சுகன்யா மகாதேவன்
இலங்கையிலே மட்டக்களப்புச் சூழலிலே சூர்யா பெண்கள் அபிவிருத்திநிலையம் இயங்கி வருகின்றது. 1995ல் கலாச்சாரக்குழு ஒன்றினை அமைக்க வேண்டிய தேவை என்பது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தாருக்கு ஏற்பட்டது. ஏனெனில் நவீன கலை இலக்கிய மரபென்பது ஆண்களின் பங்கு பெற்றல்களாக, ஆண் நோக்கில் கருத்துருவாக்கங்களைக் கொண்டதாக எழுத்தாளர் , கவிஞர் என்று வருமிடத்து அச்சொல்லாடல்களுக்கான அர்த்தப்படுத்தல் என்பது ஆண்களை மாத்திரம் மனதிலே பதியவைப்பதாக அமைந்திருந்தது. இத்தகைய நிலைமையினை கவனத்திற் கொண்டு முற்றிலும் நவீன கலை இலக்கிய மரபிற்க்கு மாற்றாக சூரியா பெண்கள் கலாச்சாரக்குழு செயற்படத்துவங்கியது.
இதன்படி இக்கலர்சசாரக்குழுவினர் ஊரூராகச்சென்று பெண்களை ஒன்று சேர்க்கவும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவர்களோடு இணைந்து வேலைசெய்யத் தொடங்கினர். இங்கு பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தமது கருத்துக்களை அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். இவ் எளிமையான தொடர்பாடலின் வழி இவர்களது கலை வெளிப்பாடுகள் என்பது கவிதை, சிறுகதை, நாடகம், சுவரொட்டி, ஓவியம், பாடல் – எனப்பல்வேறுபட்ட வடிவங்களின் வாயிலாக வெளிப்பட்டது. மிகவும் எளிமையான அதே சமயம் சிறப்புத் தகுதி என கருதப்படுகின்ற கலை வெளிப்பாடுகளுக்கு மாற்றாக இப்பெணகளின் கலை வெளிப்பாடு என்பது இலகுவில் புரியம் வண்ணம் அமைந்திருந்தது.
இதன் தொடர்சசியாகவே மட்டக்களப்பு சூர்யா பெண்கள் கலாச்சாரக்குழுவின் பாடலகள் என்பது பெண்களின் கலாச்சார செயல்வாதத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு அவை ஒளிப்பேழைகளாக வெளியிடப்பட்டது.
கலாச்சார செயல்வாதம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு செயற்பாடு ஆகும் இங்கு பெண்களின் கலாச்சார செயல்வாதமானது பாடல்களை ஊடகமாகக் கொண்டு அதன்வழி செயற்பட்டது எவ்விதமெனில் மட்டக்களப்பு சூழலிலே மக்களி;ன் அன்றாட வாழ்வியலோடு நெருங்கியத் தொடர்பினை கொண்டிருக்கின்ற கிராமியப் பாடல்கள், சடங்குப்பாடல்கள், கூத்துப்பாடல்களின் மெட்டுக்களின் வழியே பெண்கள் தமக்கான பிரச்சினைகளை பொதுவெளியிலே பேச முன்வந்தனர் வீட்டிலே கூட உரையாட முடியாத விடயங்களை தமக்கு பரிட்சயமான மெட்டுக்களின் வழியே பேசுவது என்பது பெண்களுக்கு மிகவும் இலகுவானதாக இருந்தது. கேட்போர் படிப்போர் மெட்டுக்களுக்கு பரிட்சயமானவர்களாக இருந்த காரணத்தினால் இதனைப் பொதுத் தளத்தில் பேசுவது என்பது பெண்களுக்கு சாத்தியமானது ஏனெனில் சமூகம் என்;கின்ற கட்டமைப்புக்குள் பெண்களும் இருப்பதனால் பெண்கள் தங்களது பிரச்சினைகளை பேச சூழலில் உள்ள பாடல்களின் மெட்டுக்களை தேர்வு செய்தனர்.
இதன்படி நாட்டுப்புற மெட்டுக்களில் அமைந்த பெண்களின் கலாச்சார செயல்வாதத்தி;ன் ஊடாக வெளிவந்த பெண்களின் குரல் என்கின்ற ஒலிப்பேழையில் உள்ள ஒரு பாடலை எடுத்து விளக்குவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்
தன் பெண் குழந்தையைத் தாலாட்டும் தாயின் குரலாக ஒலிக்கின்ற தாலாட்டுப்பாடலினைப் பார்ப்போம்.
ஆரிரரோ….ஆரிரரோ…….
மடியினில் தவழும் என்பிள்ளாய்
இருள் சூழந்த உலகிலே ஒளியிங்கு இல்லை
பிறந்த நாள் முதலே ஓய்வு இங்கு இல்லை
ஆரிரரோ….ஆரிரரோ…….
எத்தனை ஆசை நெஞ்சினிலே
அடக்கியே என்னைப் பூட்டி வைத்தாய்
பெண்ணாகப் பிறந்ததால் பேதைக்கு இந்நிலை
பெண்ணென்று சொன்னால் பிணம் என நினைப்பார்
ஆரிரரோ….ஆரிரரோ…….
பழமையான பழக்கமெல்லாம் பார்த்து நீயும் அடங்காதே
உணர்வு கொண்ட உயிரம்மா நீயும் துணிவுடன் வாழ
உடன் வர வேண்டும்
ஆரிரரோ….ஆரிரரோ…….
என இங்கு தாய் தன் பெண்குழந்தையை தாலாட்டுகின்ற பொழுது தான் பெண்ணாக பிறந்த நாள் முதல் பட்டத்துன்பங்களையெல்லாம் எடுத்துச்சொல்லி எதிர்காலத்தில் தன்மகள் அவ்விதத் துன்பங்களுக்கு எல்லாம் ஆளாகமால் எவ்விதம் துணிவுடன் வாழ வேண்டும் என்பதனை தன்தாலட்டின் வழி உறுதியாகத் தெரிவிப்பதாக இப்பாடல் அமைகின்றது.
இங்கு இப்பாடலினை உற்று நோக்குகின்ற பொழுதும் ஆண்மையச் சமூகமானது பெண்களுக்கான இயங்கு வெளி என்பதனை எவ்விதம் கட்டமைத்து வைத்திருக்கின்றது. என்பதும் ஆணாதிக்கச் சமூகம் எவ்விதம் பெண்களை குடும்பம் என்கின்ற தளத்திற்குள் வைத்து ஒடுக்குகின்றது என்பதும் புலனாகும் அத்தோடு பெண்குழந்தைகள் எவ்வாறு எமது சமூகத்திலே வளர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் இனிமேல் எப்படி வளர வேண்டும் என்பதாகவும் இத்தாலாட்டின் வழி தாயின் குரலானது உறுதியாக ஒலித்திருப்பதனைக் காணலாம்
இவ்வாறாக சூர்யாக் கலாச்சாரக்குழுவின் பாடல்கள் என்பது மட்டக்களப்பு சூழலிலே பெண் அமைப்புகள், பல்கலைக்கழகம் மாற்று சிந்தனை செயல்பாட்டு இயக்கங்கள், நூல்வெளியீடுகள் போன்ற பொதுத்தளங்களிலே தனித்துப் பாடல்களாகவும். கருத்துரங்குகளின் முன்னும் இடையிலும் பின்னுமோ பாடப்பெறுகின்றனவாகவும் போக்குவரத்து வண்டிகளிலே ஒலிப்பேழைகளின் வழி ஒலிக்கின்ற பாடல்களாகவும் பெண்களின் கலாச்சார செயல்வாதத்தின் ஊடான இச்செயற்பாடானது இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டதாக இருப்பதனைக் காணலாம்