உமா (ஜேர்மனி)
ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட
வார்த்தைகள் வீடெங்கும்
சிதறி விழுந்தன.
வீட்டின் மூலை முடுக்கெல்லாம்
கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த
இரகசிய இடங்களில் ஒளிந்து கொண்டவை போக
மிஞ்சியவை தங்கள் முகங்களைக்
குப்புற வைத்துக் கொண்டு
அரவமற்றுக் கிடந்தன.கட்டிலிக்கு கீழும் மேசைக்கு அடியிலிலும்
அடுப்படியின் இடுக்குகளிலும்
அப்பியிருந்தவற்றைக்
குனிந்து குனிந்து
கையில் எடுத்துப் போட்டுக் கொண்டேன்;
அவை எனது கையில் நிலை கொள்ளாது
வழுக்கி வழுக்கி விழுந்தன
சில தப்பித்துப் போக முயற்சி எடுத்தன
நான் எனது கையை இறுக்க மூடிய போது
அவை முக்கித் திணறி
எனது கைகளைத் திறக்கப் பண்ணின.
நான் உற்றுப் பார்த்ததும்
அவை புழுக்களாகவும் தேள்களாகவும்
குளவிகளாகவும் அட்டைகளாகவும்
உருவெடுத்திருந்தன.
அருவருப்புத் தாங்காமல்
கையை உதறித் தள்ளினேன்
அவை என்னை விட்டு போகாதபடி
இறுக்கப்பற்றியிருப்பதை உணர்ந்தேன.;
புழுக்கள் இப்போது
எனது உடல் முழுதும்
ஊறத் தொடங்கியிருந்தன.
தேள்கள் என்னைக் கொட்டிக் கொட்டித்
துளைத்துக் கொண்டிருந்தன.
அட்டைகள் எனது இரத்தத்தைக்
குடித்து குடித்து உப்பியிருந்தன.
குழவிகள் எனது உடலை
அடையாள மாற்றம் செய்துகொண்டிருந்தன.
இரத்தமும் நிணமும்
கசிந்து கசிந்து
சீழும் சிதழும் வடிந்து
என் உடலில் வலியை உண்டு பண்ணின
இயலாமையின் முனகல்கள்
அகோரக் கதறல்களாக
எனது வீட்டின் சுவர்களைத் தகர்த்தன.
புழுதிக்குள் மூடப்பட்டிருந்த
எனது உடலை
சிரமப் பட்டு
வெளியில் எடுத்தேன்.
அதிலிருந்த காயங்களில்
இன்னும் ஒற்றிக் கொண்டிருந்த
ஆண்மை ஆணவம், அதிகாரம்
இறுமாப்புடன் என்னை முழிசிப் பார்க்கின்றன.
என் முழுப் பலத்தையும் வரவழைத்துக் கொண்டு
அவற்றைப் பிய்த்தெறிய முயற்சிக்கின்றேன.;
எனது உடலின் அழுத்தம் குறைந்து
நான் இலேசாவதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்
ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட
வார்த்தைகள் வீடெங்கும்
சிதறி விழுந்தன.
வீட்டின் மூலை முடுக்கெல்லாம்
கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த
இரகசிய இடங்களில் ஒளிந்து கொண்டவை போக
மிஞ்சியவை தங்கள் முகங்களைக்
குப்புற வைத்துக் கொண்டு
அரவமற்றுக் கிடந்தன.