“கார்த்திகாயினி”யின் தாய்மடி தேடி…

-எம்.எஸ்.தேவகௌரி
 தாய்மடி தேடி…சமூக அங்கீகாரம் தேடி…
karthiyyani என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’. 1998 இல் யாழ்ப்பாணத்தில்… ‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,
  
 சர்வதேச பெண்கள் தினம் நினைவுகூரப்படும் இந்த வாரத்தில் (மார்ச் 8)கார்த்திகாயினி சுபேஸின் ‘தாய்மடி தேடி’ வெளியீடு இடம் பெறுவதையிட்டு மகிழ்ச்சி;..ஊடகத்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்த ஆக்ககர்த்தா பல சிரமங்களுக்கு மத்தியில் இந்நூலை நமக்குத் தந்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
 
karthiyyani
 
இதற்கேற்ப கார்த்திகாயினியும் பெண் தொடர்பாகவும் சாதி தொடர்பாகவும் எமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய தவறான கருத்துக்களை தனது கதைகளினூடாக சாட முனைந்துள்ளார்.பெண்கள் தொடர்பாக எமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய கருத்தமைவை-எண்ணப்பாங்கை-எம் வாழ்வை மாற்றிப்போட்ட போராலோ சுனாமியாலோ எதுவும் செய்து விட முடியவில்லை.இந்த உண்மையை வெளிப்படுததுவது கார்திகாவின் சில கதைகள்.உதாரணமாக 2007இல் கார்த்திகா எழுதிய ‘கருமுகில் தாண்டும் நிலவு’ ‘உதயம்’என்பன அத்தகைய கதைகள். ‘கருமுகில் தாண்டும் நிலவு’ குடும்ப அலகில் பெண்ணின் இருப்பும் சமூக அலகில் ஆண்களுக்கான இருப்பும் கட்டமைக்கப்பட்ட வகைமாதிரியை சொல்வன.அந்த வகைமாதிரிக்குள் இருந்து உடைத்துச் செல்லும் பெண்ணாக சீதா காட்டப்பட்டிருக்கிறாள்.இதே போல் உதயம் குழந்தையைப் பெற்றெடுக்காத பெண் சமூகப் பேச்சுக்களை எதிர் கொள்ளும் முறைமையை எதிர் குரலாக முன்வைக்கிறது.அதே நேரம் அப்பெண்ணின் கணவன் ஆண்ணிலைப்படிமத்தைத் தாண்டாத- குழந்தை இல்லாததற்கு ஆணின் பங்கு எதுவும் இல்லை- மனவியை சமாதானப்படுத்தும் ‘நல்ல’கணவனாக இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
 
 என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’.
1998 இல் யாழ்ப்பாணத்தில்…
‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,
2009இல் இலண்டனில்…
‘ச்சா…..போயும் போயும் ஒரு எளியசாதியின்ர எச்சிலச் சாப்பிட்டிட்டன்.அதை வேற ஆரார் பாத்தினமோ…’கடவுளே என்று அந்தரப்படுகிறார்.

இத்தகைய தனிப்பாத்திரங்களினூடாக சமூகத்திற்குச் சூடுவைக்கிறர் கார்த்திகா.

பெண் ,சாதி தொடர்பான சில கருத்து நிலைகள் சமூகக் கணக்கில் செலவில் சேரவேண்டியவை.ஆனால் இன்னும் வரவில்தான் பதியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.சமுதாய மாற்றம் கருத்து நிலை மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற வார்த்தை இங்கு பொய்த்துப்போனதும் கவனிக்கத்தக்கது.

போரும் சுனாமியும் எம் கண்முன்னால் ஏற்படுத்தியிருக்கும் சமுதாய மாற்றம் மிகப்பெரியது.பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் அதிகாரத்தளத்தில் பெண்ணின் ஆளுமையும் பொருளாதார வசதிகள் (வெளிநாட்டு வாழ்க்கை)வர்க்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தும் பெண்,சாதி தொடர்பான சமூக எண்ணப்பாங்கில் மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.அதனால்தான் இன்றும் இத்தகைய சிறுகதைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அடுத்து இந்நூலிலுள்ள ‘தாய்மடி தேடி’போரின் அவலங்களின் ஒரு கீற்று.மனதில் வலியை ஏற்படுத்திச் செல்லும் அக்கதையை வாசித்துப்பாருங்கள்.

இந்த மனித அவலங்களும் நெருக்குதல்களும் இன்னும் மனிதாபிமானத்தை மரத்துப்போகவைக்கவில்லை. ‘இப்படியும்’ என்ற கதை அதை வெளிப்படுத்துகிறது.நாய் மீதான் அன்பும் நாய்களுக்கிடையேயான் காதலும்.நல்ல கவனிப்பு.

இப்படி கார்த்திகா எடுத்துக்கொண்ட விடயங்கள் கதை பண்ணுப்படவேண்டியவைதான்.சமூகத்தில் பெண் பற்றிய படிமங்களும்,குடும்ப அலகில் பெண்;ணுக்கெதினான கூறுகளும் ,சாதீய வரட்;டுக் கௌரவங்களும் இன்னும் நம் சமூகத்தை கலாசாரம் கலையாத அல்லது கலாசாரம் சீரழியாத சமூகமாக வைத்துக்கொள்வதற்குரிய எத்தனங்களே.பெண் ,சாதி தொடர்பாக ஏற்படுகின்ற மாற்றங்களை சமூகம் கலாசார சீரழிவின் கூறுகளாகத்தான் காண விழைகிறது. குடும்ப அலகில் பெண்ணின் புதிய பரிமாணம்,சமூக இயக்கத்தில் பெண்ணின் பங்காற்றல் பெண் பற்றிய பால்நிலைப் படிமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.அதை ஒரு மாற்றமாகவோ வளர்சியாகவோ காண்பதற்கு பதிலாக கலாசார சீரழிவாக காணமுயலும் சமூகத்தில் கார்த்திகா மிக கவனமாக கதை பண்ணியுள்ளார்.

பேராசிரியர் க.கைலாசபதி அடியும் முடியும் நூல் குறிப்பிடுவதை இங்கே கவனிக்கலாம். ‘தனிப்பட்ட ஒருவர் மருளில்-அறியாமையில்- இருப்பாரானால் அது இரங்கத்தக்கது.அதனால் அச்சம் இல்லை.ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினது பொய்மை அச்சமூகத்திற்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்தை விளைவிக்கும்.இதிலுள்ள பேராபத்து என்னவெனில் ஒத்துப்போதல் என்ற கொள்கையினடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகள் அடக்கி ஒடுக்கப்படுவதாகும்.’ எனவே கருத்து நிலைகளில் நின்று மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கில் கதைகள் எழுதப்படுவது காலத்தின் கட்டாயமாகும்;:அது தேவையும் கூட.கார்த்திகாயினியின் ‘தாய் மடி தேடி’சமூகத்திலுள்ள பெண் பற்றிய சாதி பற்றிய கருத்து நிலைகளை எதிர்த்து மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதாகவும் சிலது கையறு நிலையில் காலம் பதில் சொல்லட்டும் என்பதாகவும் உள்ளது.

‘பிரமாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதை அறிவி;ன் துணையாலோ ஆணவத்தினாலோ பரம் பொருளை அறியமுடியாது என்ற படிப்பினையை நமக்கு ஊட்டி நிற்கிறது.இது பிறருக்கு ஒரு எச்சரிக்கை.’இக்கருத்து நிலையானது சில விடயங்களுக்கு காரண காரியங்களை அறிவதற்கு தடையாக உள்ளது.இதை எம் சமூகத்தில் ஆழப்பதிந்த ஒரு தத்துவமாக யோசித்தால் தான் அதை ஆராய எமக்கு வழி பிறக்கும்.கலாசாரத்தைக் கட்டிக்காக்கும் விழுமியமாக எடுத்துக்கொண்டால் நாம் தலையாட்டி பொம்மைகள்தான்.

யுதார்த்த சூழலை முன்வைக்கும் கார்த்திகாவின் கதைகள் கருத்து நிலையில் மாற்றங்களைக் கோரி நிற்கிறது. ‘இவரின் துள்ள முடியாத புள்ளிமான்’ கதையில் பெண்பாத்திரம் ‘பெண்ணுக்கு உயிரைவிட எது முக்கியமோ அதுவே போன பிறகு…’ என்று படையினரால் தன் மீது புரியப்பட்ட பாலியல் வல்லுறவை முன்வைக்கிறது.கற்பு தொடர்பாக புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ ‘சாபவிமோசனம’ ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம’ வரதரின் ‘கற்பு’ போன்ற கதைகள் நம்மிடையே உள்ளன. கருத்தியல் ரீதியாக இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இவை.இதைத்தான் பெண் சார்ந்து நாமும் எதிர்பார்க்கிறோம்.
யதார்த்தம் விழுமியம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் நம் பெண்களை நாம் பலவீனப்படுததும் கருத்துக்களில் கவனம் செலுத்தவேண்டும்.இது சமூகத்திற்கே ஆபத்தானது.

கார்த்திகாவின் கதைக்களத் தெரிவுகள் சிறப்பானவை.பிரதேச மொழிக் கையாழுகை சாஸ்வதமாக உள்ளது.கதை சொல்லப்படும் முறை 60களை நினைவு படுத்துகிறது.புதிய வாசிப்பும் நவீன அணுகுமுறைகளும் நிச்சயம் எதிர்காலத்தில் கார்த்திகாவின் கதைகளை ஆழமாக்கும்.

குடும்ப அலகையும் ஆண்அதிகாரத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டுமாயின் தனித்த பெண்ணால் அது முடியாது சமூக அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என மீண்டும் கார்த்திகா நிலைநிறுத்தகிறார். ‘கருமுகில் தாண்டும் நிலவு’ கதையில் குடும்பத்தை விட்டு விலகும் சீதாவின் கணவன் பாலா மாஸ்ரர் அந்த சமூகத்திற்கே சரியில்லாதவராக ஒரு சிறிய பெண் பாத்திரத்தினூடாக காட்டப்படுகிறார்.’அவர் சரியில்லாதவர்’ என்;ற கருத்து ஆழமாக முன்வைக்கப்படுகிறது.பெண் எடுக்கும் முடிவுக்கு சமூக அங்கீகாரம் இதனூடாக பெறப்படுகிறது.பல பெண்களுக்கான பயமும் இதுதான்.எனக்கான நெருடலும் இதுதான்.

ஏன்?சில கருத்து நிலைகளை பெண்கள் எதிர்க்கவேண்டுமென்றால் பலம் சேர்கவேண்டியுள்ளது?கருத்து நிலைகளின் அடியையும் முடியையும் தேடி மாற்றுக்கருத்துக்களை முன்வைப்போம்.நமது எல்லா கருத்து நிலைகளுக்கும் சமூக அங்கீகாரம் பெறுவது சாத்தியமற்றதும் பயனற்றதும் என்பது புரிந்தால்; எதிர்காலத்தில் நல்ல பல கதைகளை கார்த்திகாவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

‘ஒரு சமூகத்தின் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு காலச்சமுதாயத்தினடியாகப்பிறந்து நிலவுவன. பக்க பலமாக அமைவன.அவற்றை மாற்றுவது இலகுவான காரியமில்லை.அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் போதுதான் அவற்றை மாற்றியமைக்கக்கூடிய சூழல் உருவாகுகிறது.அங்கு கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சிற்சில எண்ணங்கள் மறைகின்றன.எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பௌதீக நிலைமை மாறிய பின்னரும் நீடித்து நிலைக்கும் ஆற்றல் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் உண்டு.அதனால் தவறான கருத்துக்களைச் சாட வேண்டியது இன்றியமையாதது.’என்ற பேராசிரியர் க.கைலாசபதி தனது ‘அடியும் முடியும்’நூhலில் குறிப்பிடுவதது இங்கு கவனத்திற்குரியது.

கார்த்திகாவின் தாய்மடி தேடி பற்றிய விமர்சனங்கள் 

நன்றி – தேவகௌரியின் விமர்சனம் அவரின் வலைத்தளத்திலிருந்து பிரசுரிக்கப்படுகின்றது

  

 

1 Comment on ““கார்த்திகாயினி”யின் தாய்மடி தேடி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *