பெண் – சிசுக்கொலை – றஞ்சி(சுவிஸ்)

பெண் – சிசுக்கொலை

பெண்சிசுக் கொலைகள் பற்றி;ய ஆய்வு ஒன்றை யுனெஸ்கோ அமைப்பு ஆசிய, ஆபிரிக்க ஐரோப்பா, அமெரிக்க போன்ற நாடுகளில் மேற்கொண்டிருந்த வேளையில் பின்வரும் காரணங்களை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது பெண் சிசுக்கொலை, பெண்குழந்தைகள் போதிய அக்கறையுடன் வளர்க்கப்படாததினாலும் சிசுக்கள் மடிவதற்கு ஒரு காரணம் எனவும், உலகில் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் கிட்டதட்ட ஒரு கோடிப் பெண்கள் மற்றும் பெண்சிசுக்கொலைகள் நடந்துள்ளன என்றும் இவ்வமைப்பு தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ள அதே வேளையில் பொதுவாக உடல் ரீதியான வலுவைப் பார்க்கும் போது ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகள் தான் உயிர் வாழும் சக்தி அதிகமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மருத்துவர்களின் கணீப்பீடு கூறுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இவ் ஆணாதிக்க சமூகம் மருத்துவ உண்மையை மாறிகூறிவருகின்றது. பல நாடுகளில் ஆங்காங்கு சிசுக்கொலைகள் இடம்பெற்று வந்தாலும் அதற்கான காரணதாரிகள் பெண்களே என்று இந்த ஆணாதிக்க வாதிகள் (ஆணாதிக்கக் கருத்தியல்களை வரித்துக் கொண்ட பெண்களும் இதற்குள் அடங்குவர்) வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த சமுதாய அமைப்புக்குள் சில பெண்கள் தங்கள் பெண்சிசுக்களை அழிக்கத் துணிகிறார்கள் என்றால் அதற்கான காரணம் இந்த சமூக அமைப்புக்குள்ளே இருந்தேயாகவேண்டும்.

பெண்கள் மேலேயே பெண்கள் குறை கூறுவதற்கு இந்த ஆணாதிக்க சமூககட்டமைப்பே காரணமாகவும் இருக்கலாம். ஆணாதிக்க கருத்தியல்களில் ஊறிப் போய் இருக்கும் பெண்கள் இப்படியான குடும்ப அமைப்பு முறைகளை விளங்கிக் கொள்ள முன்வரவேண்டும். ஒரு தாய் பத்து மாதம் சுமந்து தனது குழந்தையை பெறுகிறாள். அவள் பிரசவத்தின் போது படும் துன்பம் என்பது ஒரு மனிதஉயிர் மறுபிறப்பு எடுப்பது போல். அப்படியான ஒரு பெண் தன் குழந்தையை(பெண்) கொன்றுவிடுவதற்கான காரணத்தை வெறும் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் விளக்க முற்படுவது ஒருவகை அறியாமை ஆகும். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பெற்றவளா? அல்லது இந்த சமூகமா? ஒடுக்கப்பட்டவர்கள் மேலேயே பழிசுமத்திக் கொண்டிருக்கும் இந்த சமூகம் மேல் தான் பெண்கள் கோபிக்க வேண்டுமே தவிர ஒரு பெண்ணின் மேலே அல்ல. தன்னைப் போல் அந்த பெண்சிசுவும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகுவதில் ஏற்படும் அச்சமும் அதைத்; தவிர்த்துக்கொள்ள -அப்பாவித்தனமாக- ஒரு பெண் தேர்வுசெய்யும் வழிமுறையும்தான் பெண் சிசுக் கொலை என நாம் ஏன் கொள்ளக் கூடாது?.

இன்று ஒரு பெண் எதிர்நோக்கும் சாதாரண பிரச்சினைகளான சீதனம், பாலியல் வன்முறை என்ற கொடுமைக்கு எத்தனை பெண்கள் ஆளாகிக் கொண்டிருக்கின்றனர்.; சீதனத்திற்காக எத்தனை பெண்கள் உயிருடன் கொளுத்தபபடுகின்றார்கள், இந்த ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த சமூகத்தால் எத்தனை பெண்குழந்தைகள் பாலியல் வல்லுறவு கொண்டபின் -வெளியே தகவல் வந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக- கொலைசெய்யப்படுகிறார்கள். இவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் வழங்குகிறார்கள் என்று எவராலும் கூறமுடியுமா? கடத்தப்பட்டு விபச்சார விடுதிகளில் மிருகங்களை விட கேவலமாக இருட்டறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று யாராவது அக்கறை கொள்கிறார்களா? இன்று குறிப்பாக 8 வயது தொடக்கம் அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல பெண்பிள்ளைகள் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சி மூலம் பார்க்கும் போது உண்மையிலேயே பெண்ணாக பிறக்காமலேயே இருக்கலாம் என்று ஒரு பெண்ணுக்கு தோன்றுகிறதென்றால் அதற்கும் காரணம் பெண்களா?

தற்போதய ஆணாதிக்க, முதலாளித்துவ அமைப்பானது ஆண் குழந்தைகளின் பிறப்பு முதல் அவர்களுக்கு வழங்கப்படும் உயர் அந்தஸ்து, மரியாதை, உணவு, மருத்துவ கவனிப்பு, கல்வி எல்லாவற்றிலுமே ஆண்குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அத்துடன் அவர்களுக்கான சுதந்திரமும் உண்டு. உடல் ரீதியான சுதந்திரம் மட்டுமல்ல, எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தும் சுதந்திரமும், தேர்வுசெய்யும் சுதந்திரமும் அவர்களுடையதே. ஆண் குழந்தைகளின் பிறப்புரிமைகள் இப்படியிருக்கிறது. ஆனால் பெண் குழந்தைகளுக்கு…..?? இவ்வாறு பாரபட்சமாக பெண் சமூகத்தை நடத்திக்கொண்டு, பெண்கள் ஆண்களின் ஆதரவையும் பாதுகாப்பையும் எதிர்பார்த்து சார்ந்து வாழ -கருத்தியல் ரீதியிலும் வன்முறை ரீதியிலும்- நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது ஆணாதிக்கம். அத்தோடு பெண்களை ஒரு பாலியல் பண்டமாகவும் இன உற்பத்தி செய்யும் உதிரியாகவும் அது பார்க்கிறது. இந்த நிலையில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை அது நியாயப்படுத்தும் அளவுக்குக்கூட -பல சந்தர்ப்பங்களில்- சென்றுவிடுகிறது. இவ்வாறு சமூக உத்தரவாதமற்ற நிலையில் அவர்களின் அச்ச உணர்வு நீக்கப்படாத நிலையில் பெண் சிசுக் கொலை போன்ற குறுக்கு வழித் தேர்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. வேண்டப்படாத இந்தத் துயரம் (பெண் சிசுக்கொலை) இல்லாமலே போய்விட வேண்டும் என்பதில் யார்தான் உடன்பட மாட்டார்கள். ஆனால் அதற்கான காரணத்தை சமூகத்துள் தேடாமல் (பெண்கள் உட்பட) பெண்களையே குறை கூறுவது எந்தவகையிலானது?

இதற்கு பல தொடர்பு சாதனங்களும் துணைபோகின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும். இப்படியான பெண்களுக்கெதிரான கருத்துக்களை பெண்களே அப்பாவித்தனமாக முன்வைக்கும்போது ஆணாதிக்க கருத்தியல்கள் மேலும் பலப்பட்டுப் போகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களிலாவது ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து எழும் கருத்துக்களை, பிழைகளை சுட்டிக்காட்ட பலர்; முன்வரவேண்டும். பெண்களின் மேலேயே பிழைகூறிக் கொண்டிருக்கும் பெண்களும் ஆண்களும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் மேல் உங்கள் வெறுப்பையும் விமர்சனத்தையும் காட்ட முனையுங்கள். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பல்லவி பாடுவதால் பெண் சிசுக் கொலைகள் போன்ற துயரங்கள் அதிகரிக்குமேயொழிய குறைந்துபோய்விடப் போவதில்லை.

றஞ்சி(சுவிஸ்) 01.05.2004 (நன்றி தோற்றுத்தான் போவோமா பிரான்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *