சுல்பிகாவின் உரத்துப் பேசும் உள்மனம் – றஞ்சி (சுவிஸ்)

1980களிலிருந்து கவிதை எழுதி வரும் சுல்பிகாவின் கவிதைத்தொகுதியான “உரத்துப் பேசும் உள்மனம்”; வெளிவந்துள்ளது. இக் கவிதைத்தொகுதியானது சுல்பிகாவின் 3 வது கவிதை தொகுதியாகும். இலங்கையில் இருந்த பல்வேறு சமூக அரசியல் நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகளை உள்ளக் குமுறல்களாகவும் வெளிப்படுத்துகிறார். ஒரு வகையில் இவை சுகப்பிரசவங்களல்ல வலியுடன் பிரசவித்தவை. சுயதணிக்கைகளுக்கு பல தடவை உட்படுத்தப்பட்டதன் காரணமாக தன்மயமாக்கப்பபடாத, ஈரலிப்பற்ற தன்மை கொண்டவை தன் கவிதைகள் என்கிறார் சுல்பிகா இவர் தற்போது வேலை நிமித்தமாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். அழகியல் நோக்கில் தனது கவிதைகள் முழுமையானவையாகவோ , முறையானவையாகவோ இருக்கவேண்டும் என்ற அக்கறைக்கு தன்னால் முன்னுரிமை அளிக்க முடியவில்லை என்று கூறும் சுல்பிகா, கவிதைகள் சிறப்பானதாகக் கூட இருக்கலாம். நயமாகக் கூறல், இலகுநடை, வெளிப்படையாக செய்தி கூறல், போன்றவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கிளறி வாசிப்பவரில் கேள்விகளை உருவாக்கி சாதகமான செயற்பாட்டுக்கு உந்துதல் அளித்தால் அதன் பயன்பாட்டுக்கு அதுவே போதுமானது என்கிறார் அவர். இவரின் கவிதைகள் ஆழமானவை இக்கவிதை தொகுதியில் வெளிவந்துள்ள பல கவிதைகள் மனதை தொட்டுச் செல்கின்றன.


அன்பு செய்வதாவது

உயிருடன் புதைக்கப்பட்டு
முனகி முனகி இறுகிப்போன
என் புதை குழிக்குள்
உன் சுவாசக் காற்று
வெதுவெதுப்பாக
வட்டைச் சுமந்து
நுளைந்திருக்கின்றது

உயிர்ப்பு உடலெங்கும்
பரவும் பரவசம்
உயிரின் மூலதனத்தைக்
தொட்டுக் கிளர்ச்சியூட்டுகிறது

நேசிக்கும் இதயத்திற்கு
புதைக்குள்ளிருந்தும்
விரோதிக்க முடியவில்லை
புதை குழியிலிருந்தும்
அது உனக்கு
உயிர்ப்புடன்
அன்பே செய்யும்.


மிகவும் அற்புதமான கவிதை வரிகள் இவை உயிருடன் புதைக்கப்பட்டு முனகி முனகி இறுகிப்போன என் புதைகுழிக்குள் உன் சுவாசக்காற்று துயரினை தனதாய் கருதி வலி உணர்தலும் இக் கவிதையில் காணப்படுகிறது.

இன்னுமொரு கவிதையில்

உனது பார்வை
என்னைச் சுட்டெரித்தது
இந்த மனிதர்கள் எவ்வாறு
இவ்வாறானார்கள்?
இறப்பு அவர்களை ஏன்
கலங்க வைக்கவில்லை?

எப்போதும் இவர்கள் இதயம்
இறுகிப்போனது கரும் பாறையாய்?
நண்பனே உனது நண்பனின்
இறப்புக்குப் பல்லாண்டுகளுக்கு முன்
அது நிகழ்ந்து விட்டது

உனது நண்பியின்
இறப்பு
உன்னை கலக்கியிருக்கக் கூடும்

இவர்கள் இதயம் பாறையாகிய கதையும்
உனக்குப் புரியாததுதான்

எனினும் என் அன்பு நாயே
நம்பிக்கை கொள் இம்மனிதர்கள் மீது
என்றோ ஒரு நாள் இவர்கள்
தங்கள் மனிதாபிமானமுள்ளவர்கள்
உயிரபிமானமுள்ளவர்கள்
இயற்கையபிமானமுள்ளவர்கள:
இவ்வுலகில் இன்னுமுள்ளனர்
இன்னும் பிறக்கவுமுள்ளனர் என்று.


எனினும் அன்பு நாயே நீயாவது நம்பிக்கை கொள் இம்மனிதர்கள் மீது. மிகவும் அற்புதமாக கூறுகிறார். மரங்களைப்பற்றி மிருகங்களைப் பற்றி பறவைகளைப் பற்றியெல்லாம் கவிஞர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கவிதையில் மிருகப் படிமங்கள் அலங்காராத்திற்காக அன்றி செயல்பங்கு மிக்கவையாக இருக்கின்றன.

சபதம் என்ற கவிதையில்

சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்

சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்

நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன

உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.

தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று

எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன

தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.


என்று கூறும் சுல்பிகா உண்மை தான் எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது. இப்படி இவரது பல கவிதைகள் மனதையும் உணர்வையும் தொட்டு நிற்கின்றன. பெண்கள் கவிதைகள் என்றால் மென்மையான விஷயங்கள் தான் கூடுதலாக எழுதப்பட்டிருக்கும் என்ற பலரின் கருத்தை சுல்பிகாவின் கவிதைகள் உடைத்து விடுகின்றன. மிக அழுத்தமான மிக அவசியமான சொற்களில் இக்கவிதை முழமைபெறுகிறது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி, முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இலங்கை முஸ்லிம் பெண்களின் அந்தஸ்து நிலை பற்றியும் அதனை முன்னேற்றுவதற்கான கருத்துக்கள் பற்றியும் ஆய்வுகளை செய்து செயற்பாடுகளை முன்வைத்து அதற்காக உழைத்துவரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி இன்று செயற்பட்டு வருகின்றது. சுல்பிகா இம்முன்னணியில் இணைப்பாளர் குழுவில் ஒருவராக 1990லிருந்து செயற்பட்டு வருகிறார். அத்துடன் தேசியகல்வி நிறுவகத்தில் பிரதம செயற்திட்ட அதிகாரியாகவும் கடமையாற்றுகிறார். பல்நூல் ஆசிரியரான இவர் கல்வியில் பெண்ணியல் தொடர்பான ஆய்வுகளை செய்வதுடன் கவிதை நூல்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி
21.25 பொல்ஹென்கொட கார்டின்
கொழும்பு 5
இலங்கை

றஞ்சி(சுவிஸ்)

thanks https://vaarppu.com/review/2983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *