மட்டக்களப்பு சடங்கு நிகழ்த்துதல் வழி பெண்ணிய அடையாள அரங்கு

கி.கலைமகள்

லங்கையில் மட்டக்களப்பு சடங்கு நிகழ்த்துதல் வழி பெண்ணிய அரங்கு அடையாளம்

அரங்க அளிக்கை பெண் விடுதலைக்கானதொன்றாக பெண்களின் மீதான சமூக கலாச்சார அதிகரர ஒடுக்ககுதலை பேசியது. போரினால் பாதிப்படைந்த பெண்கள் கணவனை இழந்தப்பெண் விதவையென சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டு

மட்டக்களப்பில் கண்ணகை மாரியம்மன் சடங்கு விழாவோடு தொடர்புடைய சடங்கின் நிகழ்த்துதல் முறையை பாரம்பரிய விளையாட்டு நிகழ்த்துதல்களை அடிப்படையாகக்கொண்டு அரங்க அளிக்கையானது மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகளில் ஒன்றான அரங்கு ஊடாக, பெண் ஒடுக்குதலுக்கு எதிரான குரலாக ‘ மட்டுநகர் கண்ணகைகள், பாரமுறி  விளையாட்டு, இது எனது படைப்பு” போன்ற அரங்க அளிக்கைகள் உருவாக்கப்பட்டன.
 

இவை பாரம்பரிய சடங்குகளின் நிகழ்த்துதல் கூறுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவை. முன்னெடுக்கப்பட்ட  அரங்க உருவாக்கம் என்பது பங்குபற்றல் செயற்பாட்டின் ஊடாக நிகழ்ந்தது. பயிற்சி பட்டறைகளில் உருவாக்கப்பட்டது. பங்குபெற்றலுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பயிற்சிப்பட்டறை ஒருவருடன் ஒருவரை உறவாட வைத்தது

பங்கு பற்றிய பெண்ணின் கருத்து

 ‘பெண்களாக நாங்கள் அனுபவித்த எத்தனையோ துயரங்களை மறக்க முடியாத காயங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து ஆற்றினோம.; ஒருவரது சோர்வை மற்றவரது நம்பிக்கையால் தாங்கி ஓர் அலை போல் ஒருவரிடமிருந்து மற்றவர் உற்சாகத்தைப் பெற்று மீண்டு எழுந்த நாட்கள் மறக்க முடியாதவை’ (இது எமது படைப்பு நாடக நூலிலிருந்து)

 பகிரப்பட்ட விடயங்களை தங்களுக்கேற்ற வகையில் கவிதை, சிறுபாடல் வரிகள், துணுக்குகள் உரையாடல் எனப் பல வடிவங்களின் ஊடாக வெளிப்படுத்தினார்கள். பல வடிவங்களில் வெளிப்படுத்தியவற்றை அப்பெண்களுடன் இணைந்து ஒழுங்குபடுத்துவதும் அதனை படைப்பாக்கமாய் உருவாக்க உதவுவதுமே ஆற்றுப்படுத்துனர் செயற்பாடாகின்றது. ஆற்றுப்படுத்துனர் பெண்ணிய சூழலியல் அரங்கியல் சார்ந்த அறிவுடையவராய் அனைவருடன் சேர்ந்தியங்குவதன் மூலம் கலந்துரையாடல் பதிலளித்தல் ஊடாக படைப்பாக்கத்தினை முன்னெடுக்கும் திறனுடையவராய் காணப்படுதல் வேண்டும். அவ்வகையில் செயற்பட்ட கமலாவாசுகி, மங்கை சி.ஜெயசங்கர் போன்றோர்களைக் கூறலாம்.

 பெண்ணுக்கான பொதுவெளி என்பது கட்டுப்படுத்தப்பட்டதொன்று. பொதுவெளியில் பெண் தன்னை தன் உணர்வு சார்ந்த வெளிப்படுத்தல் என்பது, ஆண்மைய சிந்தனையால் வரையறை செய்யப்பட்டதாகவே உள்ளது. பொது வெளியில் பெண் தன் உணர்வுகளை பகிர்தல் என்பது சாத்தியமற்றதாகின்றது. இதற்கு மாற்றாக பெண்கள் இணைந்து தங்களுக்குள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளல் பகிரப்பட்டவற்றை குழுவாக இணைந்து சமூகத்தளத்தில் அரங்கின் ஊடாக முன்வைத்தல் இதனூடாக தங்கள் மீது இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஒடுக்குதலுக்கு எதிரான தங்கள் உரையாடலை முன்வைத்தனர்

இவ்வளிக்கையின் அழகியல் என்பது உரையாடலை நோக்கி அதன் மூலம் சமூக மாற்றத்தினை நோக்கி செயற்படுகிறது. இங்கு தன் கருத்தினை தன் பிரச்சினையை பிரச்சினைக்குட்பட்டவரே முன்வைக்கின்றார். சமூகத்துடன் தன் கருத்தினை பொதுத்தளத்தில் படைப்பாக்கத்தின் ஊடாக பகிர்ந்து கொண்டனர்.தங்கள் கருத்தினை பொதுத்தளத்தில் முன்வைக்க கூடிய ஆளுமையுடைய பெண்களை உருவாக்குவதும் அவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக உருவாக்குவதுமே இதன் நோக்கமாகிறது. இவ்வாறான பயிற்சி பட்டறைகளில் பங்கு பற்றிய பெண்கள் பல திறமை வாய்ந்தவர்களாக சமூகத்தளத்தில் மக்கள்  சார்ந்து செயற்படக் கூடியவர்களாக உருவாகியுள்ளனர். ஆண் பெண் சமத்துவமின்மை சார்ந்த சமூகக் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகார ஒடுக்குதலுகளுக்கு மாற்றாக செயற்படக்கூடிய சமூக உருவாக்கம் செயல்வாத அரங்கின் நோக்கமாகின்றது.

மூன்று அளிக்கைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சடங்கு வெளி என்பதன் மக்களை ஒன்று சேர்க்கின்றது மக்களே இவ்வெளியை உருவாக்குகின்றனர் மக்கள் தங்கள் அடையாளத்தினை இருப்பை பேணுகின்றனர். ஆனால் இவ்வெளியில் செயற்பாடானது முழ மக்களுக்குரியதல்லாமல் ஆண்மைய அதிகாரத்தன்மை உடையதாய் செயற்படுகின்றது. கற்பு நிலை கோட்பாடு, புனிதம புனிதமின்மை போன்ற பெண் மீதான சமூக கருத்து கட்டமைவுகளால் பெண்கள் பாரம்பரிய சடங்கு வெளிகளில் நேரடியாக பங்குபெற முடியாது நிகழ்கலைகளில் பங்கு பற்றும் பெண்கள் மீதான பார்வை என்பதும் இங்கு விமர்சனத்திற்குரியது

கண்ணகை மாரியம்மன் சடங்கு விழாவின் இறுதிநாள் சடங்கே குளிர்த்தி சடங்காகும். மரக்கம்புகளை கொண்ட பந்தலொன்று அமைக்கப்படும் அப்பந்தல் காய், பழம், கனி போன்ற பொருட்களால் அலங்கரிக்கபட்டிருக்கும் பந்தலின் கீழ் தளத்தில் சேலை விரிக்கப்பட்டு மத்தியில் நெல் பரப்பி அதன் மேல் பெரிய மரவுரல் ஒன்று வைக்கப்பட்டு மரவுரலின் மேல் மண்பானையில் பாணக்கம் நிரப்பி வைக்கப்படும் பானையுள் வேப்பம் குழை போடப்படும் பந்தலின் ஒருபக்கத்தில் தெய்வம் ஆடுபவரும் மறு பக்கத்தில் உடுக்கு வாசிப்பவர்களும் நிற்பார்கள். அக்கோயில் பூசாரியை அம்மனாக பாவித்து அணி கலங்கள் அணிந்து அலங்கரிக்கப்பட்டு கோயிலுள்ளிருந்து அழைத்து வரப்படுவார்.

மதுரையை எரித்து வந்தமர்ந்த கண்ணகையின் சீற்றம் தணித்து குளிரச் செய்ய குளிர்த்தி பாடலை பாடுவார்கள்.

 ‘காளிபிடை சூழ காவிரிப் பூம்பட்டினத்தில்
 வாழ்வணிகர் தன் குலத்தே மாதே குளிர்ந்தருள்வாய் 
 வளமை பெருதுடைய மாதே குளிர்ந்தருள்வாய்’

எனக் குளிர்த்தி பாடலும் இடம்பெற்று இறுதியில் அம்மனாக அலங்கரித்திருப்பர் வேப்பங்குழையினால் பாணகத்தை எடுத்து தன்னை கண்ணகையாக பாவித்து தன் மேலும் தெய்வம் ஆடுபவர் உடுக்கடிப்பவர் மேலும் விசுறுவார் இது கண்ணகையை குளிரச் செய்தலாகும். சடங்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மட்டுநகர் கண்ணகைகள் பார்வையாளர் சுற்றி அமர்ந்திருக்க  இவ் அறிக்கை செய்யப்பட்டது

 பெண்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து விசும்பலாகவும் கேவலாகவும் அழுதுகொண்டிருப்பார்கள். ஒரு பெண் அழைத்து வரப்படுவாள்.அவள் தன் துயரினைக் கூறுவாள்.இவ்வாறு மூன்றுபெண்களும் தன் துயரினைப் பாடுவார்கள்.
 

(உதாரணம்)

 ‘ஆதாராமாயிருந்த ராசாவை நானிழந்தேன்
 ஆதரவு ஏதுமின்றி அழுதே நான் புலம்புகின்றேன்
 பெண் துயரம் கேட்போரே உமக்கோலம் ஓலம்
 பெண்களைப் பெற்றோரே
 சித்தம் கலங்கியே நிற்கும் நிலை பாரும்
 இந்த நிலை மாற்ற ஒரு வழி தேடும் தேடும்
 விதவை என்னும் பட்டமதை சூட்டிடாதென்றும்
 பெண்ணென்றும் வாழ்ந்திடவே இடம் தாரும் தாரும்’
எனப் பாடி அமர குளிர்த்தி பாடல் மெட்டில் அமைந்த பாடல் இடம்பெறும்.
 ‘தன்கணவன் பட்ட களந்தேடி தான் கண்டு
 உன்குலை நடுங்கி நொந்தாயே
 அம்மா குளிர்ந்திடுவாய்’
 

சடங்கில் நிகழ்வது போல் வாழி பாடப்படும். ‘தூற்றுவர் தூற்றினாலும் போற்றுவர் போற்றினாலும்
 சற்றும் கலங்காது துணிவுடனே நீ வாழி’
அனைவரும் தூண்போல் எழுந்து கைகளை பிடித்து இணைந்து நிற்கின்றனர்.

அரங்க அளிக்கை பெண் விடுதலைக்கானதொன்றாக பெண்களின் மீதான சமூக கலாச்சார அதிகரர ஒடுக்ககுதலை பேசியது. போரினால் பாதிப்படைந்த பெண்கள் கணவனை இழந்தப்பெண் விதவையென சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டு கலாச்சார ஒடுக்குதலுக்கு ஆளாதல் இவற்றோடு போராடி தனக்கான இருப்பினை பெண்கள் நிலைநிறுத்தும் போது பொதுவெளி மறுக்கப்பட்டு ஒழுக்கம் கெட்டவர்களாக பார்க்கப்பட்டு ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் இவ்வாறான பெண்கள் மீதான ஒடுக்குதiலையும் பாரபட்சங்களையும் சமூகத்தளத்தில் மட்டுநகர் கண்ணகைகள் முன்வைத்தது. முன்வைக்கும் கருத்தியலை மக்களுக்கு கொண்டுசெல்லும் ஊடகமாக குளிர்த்தி சடங்கின் அமைப்பு அதன்பாடல் வடிவங்கள் பயன்பட்டுள்ளன.

சடங்கு மக்களுக்கு பரிட்சயமானதும் நெருக்கமானதும் அதே வேளை நெகிழ்ச்சித் தன்மையானதும் ஆகும். இவ்வாறான சடங்கின்படி பேசும்போது அரங்கு அளிக்கையுடன் மக்களை உறவுகொள்ள புரிந்து கொள்ள வைக்கிறது. இவ்வாறான தொடர்பாடலில் அரங்க அளிக்கையினை மக்களிடம் கொண்டு செல்கிறது. பார்வையாளர் பங்குபெறுதலை அரங்கின் வெற்றியாகிறது. சுற்றியிருந்து பார்த்த பெண்கள் ‘இத எங்களால வெனளிப்படையா பேச முடியாது ஆனால் நீங்க துணிஞ்சுபேசிப்போட்டீங்க’ எனக்கூறினார்கள். தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் இல்லாத பல பெண்கள் நீண்ட உரையாடலை தொடர்ந்தனர். தங்களை வெளிப்படுத்துவதற்குரிய தளமாக பெண்கள் அரங்குவெளியினை பயன்படுத்தினர்.

சமூகத்தின் மீதான போர் அழுத்தம் அச்சுறுத்தல் இவை சமூகத்தின் மேல் தன் அதிகாரத்தை பிரயோகித்திருந்தது அதிகாரக் கண்காணிப்புக்குள் நின்று அதிகார ஒடுக்குதலை பேசுவது என்பது அச்சூழலில் சவாலானது. அச்சுறுத்தலுக்கு ஆளாகாத வகையில் சமகால அரசியலைப் பேசுதல் வேண்டும் என்பதை உணர்ந்த சூழலில் ஆட்கள் காணாமல் போதல் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல் இல்லை சந்தேகத்தில் கொல்லப்படுதல் போன்ற மனிதர்கள் மேலான வன்முறைகளை சமூகப்பதிவாக ஒட்டுமொத்த சமூக எதிர்ப்பாக மட்டுநகர் கண்ணகைகள் வெளிப்படுத்தியிருந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *