குமாரத்தி (ஆழியாள்)
என் தந்தையரின் வாயில்கள்
எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன
தூபங்களின் வாசனையோடு
விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு
கருங்கற் படிகளோடு
என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.வெளி முற்றத்திலிருந்து
நான் தொடுத்த வில்லுக்கும்
ஊர்க்கோடியில் இருந்து,
அதற்கும் அப்பால், அப்பால் இருந்து
நான் எய்த அம்புகளுக்கும்
பதில் எதுவுஞ் சொல்லாது
என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன
ஆழிப் பெரு மௌனத்துடன்.
தந்தையரே!
ஒரு கெட்ட குமாரனைப்போல் மீண்டும்
உங்கள் வாயில்களை நோக்கி வருவேன் என
நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால்,
அறிக! நானோ அவனில்லை
நான் குமாரத்தி.
நீங்கள் தரும் உயர்ந்த வஸ்திரத்தை ஏற்கப் போவதில்லை
விருந்துண்டு உம்மோடு
கீத வாத்தியத்தியத்தில் மூழ்கிக் களிக்கவும் போவதில்லை
வீடு திரும்புதலும் எனக்கில்லை.
கூடாரங்கள் அமைத்து
வனாந்தரங்களில் அலைந்தாலும்,
தூரதேசக் குளிரில் திசையறுந்து திரிந்தாலும்,
ஒளி பெருக்கெடுத்துப் பொங்கி வழிந்தோடப்
பெருகிப் பெருகிப்
பேராறாய் விரியும் பால்வெளியைக்
கண்டு சிலிர்த்த குமாரத்திகள் வீடு திரும்புவதில்லை.
இனி வீடு திரும்புதல் எனக்கில்லை.
தந்தையரே! எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்.
மாசி 2011