யாதுமாகி நின்றாள் – றஞ்சி (சுவிஸ்)

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது வெளிவந்துள்ளது. புலம்பெயர் பெண்கள் புலம்பெயர் வாழ்வில் கூட பல எண்ணற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள போதிலும் இப் பெண்களுடைய எழுத்துலகப் பிரவேசம் என்பது மகத்தானது என்றே சொல்லவேண்டும்.

வெளி உலகைப் பெண்கள் பார்ப்பதற்கும் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கும் கூட பெண்கள் ஆண்களின் சார்பிலேயே நின்று அவற்றை செயற்படுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பொதுவாக பெண்களின் சிந்தனையின் வெளிப்பாடானது ஆண்களினதும் ஆண் அதிகாரத்தினதும் எதிர்கொள்ளலையே பெரும்பாலும் வெளிப்படுத்தி நிற்கிறது. பெண்களின் அடையாளத்தை நிறுவுவதே இன்றைய காலத்தின் தேவையென்றும் ஆண்டாண்டு காலமாக தம்மீது திணிக்கப்பட்டு வந்திருக்கும் மதிப்பீடுகளையே இவர்கள் தமது எழுத்துக்களில் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து என்கிற செயல்முறை பற்றி சிந்திக்கும் பொழுது மொழியின் சாத்தியப்பாடுகளை புரிந்து கொள்ள முடியும். வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு பெண்நிலைநோக்கினுள் விளையும் மோதல்களினதும் பாலியல் உணர்ச்சிகளிலும் சுயகேள்விகளையும் நாம் சுமதிரூபனின் கதைகளில் காணமுடிகிறது.

இத் தொகுப்பில் முக்கியமான விடயம் என்னவென்றால் நிகழ்வுகளினுடாக ஒரு பிரச்சினையையோ அல்லது பல சம்பவங்களையோ இனங்கண்டு அதனைப் படைப்புக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் பெண்களின் வெவ்வேறு விதமான பாலியல் உணர்ச்சிக் கோணங்களைத் வெளிக்கொண்டு வந்துள்ளன. பெண்கள் வெளிப்படையாக எழுதத் தயங்கும் பாலியல் பிரச்சினைகளை, உணர்வுகளை தன் கதைகளில் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் தனியே பெண்களின் உணர்வுகளை மட்டுமல்லாது ஆணின் பாலியல் உணர்வையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார். இவற்றிற்கு இடையே ஆழ்ந்த வேறுபாடு உள்ளது. இவை ஒரு விதத்தில் சமூகரீதியில் அங்கீகரிக்கப்படாத உறவுகளாக இருக்கின்றன. இவை அங்கீகரிக்கப்பட வேண்டும். இவற்றை சிலர் அசிங்கமாகவும் நிலவும் சமூக அமைப்பின் அதிகார, ஆதிக்க அழகியல் மதீப்பீடுகளை மீள உற்பத்தி செய்பவர்களுக்கு இது ஒரு தீண்டத்தகாத பேசுபொருளாக தமிழ்ச் சமூகத்தில் உள்ளது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து உருவம் கொடுப்பதிலும் பாலியல் உணர்வுகளை நாவலாகவோ சிறுகதையாகவோ கவிதைகளாகவோ குறும்படங்களாகவோ விமர்சனங்களாகவோ படைத்து வருகின்றார்கள். இந்த வகையில் தான் சுமதி ரூபனின் கதைகளும் உள்ளன.

கொஞ்சம் கற்பனை,கொஞ்சம் கனவு,கொஞ்சம் அனுபவம் கலந்து,எழுத்தில் வடித்ததை தரம் விமர்சனம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது ஒரு பதிவாக உங்கள் முன் வைக்கிறேன் அத்துடன் விமர்சனங்களை முழுமனத்தோடு ஏற்றுக்கொள்வேன் என்கிறார் சுமதி ரூபன்.

இத் தொகுப்பில்

அம்மா! இது உன் உலகம்
அவன் அப்படித்தான்
அகச்சுவருக்குள் மீண்டும்
ஆதலினால் நாம்
ராஜகுமாரனும் நானும்
வடு
பிளாஸ்டிக்
கட்டிடக் காட்டுக்குள்
யாதுமாகி நின்றாள்
ள் களும் ன் களும்
ரோஜா
பவர் கட்
சூன்யம்

போன்ற சிறுகதைகளைத் தொகுத்து மித்ரா ஆர்ட்ஸ் கிரியேசன் வெளியிட்டுள்ளது.

பிரான்சிலிருந்து வெளிவந்த உயிர் நிழல் சஞ்சிகையில் இடம் பிடித்த பல சிறுகதைகள் இத்தொகுப்பில் வெளிவந்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்மா இது தான் உலகம்

இக் கதையில் இழப்பு, இயற்கையில் பிறந்தவர் ஒவ்வொருத்தரும் இறந்து தான் ஆகவேண்டும். என வந்து போகின்றது அதே போல் இன்னொரு இடத்தில் அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்று ஒருபோதும் நானோ அப்பாவோ கேட்டறிய முயலவில்லை… சீலை,நகை,தமிழ்ச் சினிமா போதும் என்ற சாதாரண மனுசிக்குள் இலகுவாக அம்மாவை நாமாகவே ஒதுக்கிவிட்டோம் என மகள் அங்கலாயிக்கின்றார். .இதே கதையில் இன்னொரு இடத்தில் அம்மா கூறுகின்றார். புpடிக்குதோ இல்லையோ கலியாணம் எண்டு வந்திட்டால் எல்லாத் தமிழ் பொம்பிளைகளுக்கும் பிடித்திருக்கும் சாபம் இது.. என் அம்மா மற்றப் பெண்களைப் போலில்லாமல் சிந்திக்கத் தெரிந்தவள் திருமணம் என்ற பந்தத்திற்குள் அகப்பட்டு தனித்தன்மை இழந்த பெண்கள் எத்தனைபேர் இதற்கு ஆண்களை குறை கூறுவதா? அல்லது எம் சமூகத்தை குறை கூறுவதா என மகள் ஆர்த்தி அங்கலாய்க்கின்றார். மனித மனத்தின் இருண்ட இடங்களை நிதானமாக உருவிச் செல்கிறது இக்கதை. தாய் மகளின் உறவு. வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு மோதல்களினின்று எழும் கேள்விகைள அம்மா இது தான் உலகம் என்ற கதை சுட்டி நிற்கின்றது.

~அவன் அப்படித்தான் அவன~;
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய ஒரு கதை அவன் அப்படித்தான், எமது தமிழ்ச் சமூகத்தில் இப்படியான நிலைமைகள் அல்ல எமது தமிழ்ச் சமூகம் உலகத்திலேயே உயர்ந்தது. என தமது கலச்சாரங்களை கட்டிக்காத்து வருபவர்களால் தம்பட்டம் அடிக்கப்பட்டு வருகின்றது. பல உண்மைகளை மறைத்து மிகவும் கொச்சையாக உறவுகளை பார்க்கும் எமது சமூகம் இக்கதையை வாசித்து விட்டு என்ன சொல்லப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் திருமணம் செய்கின்றார்கள் (ஓரிணச் சேர்க்கையாளர்கள்) அதற்கான சட்டங்களை பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகள் இயற்றியுமுள்ளன. அண்மையில் பிரான்சில் இரு ஆண்களுக்கு கிறஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார் சட்டப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். இப்படி நடைபெறும் வேளையில் தமிழ்ச் சமூகத்தினர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்வதும் அதை அங்கீகரிக்காவிட்டாலும் எமது சமூகத்தில் அப்படி இல்லை என வாதிடுவதும் தான் நடைபெறுகிறது. சுமதி ரூபனின் அவன் அப்படித்தான் என்ற கதையில் சத்தியனுக்கும் அவனது நண்பனுக்கும் உறவு ஏற்படுகின்றது. இதை அவர்களின் குடும்பம் எதிர்க்கிறது. இது தான் கதையின் சாரம்சம்.

தனி மனிதனின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் நடைமுறையில் எதுவுமே சாத்தியமில்லை முற்போக்கு சமூகம் என்பது வெறும் சொற்களால் ஆன கனவு உலகு மட்டுமே. யதார்த்தம் எனும் போது எமது சமூகத்தை நார் உரித்துப் பார்க்கும் போது உள்ளே எல்லாமே வேஷம் இந்தச் சமூகத்தினுள் தானே எனது குடும்பமும் அடங்கும் எவ்வளவு தான் படித்திருந்தாலும் எமது சமூகம் சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதில் பின்னிற்கிறது. என சத்தியன் அங்கலாயக்கின்றான். இந்தக் கதை உயிர்நிழல் சஞ்சிகையில் (பிரான்ஸ்) வெளிவந்த போது குரnலெ டிழல யைத் தழுவி எழுதப்பட்ட கதை போல் உள்ளது எனவும் விமர்சனங்கள் வந்தன.

~அகச் சுவருக்குள் மீண்டும்~ என்ற கதை முழுமையற்ற வாழ்வு, வாழ்தல் பற்றிய தோற்றம் அல்லது மயக்கம், கலாச்சாரத்தின் மேலான பிரமைத்தனம் போன்றவற்றினை உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது.

அதேபோல் ~ஆதலினால் நாம்~ என்ற சிறுகதையில் உணர்வைத் தொட்டுச் செல்கின்றார் இக்கதை இரு பெண்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளினால், கணவனின் கொடுமையினால் இரு பெண்கள் ; கணவனை பிரிந்து வாழுகின்றனர். அவர்களுக்கிடையில் ஏற்படும் நட்பு, புரிந்துணர்வு காதலாக மாறுகிறது. தங்களது பாலியல் தேர்வை அவர்கள் தெரிவு செய்து கொண்டுள்ளார்கள். இதை சுமதிரூபன் தத்ரூபமாக கதையாக தந்துள்ளார். முகத்தில் அறைவிழுந்தது. அறை விழ அறைவிழ ஏன் என்ற கேள்வி கூடிக்கொண்டே போனதே தவிரக் குறையவில்லை. பெண் சிந்திக்கக் கூடாது என்பதின் கருத்து மட்டும் புரிந்தது. ஐயோ நான் ஏன் சிந்திக்கும் பெண்ணாகிப் போனேன். பல்லிளிக்கும் பரதேசிகளை எனக்குப் பிடிப்பதில்லை இனிமேல் ஆண் வர்க்கம் மீதே எனது பார்வை விழுமா என்ற சந்தேகம் எனக்குள் அந்தளவுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆணின் நெருக்கம் உடல் சிலிர்க்க வைப்பதற்குப் பதில் அருவருக்கத் தொடங்கிவிட்டது என்று கதையில் வந்துபோகிறது வசனங்கள். இதன்மூலம் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மிக அழகாகத் தன் கதையில் கூறுகிறார்.

இங்கு கதைகளாக புலம்பெயர்ந்து ஆணாதிக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். குடும்பத்தை விட்டு வெளியேறி ஆணை நிராகரித்து வாழும் பெண்களின் நிலை, ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய துணிந்த பார்வை என்பவற்றை இவரின் கதைகள் அழகாக சொல்லி நிற்கின்றன.

இக்கதைகளில் வரும் பெண்கள் தமது சூழலில் வாழநேர்ந்த பெண்களின் உள்ளுணர்வுகளுக்கும், சுயமுரண்களுக்கும் மீறல்களுக்கும்; பெண்கள் தமக்கான தீர்வுகளைத் தாம் வாழ்ந்த வாழ்கின்ற சூழலிலிருந்து செய்ய முனைகின்றார்கள். எப்போதுமே தன்னை மீறிப்போகின்ற வாழ்க்கை தனது வாழ்வு மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றதான அவலம் இக்கதைகளில் தெரிகிறது. பல கதைகளின் கரு முடிவில் ஒரே கருத்தை ஒத்தவையாக உள்ளன. பெண்களின் புதிய சேதிகளை சொல்லவேண்டும் எனும் அவசியத்தினை இக்கதைகள் மூலம் தந்துள்ளார் சுமதிரூபன்.

எனினும் பெண்ணியக் கருத்துக்களை தயங்காது எழுதிவரும் (சுமதிரூபன் உட்பட) பெண்களும் கூட தங்களது பெயர்களுடன் தங்களது கணவனின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ சேர்த்துக் கொள்வதை மட்டும் இவர்களால் தவிர்க்க முடியவில்லையே. இதற்கு பெண்களின் விருப்பு, வெறுப்பு என்ற பதிலை மட்டும் நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆனாலும் சமூக அந்தஸ்தை வேண்டி நிற்கும் பெண்கள்போல் சமூகப்பயமும், ஆழ்மனதில் பதிந்து போன ஆண் மேலாதிக்க கருத்துக்களிலிருந்து முற்றாக விடுபடமுடியாமையும் காரணமாக இருக்கக்கூடும். இப்பெண்கள் யாரும் தங்களது பெயர்களுக்குப் பின்னால் தாயின் பெயரைச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற விமர்சனமும் எழுகின்றது.

சுமதிரூபன் தமிழச்சி என்கிற புனைபெயரிலும் எழுதிவருகின்றார். இவரின் எழுத்துக்கள், குறும்படங்கள்; இன்று புலம்பெயர் நாடுகளில் பேசப்பட்டு வருகின்றவையாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

24.3.2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *