|
கல்வி கற்ற உயர் சமூகம் கூட பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு
பெண்கள் அமைப்பு
ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி வருகின்றது. |
ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி வருகின்றது. அதற்கு ஆதாரமாக சமய, கலாசார மற்றும் ஐதீகங்களைத் தமக்கு ஏற்றாற் போலப் பயன்படுத்திக் கொள்கின்றது. சமய, கலாசார சிந்தனைகளும் பெண்ணை இரண்டாம் பட்சமாகவும் ஆணாதிக்க வரம்பிற்குள் கட்டுண்டு வாழ்பவளாகவுமே சித்தரித்து வருகின்றன. இதற்கு ஆயுதமாக பெண்ணை அவளது உடலியல் அம்சத்தோடு இணைத்துப் பார்ப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த வகையில் சொத்துடமை, வாரிசு, பரம்பரை பற்றிய எண்ணக் கருவின் தோற்றமும் அதனோடு தொடர்புபட்டதாக சொத்துடமை துண்டாடப்படாதிருப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்ணினது கற்பியல் ஒழுக்கம் மற்றும் குடும்ப அலகு போன்ற எல்லாமும் பெண்ணினது உடலை மையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. பெண்ணினது கற்பொழுக்கத்தை வலியுறுத்துவதாக அவளது உடலியலோடு பலவாறான விடயங்களைத் தொடர்புபடுத்தி அவற்றைத் தமது ஆதிக்க கருவிகளாக அன்று தொடக்கம் இன்று வரை ஆணாதிக்க கையாண்டு வருகின்றது. அவ்வாறான விடயங்களில் கன்னித் தன்மை பற்றிய கருத்தும் ஒன்றாகும்.
பருவமைடைந்த பெண் ஒருவர் திருமணமாக முன்பு ஒழுக்கமாக இருந்துள்ளாரா என்பதை அறியும் முகமாக சில சமூகங்களில் இன்றும் கன்னித் தன்மை பற்றி ஆராயப்படுகின்றது. திருமணத்தின் பின்னர் இடம்பெறுகின்ற முதல் பாலுறவின் போது பெண் உறுப்பு வழியாக சிறிதளவு இரத்தம் வெளியே வரவேண்டும் என்ற தவறான கருத்தின் அடிப்படையில் சமூகக் கட்டமைப்பு இன்றும் எம்மிடையே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முதலாவது தடவவையாக உடலுறவு புரியும்போது பெண்கள் யாவருக்கும் குருதி வெளிவருவதில்லை என்பது விஞ்ஞான ரீதியான கருத்தாகும். விளையாட்டுக்களில் ஈடுபடும் பெண்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், வேறு விபத்துக்கள் காரணமாகவும மற்றும் கடினமான வேலைகளில் ஈடுபடும் போதும் கன்னிச் சவ்வு என்கின்ற அமைப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்டு விடுவதுண்டு. மாத்திரமன்றி இயல்பாகவே பல பெண்களுக்கு முதல் உடலுறவின் போது இரத்தக் கசிவு இருப்பதில்லை எனினும் சமூகத்தில் நிலவும் இந்த ஆணாதிக்க கருத்தின் அடிப்படையில் பெண்களைக் கன்னி என்றும் மொட்டு என்றும் கூறுவதும் பெண்களது நடத்தை தொடர்பாக விவாதிப்பதும் வேடிக்கையான ஒன்றே எனக் கூறலாம்.
மேற்கூறப்பட்டவாறு எவ்வாறு பெண்ணின் கன்னித் தன்மை முதன்மைப்படுத்தப்படுகின்றதோ அதே போலவே பெண்களது உரிமைகளை அவர்களது பாலியல் சுதந்திரத்தை மற்றும் பாலியல் உணர்வை விலைபேசுகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. கட்டாயப்படுத்தப்பட்ட வல்லுறவு இன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறுவதை நாளாந்த செய்திகளினூடாகப் பார்க்கின்றோம். ஆண்கள் தமது பாலியல் உணர்வைத் தீர்த்துக் கொள்ளும் முகமாக பெண்கள் மற்றும் சிறுமிகளை வீடுகளிலும், போக்குவரத்து நிலையங்களிலும் வல்லுறவுக்கு உள்ளாக்குதல் பெருகி வருகின்றது. தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையத்தள மற்றும் கையடக்கத் தொலைபேசி போன்றவற்றின் பாவனைகளைப் பயன்படுத்தி வல்லுறவு புரிவதோடு மட்டுமன்றி தாம் செய்கின்ற இழிசெயலைபதிவு செய்ய முற்படுவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் மன்னாரில் பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற சிறுமியை கட்டாயப்படுத்தி மலசல கூடத்திற்கு கொண்டு சென்று துன்புறுத்த முற்பட்ட இளைஞர்களிடமிருந்து சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
யுத்ததத்தின் பின்னர் மக்கள் அவர்கள் வாழிடங்கள் நோக்கி மீளத்திரும்பிய போது விஸ்வமடுப் பிரதேசத்தில் வைத்து நான்கு இராணுவ வீரர்கள் இரு பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய கொடூரம் சென்ற 06.06.10 அன்று இடம்பெற்றதாக செய்திகள் வாயிலாக அறிய முடிந்தது. மனிதாபிமானமின்றி தமது காம உணர்வைத் தீர்துக் கொள்ள இவர்கள் நடந்து கொண்ட விதமானது அருவெருக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு இடம்பெற்றது போன்ற அநீதி மற்றும் கொடூரம் வேறு எவருக்கும் இடம்பெறக் கூடாது என்ற வகையில் இராணுவ பலம், பண பலம் மற்றம் மொழிப் பிரச்சினை, பாதுகாப்பு சிக்கல் போன்றவற்றை மீறி செயற்படும் விதமானது வரவேற்கத்தக்கது.
அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் யுவதிகள் பலர் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது தொடர்பாக அறிய வருகின்றது. அங்கிருந்து வருவோர் தமக்கு இடம்பெறுகின்ற அநியாயங்கள் தொடர்பாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விளக்கம் அளித்த வண்ணம் இருக்கின்றார்கள். எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களின் ஊடாக எமது நாடு பெறுகின்றது. இருப்பினும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ அல்லது அரசாங்கமோ மேற்கூறப்பட்டவாறு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிடுகின்றன. குறிப்பாக அண்மையில் சவூதி நாட்டில் இருந்து திரும்பி வந்த ஆரியவதி என்ற பெண்மணி உடலில் அணியேற்றப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு சார்பாக பல பெண்கள் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்ததோடு ஆர்பாட்டங்களையும் நடத்தின. இருப்பினும் அதனை சவூதிய அரசாங்கம் மறுத்ததோடு மட்டுமன்றி ஆரியவதியின் மனநிலை தொடர்பாகவும் கேள்விக்குள்ளாக்கியது.