வந்தது. தனிமை அகதி வாழ்க்கை
அவள் ஒரு கிழமையாக தனக்குள்ளேயே புலம்பி அழுதாள். தனது வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்று தவித்தாள் எப்படி தனியாக தீபன் இல்லாமல் சமாளிப்பது என்று ஏங்கினாள். இரவு முழுவதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை. மனம் சொல்கிறது. ஏதாவது வரும் ஏதாவது நடக்கும் உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. நம்பிக்கையே வாழ்க்கை என்று தானே எனது 2 வயதுக் குழந்தையுடனும் வயிற்றில் 2மாதம் இன்னொரு குழந்தையுடனும் பயணம் செய்கிறேன்.; தீபன் என்னை சமாதானம் பண்ணும் போதெல்லாம் எப்படியும் நான் சுவிஸ் நாட்டைவிட்டு இரண்டு வருடத்தில் வந்துவிடுவேன் என்று உறுதிமொழி கூறினான். நனைந்த கண்ணிமைகளைத் துடைத்த ராகவி தனது மனதை சமாதானம் செய்து கொண்டாள்.
விமானத்தில் இரண்டாவது தடவையாக இரண்டாவது ஏஜென்சி மூலமாக பயணம் செய்கிறாள் ராகவி. கறுப்புகம்பளி, அதைக் போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது நன்றாகத்தனிருக்கிறது. கனடா எயார்ப்போட்டில் இறங்கி அவளது விசாரணைகள் முடிந்த பின் நண்பர்களுடன் வீடு போய்ச் சேர்ந்தாள். நண்பர்கள் எவ்வளவோ உதவி செய்தாலும் ராகவிக்கு திருப்தி ஏற்படவில்லை. ராகவி ஓரிரு வாரங்களில் தனிமையானாள். அவளது திருமணம் சுவிஸில் வெகு சிறப்பாக நடந்தது. ராகவிக்கும் தீபனுக்கும் ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது. அவளுக்கு வயசு 2 அவளின் எதிர்காலத்தை யோசித்துதான் தீபன் ராகவியையும் குழந்தையையும் கனடாவுக்கு அனுப்பினான். இக்கரைக்கு அக்கரை பச்சைதான் என்று அங்கு போனபின் தான் ராகவிக்கு புரிந்தது. கனடாவை விட சுவிஸிலிலேயே வாழ்ந்திருக்கலாம் என்று ராகவி தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொள்வாள். இரண்டாவது பிள்ளையும் பிறந்தது. பிள்ளைகளின் சுமையுடன் தன்கணவனின் வருகைக்காக கனடாவில் காத்திருந்தாள் ராகவி.
தீபன் தனது குடும்பத்திற்காக இரண்டு வேலை செய்து கடுமையாக உழைத்தான். பிள்ளைகள் அப்பாவின் முகத்தையே மறந்து விட்டன என்று ராகவியின் கடிதத்தின் மூலம் தீபன் கண்டு கொண்டான். என்ன செய்வது அவனது குடும்பத்தை கனடா அனுப்புவதற்கு வாங்கிய கடனே இன்னும் அடைத்தபாடில்லை. கஸ்டப்பட்டு சேர்த்த காசை சீட்டில் போட்டதில் சீட்டு பிடித்தவன் காசு தராமல் சுற்றிவிட்டான். எப்படி உழைத்தாலும் முடிவதில்லையே என்று தீபன் சலித்துக் கொள்வான். அவனது அடிமனதில் ஏதோ ஒரு பயம். என்னதான் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்பதை மனைவி, கணவன் இருவருமே பங்கிடுவது தான் நல்லது அவனது மனைவியான ராகவி வயசில் குறைந்தவள் அவளுக்கும் வாழ வேண்டும் என்ற அபிலாசைகள் இருக்கத்தான் செய்யும் என்றும் தான் பிழைவிட்டு விட்டோமோ என்றும் சிலவேளை தீபன் யோசிப்பது உண்டு. இன்னும் இரண்டு வருடங்கள் தானே பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிப்பம் என்று கவலைகளை மறந்தான்.
ராகவி ரெலிபோனில் கூறியது தீபனின் நித்திரைக்கு இடைஞ்சலாக இருந்தது. என்னங்க நீங்க கெதியாக கனடாவுக்கு வந்து சேருங்கோ இங்கை தனியாக இருப்பது அவ்வளவு நல்லாயில்லை. பிள்ளைகளும் அப்பா எப்ப வருவார் என்று கேட்கினம் நான் எத்தனை நாளைக்குத் தான் ஒரேபதிலை சொல்வது. பிருதிவியும் வளர்ந்து விட்டாள் அடிக்கடி உங்களைப் பற்றித்தான் விசாரிப்பாள். உழைத்தது காணும் இருக்கிறதை வைச்சு சமாளிப்பம் இங்கு நீங்கள் வந்தால் நானும் பாட் ரைம்மாக வேலைக்கு போகலாம். பிள்ளைகளும் சந்தோசமாக இருப்பார்கள் என்றாள். தீபனின் நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கிச் சென்றன. ராகவியை காதலித்தது மணம் முடித்தது. மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை, போன்றவைகள் வாழ்க்கையின் அபிலாஷைகளை கழுத்தை நெரித்துக் கொல்லுவதாகவே தீபன் நினைத்தான். எல்லாம் எதற்காக ஒன்றும் இல்லை. என்ன வெல்லாம் ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறம் மங்கி ராகவியை ஒரு சுமைதாங்கியாக்கிவிட்டேனோ என்று அவனது மண்டை குழம்பத் தொடங்கின. மன நிம்மதிக்காக காரை எடுத்துக்கொண்டு வெளியில் போனவன் திரும்பி வரவேயில்லை.
ராகவிக்கு நண்பர்களிடமிருந்து ரெலிபோன் வந்தது. போனை வைத்த ராகவிக்கு நம்பவே முடியவில்லை. அவளது இதயத்தில் விவரிக்க முடியாத வேதனையால் அவளது இதயம் சுக்கல்களாகச் சிதறின. ராகவியின் உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இதயம், இதயத்தினூடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய ஒரு புனிதமான துக்கம். ராகவி அழவேயில்லை. விறைத்துப் போயிருந்தாள் அவளது மனம் மரத்துப்போயிருந்தது. … வந்தது மீண்டும் தனிமை, அகதி வாழ்க்கை…
நன்றி -அக்கரைப் பச்சை, புதுஉலகம் எமை நோக்கி 1999