எழுத்தாளர் மாநாட்டின் கவனத்திற்குள்ளாகுமா முஸ்லிம்களின் போதனாமொழி பிரச்சினை ??

6++Maldivian

நான் வாசித்ததை ஊடறு வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற அவாவில் இதை நான் ஊடறுவுக்கு அனுப்பியுள்ளேன். இது தினக்குரலில் வெளிவந்த கட்டுரை
–நகிபா கலீல்–

இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதுவொரு தனிமனித விவகாரமாகக் கூட இருக்கலாம்  ஒரு மொழி என்று வரும்போது அம்மொழியை பேசும் ஒரு சமூகம் என வரும்போது அம்மொழிவழி நடத்தும் மாநாடுஅதுவும் சர்வதேச மாநாடு.

அதாவது நம்நாட்டின் துயர்படிந்த ஆடிக்கலவரம் 1983 இல் நடந்தது.  இந்தக்கலவரத்தை அடுத்து நம் சகோதர நெஞ்சங்கள் சிதறியும் குடிபெயர்ந்தும் அழிந்தும் போன நிலமையில் நாடெங்கும் பட்டிதொட்டி எங்கணும் தமிழைத் துணிந்து பேசியும் எழுதியும் பயின்றும் வந்ததன் மூலம் தமிழ்பணியைத் தோளில் சுமந்து வந்த முஸ்லிம்கள் இனிவரும் காலங்களில் முற்றாகத் தமிழை மறந்துவிடுவரோ என்ற இனம்புரியாத கிலேசம்…! எம்மிடம் உள்ளது.

ஆம்… மேற்சொன்ன கவலையும் உள்ளச்சமும் – கிலேசமும் ஏன் வருகிறது. தெரியுமா?ஆரம்ப காலம் முதலே தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழில் சிந்தித்தும் – பேசியும் பயின்றும் வந்த இலங்கை முஸ்லிம்களின் இன்றைய சந்ததியினரில் ஒரு பகுதியினர் தம் பிள்ளைகளுக்கு  சிங்கள மொழிமூலம் கற்பிப்பதற்கு சிங்களப் பாடசாலைகளை நாடிச் செல்லும் ஆர்வம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த அதிகரிப்பு எதில் போய் முடியும்?

தமிழை விட்டு சிங்களத்தைப் போதனா மொழியாக முஸ்லிம்களில் ஒரு சாரார் ஏற்று பயின்று பேசிப் பழகி வருவதால் இன்னும் 10 – 15 வருடங்களில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சமுதாயம்  தமிழ் முஸ்லிம் என்றும் சிங்கள முஸ்லிம் என்றும் இரண்டு படப்போகும் பிரிவுநிலை தூரத்தே தெரிகிறது. சிங்கள மொழி மூலம் பயிலும் முஸ்லிம் மாணார்க்களுக்கு  சமயப்பாடமாக இஸ்லாத்தைப் படிக்கும் வாய்ப்பு இல்லாமையால், கலாச்சார சீரழிவும் சமூகம் தன் தனித்துவ பண்பாட்டு  அடையாளத்தை தொலைத்துவிடும் சந்தர்ப்பமும் எதிர்நோக்கி வந்தகொண்டிருக்கும் சோகம் மனதைக் கௌவுகிறது.

முஸ்லிம்களில் ஒரு சாரார் சிங்களத்தை நாடி – விரும்பிப் போவதற்கு பிரதான காரணங்களாகக் கீழ்வரும் விடயங்களை துறைசார் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

– தமிழ் மொழிமூலம் போதிக்கும் முஸ்லிம் பாடசாலைகளில் பௌதிக ஆசிரியர் பற்றாக்குறை
– இதனால் கல்வித்தரம் வீழ்ச்சி
– அதனால் முஸ்லிம் பெற்றோரின் அசிரத்தை

மேற்கண்ட நான்கு காரணங்களும் நாட்டிலுள்ள எல்லா பாடசாலைகளிலும் காணப்படும் பொதுவான அம்சங்கள் தானே எனக் கூறுவோரும் நம்மில் உளர். பிரஸ்தாப பொதுக்காரணங்கள்  எல்லாப் பாடசாலைகளுக்கும் பொதுவானவை என்ற போதும்  சிங்களத்தைக் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்களுக்கும் இது பிரச்சினையே அல்ல. இவ்விருமொழியினரும் தரமில்லாப் பாடசாலை என விலகினாலும் இன்னொரு அதேமொழி மூலப் பாடசாலையிலேயே தம் பிள்ளைகளை சேர்ப்பர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழில் தரமில்லை என்றால் சிங்களமொழி மூலப்பாடசாலையை நாடிச்செல்லும் வாய்யப்பும் வசதியும் இருக்கிறதல்லவா?

ஒரு பாடசாலைதான் மாணவர்களின் ஆளுமையையும் – திறமையையும் வெளிக்கொணர்ந்து அதற்கு களம் தந்து வளர்த்துவிடும் ஆரம்ப மேடையாக அமைகிறது. பல்வேறு அறிஞர்களிடையே கவிஞர்களும் – எழுத்தாளர்களும் – இலக்கியவாதிகளும் இந்தப்பள்ளிக் கூட தளத்திலே துளிர் விடுகின்றனர். அப்படியிருக்க தமிழ் பேசும் பெரிய குடும்பத்தில் ஒரு சாரார் தமிழுக்கு புது வடிவங்களைத் தந்து கணிசமானளவு பங்களிப்பு செய்த ஒரு பரம்பரையிலிருந்து ஒரு கூட்டம் விலகிச் செல்வதை அதுவும் எம் கண்முன்னே திசை மாறிப் போவதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உளகாளவிய பொது உறவின் பூரிப்பில் மகிழ்ச்சியுற்ற தமிழ் பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் கண்டும் காணாமலும் இருந்து விடாலாமா?

இது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை. இதில் நாம் தலையிடலாமா? என ஒதுங்குவதும் இது தனிமனிதனின் பிரச்சினை தம் பிள்ளைகள்  எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பெற்றோரின் கடன் இதில் நாம் மூக்கை நுழைக்க முடியாது எனக் கூறி வாளவிருப்பதும் தற்போதைய தலைத்தப்புதலுக்கு வேண்டுமானால் நியாயமாகப் படலாம். தூரநோக்கோடு ஒரு 20 வருடம் கடந்து சிந்தித்தால் தமிழ் பேசும் பெரிய குடும்பத்தின் ஒரு பக்கம் சற்றே சரிவு காணப்போவதை உணரமுடியும். இந்த சரிவுக்கு நாம் காரணமாகலாமா?

இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதுவொரு தனிமனித விவகாரமாகக் கூட இருக்கலாம்  ஒரு மொழி என்று வரும்போது அம்மொழியை பேசும் ஒரு சமூகம் என வரும்போது அம்மொழிவழி நடத்தும் மாநாடு அதுவும் சர்வதேச மாநாடு நடத்தும்போது மாநாடு நடைபெறும் நாட்டிலேயே இப்படியான “திசைதிரும்பல்” நடக்கும்போது மாநாடு நடத்துனர்கள் மட்டுமல்ல தமிழபிமானம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் சும்மா இருப்பதை சரிகாண முடியவில்லை. அப்படியானால் இதற்கு என்ன செய்யலாம்.

இது குறித்து அரசியலுக்கு அப்பால் சமய எல்லைகளை கடந்து- தூர நோக்கில் பொதுப்பார்வையில் இப்பிரச்சினையை அணுகவேண்டும்  முஸ்லிம் பாடசாலைகள் போன்றே கிராமங்களில் பின்தங்கிய தமிழ் பாடசாலைகளும் ஏராளமுண்டு.  ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் தமிழ்ப்பாடசாலைகளும் எவ்வளவோ உண்டு. இதனால் கல்வித்தரம் வீழ்ச்சியுற்ற தமிழ் பாடசாலைகளும் இருக்கவே செய்கின்றன.

எது எப்படியோ

தமிழில் படிப்போர் தமிழில் பேசுவோர் தமிழில் எழுத்துக்களை படைப்போர்  எவ்வகையிலும் குறையவோ திசை திரும்பவோ இடந்தரலாகாகது. அதைத்  தடுத்தும் பொறுப்பு தமிழ் பேசும் அனைவருக்கும உண்டு.  இதுகுறித்து மாநாட்டையொட்டி ஒரு கலந்துரையாடலை முஸ்லிம் கல்விமான்களுடன் நடத்தலாம். இது குறித்து சர்வதேச தமிழ்மாநாடு சிந்திக்க வேண்டும் சிந்திக்குமா??

3 Comments on “எழுத்தாளர் மாநாட்டின் கவனத்திற்குள்ளாகுமா முஸ்லிம்களின் போதனாமொழி பிரச்சினை ??”

  1. என்ன ஊடறு உங்கள் பிரண்ட் உமா கூட இவ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டுள்ளார். இது எந்தவகை நியாயம் பெண்கள் சந்திப்பு, மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் என்றெல்லாம் வேறு ஒடுக்கப்படுபவன் ஒடுக்கிறவனோடு இருப்பது மாதிரி

  2. தமிழால் பிழைத்தல் இயலாது என்றறிந்த பின் மொழிமாற்றியவா்கள் தமிழா்களும்தான்.என்ன செய்வது பிழைத்தல் வேண்டும். விட்டு விடுங்கள்.பல காலங்களின் பின் தமிழ் எழுத்தாளா்கள் சந்திப்பதை சந்தா்ப்பமாக நினைத்து குருவி தலையில் பனங்காய் வைப்பதும் கலைத்துப்போட கங்கணம் கட்டுவதும் வீண்வேலை.

  3. துண்டுப்பிரசுரம்

    நாங்களும் இருக்கிறம்

    மாற்றுப்பிரதி
    http://www.maatrupirathi.blogspot.commaatrupirathi@gmail.com

    அயல் நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே அரசியல், இலக்கியச் சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கிய அரசியல் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் இன்று கொழும்பில் நடாத்தப்படுகிற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒரு குழுநிலை அளவிலான செயற்களத்தைக் கொண்டதாகவே உணர முடிகிறது. விரிந்த தளத்தில் இதன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் இந்த மாநாட்டின் செம்மையும் விரிவும் முக்கியத்துவமும் வேறாக அமைந்திருக்கும். அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமுமாகும்.

    ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ என்ற அடையாளப்படுத்தல் அனைத்துத் தரப்பினரையும் ஏகமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளை இந்தப் பொது விளிப்பின் கீழ் முக்கியமான விடயங்கள் விடுபட்டுள்ளன. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகால எதிர்ப்பிலக்கியம் அல்லது ஜனநாயகத்துக்கான போராட்டம் எனக்கருதும் இலக்கியமும், அத்தோடு இருபெரும் கதையாடல்களுக்கு எதிரில் செயற்பட்ட முஸ்லிம்கள், என்றைக்குமாக மலையைச் சுமக்கும் மலையக மக்கள், தலித்கள், போராளிகளாக தம்மை அறிவித்துக்கொண்டவர்கள், பிற உதிரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விளிம்புநிலை இலக்கியச் செயற்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

    இந்த இலக்கியப் போக்குகளே கடந்த கால் நூற்றாண்டுகாலத்தின் மையப் போக்காகவும் பெரும்போக்காகவும் இருந்துள்ளன. பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் சவால்களை எதிர்கொண்டவாறு இந்த இலக்கியப் பங்களிப்பினை ஒடுக்குமுறைகளுக்கெதிராக வழங்கிய படைப்பாளிகளும் அவர்களுடைய படைப்புகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநாட்டின் பிரதான ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதியுடன் பேசியபோது அவர் நெகிழ்ச்சியோடு இந்த விடயத்தை அணுகியிருந்தாலும் இறுதிவரையில் மாநாட்டில் இந்த பிரதான இலக்கியப் போக்குகளுக்கான அரங்குகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை. வேண்டுமானால், கட்டுரையை மட்டும் வாசிப்பதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக திரு. முருகபூபதிக்கு நன்றிகள்.

    ஆனால், விளிம்பு நிலை மக்கள் அல்லது மற்றமைகள் எப்போதும் பொது விளிப்பினுள்; அமிழ்த்தப்படுவது அல்லது புறக்கணிக்கப்படுவதே வழமையாக உள்ளதை இந்த மாநாடும் உறுதி செய்துள்ளது. இத்தகையதொரு புறக்கணிப்பானது இந்த மாநாட்டின் முழுமைப்பாட்டைச் சிதைப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றது. முக்கியமாக 11 விடயங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்த மாநாட்டின் அரங்குகளில் பெண்கள் தவிர முக்கியமான விடயங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது நம்பிக்கையீனத்தையும் தொடர்ந்து அனைத்துத் தரப்புகளோடும் போராடவேண்டும் என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகின்றன.

    சம்பிரதாயபூர்வமான நிகழ்ச்சிகள் கதையாடல்களிலிருந்து விலகியிருப்பதையும் அர்த்தபூர்வமான உண்மைத் தளத்தை நோக்கிய எழுத்துப் பங்களிப்பை வழங்க முயற்சிப்பதனாலும் மாற்றுப்பிரதி மற்றும் மற்றமைகள் இந்த மாநாட்டை முழுமையாகக் கருதவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கின்றன.

    தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கிம் போன்று இலக்கியச் செயற்பாடுகளை நெகிழ்ச்சியற்ற முறையில் பொதுமைப்படுத்துகின்ற இறுக்கமான வரையறுத்தல்களை புறக்கணிக்கிறோம். இவ்வகைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் மறைத்தொதுக்கப்படுகின்ற சிறுகதையாடல்களின் பக்கம் நாம் செயற்படவிரும்புகிறோம். இலக்கியம், அரசியல் போன்ற வெளிகளில் சிறுகதையாடல்களுக்கான உரிய இடத்தைக் கோருகின்றோம். அதற்கான இடம் வழங்கப்படாத இம் மாநாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *