மட்டக்களப்பு சூரியா கலாச்சார குழு பாடல்கள் பெண்களின் கலாச்சார செயல்வாதம் – 2

சுகன்யா மகாதேவா

gow சமூக மாற்றம் பற்றிய எந்தவொரு கருத்தினையும் பொதுவெளியிலே வைக்கின்ற பொழுது அது சார்ந்தவர்களால் அக்கருத்தானது பகிரப்படுகின்றவிடத்து அதன் வீச்சு என்பது உணர்வு பூர்வமானதாகவும் அதிக வீரியமுடையதாகவும் இருக்கும்இதன்படி, மட்டக்களப்பிலே பெண்கள் அமைப்பான சூரியா கலாச்சார குழுவினர் பெண்களின் கலாச்சார செயல்வாதத்தினூடாக பாடல்களின் வழி தமக்கான பிரச்சனைகளை பொது வெளிகளிலே பேச விளைந்தனர்.

சமூக மாற்றம் பற்றிய எந்தவொரு கருத்தினையும் பொதுவெளியிலே வைக்கின்ற பொழுது அது சார்ந்தவர்களால் அக்கருத்தானது பகிரப்படுகின்றவிடத்து அதன் வீச்சு என்பது உணர்வு பூர்வமானதாகவும் அதிக வீரியமுடையதாகவும் இருக்கும் இதன்படி, மட்டக்களப்பிலே பெண்கள் அமைப்பான சூரியா கலாச்சார குழுவினர் பெண்களின் கலாச்சார செயல்வாதத்தினூடாக பாடல்களின் வழி தமக்கான பிரச்சனைகளை பொது வெளிகளிலே பேச விளைந்தனர்.
எந்தவிதமெனில் மீனவ தொழிற்பாடலின் மெட்டிலமைந்த பெண்களின் அடிமைத் தனத்தைக் கேள்வி கேட்கின்ற இப்பாடலினைப் பார்ப்போம்.

பத்துமாசம் சுமந்து பெற்றோம்
ஏலேலங்கடி…  ஏலோ…
இதில் ஆணு என்ன? பொண்ணு என்ன?
ஏலேலங்கடி…  ஏலோ…
ஆணைப்பெற்றால் ஆட்டம் என்ன
ஏலேலங்கடி…  ஏலோ…
இதில் பெண்ணைப் பெத்தா –(03)
கலக்கம் என்ன
ஏலேலங்கடி…  ஏலோ…

கற்பு என்ற ஒரு சொல்லே
ஏலேலங்கடி…  ஏலோ…
பெண்களுக்கு மட்டும்தான
ஏலேலங்கடி…  ஏலோ…
தப்புசெஞ்சா ஆணுக்கில்;ல – (02)
ஏலேலங்கடி…  ஏலோ…
அந்த தண்டனையும் பொண்ணுக்குத்தான்
ஏலேலங்கடி…  ஏலோ…
பொறந்து விழுந்த நேரம் முதல்
ஏலேலங்கடி…  ஏலோ…
பெண்கள் நாம அடிமையானோம்
ஏலேலங்கடி…  ஏலோ…
அடிமைத்தனத்தை கேள்வி கேட்போம்;;
ஏலேலங்கடி…  ஏலோ…
அலைகடலாய் பொங்கிடுவோம்
ஏலேலங்கடி…  ஏலோ…

எனப்பெண்ணையோ ஆணையோ தாய் பத்துமாசம்தான் சுமந்து பெறுகின்றாள். இதிலே பெண்ணைப் பெற்றால் கலக்கமும் ஆணைப்பெற்றால் ஆட்டமுமாக ஏன் இந்த ஏற்றத்தாழ்வு நிலை. கற்பு என்கின்ற ஒரு சொல் பெண்களுக்கு மட்டுந்தானா? அது ஆண்களுக்கு இல்லையா? என்கின்ற கேள்வி எழுப்பல்கள். பெண் கருவினில் இருக்கும்போதும், பிறந்தும், அதன் பின் வளர்கின்ற போதும், இறக்கும் போதும் கூட ஆண் மையக்கருத்துருவாக்க நோக்கில் பார்க்கப்படுவதும் ஆணைச் சார்ந்தவளாகவே பெண் ஒவ்வொரு பருவத்திலும் இருப்பதும் (மகளாக, மனைவியாக, தாயாக) இதனைக் கேள்வி கேட்டும் அலை கடலாய்ப் பொங்கிடுவோம் என்பதான பெண் அடிமைத்தனத்தைக் கேள்வி கேட்பதாய் அமைகின்றது இப்பாடல்.

இங்க கவனிக்குமிடத்து பெண்கள் மீதான சமூகப்பார்வை என்பது ஆண் உயர்ந்தவன். பெண் தாழ்ந்தவள். ஆண் சுதந்திரமாக வெளியிலே சென்று வரலாம். பெண் வீட்டினுள்ளே பாதுகாக்கப்பட வேண்டியவள். ஆண் வரவிற்கானவன் பெண் செலவிற்கானவள் என்பதான ஏற்றத்தாழ்வான பார்வைகளும் ஆண் விருப்பிற்கான ஒன்றாக பெண் உடல், பெண் உளம் சமூகத்திலே கட்டமைக்கப்பட்டிருப்பதும் தந்தை வழிச் சமூகத்தில் சொத்தினைப் பாதுகாக்க அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல கற்பு என்கின்றதனை பெண்ணுக்கு  மாத்திரம் வலியுறுத்தி இருப்பதனையும் ஆண் நோக்கிலான பெண்களின் மீதான பார்வையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அதனைக் கட்டமைத்துக் கொண்டே செல்வதும் இவைகளுக்கு எதிரான பெண்களின் குரலாக சமூக கட்டமைப்பு மீதான எள்ளலை ஏலேலங்கடி…  ஏலோ… என்பதாக மீனவ தொழிற் பாடலில் மெட்டின் வழி முன் வைத்து இப்பாடலானது பெண்களின் குரலாக ஒலித்திருப்பதனைக் காணலாம்.

மட்டக்களப்பு சூரியா கலாச்சார குழு பாடல்கள் பெண்களின் கலாச்சார செயல்வாதம் – 1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *