து ப்ரகீத் ஜனநாயத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல்கொடுத்ததைத் தடுக்க முயற்சிக்காதது தவறானதா என சிந்திக்கத் தலைப்பட்டேன். இன்றும் சிந்திக்கிறேன்.
இது குறித்து விசாரிக்க சரியான நபர் நீங்கள்தான் என்பதை நான் நன்கு அறிவேன். அது ஏனெனில் உங்கள் கணவர் தற்போதைய அதிமதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதனாலாகும். 1988/89/90 காலங்களில் இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தால் தெற்கில் கலவரத்தைத் தடுப்பதற்காக இளைஞர் யுவதிகளைக் காணாமல் போகச் செய்தபோது, முகமூடி அணிந்தவர்கள் இளம் பிள்ளைகளை கூட்டுப் புதைகுழிகளினுள் புதைத்த போது அதற்கு எதிராகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி மற்றும் மனித உரிமை இயக்கங்களோடு உங்கள் கணவரும் முன்னணியிலிருந்து செயற்பட்டார். காணாமல் போனவர்களின் தகவல்களைச் சேகரித்தார். அவற்றை எடுத்துக் கொண்டு ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் திணைக்களத்துக்குச் சென்றார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களிடம் முறையிட்டார்.
அதன் மூலமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்குலக நாடுகளின் கவனத்தை இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதன் மீது திசை திருப்பினார். அது மட்டுமல்லாது, காணாமல் போன, படுகொலை செய்யப்பட்டவர்களின் அன்னையர், தந்தையர், மனைவியரை உள்ளடக்கிய ‘தாய்தந்தை மற்றும் பிள்ளைகள் சங்கம்’ மற்றும் வெவ்வேறு நபர்களுடன் இணைந்து காளி தெய்வத்துக்கு தேங்காய் உடைத்தார். அறம் பாடினார். கதிர்காமக் கடவுளிடம் பலியெடுக்க வேண்டினார்.
அப்பொழுது இருந்த ஜனாதிபதி திரு.ரணசிங்க பிரேமதாஸவை உள்ளடக்கிய அரசாங்கம் அவர்களை உருட்டி மிரட்டியது. ஆயுதங்களைத் தூக்கியது. இன்று போலவே அன்றும் அரசாங்கத்துக்குப் பணிந்த இராணுவமும் காவல்துறையும் சமூக சேவையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் கொன்றழித்தனர். காணாமல் போகச் செய்தனர். அப்பொழுது உங்களுக்கு அவரது ஆபத்துக்கள் நிறைந்த செயல்கள் குறித்து அச்சம் தோன்றவில்லையா? நீங்கள் அவற்றை நிறுத்த முயற்சிக்கவில்லையா? பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு மனித உரிமைகள் திணைக்களத்துக்குச் சென்ற போதும், பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலை வகித்த போதும் அவர் காணாமல் போகவில்லை.
அப்பொழுது தலைமைத்துவம் வகித்த முன்னாள் ஜனாதிபதி திரு. ரணசிங்க பிரேமதாஸ திடீரென தனது பாத்திரத்தை நிறைவு செய்த விதம் இலங்கையருக்கு மறந்திருக்காது என நினைக்கிறேன்.
அன்றும் கூட தெற்கில் சில இடங்களில் பலகாரம், பாற்சோறு சமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டமை நன்றாக நினைவிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் சாபத்தைப் பாற்குடங்களினால் கூட கழுவியகற்ற முடியாமற் போயிற்று……
இப்பொழுதும் கூட யுத்தமொன்று தோன்றியது. அதை ஒரு வசனத்தில் கூறுவதானால் குரூரமானது. இலட்சக்கணக்கிலான வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். எந்த வித விசாரணைகளுமற்று பிள்ளைகளினதும் மூத்தவர்களினதும் இளைஞர் யுவதிகளினதும் நோயாளிகளினதும் உயிர்களைப் பலியெடுத்தது. யுத்தம் மற்றும் அரசின் அநீதமான செயல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களும் சமூக சேவையாளர்களும் யுத்த நெருப்புக்கே ஆட்பட்டனர். அன்று போலவே இன்றும் அடி பணிந்த காவல்துறை, இராணுவம் மற்றும் கொலைகாரக் குழுக்களினால் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஊடக நிறுவனங்களைத் தாக்கினர். ஊடக நிறுவனங்களை எரித்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களிடையே 2010 ஜனவரி 24ம் திகதி எனது கணவரும் இணைக்கப்பட்டார். எனது கணவரான ப்ரகீத் எக்னெலிகொட யுத்தத்தினால் மக்கள் ஒடுக்கப்படும் விதம் குறித்து எழுதினார். தான் கண்ட மற்றும் சேகரித்த தகவல்களைக் கொண்டு அரசின் கொலை கொள்ளைகள் பற்றி எழுதினார். ஊடகவியலாளரொருவரின் பொறுப்பு அதுதானென அவர் உறுதியாக நம்பினார்.
எனினும் ப்ரகீத் ஒருபோதும் மக்களைச் சபிக்கவில்லை. தெய்வங்களுக்காக தேங்காய் உடைக்கவில்லை. அறம் பாடவுமில்லை. குறைந்தபட்சம் 2009 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி தனது கண்களைக் கட்டி கைகளுக்கு விலங்கிட்டு சித்திரவதைக் கூடத்துக்குக் கொண்டு சென்று தன்னிடமிருந்த மருந்துகளைக் கூட கொடுக்காத சித்திரவதையாளர்கள் மீது கூட அவர் கோபிக்கவில்லை. ப்ரகீத் துயருரும் மக்களுக்கான தனது கடமையை நிறைவேற்றினார். எனினும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ப்ரகீத்தை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர். எனது பிள்ளைகள் இருவரினதும் மகிழ்ச்சியை சுக்குநூறாக்கினர். தேவதூதர்களின் கருணையும் தேவதைகளின் மகிழ்வும் நிறைந்த கனவுகளைக் காணவிருந்த அவர்கள் இன்று மோசமான பயங்கரமான கனவுகளையே காண்கின்றனர். ஏனெனில் அவர்களது கனவுகளை ஆள்வது கெட்ட இராட்சசன்கள் மற்றும் தனது தந்தையைப் பறித்துக் கொண்ட மோசமான பிசாசுகள் என்பதனாலாகும். எனது மூத்த மகன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எழுதியது தந்தையின் ஆசிர்வாதம் இல்லாமல்தான்.
அன்று உங்களது கணவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலை வகித்த காரணத்தால் காணாமல் போயிருந்திருந்தால் நீங்களும் நான் அனுபவிக்கும் துயரங்களை உணர்ந்திருப்பீர்கள் அல்லவா? அன்று உங்கள் பிள்ளைகள் இன்று எனது பிள்ளைகளின் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தால் இன்று நான் உணரும் எனது பிள்ளைகள் அனுபவிக்கும் துக்கத்தை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா? சூரிய சந்திரன் உலகுக்கு ஒளியூட்டுகையில் எனது பிள்ளைகளைப் போலவே உங்கள் பிள்ளைகளும் இருளில் அழுவதைக் கண்டு குணப்படுத்த முடியா வேதனையினால் உங்களது இதயமும் செயலற்றுப்போக இடமிருந்திருக்கும் அல்லவா? எனது இரண்டாவது மகன் தந்தை காணாமல் போனதன் காரணத்தால் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டார். அதன் காரணத்தால் இன்னும் அவருக்கு வைத்திய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சிலவேளை உங்கள் இளைய மகனுக்கும் இந் நிலைமைக்கு ஆட்பட இடமிருந்தது அல்லவா?
நிராயுதபாணியொருவரைக் கொன்றொழிப்பது மிலேச்சத்தனமான செயல். அதனால் துயருருவது அவரது பிள்ளைகள். பேனையைப் பாவித்ததன் காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட திரு.லசந்த விக்கிரமதுங்கவின் மகனின் கடிதமொன்றை நான் பார்த்தேன். நீங்களும் பார்த்தீர்களா? மனிதனொருவரை காணாமல் போகச் செய்வது மிகக் குரூரமானது. அது அவரதும் பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்கள் எப்பொழுதுமே வேதனையை அனுபவிப்பதன் காரணத்தினாலாகும். விஷேடமாக அப் பிள்ளைகளின் முழு எதிர்காலத்தையுமே இருளடையச் செய்வதனாலாகும். ஐயோ இது போன்ற துயரம் எந்தப் பிள்ளைகளுக்குமே நேராதிருக்கட்டும் (எதிரிக்கும் கூட)
நானும் விகாரைகளுக்குச் செல்கிறேன். ப்ரகீத்துக்காக பௌத்த பூஜைகளைச் செய்கிறேன். காளி தெய்வத்துக்கு தேங்காய் உடைக்கிறேன். துயரத்தைச் சொல்கிறேன். கதிர்காமக் கடவுளை வணங்குகிறேன். அநேக தாய்மாரும் மனைவியரும் என்னைப் போலவே இவ்வாறு செய்வதை நான் அறிவேன். அம்மையாரே, எப்பொழுதாவது என்னையும் உள்ளடக்கிய இந்தத் தாய்மாரின் துயரத்தை இந்தத் தெய்வ தூதர்கள் கேட்பார்கள்தானே? நான் அனேக அமைச்சர் பிரதானிகளிடமும் முக்கியஸ்தர்களிடமும் எனது பிள்ளைகளின் தந்தையைக் கண்டுபிடிக்க உதவும்படி வேண்டி நின்றேன். அமைச்சர் பிரதானிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு கடிதங்கள் எழுதினேன். நான் உங்களிடமும் வேண்டி நிற்பது எனது பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கு, எனக்கு ப்ரகீத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்யும்படிதான். எனது வீட்டின் மகிழ்ச்சி, எனதும் பிள்ளைகளினதும் பாதுகாப்பு ப்ரகீத். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். உங்களால் இதனைச் செய்யமுடியுமென நான் நம்புகிறேன். நான் எழுதும் மேசைக்கு முன்னாலிருக்கும் உருவப் படமொன்று என்னைப் பார்த்து புன்னகைக்கிறது. கருணையின் அன்னையான அவர் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேஸா. அசுத்தமான கல்கத்தா நகரத்தில் துயருரும் பாதிக்கப்பட்ட குழந்தையொன்றை அணைத்தபடி கஞ்சி புகட்டும் விதம் எனக்குத் தோன்றுகிறது. எனது பிள்ளைகளுக்கும் இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்கும் உதவ வரும்படி நான் அவரை அழைக்கிறேன். எப்பொழுதாவது எனக்கு அவரை இந் நிலத்தில் சந்திக்கக் கிடைக்குமா?
மோசமான கணவர்களினால் இன அவமானத்திற்கு ஆட்பட்ட தேசிய பாரியார்களும் இருக்கிறார்கள். அதே போல மோசமான கணவர்களின் பாதையை சீர்படுத்திய தேசிய பாரியார்களும் இருக்கிறார்கள். அவ்வாறான பாரியார்கள் இனத்தின் அன்னையரும் ஆவர்.
அம்மையாரே, என்னைப் போன்ற கணவன்மார் காணாமற் போன பெண்களுக்கு நீதியையும் மனிதாபிமானத்தையும் நிலை நாட்டி நீங்களொரு தேசிய அன்னையாவீர் ! என நான் வேண்டுகிறேன்.
உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும் !
நன்றி.
இவ்வண்ணம் நம்பிக்கைக்குரிய,
சந்தியா எக்னெலிகொட
(காணாமற் போன ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை