வழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர். |
பெண்ணியா
இலங்கைத் தமிழ்க் கவிதைப் பரப்பில் குறிப்பிடத்தக்க பெண்கவிஞர் பெண்ணியா. 90களில் சரிநிகர் பத்திரிகையில் தொடர்ச்சியாக கவிதைகளை எழதியவர். இக்கவிதைகள் 2006 இல் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை என்ற தலைப்பில் ஊடறு(சுவிஸ்) வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன. நீண்ட இடைவெளியின் பின் கடந்த சில ஆண்டுகளில் இவர் எழுதிய கவிதைகள் சிறகுநுனி வெளியீடாக இது நதியின் நாள் என்ற தலைப்பில் 2008 இல் வெளிவந்தன. பெண்வாழ்வின் உண்மையான நெருக்கடிகளை அதன் பச்சையான உக்கிரத்துடன் வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் இலங்கை, தமிழ்நாடு, ஐரோப்பா, கனடாவிலிருந்து வெளிவரும் இதழ்கள், பத்திரிகைகள், இணைய தளங்களில் பிரசுரமாகின்றன. தமிழில் வெளிவந்த முக்கியமான பெண்கவிதைத் தொகுப்புகளான உயிர்வெளி, மை, பெயல் மணக்கும் பொழுது, ஆகியவற்றிலும் வேற்றாகி நின்றவெளி தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் வடஇந்திய நகரமான நாக்பூரின் வார்தாவில் விளிம்புநிலை, சவால்கள்: பால் அரசியல் மீதான மீள்பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் பெண் கற்கைகளுக்கான இந்திய அமைப்பின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டு பிரதான அமர்வில் உரையாற்றியுள்ளார்.
——-
?. இந்தியாவில் நீங்கள் பங்குபற்றிய மாநாடுபற்றி கூறுங்கள்
– முதலில் இந்த மாநாட்டை ஒழுங்கு பண்ணிய அமைப்பைப் பற்றிக் கூற வேண்டும். இது ஒரு சர்வதேச வலையமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பு. பல நாட்டவர்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர். பெண்ணியக்கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான அமைப்பான இது 1982 ல் இருந்து தன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு நடந்த மாநாடானது இதன் 13வது தேசிய மாநாடு ஆகும். இவ்வாண்டு நடந்த மாநாடு பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் ஆண் பெண் தொடர்பான பால் அரசியலின் மீதான மீள் பார்வை என்ற கருப்பொருளாகும். இந்த மாநாடு இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள வார்தா எனுமிடத்தில் நடைபெற்றது. இம்மாநாடு வார்தாவில் நடந்ததற்கு இந்நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அம்சங்களைக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாகும். பிரபலமான மகாத்மா காந்தியின் ஆச்சிரமம் ஒன்று இங்கு உள்ளது. இம்மாநாட்டிற்காக பல நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பெண்ணியவாதிகள் பிரமுகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கையில் இருந்து நான் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தேன்.
இந்த மாநாடு கடந்த ஜனவரி 21இலிருந்து 24வரை நான்கு நாள் நிகழ்வாக நடைபெற்றது. நான் பங்கு பற்றிய நிகழ்வு 22ம் திகதி தெற்காசியப் பிராந்திய பெண்ணிய எழுத்தாளர்களின் அமர்வாக(pடநயெசல) இடம் பெற்றது. இதில் என்னோடு பாகிஸ்தானிய நாவலாசிரியர் ஒருவரும் பங்களாதேஸ் பெண்ணிய நாவலாசிரியர் ஒருவரும் நானுமாக மூன்று பெண்களின் உரைகள், ஆக்க வாசிப்பு மற்றும் அனுபவப் பகிர்வுகளாக அது இடம் பெற்றது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆளுமை மிகுந்த பெண்களைத் தெரிவு செய்து அழைத்திருந்தனர். அத்தோடு இந்திய தலித்துகளைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் பழங்குடியினரின் பங்களிப்பும் இதில் இருந்தது. இது தவிர ஒவ்வொரு நாளும் pடநயெசல ல் அனைவரும் கூடுவார்கள். இந்த pடநயெசல நேரம் தவிர்ந்த வேறு நேரங்களில் ஆவணத்திரைப்படங்கள், குறுந்திரைப்படக் காட்சிகள் மற்றும் வேறு பிராந்தியங்களில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள், மேடை நாடகங்கள் என ஒவ்வொரு நிகழ்வுகளும் அருமையாக ஒழுங்குபண்ணப் பட்டிருந்தன.
?. அங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்களைப்பற்றி
அங்கு வந்திருந்த ஒவ்வருவருமே குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள்தான். அந்த அளவுக்கு தனி ஆளுமை நிறைந்த பெண்களைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்த அமைப்பைச் சேர்ந்த அனித்தா காய், உமாச் சக்கரவர்த்தி, சமித்தா சென், மீனா கோபால், இலினா சென் போன்றோரின் பங்களிப்பு இம்மாநாட்டை நடத்தியதில் அளப்பரியது. அத்தோடு அழைக்கப்பட்டிருந்தவர்களில் பங்களாதேசைச் சேர்ந்த பெண்ணிய நாவலாசிரியர், உருது மொழிப் பெண்ணிய கவிஞர்கள் அத்தோடு வட மத்திய இந்தியாவின் தலித் பெண் புரட்சியாளர் ,குமுட்; பவுட்;;;, மற்றும் பழங்குடி இனத்தைச்சேர்ந்த பெண் தலைவர்கள் என பலரை இதனுள் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அத்தோடு இம்மாநாட்டில் ஆர்வமுள்ள நிறைய நபர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்தனர். பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பல்கழைக்கழக மாணவர்களும் இதில் ஈடுபாட்டோடு கலந்து கொண்டதை பார்க்கக் கூடியதாக இருந்தது.
?. விளிம்புநிலை மகளீரின் என்னென்ன பிரச்சினைகள் ஆராயப்பட்டன
பெண்களுக்கெதிரான பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக பேசப்பட்டது.இதில் யுத்தம் நிகழும் இடங்களில் நடக்கும் பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்கள் தொடர்பாகவும் மத ரீதியாக நிகழ்த்தப்படும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இலங்கையை விட இந்தியாவில் தலித்தியம் ஒரு முக்கியமான விடயம். இந்த வகையில் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தலித்துகள் நடத்தப்படும் விதங்கள் கவனத்துக்குள்ளாகின. தலித்திய பெண்களின் பிரச்சினைகள் வித்தியாசமானவை. சாதியக் கொடுமைகள் தலை தூக்கும் போது தலித்திய ஆண்கள் பெண்கள் ஒன்று பட்டு அதை எதிர்க்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறைகின்ற போது தலித்திய ஆண்களும் மற்ற சராசரி ஆண்களைப்போல் குடும்ப வன்முறைக்கு தலித்திய பெண்களை ஆளாக்குகிறார்கள். இந்த வகையில் தலித் பெண்களின் பிரச்சனைகளும் ஆராயப்பட்டன. அத்தோடு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த விளிம்பு நிலைப்பெண்கள் தொடர்பாகவும் பழங்குடியினர் எதிர் நோக்கும் நிலச்சுவீகரிப்புப் பிரச்சனைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
?. இலங்கையிலுள்ள விளிம்புநிலை மகளிர்பற்றியும் ஆராயப்பட்டதா
மொத்தமாக ஆசியாவின் விளிம்பு நிலைப் பெண்கள் தொடர்பாகவும் இலங்கையின் விளிம்பு நிலைப்பெண்கள் தொடர்பாகவும் எனது பேச்சு அமைந்தது. அதில் இலங்கையில் உள்ள விளிம்பு நிலை மகளிரின் பிரச்சினைகள் பற்றியும் அதிக கவனம் செலுத்தினேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் முகம் கொடுக்கும் யுத்த காலத்தில் நேர்ந்த வன்முறை மற்றும் புலம் பெயர் இடங்களில் இப்பெண்கள் முகம் கொடுக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் சிறுபான்மை இனம் என்கின்ற வகையில் இலங்கைக்குள்ளும் உலகலாவிய ரீதியிலும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களுக் கெதிராகவும் பேசினேன். ஆனால் முழுக்க முழுக்க விளிம்பு நிலை மகளிர் பற்றித்தான் பேசினோமா என்று கேட்டால் அது மாத்திரம்தான் என்று கூற முடியாது. பொதுவாக பெண்களுக் கெதிரான வன்முறைகள் அது தொடர்பான பதிவுகள், பெண்களுக்குத் தேவையான உரிமைகள், ஆண் பெண் தொடர்பான பால் அரசியல் அது எவ்வாறு சமூகப்பார்வைக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளது மற்றும் தீண்டாமைக்கொடுமைகள் என்பவை தொடர்பாக உன்னிப்பான பார்வை செலுத்தப்பட்டது. பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் மட்டுந்தான் பெண்களுடைய பிரச்சனைகள் என்று இல்லை, ஆண்பெண் பால் இயல்புகளும் பெண்களின் வாழ்க்கை முறையில் தாக்கம் செலுத்துகிறது. ஆண் பெண் தொடர்புகள் தொடர்பாகவும் எமது சமுதாய சடங்குகள் தொடர்பாகவும் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதே ஆசியப் பெண்கள் மறுமலர்ச்சியாக இருக்கக்கூடும்.
ஆண்களுக்கென்று சில வரைவிலக்கணங்களையும் பெண்களுக்கென்று சில வரைவிலக்கணங்களையும் வகுத்து இவர்கள்தான் ஆண்கள் இவர்கள்தான் பெண்கள் என்கின்ற பாரம்பரிய படிமம் மாற்றம் பெற வேண்டிய அவசியம் தற்காலத்தில் தேவையானதாக உள்ளது. கால மாற்றங்கள் மட்டுமன்றி ஒரு சமுதாய தலைமுறை மாற்றத்தை நிகழ்த்தக் கூடியது எமது பெண் ஆண் குழந்தைகளின் வளர்ப்பு முறையும்தான் என்பதைத்தான் எனது பேச்சிலும் முன்வைத்திருந்தேன். எனது இந்தக் கருத்து புதுமையானதாக மட்டுமின்றி பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது. இக்கருத்து யதார்த்தமானதும் கூட என்று கூறப்பட்டது.
ஆயினும் விளிம்பு நிலைப்பெண்கள் என்று கூறும் போது ஒரு பொதுவான பார்வை இருக்கிறது, விளிம்பு நிலை என்றால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், பிராந்திய ஒடுக்கு முறைகளுக்கு முகங்கொடுப்பவர்கள், யுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள் இவ்வாறான பெண்கள்தான் விளிம்பு நிலைப் பெண்கள் என்று. ஆனால் உண்மையில் எமது சாதாரண குடும்பங்களுக்குள் நிறைய வீடுகளுக்குள் இருக்கும் சில குடும்பப் பெண்கள் கூட விளிம்பு நிலைப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். குடும்ப வன்முறைகளுக்கு முகங் கொடுப்பவர்கள் இதில் இருந்து மீட்சி பெற தவிப்பவர்கள், இவர்களின் மீதான சமூகக் கவனிப்பு தவறி விடுகிறது. இது கவனிப்புக்கு உட்படுத்தப்படக்கூடிய ஒன்று. என்னுடைய பேச்சு விளிம்பு நிலைப் பெண்களுக்குள் இவர்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.
?. இலங்கையின் பெண்கவிஞர்களில் முக்கியமானவர் என்ற வகையில்; இம்மாநாடு எந்தவகையில் உங்களுக்கு பயனுடையதாக இருந்தது
பயன் பற்றிக் கூறுவதை விட முதலில் பல முகங்கள் பல பின்னணிகள் பல ஆளுமைகள் கொண்ட பன்முகம் படைத்த பெண்ணிய வாதிகள் பெண்ணிய எழுத்தாளர்கள் அமைப்பு ரீதியாக இயங்குகிறவர்கள் என்று பல தளங்களில் நிறைய ஆளுமைகளை சந்திக்க முடிந்தது. இது ஒரு சந்தோசமான அனுபவம். அங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளும் புதுமையானவை. அறிவு பூர்வமான விடயங்களை அனுபவிக்க முடிந்தது. இப்படியான ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட பின் எனது உணர்வுகளும் பல பரிமாணங்களை அடைந்திருப்பதாகக் கருதுகிறேன். மேலும் அங்கு சந்திக்க நேர்ந்த பல பெண்கள், அமைப்புகள் சார்ந்து இயங்குகிற ஒரு தன்மையையும் காணக்கூடியதாக இருந்தது. நிறைய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு ஒருவர் செயற்படுவது ஒரு துறையில்தான் என்று இல்லை. அவர்கள் முழு நேரமாக பல வேலைகளிலும் இயங்கக் கூடியவர்களாக இருந்தனர். அத்தோடு வயதெல்லையோ அல்லது மத வேறுபாடுகளோ இன்றி அனைவரும் பெண்கள் என்ற அடிப்படை உணர்வோடு சமத்துவத்தோடு பழகக்கூடியதாக இருந்தது. அவர்களைப் பார்க்கும் போது இன்னும் நாம் செயற்பட வேண்டிய தேவையும் அவசியமும் அதிகமாக உள்ளது என்று தோன்றியது.
?. இம்மாநாட்டில் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
தீர்மானமென்று எதுவும் எடுக்கப்படவில்லை. யாரும் அங்கு அவ்வாறெல்லாம் தீர்மானங்கள் தொடர்பாக அக்கறை செலுத்தவோ பேசவோ இல்லை. தீர்மானங்களெடுத்துத்தான் இயங்க வேண்டுமென்ற நிலைப்பாடு கொண்டவர்களாகவும் அவர்கள் காணப்படவில்லை. ஏனெனில் தேவையான நேரங்களில் பெண்களுக்கான எந்த செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் துணிந்தே இருக்கின்றனர். வழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர். அத்தோடு இத்தகைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடும் ஆண்டிற்குள்ளேயே பிரச்சினைகளின் அடிப்படைகள் மாறிவிடுவதுண்டு. எனக்கும் மாநாடுகளில் தீர்மானங்களை எடுப்பது அதன் பின் அத்தீர்மானங்களின்படியே திட்டங்களை வகுப்பது பிறகு அவரவர் வேலைகளில் தீர்மானங்களை மறந்து போவதெல்லாம் தெரிந்த கதையென்கின்றபடியால் தீர்மானங்களை எடுத்து செயற்படுவதென்பதிலெல்லாம் உடன்பாடில்லை.
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
பெண்ணியாவின் செவி நன்றாக உள்ளது அதுவும் இது பிரமாதம்வழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர்.