எஸ்.பாயிஸா அலி (கிண்ணியா)
நாணிக்கொள்கிறேனென் நந்தவனப் பூங்கிளியே
நீ சிக்கித் தவிக்கும்
வெம்பாலையின் கொடுந்தளையறுக்க வியலாத எம்
வெற்றுக்குரல்வளைகளை நினைந்துநினைந்தே
துயரக்கடலின் அழுகைமுத்தாய் தத்தளிப்பவளே
கருகிடாதோ உன் வசந்தங்களை
தாவாதாமியின் கருஞ்சுவருக்குத்
தின்னத்தந்த சட்டத்தின் கொடுநாவுகளும்.உதிர்ந்த தம் பூவுக்காய்
ஊட்டிய பூவையும் பொசுக்கிட விளைகிற
இதயங்களுள்ளேதான் குவிந்து கிடக்குமோ
பொதும்பும் சுடுமணற்குவியல்கள்.
சிறியதந்தையின் ஈரல் ருசித்த குரூரங்களுக்கே
கருணையீந்த பெருமஹானின்
மூச்சுக்காற்று படர்ந்திருக்கிற சந்தன மண்ணிலிருந்தா
இப்படியுமொரு இறுகிய குரல்?
அடைக்கல மானின் நடுநடுங்கும் குருதிக்கான
பசியின்அகோரங்களோடு மேலெழுந்த கூர்வாளே
நேற்றைய உன் செய்நேர்த்தியின் இறுமாப்பையுஞ் சேர்த்து
வெள்ளைஓநாய்கள் கட்டுடைக்குமுன்பே
விட்டுவிடு எம் சிட்டுக்குருவியை.