ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர் சட்டத்தரணி சபானா குல் பேகம் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் இன்றைய நிகழ்வில் எனக்கு உரையாற்ற வழங்கப்பட்ட தலைப்பு “Current update about MMDA” என்பதாகும். இத்தலைப்பில் கூறுவதற்குப் பெரிதாக எதுவுமில்லையாதலினால் இத்தலைப்பை நான் மிகவும் சுருக்கமாகத் தொட்டு, இந்நூலை எழுதுவதற்கு எனக்கு எவை ஏதுக்களாக அமைந்தன என்பதையும் கூறி எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தின் வரலாறு மிக நீண்டது. எனினும், நீதியரசர் சலீம் மர்சூப் குழு, சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் குழு என்பன இரண்டுமே அண்மைக் காலத்தில் இதற்காக அமைக்கப்பட்ட இரு குழுக்கள். இவ்விரண்டு குழுக்களிலும் நான் உறுப்பினராக இருந்துள்ளேன்.
இவ்விரண்டு குழுக்களும் தங்களது அறிக்கைகளைச் சமர்ப்பித்ததன் பின்னர் இஸ்லாத்திற்கும், ஷரீஆவிற்கும் முரணான கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்ட பிரதானமானவர்களில் நானுமொருவர்.
நீதியரசர் சலீம் மர்சூப் அறிக்கையில் பல விடயங்களில் குழு உறுப்பினர்களிடையே உடன்பாடு காணப்படவில்லை.
சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் அறிக்கையில் சில விடயங்களில் அமைச்சரவைத் தீர்மானங்கள் காணப்பட்டன. இரண்டு விடயங்களில் மாத்திரம், பலதாரமணம், மணமகளின் திருமணப் பாதுகாவலர் ஆகிய இரண்டு விடயங்ககளில் இரண்டு பெண் உறுப்பினர்களும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். இவ்வறிக்கை நீதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் எமது முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கையெழுத்திட்டு, அவர்கள் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் மக்களினால் எதிர்நோக்கப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்களாகவோ, தீர்வாகவோ அமையவில்லை என்பதை ஆதாரங்களுடன் கூறி விடிவெள்ளிப் பத்திரிகையில் நான் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். இதனை இத்துடன் நிறுத்தி இந்நூலை எழுதுவதற்கு எனக்கு எவை ஏதுக்களாக அமைந்தன என்பதைத் தொட்டு முடிக்கின்றேன்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான எனது பயணம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடனான (மு.பெ.ஆ.செ.மு) எனது பயணத்துடன் இணைந்தது. அதற்கு வயது இப்போது 23. ஆனால் மு.பெ.ஆ.செ.முன்னணிக்கும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்குமான தொடர்பின் வயது இற்றைக்கு 40 வருடங்கள் என்று நினைக்கின்றேன். அப்போதைய இதன் பணிப்பாளர்களான தேசபந்து ஜெஸீமா இஸ்மாயீல், பைசூன் ஸக்கரியா, அன்பேரியா ஹனிபா, சபினாஸ் ஹஸீன்டீன், சுல்பிகா இஸ்மாயீல் ஆகியோரின் சேவைகள் அளப்பரியவை.
அவர்களது சேவைக்கு 17 வயதாக இருக்கும் போது அவர்களுடன் நான் இணைந்தேன். அப்போது எனக்கு வயது 27. எனது இள இரத்தம் அவர்களை ஒரு நையாண்டிப் பார்வை பார்க்கத் தூண்டியது. 17 வருடங்களாக உங்களால் சாதிக்க முடியாத முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தத்தை நான் ஓரிரு வருடங்களினுள் முடித்துக் காட்டுகின்றேன் என்று அவர்களிடம் நான் சபதம் எடுத்தபோது, அவர்களது முதிர்ந்த பக்குவம் காரணமாக ஒரு புன்னகையையே என்னை நோக்கி அவர்கள் விடுத்தார்கள்.
அவர்களது புன்னகையின் அர்த்தமும், எனது சபதம் தோற்கடிக்கப்படப் போகின்ற ஒரு சபதம் மாத்திரமே என்பதுவும் என்னால் புரிந்துகொள்ளப்படுவதற்குப் பெரிதாக ஒரு காலம் எடுக்கவில்லை.
மு.பெ.ஆ.செ.முன்னணியினால் 2005ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ICMPLR எனப்படும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்திற்கான சுயாதீன குழுவின், முஸ்லிம் சமூகத்தில் சகல அந்தஸ்துக்களிலும் காணப்படுகின்ற மக்களுடனான மாநாடு 2006ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றபோது சமூகமளித்திருந்த எமது சமூகத்திலுள்ள மக்களின் நிலைப்பாட்டிலிருந்து ஓரளவு புரிந்துகொள்ள முடியுமாகவிருந்த போதிலும் ஒரு சிறிய நம்பிக்கையாவது ஆழ்மனதில் காணப்பட்டது என்னவோ உண்மைதான்.
இது தொடர்பிலான எனது பயணம் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட மும்மொழிகளிலும் அமைந்த “சவால்களின் பயணம்” என்ற நூலில் காணப்படுகின்றது.
மு.பெ.ஆ.செ.முன்னணியினைத் தொடர்ந்து இது தொடர்பிலான எனது பயணத்தில் சேர்ந்து பயணித்தவர்களில் சட்டத்தரணி அமீர் பாயிஸ், சிறின் சரூர், ஜுவைரியா மொஹிதீன் ஆகியோர் பிரதானமானவர்கள். நாமிணைந்து இது தொடர்பில் ஆற்றிய பணியைப் பற்றிப் பேசுவதற்கு எனக்களிக்கப்பட்ட நேரம் போதாது.
ஒரு சட்டத்தரணியாகவும், செயற்பாட்டாளராகவும் இச்சட்டத்தின் பொருண்மைச் சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளிகளினை அடையாளங் காண முடிந்த அதேவேளையில், இப் பொருண்மைச் சட்டத்தையும், நடைமுறைச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதிலும் அமுலாக்குவதிலும் காணப்படுகின்ற சிக்கல்களையும், பாதிப்புகளையும் காதிகள் சபை முதல் உயர் நீதிமன்றம் வரை இவை தொடர்பான வழக்குகளை 22 வருடங்களாகக் கொண்டு நடத்துகின்ற ஒரு சட்டத்தரணி என்ற முறையில், உணர்வதற்குரிய ஆற்றலும், அதேவேளையில் அதுபற்றிப் பேசுவதற்குரிய உரிமையும் உண்டு என்ற ரீதியில் பேசிச் சம்பாதித்த எதிர்ப்புகள், அதனால் எனக்கேற்பட்ட பாதிப்புக்கள், முகங்கொடுக்கவேண்டியேற்பட்ட சவால்கள் போன்றவை இங்கு பலருக்குத் தெரியும். இருந்தபோதிலும் அவையனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னால் முகங்கொடுக்கப்பட்ட சுகமான துயரங்கள்.
ஜுவைரியாவுக்கும் அல்லது முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்திற்கும் எனக்குமிடையிலான தொடர்புகளுக்கும் வயது கிட்டத்தட்ட 20ஐக் கடந்ததுதான். அவரது நிறுவனத்துடன் இணைந்து முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் நீண்டகாலமாக சேவையாற்றியுள்ளேன்.
“சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற இந்த நூலையும், நான் ஏற்கனவே கூறிய என்னால் எழுதப்பட்ட “சவால்களின் பயணம்” என்ற நூலையும் எனது மரணத்திற்கு முன்னர் எழுத வேண்டும் என்று நான் அல்லாஹ்வின் உதவியுடன் உறுதிபூண்டது 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இரவாகும்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஒரு உறுப்பினராகப் நாடாளுமன்றத்தில் அன்று பிரசன்னமாகி இதுபற்றி நான் பேசுகின்ற போது எமது முஸ்லிம் அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நிலைப்பாட்டிலிருந்து எனக்குத் தெட்டத் தெளிவாக உறுதியான விடயம் என்னவென்றால், எனது ஆயுள் முடியுமுன்னர் இந்த முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தப்படமாட்டாது என்பதுதான். அதற்கு வேறு யாரும் காரணமாக இருக்கமாட்டார்கள். நாம்தான் நமக்கு எதிரிகளாக இருப்போம்.
அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் இச்சட்டம் திருத்தப்படாது என்பது எனக்கு நூற்றுக்கு நூறு வீதம் தெட்டத் தெளிவாகத் தெரிந்தாலும், அடிமனதில் ஒரு சின்னஞ்சிறிய நம்பிக்கை, உலக அதிசயங்களில் ஒன்றாக இச்சட்டம் அடுத்த சந்ததியின் ஆயுட்காலத்தினுள்ளாவது திருத்தப்படமாட்டாதா என்பதுதான்.
நானும், சிறினும், ஜுவைரியாவும் இது தொடர்பில் பலநாள் பேசியதன் விளைவுதான் இந்நூல். ஒரு வழிகாட்டியாக அமையவேண்டுமென்ற ரீதியில் “சவால்களின் பயணம்” என்ற என்னுடைய நூல் அமைந்துள்ளது. இதற்குப் பல வழிகளிலும் உதவிய சிறினுக்கு இவ்விடத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன்.
“சட்டத்தில் நீதியைத் தேடி.” இது எனது எழுத்திற்கு ஜுவைரியா சூட்டிய நாமம். மூன்று மொழிகளிலும் உள்ளது. தமிழ்தான் மூலம். ஆங்கிலமும், சிங்களமும் மொழிபெயர்ப்புக்கள்.
சில பெண்கள் குழுக்களினாலும், சில பெண்கள் நிறுவனங்களினாலும், சில பெண்களினாலும் வெளிநாட்டு நிதிக்காகவும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்காகவும் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுதான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் என்ற பரவலாகக் காணப்படுகின்ற கோட்பாட்டுக்கும், கருத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பதுதான் என்னைப் பொறுத்தவரையில் “சட்டத்தில் நீதியைத் தேடி…” எனும் இந்நூலின் நோக்கம். முத்தாய்ப்பு வைக்கப்படுமா என்பதுவும் நிச்சயமில்லை. அதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் பொருண்மைச் சட்டத்திலும், நடைமுறைச் சட்டத்திலும் காணப்படுகின்ற இடைவெளிகள், இவ்விடைவெளிகளினால் இச்சட்டத்தினால் ஆளப்படுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், இவ்விடைவெளிகளுடன் கூடிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுகின்ற சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள், பாதிப்புக்கள் என்பவற்றை மாத்திரம்தான் இந்நூலில் கூறியுள்ளேன். நிவாரணங்கள், தீர்வுகள் எதையும் கூறவில்லை. அவற்றைக் கூறப்போனால்தான் “இஸ்லாத்திற்கு முரணானவர்கள், ஷரீஆவிற்கு முரணானவர்கள்” என்றெல்லாம் முத்திரை குத்தப்படுவோம். நான் எழுதியதற்காக என்னுடன் சேர்ந்து வெளியிட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்திற்கும் சிக்கல்களை ஏற்படுத்த விரும்பவில்லை. நாமனைவரும் சந்தித்த சவால்களும், முகங்கொடுத்த எதிர்ப்புகளும் போதும்.
மக்கள் சிந்திக்கட்டும். இச்சட்டத்தினால் ஆளப்படுகின்ற மக்கள் சிந்திக்கட்டும். இச்சட்டத்தின் இடைவெளிகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களை சிந்திக்க வைப்போம். அம்மக்கள் உரியவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பட்டும். பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற மக்களே, தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்ற கேள்விகளை உரியவர்களிடம் கேட்பதற்கு மக்கள் தூண்டப்பட வேண்டும்.
சட்டமும், தீர்க்கப்பட்ட வழக்குகளும், சட்ட நடைமுறைச் சிக்கல்களும் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு மக்கள் சிந்திக்கட்டும்.
இந்நூலில் நான் பல இடங்களில் ‘வாசகர்கள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இந்நூல் சட்டம் சார்ந்தவர்கள், கொள்கைகளை அமுலாக்கம் செய்பவர்கள் போன்றோர் கட்டாயமாக வாசிக்கவேண்டிய நூல் என்பதனால் ‘வாசகர்கள்’ என்ற சொல்லை விடவும் சற்றுக் கனதியான ஒரு சொல்லை உபயோகிக்கலாமே என்ற ஒரு ஆலோசனையை ஜுவைரியா முன்வைத்தார். சிந்தித்துவிட்டுப் பின்னர் ‘வாசகர்கள்’ என்ற சொல்லுடனேயே விட்டுவிட்டேன்.
கொள்கை அமுலாக்கம் செய்பவர்களுக்கும், சட்டம் சார்ந்தவர்களுக்கும் சட்டம், சட்ட இடைவெளிகள், தீர்க்கப்பட்ட வழக்குகள் என்பன உபயோகப்படலாம்.
இவை அனைத்தையும் விட இங்கு முக்கியமானது நடைமுறைச் சிக்கல்கள்தான். அதைச் சாதாரண மக்கள் வாசிக்க வேண்டும். தங்களது அல்லது தங்களைச் சார்ந்தவர்களது பிரச்சினைகளுடன் தொடர்புபட்டதாக இது அமைகின்றதே என்பதை அவர்கள் உணரும் போதுதான் அவர்கள் பேச முன்வருவார்கள். அதனால் அச்சொல்லை ‘வாசகர்கள் என்றே விட்டுவிட்டேன். அது மாத்திரமன்றி வாசிப்பவர்கள் அனைவரும் ‘வாசகர்கள்’தான்.
இச்சட்டம் திருத்தப்படாமையினாலும், திருத்தப்படுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைவதனாலும் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதும் நடைமுறைச் சாத்தியமேயற்ற வாதங்களை முன்வைக்கின்ற போதும் என் மனதினுள் ஆத்திரம் ஆத்திரமாக ஏற்படும். இறுதியில் ஆற்றாமையின் வெளிப்பாடாகக் கண்ணீரும் வெளிவந்ததுண்டு. இப்போது அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதில்லை. எம்மால் முடிந்ததை நாம் சரிவரச் செய்துள்ளோம் என்ற ஆத்ம திருப்தி காணப்படுகின்றது.
“சவால்களின் பயணம்” என்ற எனது அனுபவ நூலை எமுதியபோது 40% திருப்தி காணப்பட்டது. “சட்டத்தில் நீதியைத் தேடி…” யை எழுதி முடிக்கும் போது அத்திருப்தி 100% ஆக உயர்ந்துவிட்டது. இதற்காக முதற்கண் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி அடுத்தபடியாக முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்திற்கும் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜுவைரியாவுக்கும் எனது ஆழ்மனத்து நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன்.