குழந்தை வளர்ப்பு: விலங்கொடு மனிதராய்…

இன்று புலம் பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய வேண்டியுமிருக்கிறது. இவை சம்பந்தமான கருத்துக்கள், வளர்ப்பு முறை, குழந்தைகளை அணுகும் எமது கலாச்சாரமுறை, எமது குழந்தைகளை நாம் வளர்க்கும் விதம், போன்றவைகளை கேள்விக்குள்ளாக்கும் நிலையும் தேவையும் இன்று எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. நாம் குழந்தையை ஆளுமையுடன் வளர்ப்பது சம்பந்தமாக பெற்றோர்களாகிய எமக்கு எந்த விதமான அறிவும் முன்னர் இருக்கவில்லை. பெற்றோர்களின் ஆளுமைக்குள்ளேயே அவர்கள் முடங்கிப் போக நேர்கிறது. ஆனால் குழந்தைகளை தனித்துவமாக சிந்திக்க பெற்றோhகள் விட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது. நாம் புலம் பெயர்ந்து வந்த பின் தான் இதன் தேவையை உணரக் கூடியதாக இருக்கின்றது. இதனால் குழந்தை வளர்ப்பு பற்றி எமது அறிவை விருத்தி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் சுயாதீனமாக சிந்திக்கும் ஆற்றலை நாம் வளர்க்க வேண்டும் உதவி செய்ய வேண்டும். பெற்றோர்களாகிய எம்மை விட குழந்தைகள் புலம் பெயர் நாட்டின் கலாச்சார முரண்பாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கிறாhகள். அத்துடன் எம்முடைய கலாச்சார அம்சங்கள் பற்றிய விளக்கங்களை குழந்தைக்கு விளங்கப்படுத்தி கூறலாமே தவிர அவர்களை வற்புறுத்தக் கூடாது. அடுத்து பெண் குழந்தைகளை பொறுத்தவரையில் ஒழுக்கம், கற்பு என்ற அடிப்படையில் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிப்பது விபரீதமாகி விடலாம். அதாவது இரண்டு கலாச்சாரத்திற்கிடையிலான இழுபறியாக நாம் கையாளக் கூடாது. இரண்டுக்கும் இடையில் சமரசம் செய்து குழந்தை தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை பிள்ளையுடன் ஒளிவுமறைவின்றி கதைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனப்பக்குவம் பெற்றோர்களாகிய நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவையுமிருக்கின்றது. இப்படி முடியாத நிலையில் குழந்தைகள் எம்மை முறித்துக் கொண்டு தமது விருப்பங்களையும் தேர்வுகளையும் நடைமுறைப்படுத்துகின்றனர். பெண் பிள்ளைகளுக்கு முக்கியமாக பாலியல் சம்பந்தமான கருத்தியல்களை விளங்கப்படுத்த பெற்றோர் முன்வரவேண்டும். புலம்பெயர் நாடுகளில் நீச்சல் ஒரு பாடமாகவே உள்ளன. நமது பெற்றோர்கள் என்ன வென்றால் பெண் குழந்தைகள் நீச்சலுக்கு போகக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிப்பதன் மூலம் பெண் குழந்தைகள் மனதில் பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. நீச்சலுக்குப் போனால் பிள்ளை கெட்டுவிடும், நீச்சல் உடுப்பில் பிள்ளைகளை பார்க்க பெற்றோர்களுக்கு பயம்தான் காரணம் எங்களுடைய சனங்கள் என்ன சொல்லுவினமோ, எமது சமுதாயத்தில் பெண்கள் நீச்சல் உடை அணிவது மிகவும் கௌரவக் குறைவு போன்றவற்றினால் பெண்பிள்ளைகளை பாடசலையில் இருக்கும் நீச்சல் வகுப்புக்கு அனுமதிப்பதில்லை.

ஓரு பாடசாலையால் ஆசிரியர்கள் நல்ல சினிமாக்களுக்கு தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்துக் கொண்டு போகும் போது எமது தமிழ் பிள்ளைகளுக்கு மட்டும் பல பெற்றோர் கட்டுப்பாடு விதிப்பதோ அல்லது அது எமது தமிழ் கலாச்சாரம் அல்ல என்று பிள்ளைகளை கட்டுப்படுத்துவதோ கூடாது. இவைகளினால் பிள்ளைகளின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு தவறு ஏற்பட இடமுண்டு. இந்தக கடடுப்பாடுகள் எல்லாம் பெண் பிள்ளைகளுக்குத் தான். ஏன் தான் பெற்றோர் பிள்ளைகளை இப்படி வேறுபடுத்துகின்றனர் இதனால் பெண் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுகின்றது. பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரே ஆணாதிக்க கருத்தியல்களை திணிக்கவும் சமூகக்கட்டுப்பாடுகள் என்று பெண்பிள்ளைகளை ஒடுக்கவும் முனைகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பெரிய போராட்டம் நடைபெறுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு நகை அணிவது சம்பந்தமான ஆசையை ஏற்படுத்துவது கூட நாமும் இந்த சமூகமும் தான். பிறந்த குழந்தையிலிருந்து வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் நகைகளை அள்ளிப் போடுவதும் என்பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று பிள்ளையின் மேலேயே பழியை போடும் பெற்றோர்களும் ஏராளம். மற்றப்படி குழந்தையின் இயல்பான விருப்பமும், தேர்வாகவும் இது இருப்பதில்லை. பெண் குழந்தை ஆண் குழந்தை என்று வேறுபடுத்தி விளையாட்டு சாமான்களை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் குழந்தை என்ற அடிப்படையில் தான் பொதுவாக விளையாட்டு சாமான்களை வாங்கி கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் விளையாட்டு சாமான் வாங்கும் போது பிள்ளையின் விருப்பத்தையும் தேர்வையும் நாம் கவனத்தில் எடுப்பது நல்லது. பெண்குழந்தை, ஆண்குழந்தை என்று பிரித்து நாங்கள் வளர்க்க முற்படாமல் குழந்தைகளை சுயாதீனமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க பெற்றோhகளாகிய நாம் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடிக்காவிட்டால் பெண்கள் இரண்டாந்தர பிரஜையாவதற்கான ||திணிப்பும் ஏற்றுக்கொள்ளலும்|| குழந்தைகளுக்கு உளவியல் ரீதியில் தொடக்கி வைக்கப்பட்டுவிடும். இங்கு தான் குழந்தையிலிருந்தே ஆணாதிக்க கருத்தியல்கள் வேரூன்றத் தொடங்குகின்றன. சிறு சிறு விசயத்தையும் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு உண்டு.

எமது வளர்ப்பு முறையில் பிள்ளைகளை அடிப்பதும் வெருட்டுவதும் கட்டுப்பாடுகளை விதிப்பதும் சர்வசாதாரணம். இது குழந்தைகளின் மனதை பாதிப்பதைப் பற்றி பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை.

உதாரணத்திற்கு பிள்ளை ஒரு படத்தை வரைந்தால் நாம் உற்சாகப்படுத்த வேண்டும். அதை விட்டு குழந்தையிடம் என்னத்தை கிறுக்கி வைத்திருக்கிறாய் தூக்கி குப்பையில் போடு என்றவுடன் பிள்ளை ஆர்வத்துடன் கீறுவதை நிறுத்திக் கொள்கிறது. மனம் சலிப்படைந்து சோர்ந்து போகிறது.

குழந்தை வளர்ப்பு பற்றி எமக்கு தெளிவின்மையே காணப்படுகின்றன. குழந்தைகள் வளர்ப்பது சம்பந்தமான படிப்புக்களும் தேடல்களும் எமக்கு நிறையவே இருக்கின்றன. இன்றைய புலம் பெயர் நாடுகளில் வேற்று மொழிகளில் குழந்தை இலக்கியம் சம்பந்தமாக நிறையவே இருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்த கூடிய வாய்ப்புக்கள் புலம் பெயர் நாடுகளில் கூடுதலாகவே இருக்கின்றன. ஆனால் எமது மொழிகளில் குழந்தை இலக்கியம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளன. இது சம்பந்தமாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை இன்று உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கான உலகத்தை அங்கீகரிப்பதும், அதன் ஜனநாயகத் தன்மையை மதிப்பதும், அதன் இலக்கியம் உட்பட வளங்களை அதிகரிப்பதும் அவர்களின் ஆளுமையை வளர்க்க உதவும். இது பற்றி நாம் பலரும் அலட்டிக் கொள்வதில்லை. மாறாக சமூகத்தின் ஆதிக்கக் கருத்தியல்களை சிரமேல் கொண்டு செயற்படும் நாம் அதை சமூகநியதி என்ற பெயரில் குழந்தைகளுக்கு திணித்து விடுகிறோம் , அதிகாரம் செலுத்துகிறோம் இதனூடே பெண் இரண்டாந்தர நிலைக்கு தள்ளப்படும் சமூக நியதியையும் ஆரம்பித்து வைத்து விடுகிறோம். |திணிப்பும் ஏற்றுக் கொள்ளலும்| இலகுவாக நடந்தேறும் போது பிள்ளை ||ஒழுங்கான|| பிள்ளையென பெயர் எடுத்து விடுகிறது. பெற்றோhகள் பூரித்துப் போகின்றனர் விலங்கொடு மனிதனாய்………….

றஞ்சி (சுவிஸ்) 06.02.2004 – (நன்றி சக்தி நோர்வே )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *