புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய ரீதியில் தமக்கென ஓர் இடத்தை பெற்றுக் கொண்டன. சிமோன் திமோவா, வற்றிப் பிறிடன், மேரி வுலஸ்டன் கிராப் போன்றவர்களின் எழுத்துக்களை குறிப்பிட்டுக் கூறலாம். இவர்களது ஆக்கங்கள் பெண்ணிய வரலாற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. இவர்களது எழுத்துக்கள் பெண்களது ஒடுக்கப்பட்ட வாழ்வியலைச் சித்தரித்தன. பெண்ணுக்கு பொருளாதார ரீதியான மனேரீதியான சுதந்திர உணர்வு, பெண்ணின் சுயமதிப்பை உணரச் செய்தல், முடிவெடுத்தலிலும் சமூக வாழ்விலும் அவளது ஆளுமையை ஊன்றச் செய்தல் தொலைச் தொடர்புச்சாதனங்கள் அவளைச் சித்தரிக்கும் முறைமையை கேள்விக்குட்படுத்தல் போன்ற பெண்ணிய நோக்கங்களை மையப்படுத்தியே இவ்வெழுத்துக்கள் அமைந்தன.
இதற்கு முன்னர் பெண்ணின் வாழ்வியல் ஆணின் நோக்கிலேயே ஆராயப்பட்டது.

1983 காலப்பகுதியின் பின்னர் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியா ஐரோப்பா கனடா அவுஸ்திரேலியா, லண்டன் என அரசியல் அகதிகளாக புலம்பெயரத் தொடங்கினர். அதுவும் பெருமளவில் ஆண்கள்தான் புலம்பெயர்ந்தார்கள். இந்தப் புலப்பெயர்வின் பின்னர் குறிப்பாக ஐரோப்பா கனடா போன்ற தேசங்களிலிருந்து தமிழ் இலக்கியச் சஞ்சிகைகளை எழுத்துக்களை இவர்களில் சிலர் வெளியிடத் தொடங்கினர். அவை பெரும்பாலும் இயக்கங்களோடு சம்பந்தப்பட்டு இயக்க அராஜகங்களால் புலம்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாலேயே தொடங்கப்பட்டன. அதன்பின்னரே இதனோடு சம்பந்தப்படாதவர்களிடமிருந்தும் படிப்படியாக எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்பிரயோகம் உருவாகியது. ஆனாலும் இந்தப் பெயர் சம்பந்தமான மாற்று அபிப்பிராயங்களும் இன்றுவரை வைக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. இவற்றை புலம்பெயர் இலக்கியம் என்பதா அல்லது புகலிட இலக்கியம் என்பதா என்ற சர்ச்சைகள் நிலவவே செய்கின்றன. இதுபற்றிய கட்டுரை அல்ல இது. புலம்பெயர் இலக்கியம் என்பதை ஐரோப்பா கனடா வாழ்வியலுக்குள் வைத்து நாம் பெண் எழுத்துக்களை பார்ப்போமாகில்…

புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலத்திலேயே அறிமுகமாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்பு அடைந்தபின்னர் பெண்விடுதலைச் சிந்தனைகள் மேலும் தோன்றின சில பெண்எழுத்துக்கள் -தெரிந்தோ தெரியாமலோ- ஆண்நோக்கு நிலையிலிருந்தும் எழுதப்படுகின்றன.

பொதுவாக புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்று எடுக்கும் போது ஆரம்பத்திலிருந்தே அதனைப் படைப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் இயக்கங்களிலிருந்து வந்தததினால் பெண்ணியச் சிந்தனைகளை –உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ- தமது படைப்புகளில் சிறியளவிலேனும் வெளிப்படுத்தினார்கள். இதற்கு வெளியில் இயங்கிய ஆண்கள் பலர் தமது படைப்புகளுக்கு ஊடாக தாம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏற்றுக் கொண்டுள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளை எமது சமூகத்திற்கு ஊட்டி வந்துள்ளனர். சிறிய அளவிலேனும் பெண் விடுதலைக் கருத்துக்கள் எமது சமூகத்தில் உள் வாங்கப்பட, இந்தப் போக்கில் பெண்ணிய எழுத்துக்கள் பெண்களிடமிருந்து வீரியமாக வெளிவரத் தொடங்கின. இந்த மாற்றம் மூன்று தசாப்தங்களாக மிகவும் மெதுவாகத்தன்னும் நகர்ந்து வருகிறது எனலாம்.

ஆணாதிக்க கருத்துக்களை முன்வைத்து பெண்களாலோ அல்லது ஆண்களாலோ எழுதப்பட்டு வருகின்ற படைப்புக்களில் அக்கருத்துக்களை கண்டறிந்து அவற்றை விமர்சித்து பெண் விடுதலைக் கருத்துக்களை முன் வைத்தும், மேலும் பெண் உரிமைகளையும் சமத்துவத்தினையும் வலியுறுத்தி வரும்; பெண் விடுதலையை நோக்கிய பெண்களால் எழுதப்படும் அனைத்துப் படைப்புக்களையும் பெண்ணிய எழுத்துக்கள் என்று வரையறுக்கும் கருத்தும், இதே கருத்துகளை முன்வைக்கும் ஆண்களின் படைப்புகளையும் பெண்ணிய எழுத்துக்கள் எனலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ, பெண்கள் எழுதும் அனைத்துப் படைப்புக்களும் பெண்ணிய எழுத்துக்களாக இருக்க முடியாது. புகலிட சூழலில் பெண்ணிய எழுத்துக்களை விமர்சனத்திற்கு உட்படுத்தும் போது பெண்களுடைய பெயரில் மறைவாக எழுதிக்கொண்டிருக்கும் ஆண்களின் எழுத்துக்கள் ஆணாதிக்க கருத்தியலால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்ணின் எழுத்துக்கள் என்பனவற்றை பெயரை மட்டும் வைத்து பிரித்து அடையாளம் காண்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும்? என்கின்ற முக்கியமான கேள்வி எம்முன் எழுகிறது.

பெண்களால் எழுதப்பட்ட பெண்ணியப் படைப்புக்கள், ஆண்களால் எழுதப்பட்ட பெண்ணியப் படைப்புக்கள், பெண்கள் படைப்புக்கள், இந்த அடிப்படையில் புகலிடத்தில் பெண்கள் சம்பந்தமான படைப்புக்கள் வெளிவருகின்றன. 15வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களை கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன. பிரன்சிலிருந்து லக்சுமியாலும் அவரின் தோழியாலும் கண் என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டுவரப்பட்டது. அத்துடன் பெண்களை ஆசிரியர் குழுக்களாக கொண்ட பெண்கள் சஞ்சிகைகள் வெளிவந்தன. ஊதா, பெண்கள் சந்திப்பு மலர், சக்தி போன்ற சஞ்சிகைகளும் , ||மறையாத மறுபாதி|| , புதுஉலகம் எமைநோக்கி ஊடறு என வெளிவந்த இத்தொகுப்புக்கள் மூலம் புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்பு நிலை மாந்தர்கள,; தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள் தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனம் காட்டியுள்ளன.

இன்று புகலிட இலக்கியத்தில் பெண்ணிய எழுத்துக்கள் படைக்கப்படுகின்றன. ஆயினும் ஒப்பீட்டளவில் குறைவாகவே அவை வெளிவருகின்றன. படைப்பவர்கள் கூட பல ஆணாதிக்க கருத்தியலுக்குட்பட்டு தான் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இதற்கு முன்னர் பெண்ணின் வாழ்வியல் ஆணின் நோக்கிலேயே ஆராயப்பட்டது. ஆனாலும் இந்த ஆணாதிக்க மொழியை புரிந்து கொண்டு பெண்நோக்கு நிலையில் எழுதும் பெண் எழுத்தாளர்களான ஆழியாள் தயாநிதி, உமா,தேவா லக்சுமி, நிருபா மைத்திரேயி, அருந்ததி, பாமதி, றஞ்சினி(பிராங்பேர்ட்), விஜி, மல்லிகா, சுமதிரூபன், பிரதீபா, தான்யா, நந்தினி, போன்றவர்களுடன் சந்திரவதனா நளாயினி(சுவிஸ்) ஆகியோரும் ஓவியப் படைப்புகளில் அருந்ததி, மோனிகா போன்றவர்களும் நாடகத் துறையில ;ஆனந்தராணி சுமதிருபன், நந்தினி போன்றவர்களும் குறும்படத் துறையில் சுமதிருபன் போன்றவர்களும் பெண்ணிய சிந்தனைகளில் வேரூன்றி நிற்கின்றனர். யாரவாவது பெண் படைப்பாளிகளின்; பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

நாடுகளுக்கு நாடு கலாச்சாரத்தின் வேறுபாட்டிற்கேற்ப பெண்களை அடக்கும் செயற்பாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே தவிர பெண்ணின் இரண்டாந்தர நிலை மாறியதாக இல்லை. இந்நிலையிலிருந்து விடுபட இலக்கியத்தினுடாக விழிப்புணர்வை ஏற்படுத்த தமது உணர்வுகளில் அனுபவங்களில் பட்டுத் தெறித்த கருத்துக்களை பெண் எழுத்தாளர்கள் இலக்கியத்தில் தமது எழுத்துக்களால் வெளிக்கொணர்ந்துள்ளனர். பெண்களின் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியத்தினூடாக சமூக விழுமியங்களையும் மரபுகளையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை மாற்றியமைக்க முற்பட்டனர். உள்ளுணர்வுகளில் பலமாக அழுத்திக் கொண்டிருந்தவற்றை உரத்த குரலாக எழுத்துக்களில் கொண்டு வந்தனர்.

ஆனாலும் புலம்பெயர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களிடையே காணப்படும் எழுத்து – நடைமுறை இடையிலான இடைவெளிகள் பற்றியும் நாம் பேசாது மௌனம் காத்து வருகின்றோம். நாம் இன்னும் எழுத்தளவில் தான் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறோமா, நடைமுறைக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ற வகையில் நாம் பெண் எழுத்துக்களை வெளிக் கொணருகிறோமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஆனாலும் பொதுவாக சொல்லும்போது புகலிடச் சூழலில்; பெண்ணியம் புதிய பரிமாணங்களுடன் வளரவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தலித் பெண்ணிய வாதியும் எழுத்தாளருமான சிவகாமி இப்படி கூறுகிறார்: பெண்கள் திறந்த மனதுடன் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொண்டது தமிழ்ச் சூழலுக்கு வித்தியாசமானது. தமிழகத்துப் பெண்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்கள் பெண்விடுதலைப் பற்றிய அக்கறையும் புரிந்துணர்வும் கொண்டவர்கள் என்பதைக் குறித்துக் கொண்டேன் என்கிறார். சூரிச் இல் மனிதம் சஞ்சிகையிலிருந்த பெண்களை அ.மார்க்ஸ் 1995 இல் சந்தித்தபோதும் இந்த வெளிப்படைத் தன்மை தனக்கு புதிய அனுபவம் என்றார். இவையெல்லாம் புலம்பெயர் பெண்களுக்கான சான்றிதழ் இல்லை என்றபோதும் இந்தத் தன்மை பெண்ணிய விவாதங்களை ஆரோக்கியமாக்குவதற்கு சாதகமான அம்சங்கள்தான் என்பதை பார்க்க உதவலாம்.

புலம்பெயர் பெண் எழுத்தாளர்களின் இப்பெண்ணிய ஆக்கங்களில் பெண்கள் எழுத்துக்கள், குடும்பம் என்ற வடிவத்தில் பாலியல் திணிப்பு, முடிவெடுக்கும் சுதந்திர மறுப்பு, பாலியல் பலாத்காரம், தலித்திய பெண்ணியம், பெண்நிலை ஓவியங்கள்;, இனவாதம், மலையக தொழிலாளிப் பெண்ணின் உரிமைகள், சீதனம் போன்றவை கருக்களாக அமைந்துள்ளன,. ஆனாலும் பெண்களின் விடுதலை பற்றி கதைக்கும் போது அது ஆண்களுக்கும் ஆணாதிக்க கருத்துக்களை கட்டிக்காத்து வைத்திருப்பவர்களுக்கும் எரிச்சல் உண்டாகிறது. பெண்விடுதலை கதைக்கும் பெண்கள் தலைமயிரை கட்டையாக வெட்டக் கூடாது தாலி,பொட்டு, பூ போன்ற அடையாளங்களை விலக்கக் கூடாது. இதுபோன்ற வரையறைகளை மீறுபவர்களின் பெண்விடுதலைக் கருத்துக்கள் வெள்ளையர் பாணி என்று அலட்சியம் செய்யப்படுகின்றன. இவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை மீறுபவர்கள் என்ற தாக்குதலை எதிர்கொள்கின்றனர். ஆணாதிக்கத்தை அதன் உளவியலை அறிவுபூர்வமாகத் தன்னும் கண்டடைய முடியாத அல்லது ஏற்க மறுக்கும் இயலாமையைக் கொண்டு பெண்ணிய எழுத்துக்கள் விமர்சிக்கப்படுவதையும் நாம் காணலாம். பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய சிறப்பு பெண்கள் சந்திப்பு மலர்-2002 இனை சகிக்க முடியாமல் வசைபாடலுக்கு உள்ளானது. பாலியல் ரீதியில் பெண்களை ஒடுக்கும் ஆணதிகாரத்தின் குறியீடாக ஆண்குறியைச் சித்தரித்த ஓவியங்களையே ஒரு கலாச்சார அத்துமீறலாக மேற்குலகப் பாதிப்பாக விமர்சிக்கப்பட்டது.

இலங்கையின் போர்ச்சூழல், இயக்க அராஜகங்கள, உடனடி உயிர்ப் பாதுகாப்பு என்பவற்றால் மட்டுமன்றி இதைப் பாவித்து பொருளாதார காரணிகளால் புலம்பெயர்ந்தவர்களிடமும்கூட முற்றுமுழுதான வேறான கலாச்சார சூழல், இந்த நாடுகளின் இயற்கைக்கு முகம்கொடுப்பதில் இருந்த சிரமங்கள், கூட்டுவாழ்க்கையினைப் பிரிந்து உதிரியானமை, மொழிப் பிரச்சினை, நிறவெறி போன்ற பல காரணிகள் இவர்களின் வாழ்வியலைத் தாக்கியதால் அவை இலக்கியங்களிலும் வெளிப்பட்டன. அவை பெண்எழுத்துக்களிலும் வெளிப்பட்டன. இயக்கங்களிலிருந்த வந்த ஆண்களால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பிலிக்கியப் போக்கு ஆரம்பத்தில் பெண்ணியத்தில் வெளிப்படவில்லை என்பதை இலங்கையின் போராட்ட அரசியல் நிலைமைக்குள் வைத்தே பார்க்க வேண்டும். இயக்கத்தினுள் பெண்ணியம் பற்றிய செயல்பாடு, அறிவூட்டல், இயக்கங்களுள் பெண்களின் பங்குபற்றும் அளவு என்பன குறைவாக அல்லது சொற்பமாக காணப்பட்டதையே காட்டுகிறது. இந்த நிலைமைகளிலிருந்து எழுந்த இலக்கியங்களை புலம்பல் இலக்கியமென சொல்வது இந்த நிலைமையை உணர்வுபூர்வமாக அல்லது அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முடியாமை என்றே சொல்லலாம்.

ஆனாலும் தமிழர்கள் இந்த நாடுகளின் மொழியில் நன்கு பரிச்சயமடையாமல் காலங்கழிப்பதும், பரிச்சயமானவர்கள் இந் நாட்டு இலக்கியங்களை தமிழழுக்கு கொணருவதில் அக்கறையற்றிருப்பதும், ஈழப்போராட்ட கருத்தியலும் புலம்பெயர் இலக்கியங்களின் அழுதுவடியும் நிலையை இதுவரையும் கடக்க முடியாமல் பண்ணியிருக்கிறது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். பெண்ணியம் பற்றிய அல்லது பெண்ணிய எழுத்துக்களில் குறிப்பிடத்தக்க சில மொழிபெயர்ப்புகளை லக்சுமி தயாநிதி போன்றவர்கள் கொண்டுவந்தது சிறப்பான அம்சம்தான். ஆனாலும் பெண்ணிய சிந்தனையில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்துவதற்கு இவை போதியதாக இருக்கவில்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பெண் எழுத்தாளர்கள் தற்போது எமது நடைமுறையில் உள்ள ஆணாதிக்க மொழியை விமர்சனத்திற்கு உள்ளாக்கி பன்முகப்பட்ட சிந்தனையினூடு புதிய மொழியை உருவாக்க முயலவேண்டும். இது இலகுவான காரியமில்லை. உடல்சார்ந்த சொற்பிரயோகங்கள் சில பெண் எழுத்துக்களில் வெளிவருகின்றன. இதுபற்றிய சர்ச்சைகள்; கலாச்சாரம் காப்பவர்கள் பக்கங்களிலிருந்து மட்டுமல்ல பெண்ணியம் பேசுபவர்களாலும் எழுப்பப்படுகின்றன என்றளவில் இவை நம் கவனத்துக்குரியதாகிறது. பெண்ணியம் பற்றிய வரையறை ஒற்றைப் பரிமாணத்துள் அடங்காதது போலவே இந்தப் பெண்மொழி உருவாக்கம் பற்றிய பார்வையும் ஒற்றைப் பரிமாணத்துள் அடங்கிவிட மறுக்கிறது. தனிநபர்கள் மீதான பிரச்சினைகளை கடந்து, புத்திஜீவிகளாக தம்மை சேர்ப்பதில் முன்னணிப்படையாக முந்தியடிப்பதைத் தவிர்த்து படிப்படியாக இந்த விடயத்திலும் முன்னோக்கிய நகர்வை நிகழ்த்த புலம்பெயர் பெண் எழுத்துக்களும் இணைந்துகொள்ள வேண்டும்.

றஞ்சி (சுவிஸ்) 09.10.2005

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *