ஒரு குறிப்பு சக்தி இதழ் 28 ,2002
பல வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களை கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. மனிதம், தூண்டில்,சுவடுகள், ஓசை, சமர், ஊதா, நமது குரல் என பல சஞ்சிகைகள் வெளிவந்தன. அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. ஆனாலும் பெண்களை ஆசிரியர் குழுக்களாக கொண்ட பெண்கள் சஞ்சிகைகளும் வெளிவந்தன. வெளிவந்த பல சஞ்சிகைகள் நின்று போன நிலையில் சக்தி இன்றும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
1990 ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் வெளிவந்த சக்தி சஞ்சிகை 14 வருடகாலமாக தனது முயற்சியை கைவிடாது தொடர்ச்சியாக வெளிவருவது பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். அத்துடன் தனது பத்தாவது வருட நினைவையொட்டி இணையத்தில் உருவான முதல் பெண்சஞ்சிகை என்ற பெருமையும் சக்தியையே சாரும்.
பெண்விடுதலை பற்றி கதைக்கும் போது அது ஆணாதிக்கக் கருத்துக்களை கட்டிக்காத்து வைத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எரிச்சல் உண்டாகிறது. குறிப்பாக இவ்வகை ஆண்கள் தாம் அதிகாரம் செய்யும் நிலையில் இருந்து தாம் ஆடிப்போவதை உணர்ந்து எமது கருத்துக்களை திசை திருப்ப முயலுகின்றனர். பெண் விடுதலை கதைக்கும் பெண்கள் எமது சமூக வரையறைகளை மீறுபவர்கள் என்றும் வெள்ளையர் பாணி என்றும் கொச்சைப்படுத்துகின்றனர்.
ஆணாதிக்கக் கருத்துக்களை முன்வைத்து பெண்களாலோ அல்லது ஆண்களாலோ எழுதப்பட்டு வரும் படைப்புக்களை சக்தி பிரசுரித்து வந்தாலும் பெண்களின் ஆக்கங்களுக்கே முதலிடம் கொடுத்து வருவது மட்டுமல்லாமல் பெண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களை சக்தி தரம் பார்க்காது பிரசுரித்தும் வருகின்றது. பல புதிய பெண் எழுத்தாளர்களை சக்தி அறிமுகம் செய்ததது மட்டுமல்லாமல் எழுதும் ஆற்றலை ஊக்குவித்தும் உள்ளது. அந்த வகையில் 28 வது இதழான சக்தி மலையகப் பெண்களின் ஆக்கங்களை தாங்கி மலையகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது அதன் சிறப்பு அம்சமாகும்.
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை முனைப்படைந்துள்ள வேலையில் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளும் நலன்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது வரலாற்றுத் தேவையாகும். அத்துடன் தனித்துவமான வாழ்வியலைக் கொண்ட மலையக சமூகத்தில் பெண்களின் தனித்துவமான பிரச்சினைகள் அப்பெண்களது சொந்தக் குரலிலேயே வெளிப்படுத்தியும் உள்ளனர். அவர்களின் உரிமைப்போராட்டத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்குவது எமது சகோதரத்துவ கடமையாகும் என சக்தி ஆசிரியர் குழு கூறுகின்றனர்.
இவ்விதழில்,
மலையக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பெண்ணிய முனைவுகளும் – கீர்த்தனா,
தீக்கிரையாக்கப்பட்ட சிற்பம் – சசிகலா,
மலையக தமிழ்பெண்களின் சமூக,பொருளாதார போராட்ட வாழ்வின் மீதான ஒரு பெண்ணிய வாசிப்பு – துஷ்யந்தி,
எரியூட்டப்பட்ட தலைப்பு – கீதா கௌரி;,
மலையக பெண்ணிய கலாசாரத்தை நோக்கிய அதிர்வுகள்,
குழந்தைப் பருவம் களவாடப்பட்டவர்கள், மலையக மக்களின் இனத்துவ இருப்பில் பால்நிலை – ராஜினி,
குறிஞ்சிக்குயில்கள் – மானசி,
மலையகத் தமிழ் பெண்கள் மத்தியில் பால்வினைத்தொழில் – மலர்
ஆகிய விடயங்களில் மலையகப் பெண் எழுத்தாளர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பெண்ணிய முனைவுகளும் என்ற கட்டுரையில் இலங்கையில் பொருளாதாரத்தில் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத்தருவதில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுவும் உற்பத்தித் துறையில் பெரும்பான்மையினராக பெண் தொழிலாளர்கள் உள்ளனர். தொழில் சார்ந்து அதிக எண்ணிக்கையாக பெண்கள் ஈடுபடுவது பெருமைக்குரியது என்றாலும் அதற்கான சூழலையும் அதிகாரச் சுரண்டல்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறைந்த கூலிக்கு பெண்கள் வேலையில் அமர்த்தப்படுவதும் இதற்கு காரணமாகும். பெண் உடல் மீது செலுத்தப்படுகின்ற அத்துமீறல்களும் வன்முறைகளையும் மலையகப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட பதுளை புனர்வாழ்வு நிலைய சிறைக்கைதிகள் மீதான படுகொலைச் சம்பவத்தின் போது பகிரங்கமாக கட்டவிழ்த்து விடப்பட்பட்ட வன்முறைகளின் போது பல பெண்கள் வன்முறைக்குள்ளானது வெளிவராமலே போய்விட்டது. தொடர்ச்சியாக இனங்காண முடியாத வகையில் பெண்ணுடல்கள் பற்றைக்குள்ளும் ஆற்றங்கரைகளிலும் கிடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்றும் தனது கட்டுரையில் விபரிக்கின்றார்.
கல்லறை கட்ட என்ற கவிதையில்
எங்களின்
ஏக்கங்களைப் புரிந்து
கொள்ளாத
சமூகமே – இனி
எங்களின் ஏவுகணைகளை ஏற்றுக்
கொள்ளத் தயாராகுங்கள்
என்று சசிகலா தனது கவிதையில் கூறுகின்றார்.
மலையக தமிழ்ப் பெண்களின் சமூக பொருளாதார போராட்ட வாழ்வின் மீதான ஒரு பெண்ணிய வாசிப்பு என்ற கட்டுரையில் பெண்ணியம் என்பது கோட்பாட்டு செயற்பாட்டிற்கும் அறிவுத்துறை உரையாடலுக்குமானது ஏனும் கருத்து பெண்ணியத்தை வாழ்வு முறையாக போராட்ட அரசியலாக கொண்டிருக்கும் பெண்களினால் முறியடிக்கப்பட்டு வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு விளிம்புநிலை பெண்ணுமே தன் மீதான அடக்குமுறைக்கெதிராக போராடுவதன் மூலமாக பெண்ணியப் போராளியாக உருவாகிறார் என்பது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மலையகப் பெண்களின் வாழ்வில் பெண்ணியம் போர்க்குணாம்சம் மிக்க ஒரு அரசியல் ஆயுதமாக பிரயோகிக்கப்படுவது பற்றியே எனது உரையாடல் அமைய வேண்டும் என நினைக்கின்றேன் என்கிறார் துஷ்யந்தி.
மேலும் விபரிக்கிறார். தமது மறுஉற்பத்தி ஆற்றலின் மூலமாக பெண்கள் தேசத்தை உயிரியல் ரீதியாக மறுஉற்பத்தி செய்கின்றனர். இதனால் தான் பிற்போக்கு தேசிய சக்திகள் பெண்களின் உடல்மீது கருவளத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் பிற்போக்கு தேசிய சக்திகளால் கருக்கலைப்பு, கருத்தடை என்பன தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகிறது பெண் அடக்கு முறை தீவிரம் பெறுகிறது. இது தேசிய அரசியலின் பெண்களுக்கு பாதகமான எதிர்மறையான பண்பாகும்… ஏன்றும் தனது பல புள்விவிபரங்களுடன் பலவற்றை விளக்குகிறார் அத்துடன் நிரந்தர கருத்தடை, மலையக தமிழ் தேசத்தின் மீதான இனஅழிப்பு, யுத்தம் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டிருக்கும் பெண்களின் கருப்பை தனித்துவமான பெண்ணிய இயக்க தேவைகளுடன் மலையக தமிழ் பெண்கள் போன்றவற்றையும் ஆதாரத்துடன் விளக்குகிறார் துஷ்யந்தி. அதேபோல் பெண்விடுதலையின் அடிநாதமான கல்வி மலையக பெண்ணிய இயக்கம் எதிர்கொள்ளும் சவால் என வெவ்வேறு கட்டுரைகளாக விளக்குகிறார். சிங்கள இனவெறி ஆணாதிக்க அரசு இயந்திரத்தினால் மலையக தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், மலையக தமிழர் வாழ்வியல் முறைமையின் விளைவாக தம் சமூகத்தின் அகவாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், தோட்ட நிர்வாக முறைமையின் ஆணாதிக்கம், சமரசவாத எதேச்சதிகார தொழிற்சங்கங்களின் ஆணாதிக்கம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டுகிறார். மிகவும் பிரயோசனமான கட்டுரையாக இது உள்ளது.
கீதா கௌரியின் எரியூட்டப்பட்ட தலைப்பு என்ற கவிதையில்,
அவள் அன்னை மட்டுமல்ல
அழகிய சிற்பமும் தான்
யாருக்கும் அஞ்சா நெஞ்சமும்
மாடாய் உழைக்கும்
உடல் வலிமையும் உளவலிiமையும்
கொண்ட ஓர் அதிசயப் பிறவி
என்று தனது கவிதையில் கூறுகிறார். மலையக பெண்ணிய கலாசாராத்தை நோக்கிய அதிர்வுகள் எனும் தலைப்பில் கங்காவும் ,குழந்தைப்பருவம் களவாடப்பட்டவர்கள் எனும் தலைப்பில் மலையக குழந்தைகள் கூடுதலாக பெண்கள் குழந்தைகளை பணக்கார வீடுகளில் வேலைக்கமர்த்துவதும் அவர்கள் படும் வேதனையும் துன்பங்களும்; விரியும்; கட்டுரையாக உள்ளது. உண்மையில் தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்தி வருவது வரலாறாக உள்ளது. சில சிறுவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கொலையில் கூட முடிந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
அத்துடன் இரு நூல் விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. கமலினி கணேசனின் மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை என்ற நூலை ராஜினியும், குறிஞ்சிக் குயில்கள் ஈழத்து இலக்கியம் புதியதோர் பரிமாணத்தை நோக்கி… என்ற நூலை மானசியும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
லயங்களில் தூங்கிடும்
குதிரையாய் வாழ்ந்து நாம்
சூரியனைச் சுமந்தபோதும், மனிதராய் வாழ்ந்திட
தனித்து முன்னேறிட
தைரியம் பிறந்திடனும்
அடித்து விழுத்திய
உள்ளக் குமுறல்கள்
எகிறிக்குதித்திடனும் -அதில்
நியாயங்கள் பிறந்திடனும்
இருட்டினில் மறைந்திடும்
உண்மைகள் விரைவில்
வெளிச்சம் கண்டிடனும் -எம்
பெண்களின் திறமைகள்
வெளிப்படனும்…
அதனால்
கூடைக்கு வெளியே சற்று
எட்டித்தான் பாருங்களேன்.
என மலையகப் பெண்களை தட்டி எழுப்புகிறார் சாந்தி கூடைக்கு வெளியே என்ற தனது கவிதைமூலம்.
மலையக தமிழ் பெண்கள் மத்தியில் பால்வினைத்தொழில் என்ற கட்டுரையில் பால்வினைத் தொழில் சார்ந்து உலகெங்குமுள்ள பெண்ணியவாதிகளின் வரையறைகள் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும் பால்வினைத் தொழிலாளர்களாக பெண்கள் மாற நேர்ந்த வரலாற்று சூழல்; நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் வேறானவையாகும். அதனால் மலையக சூழலில் பால்வினைத் தொழிலை தனியாக மதிப்பிட வேண்டிய தேவை உண்டு என்கிறார். மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளன. ஈழத்தமிழர் தேசியமும் மலையகத் தமிழர் தேசியமும் எவ்வாறு வேறுபட்ட தனித்துவ தன்மைகளை கொண்டிருக்கின்றனவோ அதேபோல் இவ்விரு தேசங்களில் பெண்ணியம், ஏன் அரசியலும் கூட தனித்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளன என்றும் மலையகப் பெண்கள் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தபோது இவர்கள் மத்தியில் தேவதாசிப் பரம்பரையினர் இருக்கவில்லை என்றும் விவசாயக் கூலிகளாக இருந்த மக்கள் பிரிவினரே தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இடம்பெயர்ந்தனர் என்றும் விபரிக்கின்றார் மலர்.
சக்தியின் பின்னட்டையை அலங்கரித்த கவிதையில்,
சுய பச்சாதபங்களில்
எங்கள் யௌவனங்கள்
நகர முடியா ஒட்டுக்குள்
மௌனித்திருந்தபோது
தீடீரென…
துருப்பட்ட கதவுகளும்
கிறீச்சிட்டன
எங்கள் இறைச்சி
பேரினவாதத்தின்
நாய்களுக்கே என்று,
விடியலை நோக்கி
அமானுஷ்யமான
ஓலி எழுப்ப
முனைகின்ற அன்றே -அந்த
வெறிபிடித்த
வேட்டை நாய்களை
குதறி பதம் பார்க்க
முடியாமல் -எங்கள்
ஞானேந்திரியங்கள்
சிதறி சிவப்புச் சக்தியில்
பிசிறிப்படர்ந்தன.
சிதிலடைந்த
விலா எலும்புகளை
பண்டிகை பட்சணமாய்
பச்சையாகத் தின்று
தீர்த்தவர்களின் முன்
எஞசியதையும்;
சுட்டுத் தின்பதற்கு
வாயூறி
மண்டியிட்டு கிடக்கிறது
எங்கள் தலைமைகள்.
என்று முடிக்கிறார் சாரதாம்பாள்.
இவ் இதழில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் மலையகப் பெண்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் புள்ளிவிபரங்களுடனும் வெளிவந்துள்ளன என்பது கட்டுரைகளின் சிறப்பம்சமாகும்.