என் தனிமொழி (கமலா வாசுகி)
(ஊமம்)
(நடுவில் ஒரு கற்பனைத் தொட்டில் இருக்கிறது)
ஒரு பெண் மிகவும் சந்தோசமாகச் சிரித்தபடி தொட்டிலை நோக்கி வருகிறாள்
தொட்டிலைக் குனிந்து பார்க்கின்றாள், குழந்தையைக் கரங்களில் ஏந்திக்
கொள்கின்றாள், தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி குழந்தையை அணைத்துத்
தூங்க வைக்கின்றாள்.திடீரென்று குண்டுவீச்சு விமானங்கள், எறிகணைகள், குண்டு வெடிப்புகளை அவள்
கேட்கின்றாள்…
குழந்தையைத் தூக்கிக் கொண்டு இங்குமங்கும் ஓடுகின்றாள்… ஊர்ந்து
தவழ்கின்றாள்…
குழந்தையை மீளவும் பாதுகாப்பாகக் கருப்பையுள் வைத்து விடுவது போல
வயிற்றுடன் இறுக அணைத்துக் கொண்டு சுருண்டு இருக்கிறாள்….
(அமைதி)
(கற்பனை – கீழிருந்து வெள்ளம் ஏறுகிறது)
காலடியை வெள்ளம் தொடுவது போல் அவள் குழந்தையுடன் மௌ;ள
எழுகின்றாள்.
அவள்:
அது எழுகின்றது.
தீச்சுவாலை போல போரின் குரூரக் கரங்கள் எழுகின்றன
எனது குழந்தையைத் தீண்டிவிட அத் தீநாவின் நுனியை ஒருபொழுதும்
அனுமதியேன்.
தீச்சுவாலை போல போரின் குரூரக் கரங்கள் எழுகின்றன – அவை
எனது குழந்தையைத் தீண்டிவிட தீநாவின் நுனியை ஒருபொழுதும் அனுமதியேன்
(ஊமம்)
(கற்பனையாக வெள்ளம் மேலும் மேலும் அவளுக்கு மேலாக உயர்கிறது)
உயர்ந்து செல்லும் அவள் குரலுடனும்
எழுகின்ற அவள் உடலுடனும்
மௌ;ள மௌள அவள் குழந்தையைத் தூக்கி உயர்த்துகின்றாள்.
அவளால் இயலுமான வரையில் குழந்தையை உயரத் தூக்குகின்றாள்
(மிக அழுத்தமான கேவல் ஒலியுடன்)
திடீரென்று குழந்தை அவள் கைகளிலிருந்து இல்லாமற் போய் விடுவதை
உணர்கிறாள்.
(உறைநிலை – பின்னணியில் கமலா வாசுகியின் ஓவியம்)
அவள் இயல்பு நிலைக்குத் திரும்பி, பின் பார்வையாளரைப் பார்த்து
உரைக்கின்றாள்.
அவள்:
இனியொரு பொழுதும் எந்த வகையிலும் இது நடைபெறுவதை அனுமதியேன்.
மீண்டும் உரத்த குரலில்:
இனியொரு பொழுதும் எந்த வகையிலும் இது நடைபெறுவதை அனுமதியேன்.
என் குழந்தை போருக்கல்ல!!!!!!
ஆங்கிலத்தில்: கமலா வாசுகி
தமிழில் : சி.ஜெயசங்கர்