பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், போன்ற இன்னும் பல கவிஞர்கள் எழுதி வருகின்றார்கள். பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து எழுதுவதற்கு இப்பொழுது பலத்த விவாதங்கள் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்து வெளிவருகின்றன. பெண்கள் தமது உறுப்புக்களை தம்மால் படைக்கப்படும் ஆக்கங்களில் பாவிப்பது சரி என்றே நான் கருதுகிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். 1997 ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளிவந்த சரிநிகர் பத்திரிகையில் வெளியான பெரும் சர்ச்சைக்குரிய கோணேஸ்வரிகள் கவிதையை நான் இங்கு தருகின்றேன்.
கோணேஸ்வரிகள்
நேற்றைய அவளுடைய சாவு- எனக்கு
வேதனையைத் தரவில்லை.
மரத்துப்போய்விட்ட உணர்வுகளுள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்!?
அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதனத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே,வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
ஏன் அம்மாவே உன்னையும்தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்;காய்
உங்கள் யோனிகளை திறவுங்கள்
புhவம்,
அவர்களின் வக்கிரங்களை
ஏங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே!வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்
ஏன் பின்னால்
ஏனது பள்ளித்தங்கையும் உள்ளாள்
தீர்ந்ததா எல்லாம்
அவ்வளவோடு நின்று விடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே,
வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஓவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.
கலா (இலங்கை)
நன்றி சரிநிகர் (17.5.1997)
17.5.1997அன்று நடந்த சம்பவம் மிகக்கொடுரமானது. வெசாக் வாரத்தில் இலங்கையிலுள்ள அம்பாறை மாவட்டத்தில் 11ம்கொலணியை ;சேர்ந்த கோணேஸ்வரி செல்வகுமார் வயது 35 என்ற பெண் நிர்வாணக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு (பல இராணுவத்தினர்) அப்பெண்ணின் பிறப்புறுப்பில் (யோனி) கிரனைட்டை வெடிக்கவைத்து குரூரமாக கொலை செய்யப்பட்டாள். அந்தப் பெண்ணிக்கு இழைக்கப்பட்ட கொடுர சம்பவத்தை நிலை நிறுத்தி கலாவினால் எழுதப்பட்ட கவிதை தான் இந்த சர்ச்சைக்குரியதான கோணேஸ்வரிகள் கவிதையாகும்.
இக்கவிதைக்கு பெண்களின் உறுப்புக்களை வைத்து கவிதை எழுதியதற்காக ஒரு சில பெண்களால் எதிர்விமர்சனங்கள் வைக்கப்பட்டபோதிலும் தொடர்ச்சியாக பல பெண்களும் ஆண்களும் தங்கள் விமர்சனங்களை எழுதியிருந்தார்கள் புலம்பெயர் நாட்டிலிருந்து றஞ்சி உமா, றஞ்சினி (பிராங்பேர்ட்) உட்பட பல ஆண்களும் தமது விமர்சனங்களை எழுதியுள்ளனர். ஏன்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
07.06.2004