சந்திரலேகா கிங்ஸ்லியின் இரு கவிதைகள் (மலையகம் இலங்கை)
கிருசாந்திகளும் கிருமினல்களும்
ஜனநாயகம் என்ற பெயரில்
கொடுமைகள் மட்டும்
அரங்கேற்றப்பட்ட மண் அது
வன்முறைமாத்திரம்
வழக்காகிப்போன காலமது
மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும்
புலன் விசாரணை செய்து
பதிவு செய்துக் கொண்டு வேவுபார்த்த
வேடிக்கையான பொழுதுகள் அவை
எது அந்த மண்ணில்
இதமாக கண்களைக்குத்தியதோஅதை எல்லாம் ஆக்கிரமித்து
வலை வீசி சங்காரம் செய்த ஆட்சியது.
கிரிசாந்தியும்
அங்கு தேவதையாக உலா வந்தவள்
காக்கிச்சட்டையுடன்
ஆட்சி அதிகாரத்தை
கட்டவிழ்த்து விட்டவர்களின் கண்களில்
ஆயுதப்பரிகாரிகளின் நெஞ்சங்களி;ல்
பெண்ணென்னும் பெயர் புகுமுன்
அங்கங்களின் ஆகர்சிப்பு
நுழைந்து நுரைத்தள்ளி
பசி அவர்களை பாதி மிருகமாக்கியது
கண்களில் காமருசி
தேவதைகளை சாப்பிடுமளவு முறுக்கேறிப்போனது
கிரிசாந்திகள் மண்ணில்
இழிவு பண்டமென ருசி பார்க்கப்பட்டார்கள்
ஓ கிருஸ்ணப்பரமார்த்தாக்களே
நல்லூர்க்கந்தர்களே
நாராய்ப்பிழியப்பட்ட அபலைகளின் நெஞ்சத்தை
இரட்சிக்க எந்த இயேசு நாதர்களுக்கும்
இரக்கம் வரவில்லையோ?
விலையே சொல்லப்படாமல்
விலைமாதுபோல் வீணாக்கப்பட்டாள்
காமப்பிசாசுக்களின் கண்களுக்கும்
அதிகாரவர்க்கத்தின் ஆயுதம் ஏந்திய மகான்களுக்கும்
நீதியின்விலை சொற்பமானது
கிருமினல்கள் இரட்சகர்கள் ஆக்கப்பட்டார்கள்
பாவம் கிருசாந்திகள் மட்டும்.
அகலிகையே முனிவனும் கல்லானான்
அவளால் கல்லாகியும் போகமுடியுமென்றா(?)
அகலிகையும் கல்லாகிப்போனாள்?;
புராணம் பேசும் அகலிகையை
கொன்று போடத்தான் வேண்டும்.
உப்பு சப்பில்லாத பெருந்தவம்(?)
முனிவர்களின் தவத்தால்
இந்த உலகம் மேம்பட்டதாய் வரலாறு கிடையாது
முனிவர்களின் தவம் என்ன அத்தனை மேம்பட்டதா?
பெரிய நூலகம் கொடியமுறையில் எரிந்து போன போதும்
கதறக் கதற செல் வீச்சால்
கத்தைக்கத்தையாய்
மனிதர்கள் செத்துப் போனப் போதும்
போர் விமானங்கள் பூமியை பிளந்து
இரத்தம் குடித்தப்போதும்
பாதைகள் இல்லா வளவுகளில் புகந்து
டிரக் வண்டிகள் உயிர்க் கொன்று
பிணம் குவித்தப்போதும்
இருநூறு ஆண்டு கடந்தும்
கக்கூஸ் இல்லாமல் செத்துப்போகும்
தேயிலை மண்ணின் பாட்டாளிக் கூட்டம்
எட்டடி காம்பிராவுக்குள்
புணர்ந்தும் வாழ்ந்தும் செத்துப்போனப் போதும்
ஓட்டுவாங்கிக் கொண்டவர்கள் மாத்திரம்
இராசாக்களாய் பூமி உலா வந்த போதும்…
மொத்தமாய் மனிதர்களைக் கொன்று குவித்தவன்
மனிதர்களை நாய்களாய்
முள் வேலிகளுக்குள் அகதிகளாய் ஆக்கிவிட்டு
ஏறாத சிங்காசனங்கள் எல்லாம் ஏறி
ஏமாற்றும் வித்தைக்காட்டி
விந்தைகள் பல செய்த போதும்
காணாது நிற்கும் முனிவர்காள்
நீர் அகலிகை மட்டும் அப்படி ஏன் நோக்கினாய்?
அதிகாரமும் பணபலமும்
முனிவன்உன் கண்களை முற்றுகையிட்டதோ?
அகலிகைகளின் சிந்தனைகள்
ஆக்ரோசமாய் நிமிர்ந்த போது
முனிவனே நீ கல்லாகிப் போனாய்
முனிவனே! நீ கல்லான செய்தி
இனி எந்த புராணத்தில் வரும்?