தேடி எடுத்த கட்டுரைகள் சிலவற்றிலிருந்து இக் குறிப்பை தொகுத்துள்ளேன். விபச்சாரம் என்று வழக்கிலுள்ள சொல்லுக்குப் பதிலாக, பாலியல்வினைத் தொழில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இச் சொல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்வது நல்லது என்பதை சொல்லிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.
பாலியல்வினைத் தொழில் சம்பந்தமாக பெண்ணியலாளர்களிடம் ஒருபோதும் ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதும் பொருளாதார ரீதியிலும் ஏன் பாலியல் விடுதலை என்ற ரீதியிலும்கூட உடன்படுகின்றனர். போர்ணோகிராபி மற்றும் பாலியல்வினைத் தொழில் என்பவற்றை எதிர்ப்பவர்களிடமும்கூட இ;தில் உடன்பாடு இருக்கவே செய்கிறது. 19ம் நூற்றாண்டின் பெண்ணியலாளர்கள் பாலியல் வினைத் தொழிலை முற்றாக எதிர்ப்பவர்களாகவும் இதில் ஈடுபடும் பெண்கள் ஆண்களின் சுரண்டலுக்கு பலியாகிப்போபவர்களாக வரையறுத்தும் இருந்தார்கள்.
பெண்கள் அறநெறிப் பண்புகளின் பொக்கிசம் எனவும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுவதன்மூலம் இதை கறைப்படுத்தகிறார்கள் எனவும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இத் தொழிலை பாலியல் விற்பனை என வரையறுத்து, மது விற்பனைக்கு இதை ஒப்பிட்டு இரண்டுமே சமூக சீர்கேடுகளை தோற்றுவிக்கின்றன என்ற கருத்தகளும் முன்வைக்கப்பட்டன.
ஆனால் பெண்களுக்கான வாக்குரிமைக்காக போராடிய பெண்கள் அமைப்புகளும் மற்றும் மிதவாதப் போக்குடைய அமைப்புகளும் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் இக் கருத்தை மாற்றியமைத்தன.
1960 மற்றும் 70 களில் பெண்விடுதலையும் பாலியல் விடுதலையும் சமச்சீரான பாதையில் செல்லவெண்டியவை என்ற கருத்து வலுப்பெற்றது. பெண்ணியலாளர்கள் ஒழுக்க விதிகளில்; நின்று பால்வினைத் தொழிலை எதிர்ப்பதில் தயக்கம் காட்டத் தொடங்கினர். மரபுரீதிலான ஒழுக்க விதிகள் பெண்ணை பாலியல் ரீதியல் ஒடுக்கியதோடு, பெண்ணின் தேவைகளை ஆணின் தேவைகளுக்கு அடுத்ததான இரண்டாம் நிலைக்குள் தள்ளியதை கிரீர் (Greer) என்ற பெண்ணியலாளர் குறிப்பிட்டுக் காட்டினார். பாலியல் ரீதியில் பெண்களின் தாழ்நிலை அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் தாழ்நிலைகளோடு பிணைந்திருந்தன என்றும் வாதங்களை முன்வைத்தார் கிரீர்.
இன்று, பெண்ணியலாளர்களில் சிலர் பால்வினைத் தொழிலை பாலியல் அடிமைத்தனத்திற்குள சிக்குண்டு கொள்ளும் ஒரு வடிவம் என்ற கருத்தினை முன்வைக்கும் அதே நேரத்தில் சிலர் பாலியல் சுய நிர்ணயத்தினை நோக்கிய பாதையில் இத் தொழிலை காண்கின்றனர். இதனிடையே யார் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன பால்வினைத் தொழில் ஒரு தொழில் என்ற ரீதியில் அது சமூகத்தில் இருந்தே தீரும் என்ற கருத்து பரவலாகவே காணப்படுகிறது.
Catharine Mackinnon மற்றும் போர்ணோகிராபி எதிர்ப்பு கோட்பாட்டாளரான Andrea Dworkin போன்ற தீவிரப் பெண்ணியலாளர்கள் பாலியல் தொழிலை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. இத் தொழிலில் பெண்கள் சுரண்டப்படுபவர்களாகவும் பெண்களை பாலியல் பண்டமாக்கும் நிலையை உறுதிப்படுத்துவதாக அமைகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கடந்த காலங்களில் பெண்கள் போராடிப் பெற்றுக் கொண்ட பலவற்றை இச் செயற்பாடு இல்லாமல் செய்துவிடுகின்றன என்றும் வாதிடுகின்றனர்.
அதேநேரம் வேறு சில தீவிரப் பெண்ணியலாளர்கள் பாலியல் தொழிலை ஏற்றுக் கொள்வது மட்டமன்றி இத் தொழில் பெண் விடுதலையில் ஒரு துணிகரமான அம்சம்; என்றும் தமது வாழ்வை தம் கையில் எடுக்கும் ஒரு வழியாகவும் சிலருக்கு அமைகிறது என்றும் வாதிடுகின்றனர்.
அமெரிக்க சமூகவியல் பேராசிரியையும் பெண்நிலை எழுத்தாளருமான Wendy Chapkis சில கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். கலிபோர்னியா, நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளில் ஒன்பது ஆண்டுகளாக அவர் இதில் ஈடுபட்டார். இதன்போது 50க்கு மேற்பட்ட பாலியல்வினைத் தொழிலாளர்களிடம் நேர்காணலையும் மேற்கொண்டிருந்தார். இந்த நேர்காணல்கள் பெரும்பாலும் தீவிரப் பெண்ணியவாதிகள் வெறுப்புடன் நிராகரித்த அசிங்கங்களையும், அவர்கள் உணர்த்திய அதிகாரத்துவங்களையும் வெளிப்படுத்தின என்கிறார் அவர். அவர்pன் கருத்துப்படி பால்வினைத் தொழில் பெண்விடுதலையுடன் சம்பந்தப்பட்டதல்ல. உண்மையில் இது பாலியல் வன்முறையின் தவிர்க்கமுடியாத ஒரு வடிவம் என்று பார்ப்பதைவிடவும் ஒரு தொழில் என்ற ரீதியல் புரிந்துகொள்ளப்படுவதே பொருத்தமானது என்கிறார் அவர். மேலும் இத் தொழிலாளர்கள் விரும்புவதெல்லாம் உகந்த வேலை நிலைமைகளையே என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும் பால்வினைத் தொழில் குற்றத் தன்மை நீக்கப்பட்டதாக மாற்றப்பட வேண்டும் என்கிறார் Chapkis. . இத் தொழில் குற்றத்தன்மை வாய்ந்ததாக கையாளப்படும்போது சட்டத்திலிருந்து இவர்களை அந்நியப்படுத்துகிறது. காலம் காலமாக சரியான முறையில் கையாளப்படாத அல்லது அங்கீககரிக்கப்படாத தொழிலில் ஈடுபடுபவர்கள் எந்தவித அதிகாரமுமற்றவர்களாக ஆக்கப்படுவதோடு அவர்கள் தமது பாதுகாப்புக்காகவும் உதவிக்காகவும் பொலிசை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதன்மூலம் ~~பொலிசை எமது வாழ்வியலில் தலையீடு செய்யும் நபராக தவிர்க்கமுடியாமல் உள்வாங்க நேரிடுகிறது. இது எமக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது|| என்கிறார் கள் பால்வினைத் தொழிலாளிகள்.
மாறாக, நெதர்லாந்தில் பால்வினைத் தொழில் குற்றத்தன்மை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பொலிசும் பால்வினைத் தொழிலாளிகளும் ஒரே பக்கத்தில் நிற்பதாகவும், பொலிஸ் அக்கடமிகளில் அதிகாரிகளுக்கு தமது வேலை பற்றிய அறிவை ஊட்டுவதற்காக பால்வினைத் தொழிலாளர் தரப்பிலிருந்து முகவர்கள் அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தவகை தொடர்புகள் பால்வினைத்; தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தகுந்த வேலைநிலைமைகளை வழங்குவதாகவும் கூறுகிறார் Chapkis.
பால்வினைத் தொழிலை அன்புநிறைந்த ஒரு தொழிலாக அப்பாவித்தனமாக பார்க்க வேண்டியதில்லைல.இத் தொழிலாளிகளின் வாழ்வியலை பொதுமைப்படுத்துவதென்பது சாத்தியமானதுமில்லை. உதிரியான வீதிப் பாலியல் தொழிலாளர்கள் தாம் வலுபடைத்தவர்களாகவும் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்குபவர்களாகவும் தம்மை உணர்வதை அவர்களுடனான நேர்காணல்களிலிருந்து காண முடிகிறது என்கிறார் Chapkis . இவர்கள் அதிக பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் இதை ஒரு மேலதிக தொழிலாக கைக்கொள்ளும் மேட்டுக்குடிப் பெண்களையும் call girls ஆக Chapkis சந்திக்க நேர்ந்ததாகக் கூறுகிறார். பல தொழில்களில் பெண்கள் குறைந்த சம்பளத்துடனவேலைக்கு அமர்த்தப்படுவதும் இதற்குக் காரணமாக அமைந்தவிடுகிறது.
பால்வினைத் தொழிலோடு வன்முறைகள் போதைப் பொருள் பாவனைகள் என்பன பின்னிப் பிணைவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வகைப் பிரச்சிகைளை தீர்ப்பதற்கு பால்வினைத் தொழிலை குற்றத்தன்மைவாய்ந்ததாக கையாள்வது எந்தளவு பிரயோசனம் தரும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. உண்மையில் இந்த அணுகுமுறை பால்வினைத் தொழிலை இன்னும் இரகசியத்தன்மைக்குள் நகர்த்திவிடுகிறது. இது மேலும் பிரச்சினைகளை வளர்த்துவிடுகிறது. அத்தோடு இத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உதவிக்கான வழிகளும் அடைபட்டுவிடுகிறது. சமூகத்திலிருந்து இவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகம் குற்ற உணர்வை இவர்களுக்கு பரிசாக அளிக்கிறது.
Tracy Quan. PONY (Prostitutes Organaization of New York) இன் இயக்குநர் பதவியிலிருப்பவர். சுமார் 300 பாலியல் தொழிலாளர்களின் ஆதரவு அமைப்பாக 1975 இலிருந்து செயற்பட்டுவரும் இவ் அமைப்பு பால்வினைத் தொழிலை குற்றத்தன்மையற்றதாக்குவதில் குரல்கொடுத்து வருகிறது. இவர் கூறுகிறார்: மக்கள் இத் தொழிலை விரும்புகிறார்களோ இல்லையோ சமூகத்தில் பால்வினைத் தொழில் கலந்துபோய் உள்ளது என்பது உண்மை என்கிறார். மேலும் பால்வினைத் தொழில் ஒரு தொழில்துறைபோல் (industry கையாளப்பட வேண்டும் என்கிறார்.
பால்வினைத் தொழிலை சட்டரீதியாக்குவது அல்லது தொழில் துறைபோல் கையாள்வது என்ற வாதமும், குற்றத்தன்மை நீக்கம் செய்வது என்ற வாதமும் பெண்ணியலாளர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.
பாலியல்வினைத் தொழில் குற்றத்தன்மை நீக்கம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, அது தொழில்துறைபோல் கையாளப்படுவதை பல பாலியல் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர். இப்படி தொழில்துறையாக கையாளப்படுவதன்மூலம் இதன் பேரால் மேன்மேலும் புதிய சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் உருவாக்கப்பட்டு தாம் இன்னும் நசுக்கப்பட்டுவிடுவோம் என அஞ்சுகின்றனர். அதாவது ஏற்கனவே கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமக்குமேல் மேலும் சுமை ஏற்றுவதாக ஆகிவிடும் என்கின்றனர்.
28 வயது நிரம்பிய Carmen என்ற இளம்பெண் 4 வருடங்களாக பால்வினைத் தொழிலாளியாக இருந்தவர். பால்வினைத் தொழிலை சட்டரீதியானதாக்குவது பற்றிய கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார்: இப்போதுள்ள அமைப்புமுறைக்குள் நாம் கைதுசெய்யப்பட்டால் இரும்புக் கம்பிகளின் பின்னால் தள்ளப்படுகிறோம். பாலியல் தொழிலை சட்டரீதியாக்கியபின் நாம் முட்கம்பிகளின் பின்னால் தள்ளப்படுவோம். இந்த முறையானது நாம் எங்கு போகலாம், எப்போ போகலாம், யாருடன் கதைக்கலாம் என்பதையெல்லாம் தீர்மானித்து எமக்கு திணித்துவிடும் என்கிறார்.
சட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள் தமது பலாத்கார நடவடிக்கைகளுக்கு எப்படி இந்த சட்டங்களையெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன என்று கூறுகிறார் பால்வினைத் தொழிலாளிகளுக்காக செயல்படும் சட்டத்தரணியான Norma Amodovar . உனது லைசென்சுக்காக எனது ஆண்குறியை சுவை என்பதை பதிலாக கொடுக்கப்போகிறதா பாலியல்வினைத் தொழிலை சட்டரீதியிலானதாக்குவது என்பது? என்ற பாலியல் தொழிலாளி ஒருவரின் கேள்வியுடன் எனது இக் குறிப்பை முடித்துக் கொள்கிறேன்.
இடைச்செருகல்
இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் பிரசன்னமாயிருக்கிறோம். உலகம் பல துறைகளில் முன்னேறிவிட்டது. ஆனால் பெண்களின் உரிமைகள் இன்னும் மறுக்கப்பட்டே வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்ச்சியடையாத நாடுகளிலும் சரி இன்னும் பெண்கள் இரண்டாந்தரப் பிரஜையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். நமது நாட்டின் போராட்ட சூழலை எடுத்து நோக்கினால் பல பிரச்சினைகளை நாம் காணலாம். மனிதஉரிமை அமைப்புகளும் ஊடகங்களும் இலங்கையில் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இலங்கை இராணுவத்தினரால் கேள்விக்கிடமின்றி கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவது, பாலியல் வன்முறைகள், படுகொலைகள் சிறைகளில் உள்ளவர்கள் படுகொலை செய்யப்பட்டது போன்ற காரணங்கள் உட்பட விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் படுகொலைகள், சிறார்களை போராட்டத்தில் சேர்ப்பது முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை சிதறடித்தது போன்ற பலவிடயங்களை fis Human Rights Watch – Report 2002 Srilanka என்ற அமைப்பு அறிக்கை விட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகளில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது வேதனைக்குரியதே. கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைகள் பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் என்பன மூடி மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி கிருசாந்தி, கோணேஸ்வரி, காமலிற்றா ரஜனி, சாரதாம்பாள், சுமதி சுரேஷ்வரன் விஜயகலா, சிவமணி உட்பட இன்னும் வெளிவராத பல பெண்களின் வாழ்க்கையை சிதறடித்த அராஜகங்கள்உட்பட சிறையில் வாடும் பெண்கள், போரினால் பாதிக்கப்பட்ட கணவன் மாரை இழந்த பெண்களின் வாழ்க்கை உட்பட ஆயுதம் பயன்படுத்தப்படும் போர்களின் போது இடம்பெறும் பெண்கள் மீதான பலாத்காரம், பாலியல் வல்லுறவுகள் என்பன சர்வதேச ரீதியல் குற்றமாக பார்க்கப்பட்டாலும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களோ இவ் விடயத்தில் பாராபட்சமாக நடந்து கொள்கின்றன.
பாலியல் வன்முறையானது பெண்களின் மீதான ஆண்களின் அதிகாரத்தின் அராஜகத்தின் வெளிப்பாடாகும். வெவ்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும், பின் தூக்கியெறியப் படக்கூடிய போகப் பொருள்காளாக பெண்கள் மிதிக்கப்படுவதும் தொடர்கிறது. தமது பாலுணர்ச்சியை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்காக மட்டமன்றி, பெண்களை அடக்கி ஆளவும் ஆணின் உயர் நிலையை நிலைநாட்டவும் அவர்களிடமுள்ள போராட்டக் குணத்தை நசுக்கவுமான ஆயுதமாக பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகிறது. தேசிய இனப் போராட்டங்களின்போது -ஆண்களை பெருமளவுக்கு கொண்டு செயற்படும் இராணுவ அமைப்பிலுள்ள- இராணுவத்தினரால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் போர்க்குணத்தை உளவியல் ரீதியில் அடித்து உளச்சதைவாக்கும் ஒரு ஆயுதமாகவும் பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மதத்தின் மீதான அல்லது கலாச்சாரத்தின்மீதான தாக்குதலாகவும், போராட்டத்தை சிதைக்க பலாத்காரமான இனக்கலப்பை உருவாக்குவதற்கும், போராட்ட இயக்கங்களில் பெண்கள் இணைவதை -உளவியல் ரீதியில் அச்சுறுத்தி- தடுப்பதற்கும்கூட வலிமையான ஆயுதமாக பாவிக்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட முறையில் இவ்வன்முறையானது தனியான தாக்குதலாகவோ கூட்டுமுறையிலாக (பாலியல் வல்லுறவு) தாக்குதலாகவோ அன்றி உணர்வுகளை கேலிசெய்யும் விதத்திலான சித்திரவதை முறையாகவோ மேற்கொள்ளப்படுகின்றது. இவை ஒரு பெண்ணின் மனநிலையை கடுமையாக பாதிப்பதாகவே உள்ளது.
இவ்வாறாக பலியாகிப்போகும் ஒரு பெண்ணும் ஆணாதிக்க கண்ணோட்டத்திலிருந்தும் எப்படி தண்டனையிலிருந்து தப்பிக் கொள்கிறார்களோ, அதேபோல் தான் பாலியல் வன்முறை செய்பவர்களும் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்கின்றனர். இது ஒருவகையில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்படுவது போன்றதே. பெண்ணின் உயிருக்கு ஆணாதிக்க சமூகம் தரும் மதிப்பு என்பதையே இது பிரதிபலிக்கிறது. இதற்கு உதாரணமாக அண்மையில் மன்னாரில் இரு பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுத்திய இராணுவ வெறியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதனால் சந்திரிகாவின் அரசு ஆண்நிலைக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கும் என்று யாருமே எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும் குறைந்தபட்சம் பெண்கள் மீதான வன்முறைகள் நடைபெறாமல் இயன்றளவு கட்டுப்படுத்துவதிலும் தான் ஒரு பெண் என்ற ரீதியாலாவது தனது அதிகாரத்தைப் பயன்படுத்த ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற கேள்வி பெண்களிடையே எழுவது நியாயமானதே.
அதேபோல் போர்ப் படைகளில் பணிபரியும் பெண்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாகவும் பெண்கள் இராணுவத்தில் கட்டாயச் சேர்ப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், மறுபக்கமாக யுத்தங்களில் பெண்களும் சிறுமியர்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வருவது மேலும் அதிகரித்து வருகின்றது என்றும் இத்தகைய குற்றங்களை புரிபவர்கள் சர்வதேச சட்டத்தின் போர்க்குற்றவாளிகள் எனவும் ஐ. நா அறிக்கை கூறுகின்றது. ஆனால் இலங்கையில் இப்படியான குற்றங்களை புரிபவர்களுக்கெதிராக எந்தவகைச் சட்டங்களும் பலனளிப்பதில்லை. இவ்வாறு போர் நடைபெறும் நாடுகளில் பாதிக்கப்படுவது கூடுதலாக பெண்களே.
நன்றி பெண்கள் சந்திப்பு மலர் 2002