அல்லவை செய்தொழுகும் வேந்து !

 பரமேஸ்வரி (இந்தியா)
show எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி இருக்கிறார். விரைவில் இவர்களுக்கும் முடிவு கிடைத்துவிடும் என்று நம்பலாம்.
 
நான் வாழும் ஊரில் 6 மணி முதல் 8 மணி வரை, மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின்வசதி நிறுத்தப்படுகிறது. இப்படி மாநிலம் முழுவதும் பல மணி நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தின் காரணமாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களும் மற்ற பல நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளும் முடங்கி இருக்கின்றன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்கள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதாரமே தேங்கி இருக்கிறது.

ஆனால் தமிழகத்தின் தலைநகராம் தருமமிகு சென்னையில், மன்னரும் மன்னரின் வாரிசுகளும் அவர்களின் பல்வேறு வகைப்பட்ட உறவுகளும் வசிக்கக்கூடிய பகுதிகளில் மட்டும் இடையறாத, தடையிலாத மின்வசதி. மன்னருக்குக் கப்பம் கட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லாத மின்சாரம், வரிச் சலுகை. பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விதிகளை வளைத்தும் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படாமலும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்தியாவின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SPECIAL ECONOMIC ZONE) தமிழ்நாட்டில்தான் தொடங்கப்பட்டது. சென்னைக்கு அருகில் மஹிந்திரா நிறுவனத்தைக் கொண்டு தொடங்கப்பட்டதால் அது ‘மஹிந்திரா சிட்டி’ எனப்பட்டது. இப்போது இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கொல்கத்தா போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் தொடங்கப்பட்ட போது அந்தந்த மாநிலத்தில் மக்கள் இப்பன்னாட்டு நிறுவனங்களை வர விடாமல் போராடி, வெளியேற்றினர். காரணம், அங்கெல்லாம் மக்கள் நிலத்தின்மீது இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. அவர்களிடம் தாங்கள் நம்புகின்ற ஒன்றிற்காக அரசையும் எதிர்த்து நிற்கும் தறுகண் உயிர்ப்புடன் இருக்கிறது.

  

show

தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் அதிருப்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனினும் பெருத்த சகிப்புத் தன்மையுடன் வாழ அவர்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். வலிமை பொருந்திய யானையைப் பிச்சையெடுக்கப் பழக்கும் மன ஊனமுற்ற மனிதர்கள் நிறைந்த சமூகமாக நம் தமிழ்ச் சமூகம் மாறி விட்டது. நிலத்தடி நீர் இல்லை, ஆற்று நீர் இல்லை; மின்சாரம் இல்லை; நிலங்கள் மலடாக்கப்பட்டு விட்டன. இருக்கின்ற நிலங்கள் எல்லாம் பெருமுதலாளிகளாலும் அரசியல்வாதிகளாலும் வளைக்கப்பட்டு விட்டன. ஆறுகள் சுரண்டப்படுகின்றன. எதைக் கண்டும் கோபமில்லாமல் இலவசங்களின் துணையுடன் அரைவேக்காட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி எதிர்காலக் கனவுகளில் மூழ்கியிருக்கின்றனர் தமிழ் இளைஞர்கள். சென்னைக்குப் பிழைக்க வந்து கொடும்பாடுபட்ட ஒரு மனிதனின் அனுபவமாகப் பாடப்பட்ட ஒரு தனிப்பாடலொன்று தவிர்க்க இயலாமல் நினைலெழுகிறது.  

சென்னாபுரி மேவி சிவனானேன் – நல்ல
அன்னம் அறியா தவனாகி மன்னுசிரம்
கைக்கொண்டு அரைச்சோமன் கட்டி சடைமுறுக்கி
மெய்கொண்ட நீறணிந்து மே”

ஐ.நா. வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, “தொழில் செய்யும் நாடுகளின் சட்டப்படியே பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவித்திருக்க, தமிழ்நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மட்டும் நம் நாட்டுத் தொழிலாளர் நலச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. வானளாவிய அதிகாரத்துடன் நகரங்களைக் கபளீகரம் செய்து, நம் நாட்டின் சிறு முதலீட்டு நிறுவனங்களை விழுங்கி, விவசாய நிலங்களை வளைத்து, தன்மானமுள்ள நம் மக்களைத் தம் தொழிலாளராக்கி அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தராமல் அசுரப் பசியோடு அனைத்தையும் அழித்து வருகின்றன இந்நிறுவனங்கள். ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சங்கம் அமைப்பதில் ஆர்வத்தோடு செயல்பட்ட 83 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் 8000 ஊழியர்கள் பணியாற்றும் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக ஆலையில் 1,400 ஊழியர்களே பணி நிரந்தரம் செய்யப்பட்டோர். மற்றவர்கள் பயிற்சியாளராகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கும் ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் செய்தனர். உடனே, 23 தொழிலாளர்களைப் பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம். 317 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 12 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் கைதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கொடுமையிலும் கொடுமையாக, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், கடைநிலை ஊழியரின் ஊதியமான 9,800 ரூபாயையேனும் ஒப்பந்தத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்குத் தங்கள் நிலத்தையும் வழங்கி விட்டு, 30 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே நீடிக்கும் இந்த 13,000 தொழிலாளர்களின், அவர்தம் குடும்பங்களின் சோகத்தை அந்த நிறுவனமோ, நிறுவனத்துக்குத் துணை நிற்கும் இந்த அரசோ உணர முடியுமா? 30 வருடங்களாகத் தகுந்த பாதுகாப்பின்றி, பயிற்சியின்றி உயிரைப் பணயம் வைத்துச் சுரங்கத்திலும் மின் ஆலையிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் துன்பத்தை, மக்களாட்சி என்ற போர்வையில் மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த இரும்பு இதயங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்குமா? எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி இருக்கிறார். விரைவில் இவர்களுக்கும் முடிவு கிடைத்துவிடும் என்று நம்பலாம்.

அங்கன்வாடி ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; சத்துணவு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; டாஸ்மாக் ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்…. எதற்காக? ஏ.சி காரும் வசதியான வாழ்க்கையும் பெறவா? எட்ட முடியாத உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் காய்கறிகளையும் மளிகைப் பொருட்களையும் எட்டிப் பிடித்துத் தம் குழந்தைகளுக்கு மூன்று வேளை வயிறார உணவிட, அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தரப் போராடுகிறார்கள். ஆனால் அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி மடுக்காமல் அவர்தம் போராட்டங்களைக் கடுமையான அடக்குமுறையின் மூலம் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது; உரிமை முழக்கத்துக்கு எதிர்நிலையில் நின்று கொண்டு முதலாளித்துவத்திற்கு லாவணி பாடிக் கொண்டிருக்கிறது.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

என்று தொழிலாளர்களின், வினை செய்பவர்களின் மனம் கோணாமல் நடப்பதே நல்ல தலைவனின் கடமையாக வள்ளுவர் வகுத்திருக்கிறார். அப்படி நீதி வழி செல்லாத அரசன், குடிமக்களின் ஆதரவை இழந்து விடுவான் என்றும் அவரே உரைத்திருக்கிறார். தீயின் நடுவிலும் தூங்க முடியும்; நடுவில் (பசித்)தீயை வைத்துக் கொண்டு கண் மூட முடியுமா? என்று தொழிலாளர் சார்பில் நின்று மன்னனிடம் கேள்வி கேட்கிறார். தங்கள் வயிற்றுப்பாட்டுக்காகப் போராடும் மக்களின் அல்லலுற்று அழும் கண்ணீரின் சக்தியை அரசு ஒரு நாள் உணரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

தடாகம் சஞ்சிகைக்கும் இதை அனுப்பித்தந்த யசோதாவுக்கும் நன்றிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *