சூசன் சான்டாக் பெண்ணியத்தின் நவீனக் கட்டுமானம்

குட்டிரேவதி (இந்தியா)

rev1 “துப்பாக்கிகளையும் கார்களையும் போல தனது பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் காமிராக்களும் கனவூட்டும் இயந்திரங்கள்தாம். என்றாலும் வரம்பு மீறிய மொழிப்பயன்பாட்டுக்கும், விளம்பரத்துக்கும் மாறாக இவையொன்றும் சாகடிப்பவையல்ல. துப்பாக்கிகளைப்போல் கார்களை உயர்த்தி விற்கும் கட்டத்தில், குறைந்தபட்சம் இவ்வளவேனும் உண்மை இருக்கிறது. போர்க்காலங்களைத் தவிர, கார்கள் துப்பாக்கிகளைவிட அதிக மக்களைக் கொல்கின்றன.

ஆனால் காமிராவோ, துப்பாக்கியோ கொல்வதில்லை. ஆக, என்றென்றைக்குமான ஓர் உருவகம் என்பது வெறும் வெற்றுவேட்டாகத் தோன்றுகிறது. தானும் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ள கத்தியை அல்லது ஒரு கருவியைக் கையகப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு மனிதனின் பகற்கனவைப்போல. இருப்பினும் ஒரு புகைப்படம் எடுப்பதென்பது அவர்கள் மீது வன்முறை செலுத்துவதைப்போல. அவர்களே அவர்களைக் கண்டிராத வகையில் காணுவதும், எப்பொழுதுமே அவர்கள் பெற்றிடாத ஓர் அறிதலை அவர்கள் குறித்து பெற்றிருப்பது போல, அது குறியீட்டு வடியில் உடமையாக்கிக்கொள்ளும் பொருட்களாக மாற்றுகிறது. துப்பாக்கியின் உறைந்துபோன வடிவமான ஒன்றாக காமிரா இருப்பதால் ஒருவரைப் புகைப்படமெடுத்தல் என்பது நயமான ஒரு கொலை. மென்மையான கொலை. சோகமான, பயம் நிறைந்த, ஒரு காலத்திற்குப் பொருத்தமானது.’

சூசன் சான்டாக்

‘On Pphotography’  என்ற தனது நூலில் சூசன் சான்டாக் துப்பாக்கி கார் காமிரா என்ற இயந்திரம் வன்முறை கையாள்தலை விளக்குகிறார். மனிதன் மீதே மனிதன் செலுத்தும் ஆக்கிரமிப்பு எப்படி நவீனக் கலைவடிவம் என்ற குறியீடாக வடிவெடுத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். சமுதாயத்தின் மிக முக்கியமான மகிழ்ச்சியின் விளைவைக் கேள்விக்குட்படுத்துவதன்மூலம் தொடர்ந்து அதன் மடிப்புகளைக் கண்முன்னே விரித்துக் காட்டுகிறார். அச்சத்தின் பொழுதுகளில் துப்பாக்கியால் சுடுகிறோம் என்றால் பழைய நினைவின் மூட்டம் எழும்போது புகைப்படம் எடுக்கிறோம். புகைப்படங்கள் பழைய நினைவுகளின் துயரங்களைக் கிளர்கின்றன. புகைப்படக் கலை, புலம்பற்பாட்டுக்குரிய கலை; மங்கலொளிக்குரிய கலை. ஒரு புகைப்படமெடுப்பதென்பது மற்றவரின் வடுவூட்டும் நிலையில், மரணமேற்படுத்தும் நிலையில் நிலையாமையில் பங்குபெறுதல் என்பதுதான் இன்றைய ‘நடிகைகளின் நிர்வாணக்குளியல்’ போன்ற விபரீதங்கள் இம்மேற்கோளை இன்னும் நுட்பமாகப் புரியவைக்கும்.

அமெரிக்காவின் மிகத்தீவிரமான கட்டுரையாளராக, சிறுகதை எழுத்தாளராக, நாவலாசிரியராக நவீனப் பண்பாட்டு முறைகள் பற்றிய கருத்துரையாளராக இருந்த சூசன் சான்டாக், சில திரைக்கதைகளை எழுதியிருப்பதோடு சில படங்களையும் இயக்கியுள்ளார். புகைப்படக்கலை, எய்ட்ஸ், புற்றுநோய், பாசிச அழகியல், பாலியல் ஆபாசம் ஆகியவை இவருடைய முக்கியமான சிந்தனைக் களங்களாயிருந்தன. இவர் பெரும்பாலும் பெண் கலைஞர்களுடனேயே இணைந்து வாழ்ந்ததால் ‘லெஸ்பின் எழுத்தாளர்’ என அழைக்கப்பட்டார். புகழ்பெற்ற பெண் புகைப்படக்கலைஞர் Annie Leiboritz தான் இவருடைய நீண்டகாலத் தோழியாக இருந்தார். எழுத்துப் பணியை மிகவும் ஆதர்சமாகக் கொண்டிருந்த சான்டாக் ‘‘நான் குழந்தைப் பருவத்திலேயே எழுத விரும்பினேன். எழுத்துத்துறைக்கு நான் ஈர்க்கப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகள் தாங்கள் எழுத்தாளர்களாகவோ, நடிகர்களாகவோ, ஓவியர்களாகவோ ஆக விரும்புகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரை அசாதாரணமானது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரவர் வாழ்க்கையின் பணி பற்றிய ஆலோசனை, குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. உங்களின் பகற்கனவு, நீங்கள் பார்க்கும் நாடகங்கள், வாசிக்கும் இலக்கியங்கள், கண்டுணரும் ஓவியங்கள் ஆகியவற்றிலிருந்துதான் உற்பத்தியாகிறது. அவற்றில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் போல நீங்கள் ஆக விரும்புகிறீர்கள். ஆனால், நீங்கள் சிறு குழந்தையாக இருப்பதால் அது ஒரு பகற்கனவைப்போல எழுந்து அடங்குகிறது. நீங்கள் உங்கள் பகற்கனவுக்குக்கூட நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் எனக்குக் குழந்தைப் பருவத்தில் இயல்புக்கு முரணான புனைவாற்றல் இருந்தது’’என்று கூறுகிறார்.

rev2

முப்பது வருடங்களுக்கும் மேலாக மனித உரிமைப் போராளியாக இருந்த சூசன் சான்டாக் 30 வயதில் நாவலாசிரியை ஆனார். அவரது நாவலின் கதாபாத்திரம் அவரது வாழ்வியலைப் போலவே முற்றிலும் நிந்தனைக்கும் வாழ்க்கைக்குமான முரணை நுட்பமாக அலசும் கதைப் பரப்பாகவே இருந்தது.natpu’Illness as metaphor (1978)’  என்ற நூல் அவரது புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பின் எழுதப்பட்டது. எல்லாவிதமான அரசியல் மற்றும் இராணுவச் செயல்பாடுகளுக்கான ஒரு தண்டனை உருவகமாக ‘நோய்’ போற்றப்பட்டு வந்தாலும், மிகவும் உண்மையான வழி எதுவெனில் அத்தகைய உருவகச் சிந்தனையை எதிர்த்து நிற்பதுதான். காசநோயைப் புற்றநோயுடன் ஒப்பிட்ட சான்டாக், உடல் உறுப்புகளின் அதிகார வரிசையில் ஆசனப் புற்றுநோயை விட நுரையீரல் புற்றுநோய் வெட்கம் குறைந்த நோயாகக் கருதப்படுகிறது என்று கூறியுள்ளார். இந்த நூல்தான் 1988-ல் ‘AIDS and its Metaphors’ ‘ என்று விரிவுபடுத்தப்பட்டது. நமது விழிப்புணர்ச்சியின் அதிகபட்ச பகுதியை எய்ட்ஸ் ஆக்கிரமித்துக் கொள்கிறது, எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தால் இன்றைய ஒரு நிலைக்கு அது கொண்டுவரப்பட்டதற்காக. நோய் என்பது குறிப்பிட்ட அரசியல் வடிவத்தின் மிகுதியான உளவியல் தண்டனை என்பது அவரது வாதம். பாலியல் நிலைப்பாட்டின் மீதான பயம் என்பதையும் புதியதொரு நோயாக விவரிக்கிறார். இந்த நூலில் நோய்களின் மொழியையும் அவற்றின் பழங்கதை உருவாக்கலையும், துயரமூட்டும் நோய் பற்றிய படிமங்களையும் நுட்பமாக ஆராய்கிறார்.

தன்னை வதைத்த நோயோடு போராடியவாறே அது எழுப்பியிருக்கும் இருண்ட, போலியான, மிகையான அச்சங்களையும், அதற்கான அரசியல் காரணங்களையும் பதிவு செய்தார். நவீன மக்கள் தொகுதியில் மிகவும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டவராக அவர் கூறுவது யூதர்களையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும்தாம்.‘உடலியங்கியலையும் நோய் இயலையும் பிரித்துப் பார்க்கிற மருத்துவ மனோபாவம், நோய் மீதான அச்சத்தை அதிகப்படுத்துகிறது. கற்பனையில் நம்மை முற்றிலும் நோய்க்குச் சரணடையச் செய்கிறது’ என நோயியலில் அடக்குமுறைக்கு உள்ளாகும், துண்டாடப்படும் வாழ்க்கையின் மீதான தெளிவான சிந்தனையை முன்வைத்தார்.

உடலியங்கியல், உளவியல், நோயியல், சமூகவியல் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போதுதான் ஒரு நோயினைப்ப பற்றிய முழுப்பரிமாணம் கிடைக்கிறது. அவரது பெண்ணிய நிலைப்பாடு, வெறும் மேலோட்டமானது அன்று. மூன்றாம் அலை பெண்ணியவாதம். கறுப்பு இனப் பெண்ணியவாதம். சூழல்சார் பெண்ணியவாதம் என வேறுபட்ட முத்திரைகளைத் தாங்கி உருவாகும் இக்காலகட்டத்தில், ‘பெண்ணியம் என்பது வெறும் கருத்தியல் மட்டுமே அன்று. அது தனிமனித சுயாட்சி உரிமை’ என்று ஆழமாக நம்பினார். பெண்ணின் உடலும் அதன் மீதான கருத்துகளும்தான் பெண்களின் வாழ்க்கைகளைச் சீர்குலைக்கிறது. ஒரு பெண்ணாக இருப்பதற்கும் தேர்ந்தெடுக்கும் தொழில்முறைக்கும் இடையே எந்த முரண்பாடும் இருப்பதாக அவர் உணரவில்லை. எழுத்துத்துறையே அதிகப்படியான முதல்தரமான பெண்களைக் கொண்டிருக்கிறயது. அதன் இருளார்ந்த பகுதியைக் கடந்துவந்த பெண் எழுத்தாளர்களும் எழுத்துத்துறையே மிகக்குறைந்த பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

rev3

சான்டாக், தன் மீது குத்தப்பட்ட வேறு எந்த முத்திரையையும் விட தன்னை ஒரு தீவிர இலக்கியவாதியாகவே கருதினார். 1966-ல் ‘Against Insterpretation’ என்ற கட்டுரைகளடங்கிய தொகுப்பில் கலையை, மக்கள் அறிவுஜீவித்தனமாக அலசுவதைக் காட்டிலும் தங்கள் புலன்களாலும், உணர்ச்சிகளாலும் நுகரவேண்டும் என்று விவாதித்தார். 1963-ல் வெளியான ‘The Benefactor’  மற்றும் 1967-ல் வெளியான ‘Death Kit’ போன்ற நாவல்களில் யதார்த்தத்தையும் கனவுலகத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத கதாபாத்திரங்களைச் சித்தரித்திருந்தார். 1969ல் போதைமருந்துகள் மற்றும் பாலியல் ஆபாசக் கலைவடிவங்கள் கலை மீது செலுத்தும் தாக்கங்களைக் கட்டுரைகளாகத் தொகுத்து ‘Styles of Radical Will’ என்ற படைப்பாக்கினார். ‘Illness as metaphor’ (1978)ல் எவ்வாறு மக்களைப் பாதிக்கும் வெவ்வேறு விதமான நோய்கள். பண்பாட்டு உருவகங்களை எழுப்புகின்றன என்பதை ஆராய்ந்தார். 90களின் பெரும்பாலான பகுதியை நாடகச் செயல்பாடுகளில் செலவழித்த சான்டாக் 1800களின் போலந்து நடிகை ஒருவரின் துணிவான முயற்சிகளை நாவலாக்கினார்.

இலக்கியம்தான் விடுதலை. குறிப்பாக, வாசிப்புகளின் மதிப்பீடுகளும் உள்நோக்கிய விசாரணையும் மிக வன்மையாகக் கேள்விக்குட்படுத்தப்படும்போது, இலக்கியம் தான் விடுதலை என்று கூறினார். அவருக்குள் இருக்கும் ‘எழுத்தாளர் படிமம்’ நல்ல குடிமகன், அறிவுஜீவித தூதர். மனிதஉரிமைப் போராளி போன்ற மற்ற எந்தக் குறியீடுகளையும் நம்பவில்லை. இலக்கியத்தின் சாகசம் என்பது கேள்விகளை எழுப்புதலும் ஆட்சிக் செல்வாக்குடைய இறையாண்மைக்கு எதிரான கோட்பாடுகளைக் கட்டமைப்பதும்தான். நம்மை வேறுபடுத்தும், உதிரிகளாக்கும் அலுப்பூட்டும் சமூகப் படிமங்களை விடாது எதிர்த்துப் போராடுவதுதான் ஓர் எழுத்தாளனின் பணி.

செப்டம்பர் 11, அமெரிக்காவின் மீதான தாக்குதல், நிகழ்ச்சியைப் பற்றிய சூசன் சான்டாக்கின் பார்வை அமெரிக்க மக்களிடம் மிகுந்த கோபத்தையும், வெறுப்பையும் ஊட்டியது. ‘நமது தலைவர்கள் எல்லாரும் எல்லாம் சரியாக இருக்கிறது என்று தலைகுனிந்து நம்மைச் சமாதானப்படுத்துகிறார்கள். natpuஅமெரிக்கா பயந்துவிடவில்லை. இந்த ஒருநாள் நமது அவமதிப்பான நாளாக இருந்தாலும் நமது ஆன்ம தத்துவம் உடைந்துவிடவில்லை. மேலும் அமெரிக்கா இப்போழுது போர் புரியத் தொடங்குகிறது. ஆனால், எதுவும் சரியாகவில்லை’ என்று முன்னுக்குப்பின் வெளியிட்ட முரணான வாசகங்களைக் குறிப்பிட்டார். ‘நமது நாடு மிகவும் வலிமையானது என்று மீண்டும் மீண்டும் கூறக் கேட்கிறோம். என்னை இது ஒன்றும் முற்றிலும் ஆறுதல்படுத்தவில்லை. அமெரிக்கா வலிமையானது என்பதில் யாருக்குச் சந்தேகமிருக்கிறது? ஆனால் அமெரிக்கா ஆகவேண்டியதும் இருக்க வேண்டியதும் இவ்வளவு மட்டுமேயன்று’ என்ற பொருள்பட செப்டம்பர் 18ம் தேதி The Newyorkar பத்திரிகையில் எழுதிய அமெரிக்க இராணுவப் போக்கின் மீதான விமர்சனத்திற்கு எதிராக, மனித உரிமைகளைப் பேசுவதை விட்டுவிட்டு அமெரிக்காவின் மீதான வெறுப்பையே காட்டுகிறார் என்றும் ஒஸாமா, சதாம் ஹுசைன் மற்றும் சூசன் சான்டாக்கிற்குப் பொதுவானவை என்ன என்ற கேள்விகளும், ஒஸாமா பின்லேடன் தனது பிரசாரத்திற்காக சான்டாக்கைக் குத்தகை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும் என்ற கேலிகளும் எழும்பின.

மருத்துவம், கலை விமர்சனம், பத்திரிகை, சட்டம் என வேறுபட்டத் துறைகளில் புதிய புதிய விவாதங்களையும் மதிப்பீடுகளையும் அறங்களையும் உருவாக்கிக்கொண்டேயிருந்தார் சான்டாக். நமது நவீனப் பண்பாட்டில் காட்சிப் படிமங்களை இசை, ஓவியம் போல எவ்வாறு பொருள்கொள்ள வேண்டும் என்பதையும் நிறுவினார். 2004 டிசம்பர் 29ம் தேதி மறைந்த சூசன் சான்டாக்கின் வாழ்க்கைப் பயணம் வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு நெடிய போராட்டமாகத்தான் இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

நன்றி நட்பு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *