ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். றஞ்சி (சுவிஸ்)

( 18.03.2005 )நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்து எழுதும் ஆண்கள் தயவு செய்து எதிர் காலத்தில் இதைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றோம் என்பது தான்.

ஆனால் அவ் வேண்டுகோளை ஒரிரு ஆண்கள் கவனத்தில் எடுத்து தங்களது பெயர்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். அது வரவேற்கத் தக்கது கூட.(உதாரணமாக தேவிகணேசன் தனது பெயரை மாற்றிக் கொண்டார்)

எழுத்துத் துறைகளில் படைப்புக்களை படைப்பவர்கள் பெண்கள், ஆண்கள் இருபாலாரும் தான். ஆனாலும் ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். உதாரணமாக தேவிகணேசன், இந்திராபார்த்தசாரதி, சாருநிவேதிதா, சுஜாதா, ஜமுனாராஜேந்தின் ஷோபாசக்தி, என்று பட்டியல் இடலாம். இவர்களை பார்த்தால் அனைவரும் ஆண்களே. ஆனால் பெண்கள் ஆண்களின் பெயர்களில் எழுதுவது மிகக் மிக குறைவு என்றே நான் கூற விரும்புகிறேன்.

போர்க்காலத்தின் நெருக்கடிகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புகளுக்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் புனைபெயரை வேண்டி நிற்பது தவிhக்கமுடியாததது என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு இருந்தாலும் அதையே சிலர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு சொந்தப் பெயர்களில் எழுதாமல் புனைபெயரை நாடுவதும் இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களை தலையில் வைத்து கொண்டாடவும், தங்களுக்கு எதிரானவர்களை திட்டுவதும் தாக்குவதுமாக உள்ளது. நேர்மையாக தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்றோர் பலரே புனைபெயரை நாடி நிற்கின்றனர். ஆல்லது இது தான் கலகம் என்கிறார்களா? இவர்கள்.

புகலிடத்தில் ஆண்கள் பெண்களுக்காக எழுதுகிறார்கள் என்று இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை அவர் தான் விளக்க வேண்டும். அத்துடன் பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தினாலும் பெண்களுடைய எழுத்துக்கள் என இனம் காணப்படுவது – தொகுகக்ப்படுவது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது என்றும் கூறுகிறார். ஒரிருவர் விடும் பிழைகளுக்கு ஒட்டு மொத்த பெண்களையும் குறை கூறுகிறார். அத்துடன் பெண்நிலைவாதி என்று பெயரெடுத்தால் மட்டுமே போதுமானது என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பெண்ணியத்தையே கொச்சைப்படுத்துகிறார். பெண்களின் உணர்வுகளை ஆணாதிக்கத்தை கேள்வி கேட்கும் பெண்களை இவர் எந்தவகையில் நோக்குகிறார் என்பதை விளக்கியிருந்தால் நன்றாகயிருக்கும் அதைவிட்டு விட்டு தான் ஏதோ பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாக பெண்கள் மேலேயும் பெண்விடுதலைக்கருத்துக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். எல்லாப் பெண்களையும் குறை கூறுவது போலவே எனக்கு தோன்றுகிறது.

அடுத்து இன்று தம்மை முற்போக்காக காட்டிக் கொள்ளும் பெண்ணியம் பேசும் ஆண்கள் பலர் பெண்களின் உறுப்புக்களை வசை சொற்களாக மேடைகளிலும் கூட்டங்களிலும் மொழியாக பயன்படுத்தும் போது இந்த இளையவி சின்னவன் போன்றவர்களின் வாய்கள் எப்படி அடைந்து போய் நிற்கின்றன. அதெல்லாம் சகஜம் என்கிறாரா?? அல்லது இது தான் முற்போக்கு கலாச்சாரம் என்கிறாரா?? முதலில் இவைகளை கேள்விக்குள்ளாக்குங்கள் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பல வடிவங்களில் பெண்கள் வேறுபட்ட மொழிநடையில் கூறலாம். ஏன் ஆண்களும் கூட கூறலாமே. இங்கு நாம் பொலிஸ் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. தேவையுமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *