புகலிடத் தமிழ் சினிமா – றஞ்சி (சுவிஸ்)


எல்லாக் கலை இலக்கிய வடிவங்களுக்குள்ளும் சினிமா பலம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இன்று புலம்பெயர் நாடுகளிலும் சினிமாவின் ஆதிக்கம் சினிமா மொழியிலிருந்து சிறிது வேறுபட்ட தன்மையில் இன்று பலரால் புகலிட நாடுகளில் குறுந்திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமாவை சமூகத்தின் ஒரு உத்வேகமான கருவியாக எடுக்காமல் வெறும் பிரச்சாரமாக எடுக்கப்படுவதும், உலகின் அரசியல,; சமுதாய நெருக்கடிகள், போராட்டம் என அதற்கு செயல் வடிவமும் கொடுத்து வரும் இக்காலகட்டத்தில் சில குறுந்திரைப்படங்கள் கதை கூறும் முறையிலிருந்து காட்சிகளின் படிமங்கள், கமராக்களின் உத்திகள், வசனம் அனைத்தும் யதார்த்த வாழ்வில் உள்ள பல விடயங்களை சூழலுக்கு ஏற்ப படமாக்கி வந்தால் கலை இலக்கியங்கங்கள் மிகவும் சிறந்ததாக அமையும். வரும் அடுத்த தலைமுறையினருக்கும் இது ஒரு ஆவணமாக பயன்படுத்தக் கூடியதாக அமைத்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

இன்று பெண்களின் நிலை அறியப்பட்டாலும் பெண்களின் உரிமைக்கான குரல்கள் ஆங்காங்கு ஒலித்த வண்ணம் இருக்கின்ற போதிலும் சினிமாக்களில் வரும் பெண் பாத்திரங்கள் போலவே பெண்களைப் பற்றிய சடங்குகள், (கட்டுப்பாடு, ஒழுக்கம், நடத்தை) சம்பிரதாயங்கள், சமூகக்கட்டுப்பாடுகள், பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்முறைகள், உளவியல் சித்தரிப்புகள் போன்றவைகள் புகலிட குறுந்திரைப்படங்களிலும் புகுத்தப்பட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆண் இயக்குநர்கள் பெண்ணின் பிரச்சினையை பெண்ணின் கண்ணோட்டத்திலே சொல்லத் துணிவின்மையால் ஆணின் கண்ணோட்டத்திலேயே முற்போக்கு கருத்துக்கள் என்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் பெண்ணை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளே இன்று புகலிட சினமாக்களிலும் காட்டப்படுகின்றன.

தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணுரிமைக் கருத்துக்கள், பெண்விடுதலை என்று பெண்களின் பிரச்சினையைக் கொச்சைப்படுத்தி நிறையவே திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இதே போல் புகலிடச் சினிமாக்களிலும் பெண் விடுதலைக் கருத்துக்கள், பெண்விடுதலை பற்றிய தெளிவு இல்லாத பட்சத்திலும் பெண்விடுதலை சம்பந்தமான கருத்துக்கள் வலிந்து சேர்க்கப்படுகின்றன. பெண் விடுதலைப் பற்றிய தெளிவான சிந்தனையை பரவலாக்குவதில் ஆண் இயக்குநர்களின் பங்கு, பாத்திரம், அவசியமாகின்றது தான் ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் பல சினிமாக்கள் பெண்ணைப் பற்றிய பிற்போக்குத்தனமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றது எனலாம். படத்தின் கரு, ஒன்றில் பெண் பணிந்து போகின்ற அல்லது பலவீனமான பெண்ணாகவும் அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான முடிவு போராட்டமே எனவும் பெண் ஒரு சந்தேகம் கொண்டவள் போன்ற பாத்திரங்களே சினிமாக்களின் கதைகளில் பிரதிபலிக்கின்றன. இதனால் சினிமாவின் தாக்கங்கள் புகலிடச் சினிமாக்களிலும் ஊடுருவதை நாம் அவதானிக்கலாம். என்னதான் நல்ல கருவாக அமைந்தாலும் தொழில் நுட்பம் பலவீனமாக இருந்தால் அந்த நல்ல கருவுக்கான அம்சங்கள் அடிபட்டு போய்விடுகின்றன.

புகலிடத்தில் பெண், நடிகைகளுக்கு தட்டுப்பாடு தான் ஆனால் இப் படங்களில் நடிக்க ஏன் பெண்கள் முன்வருகிறார்கள் இல்லை என்று பார்த்தோமானால் அதற்கும் இந்த ஆணாதிக்க சமூகமே காரணமாகின்றன. அப்பெண் நடித்தவுடன் இந்த சமூகம் அவளைப் பார்க்கும் விதம், அவளுக்கு சூட்டப்படும் பெயர்கள் என்பன அவளது வாழ்வையே பாழடித்து விடும் என்ற அச்ச உணர்வுகளும் காரணமாகின்றன. இந் நிலைமைக்கு மத்தியிலும் புகலிடச் சூழல் வேலைப்பழு, நேரப்பிரச்சினை, குடும்பச்சுமை போன்ற பல தடைகளுக்கு மத்தியிலும் தமது பங்களிப்பினை செய்ய முன் வந்த நடிகைகள் (நிழல்யுத்தம், நல்லதோர் வீணை செய்து) பாராட்டுக்குரியவர்கள். நிழல் யுத்தத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் போலன்றி நல்லதோர் வீணை செய்து என்ற குறும்படத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தயக்கம் ஏற்பட இடமுண்டு. இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணாக பாத்திரமேற்று நடிக்க முன்வந்தமை பாராட்டுக்குரியது.

பெண்களே சமூகத்தின் கலாச்சார காவிகளாக இருக்கின்றார்கள். இதற்கு இன்று புகலிட நாடுகளில் எடுக்கப்படும் ஒரு சில குறுந்திரைப்படங்களும் தப்பவில்லை. உதாரணமாக சுவிஸிலிருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட ||நிழல்யுத்தம்|| என்ற படத்தில் வரும் பெண்ணின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டால் கூட கோயிலுக்கு போவதற்கு கூட அப்பெண் தன்னை அலங்கரிக்கும் விதத்தைக் கூறலாம். அத்துடன் பெண்கள் சந்தேகப்படுபவர்கள் என்றே அப்படம் காட்டுகிறது. பெண் என்றால் சந்தேகப்பிராணி என்பதும் பலவீனமானவள் என்பதும் ஆணாதிக்கம் நிலைநிறுத்துகின்ற கருத்தியல். இதையே நிழல்யுத்தமும் சொல்கிறது. அவளின் உணர்வுகள் கூட கணவனின் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவள் கோவிலுக்கு போவதற்காக தன்னை அலங்கரித்து தயாராகிக் காத்திருந்து…ஏமாந்து…சோர்ந்து…உறங்கிப் போய்விடுகிறாள். ஆனால் அவரோ தன் நண்பனுக்கு உதவிசெய்து முடித்துவிட்டு மிக காலதாமதமாக வீட்டுக்கு வருகிறார். வந்து தான் பிந்தி வந்ததை நியாயப்படுத்துகிறார். அவள் கோபப்படுவதிலுள்ள நியாயத்தைக்கூட பார்வையாளரில் தொற்ற வைக்காமல் அது அவளின் சிடுமூஞ்சித்தனம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படத்தின் முடிவும் சினிமாப்பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அவனைத் தேடி சோர்ந்து போய் வந்து சரணடைகிறாள். கண்ணீர்விடுகிறாள். நிழல் யுத்தம் முடிவுக்கு வருகிறது.

அப்பெண் தனித்து தனது காலில் நின்று உழைத்து வாழக்கூடிய தன்மையிலோ அல்லது கணவனின் குடும்பச்சுமையில் அவளும் பங்கு கொள்வதாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு ஆண் எல்லாவற்றையும் சுமக்கிறான் என்றே காட்டப்படுகின்றது. இதே படத்தை ஒரு ஆண் சந்தேகப்படுபவனாகவோ, அல்லது ஒரு பெண் தனித்து குடும்பத்தை சுமக்கிறாள் என்பதையோ ஜீவனால் காட்டியிருக்க முடியும். ஆனால் அதை ஜீவன் செய்யவில்லை. அதற்கான காரணம் ஆண்நோக்கு நிலையில் நின்று சிந்திப்பதுதான். ஆணாதிக்கக் கருத்தியலை கேள்வி கேட்காத எவராலும் பெண்நிலையில் நின்று சிந்திப்பது முடியாத காரியம். அதனால் அவர்களால் பெண்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வதில் தடைப்பட்டே இருக்கிறார்கள்.

இதே போல் 1998 இல் மாவீரர் தினத்தையொட்டி போட்டிக்காக சுவிஸிலிருந்து எடுக்கப்பட்ட ||நல்லதோர் வீணை செய்து|| என்ற குறுந்திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் அண்மையில் சூரிச் நகரில் நடைபெற்றது. அப்படத்தின் தொழில்நுட்பம், இசை நடிப்பாற்றல் போன்றவைகளை தயாரிப்பாளர் கூடிய கவனம் செலுத்தவில்லை. அத்துடன் அப்படத்தின் கருவை எடுத்துப் பார்த்தோமானால் மிகவும் நல்லதொரு கரு அப்படத்தில் வரும் பெண் இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாகவும், அவள் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்என்று தெரிந்தால் இச்சமூகம் அவளை பார்க்கும் விதம், அவளுக்கு சூட்டப்படும் பெயர்கள் அவளின் எதிர்கால வாழ்க்கை போன்றவைகளை யோசித்தும் இக்காரணங்களுக்காக அவளது தாயின் வற்புறுத்தலால் அவளை நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளாள். அப்பெண் நாட்டைவிட்டு வெளியேறி புலம்பெயர்நத பின் அவள் போர் நெருக்கடிகளிலிருந்தும் குடும்ப நிர்ப்பந்தங்களிலிருந்தும் சுதந்திரமாகிறாள். இச் சூழலில்; மீண்டும் தனக்கு நடந்த சம்பவத்தை நினைத்தும் மறக்க முடியாமலும் வேதனைப்படுகின்றாள். இப் பின்னணியில் படம் பேசுகிறது.

எமது சமுதாயத்தால் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட ||கற்பு|| என்ற அடையாளத்தை தான் இழந்து விட்டதாக அப்பெண் மனவேதனையடைகின்றாள். தான் இராணுவத்தால் சிதைக்கப்பட்டவள் என்று மனம் குமுறுகின்றாள். சமுதாயத்தில் பெண்கள் மட்டும் கற்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதைச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனால் இந்த கற்பு என்ற அடையாளத்தை சமுதாயம் ஆண்களுக்கு விதிக்கவில்லை. கற்பில் தவறிய பெண்கள் தண்டிக்கப்படுகின்றனர். திருமணமாகும்போது பெண்கள் கன்னியராகவே இருக்க வேண்டும் என்ற இச்சமுதாயத்தின் கட்டுப்பாடு அவளை அச்சுறுத்தியதோ என்னவோ தான் மீண்டும் தாய் நாட்டுக்கு போகப் போகிறேன் என்கிறாள். அங்கு போராடப்போவதாக கூறுகின்றாள். இக்குறும்படத்தில்; நடித்த ஆண்களின் பாத்திரங்கள் கூடுதலாக நல்ல (முற்போக்கு என்றும் சொல்லலாம்) மனிதர்களாகவும் விட்டுக்கொடுப்பு நிறைந்தவர்களாகவும் காட்டப்படுகிறது. அவள் பரிதாபத்துக்குரிய ஜீவனாக பார்வையாளரின் மனதில் ஏற்றப்படுகிறாள்.

அவளை அவன் தொடுகின்ற (ஒரேயொரு) கட்டத்தில் அவள் கையை உதறி எறிந்து மூலைக்குள் சுருண்டுபோய்விடுகிறாள். அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பின்னால் உள்ள செய்தி என்ன என்பதே கேள்வி. தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் தனது உடலின் புனிதம் கெட்டுவிட்டதான உணர்வே அது. அவளது உடலை அவளிடமிருந்தே அந்நியப்படுத்தும் |கற்பு| பற்றிய ஆணாதிக்கக் கருத்தியலை அது நிறுவுகிறது. இதை ஆழப்படுத்தும் விதத்தில் அவள் சொல்கிறாள், ~நீங்கள் நல்லவர். உங்களை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. அதாலைதான் விலகி விலகிப் போறன்~ என்கிறாள். அவளது உணர்வுகளை உடல் வென்றுவிடுகிறது.

புகலிடச் சினிமாக்கள், குறிப்பாக ஒரு சில குறுந்திரைப்படங்களில் இன்று வேறுபட்ட மாறுதல்களையும் அவதானிக்க முடிகிறது எனலாம். உதாரணத்திற்கு சுவிஸில் இருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட ||எச்சில்போர்வை|| என்னும் குறுந்திரைப்படம் மிகவும் பாராட்டுக்குரியது. இதில் புலம்பெயர் நாட்டிலுள்ள ஒருவனின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற விதம் அற்புதமானது. கமாராக்கள் பேசும் விதம், கதை, நடிகரின் இயல்பான நடிப்பு காட்சிப் படிமங்கள் அத்தனையும் ஜீவனின் கமராக்குள்ளால் கலைப் பிரசவமாக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக புகலிடத்தில் சினிமாக்கள் எடுக்கப்படுமாயின் புகலிட எழுத்துக்கள் போல் புகலிடச் சினிமாவும் தனக்கான ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றாலும் பெண்விடுதலை சம்பந்தமாகவோ அல்லது குறைந்த பட்சம் பெண்களின் உரிமைகள், உணர்வுகள் சம்பந்தமாகவோ, புகலிட வாழ்வில் பெண் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியோ புகலிட குறும்படங்களில்; இன்னமும் வெளிவரவில்லை என்பது கவலைக்குரியதே. இனி வரும் காலங்களிலாவது இது குறித்து கூடிய அக்கறை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன்….

றஞ்சி (சுவிஸ்)

நன்றி : முகம் பதிப்பக பிரான்ஸ்
தொகுப்பாளர்கள்: அருந்ததி (பிரான்ஸ் ),ஜமுனா ராஜேந்திரன் (லண்டன் )

விமர்சனம் வாசன் பதிவுகளில்

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-06-47/6529-2021-03-09-01-20-56?tmpl=componentபுலம்பெயர் சினிமா கட்டுரைத் தொகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *