2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு – தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

கடந்த யூலைமாதம் 29,30ம் திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு தனது பத்தாவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் களமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. .இச்சந்திப்பு தனது எல்லைகளை விஸ்தரித்து ஐரோப்பாவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெண்களும் கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்ததும் அல்லாமல் சுவிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச்சந்திப்பில் பெண்ணிய சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், ஆண் மையவாத கதையாடல்கள் மீதான கட்டுடைப்புக்கள், அனுபவ பகிர்வுகள் என்பவற்றை நோக்கியும் பெண்விடுதலைக்கான போராட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கவும் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படடிருந்தன.

இந்நிகழ்ச்சிகள் பிரான்சைச்சேர்ந்த விஜி (இன்பவல்லி), ஜெபா ஆகியோரின் தலைமையில் இருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. முதலில் இப்பெண்கள் சந்திப்பின் -ஸ்தாபிகளில் ஒருவரான ஜேர்மனியை சேர்ந்த மல்லிகாவை சந்திப்பின் பத்தாவது ஆண்டையொட்டி சிறு உரை ஆற்றும் படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பெண்கள் சந்திப்பு ஆரம்பித்தன் நோக்கம் பற்றியும் இப்பெண்கள் சந்திப்பை 1990களில் ஆரம்பித்த தேவிகா, கோசல்யா உமா ஆகியோருக்கு நன்றி கூறியதுடன் பெண்கள் சந்திப்புக்காகவே வருகை தந்திருந்த இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் தலித்பெண்ணியவாதியுமான சிவகாமியையும் இந்தியாவிலிருந்து வந்து பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபாமாவையும் வரவேற்றதுடன் புரிந்துணர்வுக்கான சுய அறிமுகமும் நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

முதல் நிகழ்ச்சியாக ~~பெண்களும் குறைந்த கூலியும்|| என்ற தலையங்கத்தின் கீழ் தனது கருத்தை முன்வைத்து ஜேர்மனியைச் சேர்ந்த மல்லிகா பேசும் போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் பெண்கள் மிகவும் தூரத்திலுள்ள கிராம புறங்களிலிருந்து வந்தவர்கள் என்றும், இவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் என்றும் இவ்விளம் பெண்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே(700- 1000ரூபா) வழங்கப்படுகின்றன. ஆனால் விடுதிகளில் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான காற்றோட்டம், வெளிச்சம் மலசலகூடம் போன்ற அடிப்படைத்தேவைகள் கூட இல்லை.

போடிங்கவுஸ் ஒன்றில் 5 – 200 பேர் வரையிலான பெண்கள் அடக்கப்படுகின்றனர். வேலை நேரம் முடிந்த பின்பும் வேலை வாங்குவது, இடைவேளைகளின் போது வேலை செய்யுமாறு உத்தரவிடுவது, தொழிலாளர்களுக்கு உரித்தான லீவுகளை கொடுக்க மறுப்பது, தொழிலாளர்களை அடிப்பது பகிரங்க முறையில் மிகவும் கீழ்த்தரமான இழிவான செயல்களை பெண் மேற்பார்வையாளர்கள் செய்து வருவது, சுகயீனம், மாதவிடாய், தாய்மை போன்ற நாட்களிலும் ஏனைய நாட்களைப்போலவே வேலைசெய்யும்படி வற்புறுத்துவது கட்டாயப்படுத்தப்படுவது போன்ற வன் செயல்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்றும் இரவு நேரங்களில் தொழில் புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதற்கே இடமில்லை அத்துடன் திருடர்களால் காடையர்களால் ஏன் ஆயுதப்படையினரால் பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் இன்னும் சிலர்கொல்லப்பட்டும் உள்ளார்கள். அங்கு வாழும் பெண்கள் பயபீதியுடன் வாழ்கிறார்கள்.

நாட்டின் மற்றைய தொழிலாளர்களுடன் ஒப்பீடுகையில் இந்தப் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் மோசமான வாழ்நிலை வசதிகள், ஜனநாயக உரிமைகள் சமூக அந்தஸ்து எல்லாமே சுதந்திர வர்த்தகவலயத்தின் அழுக்கடைந்த முகத்தைக் காட்டி நிற்கின்றன. அங்கு வேலைசெய்யும் பெண்கள் தங்கள் வாழ்வைக் கொன்று வளம் தேடும் வலயமாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் குறைந்த கூலி, கூடிய வேலைச்சுமை ஓய்வின்மை, வேலைநேரம், போன்றவைகளையும் எடுத்து விளக்கினார். இலங்கைக்கு கூடிய அன்னியசெலவாணியை ஈட்டிக் கொடுக்கும் இப் பெண்களின் பிரச்சினைகளை சிங்கள, ஆங்கிலம், தமிழ் ஆகிய பத்திரிகைகள் மூலம் வெளிவந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைத்தார்.

இதையடுத்து என்னால் முன்வைக்கப்பட்ட ~~முற்போக்குப் பேசும் ஆண்களும் பெண்ணியமும்|| என்ற கருத்தின் கீழ் எனது கருத்தை வெளியிட்டேன். ஆதாவது இன்று தங்களை முற்போக்காக காட்டிக்கொள்ளும் பல ஆண்கள் பெண்களின் பிரச்சினைகளை தாங்களே கையில் எடுத்துக் கொண்டு பெண்ணியம் சம்பந்தமாக விமர்சிப்பதும் கருத்துச் சொல்வது கூட பரவாயில்லை ஆனால் பெண்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் மீண்டும் ஆணாதிக்க கருத்துக்களை திணிப்பதிலேயே உள்ளார்கள் என்றும் பெண்விடுதலை கதைக்கும் பெண்களை கொச்சையாக பார்ப்பதும் பெண்கள் சம்பந்தமாக இழிவான கருத்துக்களை பரப்புவதிலும், பெண்களின் உறுப்புக்களை பாவித்து தூசண வார்த்தைகளை ஆண்கள் கூசாமல் பாவிப்பது பற்றியும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கோணல்கள், விமர்சனங்கள் போன்றவற்றினுடாகவும், தங்களுடைய பாலியல் வக்கிரங்களையும் ஆணாதிக்க கருத்துக்களையும் படைப்புகளினுடாக புகுத்திவருகின்றனர்.

பெண்களாகிய நாம் இன்று முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன. அதுவும் சில ஆண்கள் பெண்களின் பிரச்சினைகளில் தலையிடுவது அராஜகம் என்று சொல்லிக்கொண்டு வக்காளத்து வாங்குவது பெண்களை தனித்துவமாக சிந்திக்க விடாமல் தடுப்பது. போன்ற கருத்துக்களை சில உதாரணங்களுடன் கலந்துரையாடலுக்கு முன் வைத்தேன். இக்கலந்துரையாடல் மூலம் பல பெண்கள் தங்களது சொந்த அனுபவங்களைக் கூட பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது மட்டுமல்லாமல் கலந்து கொண்ட பெண்கள் அத்தனை பேரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கருத்து பரிமாறிக் கொண்டதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். கிட்டதட்ட 3மணிநேரம் நீடித்த இவ் விவாதம் பயனுள்ளதாக அமைந்தது என்பது இங்கு குறிப்படத்தக்கது. (இவ்விவாதத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் அங்கு வருகை தந்த பெண்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் உணர்வு ரீதியாக கருத்துக்கள் பரிமாறிக்கொண்டதினாலும் விவாதித்தில் இடம்பெற்ற பல கருத்துக்கள் இங்கு தொகுக்கப்படவில்லை )

அடுத்த நிகழ்வாக பிரான்சைச் சேர்ந்த ஜெபா ~குடும்பம்| என்ற சீன நாவல் பற்றி ஓர் பார்வையை வைத்தார். அந் நாவல் 1927ம் ஆண்டு பாரிஸ் நகரத்தின் லத்தீன் மக்கள் வாழும் பகுதியிலிருந்து எழுதப்பட்டது என்றும் அதை சீன மொழியிலிருந்து நாமக்கல் சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நாவலின் கதையானது உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக படைக்கப் பட்டதுமல்லாமல் சீனக் குடும்ப அமைப்பு முறையினுள் இருக்கக் கூடிய முடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பெண், ஆண் இருபாலாருக்கும் உள்ள சமூகக் கட்டுப்பாடு கூட்டு குடும்ப அமைப்புமுறை, இக் கூட்டு குடும்ப அமைப்பு முறையினால் ஏற்படும் சிக்கல்கள் கஸ்டங்கள் அக்குடும்ப அங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மிகவும் தத்ரூபமாக கதாசிரியர் விளக்கியுள்ளதையும் அதே நேரம் கதாசிரியர் பெண்களை எப்படி பார்க்கிறார் என்றும் அக்கதை சமூகத்திற்கு எதை சொல்ல வருகிறது என்றும் மிகவும் அழகாக கதை சொல்லலுடன் விபரித்தார். உண்மையிலேயே கதை வாசிக்காதவருக்கு கதை சொன்ன விதம் மிகவும் பிடித்தமானதாகவே இருந்தது.

இதையடுத்து ஜேர்மனியைச் சேர்ந்த நிருபா ~~மார்க்சியப் பார்வையில் பெண்ணியம்|| என்ற தலையங்கத்தின் கீழ் தனது கருத்துக்களை முன்வைத்தார். ஆண்களைப்போலவே பெண்களும் தொழிலாளிகளாக மாற வேண்டும், வீட்டு வேலைகள் அனைத்தும் கூட்டுழைப்பாக மாறுவதுடன் பெண்கள் பொருளாதரத்தில் வளம் பெறுவது மட்டுமல்லாமல் தொழில்நுட்பம், சொத்துக்கள், மறுஉற்பத்தி, கட்டாய பாலியல் போன்ற அம்சங்களுடன் பெண்கள் மீதான ஆதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் ஆண்களுக்கிடையிலான உறவுகள் காலப்போக்கில் வடிவத்திலும் வீரியத்திலும் மாற்றம் அடைந்தே வருகின்றன. ஆண்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் படிநிலை அமைப்பையும், ஆணாதிக்க முறைமையின் ஆதாயங்களைப் பெறுவதில் ஆண்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளையும் முக்கியமாக ஆராய வேண்டும்.

வர்க்கம்,இனம், தேசிய இனம், திருமணத்தகுதி,பாலுறவுத்தேர்வு போன்ற அம்சங்கள் செயலாற்றுகின்றன. பெண்களின் வர்க்கம், இனம், தேசிய இனம் திருமணத் தகுதி அல்லது பாலுறவுத்தேர்வு, ஆகியவற்றைப் பொறுத்து அவர்கள் மீது செலுத்தப்படும் ஆணாதிக்க அதிகாரத்தின் அளவும் வேறுபடும். வர்க்கம், இனம் தேசிய இனம் போன்ற வற்றை விளக்கியதுடன் தாய்வழிச் சமூகம் எப்படி தந்தைவழிச்சமூகமாக மாறியது பற்றியும் குடும்பத்தின் மூலம் கிடைக்கும் ஆணாதிக்க அதிகாரத்தின் போக்குகள் பற்றியும் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு மூலதனமும் தனிச்சொத்தும் மட்டுமே காரணமாக இல்லை இதில் முதலாளித்துவம் மூலம் பெண்கள் எப்படி பிரிவினைப்படுத்தப்பட்டார்கள் என்றும் மார்க்சியர்கள் எப்படி பெண்ணியத்தை பார்க்கின்றார்கள். பெண்கள் பிரச்சினை குறித்து மார்க்சியர்களின் அணுகுமுறைகள் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் மார்க்சியமும் பெண்கள் பிரச்சினையும் போன்ற கருத்துக்களை விவாதத்திற்கு முன் வைத்தார்.

29 யூலை கடைசி நிகழ்ச்சியாக நோர்வேயிலிருந்து வெளிவரும் ~~சக்தி சஞ்சிகை இரண்டாவது தசாப்தத்தில் காலடி|| வைத்துள்ளதுடன் இணையத்திலும் தடம் பதித்துள்ளது பற்றி ஜேர்மனியைச் சேர்ந்த தேவா ஓர் மீள் பார்வை செய்திருந்தார்.

சக்தி பல புதிய பெண் எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாமல் பெண்களின் ஆக்கங்களுக்கே முக்கிய இடம் அளித்து வருவதுடன் பல புதிய பெண் எழுத்தாளர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ததுடன் அப் பெண்கள் இலக்கியத்துறையில் வளர சக்தி தளம் அமைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாதது. தரம் தரமற்றது என்பதை விடுத்து பெண்களின் ஆக்கங்களை பிரசுரிப்பதில் சக்தி இன்று வரை தனது பங்கையாற்றி வருகின்றது அத்துடன் புலம்பெயர் பெண்களின் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளது பற்றி கூறிய அவர்- சக்தி எல்லாவற்றுக்கையும் மூக்கை நுழைக்கும் ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும் விமர்சனங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து கருத்துச் சொன்ன பெண்கள் சக்தி தொடர்ச்சியாக வெளிவரும் பத்திரிகை என்றாலும் ஆண்களின் ஆக்கங்களை ஏன் பிரசுரிக்க வேண்டும்.? சக்தி பெண்கள் சஞ்சிகையாகவே வந்தால் என்ன? ஆக்கங்கள் இல்லை என்பதற்காக பக்கங்களை நிரப்புவதற்கு ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிக்கவேண்டுமா? அப்படி ஆக்கப் பற்றாக்குறை யென்றால் வருடத்திற்கு இரண்டோ அல்லது மூன்றோ பத்திரிகைகளை வெளயிடலாமே? அல்லது பெண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களை தேடி மறு பிரசுரம் செய்யலாமே? என்று கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிக்கத் தான் இன்று எத்தனையோ சஞ்சிகைகள் உள்ளன. ஆனால் இந்த எல்லாவற்றுக்கையும் மூக்கை நுழைக்கும் ஆண்களின் ஆக்கங்களை சக்தி பிரசுரிப்பது என்பது விமர்சனத்திற்குரியதே. இலக்கிய உலகமே ஆண்களுடையதாக இருக்கும் பொழுது சக்தியும் அதற்கு இடமளிக்க வேண்டுமா? இதற்கு சக்தி ஆசிரியர்கள் பல காரணங்களைச் சொல்லலாம். பலமுறை இவ் விமர்சனத்தை பெண்கள் வைத்த போதிலும் சக்தி ஆசிரியர்கள் இவ் விமர்சனத்தை பாராமுகமாக இருப்பது ஏன்? அப்படி என்றால் சக்தியின் நோக்கத்திற்கு இது முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. என்றும் சக்தியில் வெளிவந்த சுகனின் கவிதை, இளைய அப்துல்லாவின் கவிதை ஆகியவை உதாரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் சக்தி பலபேருக்கு கிடைப்பதில்லை சக்தியை பரவலாக்கும் முயற்சியில் வெளியீட்டாளர்கள் முயலவேண்டும் என்றும் சக்தி பெண்களின் ஆக்கங்களுடனேயே வரவேண்டும் என்று அங்கு குழுமியிருந்த பல பெண்களின் கருத்தாகவும் இருந்தது. இதை சக்தி ஆசிரியர்கள் கவனத்தில் எடுப்பது நல்லது என்றே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

30ம் திகதி யூலை காலையில் இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்ட தலித் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான சிவாகமி தலித் பெண்ணியம் சம்பந்தமாக 1983 லிருந்து எழுதிவருபவர். இவர் ~~தலித் பெண்ணியம்|| என்ற தலையங்கத்தின் கீழ் தனது கருத்தை முன் வைத்த பொழுது அங்கு வந்திருந்த பல பெண்களின் வேண்டுகோளினால் தலித் என்பதற்கான விளக்கக்தை முதலில் தனது உரையாகத் தொடங்கினார். இந்து சமுதாயக் கட்டமைப்பால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடி மக்கள் மற்றும் முதலாளியத்தால் பினதள்ளப்பட்ட உழைக்கும் மக்கள் பார்ப்பனர்களின் அதிகாரத்தின் கீழ் வெள்ளாளன், சக்கிலியன், பறையன், பள்ளன், என்று தங்களுக்கு ஏற்ற வாறு சாதிகளை பிரித்துள்ளனர். இவை அனைத்தும் தெய்வக்கட்டளைகளாக வேதம், புராணம், இதிகாசம் என்பதுடன் தெய்வம் புனிதமாக்கப்பட்டு சாதி அந்தஸ்தும், பெண்களின் நிலையும் வரையறுக்கபட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டில் சாதி ரீதியாகவே வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருமணங்கள், கொடுக்கல் வாங்கல்கள் தொழில், கோயில், வாக்குரிமை கல்வி போன்றவைகள் சாதி ரீதியாகவே பிரிக்கப்பட்டுள்ளன. தொழில் ரீதியாக சாதியை முன்னிறுத்தியவர்கள் பார்ப்பனர்களே. இந்து மதமே சாதி என்ற சாயத்தை பூசி பிற்படுத்தப்பட்ட மக்களை பிரிவினைப்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு துரோகமும் செய்துள்ளனர்.

எனவேதான் ஜோதி பாஸ் பூலே தலித்துகளுக்கு ஒரு தனிப்பட்ட அமைப்பு தேவையென்று வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து அம்பேத்காரும் தலித்துகளுக்கு தனிப்பட்ட அமைப்பு தேவையென்றும் குரல் கொடுத்தார் தலித்தியம் என்பது தீண்டாமை ஒழிப்பு மட்டுமில்லாமல் சாதி ஒழிப்பு அதாவது இந்துமத ஒழிப்பு என்றே கூறலாம். அதாவது தீண்டாமைக்குட்பட்ட மக்கள் இவர்கள் முக்கியமாக அடித்தள மக்கள் இனஉணர்ச்சிக்கும் நிகழ்கால துன்ப துயரங்கள் என்பதற்கும் இடையிலான போராட்டமாகவே தினம் சாதிக் கொடுமையை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண் எப்படி ஒடுக்கப்படுகிறாள் எனபதற்கு இன்று ஒரு அமைப்பு தேவையோ அதே போல் தான் தலித்துகளுக்கும் ஒரு அமைப்பு அவசியமானது என்றார்.

ஆனால் தலித் ஆண்கள் தலித் பெண்களைப்பற்றி யோசிப்பதில்லை காரணம் குடும்பம் என்ற அமைப்பில் தலித் பெண்ணும் ஒடுக்கப்படுகிறாள். தலித் பெண்கள் மேல்சாதிக்காரப் பெண்களாலும் ஆண்களாலும் தலித் ஆண்களாலும் ஒடுக்கப்படுகின்றாள். மேல் சாதிப் பெண்கள் கூடுதலாக இந்து மதத்தை பின்பற்றியவர்களாகவே உள்ளார்கள் இவர்கள் குடும்பம் என்ற அமைப்பின் கீழ் நல்ல தாயாக நல்ல மனைவியாக இருப்பவர்களே. பார்ப்பனியர்கள் தான் இன்று பெண்ணிய அமைப்புகளாக தோன்றி பெண்களுக்காக போராடுகின்றன. இந்து மதம் தான் இன்று சாதியமைப்பை கட்டிக் காத்துக் கொண்டு வருகிறது அப்படி யென்றால் இந்தப் பெண்களுக்காக போராடுகிறோம் என்று கூறுபவர்கள் இந்து மதத்தை முதலில் தூக்கியெறியணும். அதைக் கேள்வி கேட்காத வரை எந்தப் பெண்ணிய இயக்கங்களும் தலித் பெண்களுக்கு சார்பாக போராட முடியாது. ஏனென்றால் மதம் தான் குடும்பம் என்ற அமைப்பை கட்டிக் காக்கின்றது இவற்றினால் பெண்ணிய இயக்கங்களுக்கும் தலித் பெண்ணிய இயக்கங்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. எமது கலாச்சாரம், பண்பாடு , சாதி எம்முடன் இருக்கும் வரைக்கும் ஆண் பெண்ணை ஒடுக்குவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். எல்லாப் பக்கத்திலும் ஒடுக்கப்படும் தலித் பெண்ணுக்கு ஒரு அமைப்பு அவசியமாகின்றது. என சில உதாரணங்களுடன் விளக்கினார். பெண்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார் சிவகாமி. இது அங்கு வந்திருந்த பெண்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து சிவகாமி எழுதிய சிறுகதையான ~~குறுக்கு வெட்டு|| என்ற நாவலை பிரான்சைச் சேர்ந்த விஜி (இன்பவல்லி) விமர்சனம் செய்திருந்தார். மிகவும் தத்ரூபமாக எழுதியுள்ள இக்கதையானது குடும்ப அமைப்பு முறை பற்றியும் குடும்ப வாழ்க்கை முறை, கூட்டு வாழ்க்கை முறை பற்றியும் பாலியல், ஒருதாரமணம், கற்பு, குடும்பத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகள், என்ற அடிப்படையில் சிறுகதை வடிவத்தில் வடிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய கதையை அவருக்கு முன் விமர்சிக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்பதாகும். அக்கதையை விஜி சரியாகவே விமாசித்துள்ளார் என சிவாகமி சுட்டிக் காட்டினார். இக்கதையை அங்கு கலந்து கொண்டிருந்த பெண்கள் வாசிக்காததினால் கருத்துக்கள் குறைவாகவே பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் விஜி சொன்ன கதையின் அடிப்படையில் ஒரிரு பெண்கள் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். இக்கதைக்கான விமர்சனம் இந்தியா டுடேயில் வந்துள்ளதாகவும் அங்கு கூறப்பட்டது.

அடுத்த நிகழ்ச்சியாக ~~மலேசியத் தமிழ் பெண்களின் பிரச்சினைகள்|| என்ற தலையங்கத்தில் ஜேர்மனியைச் சேர்ந்த சுபா உரையாற்றினார். மலேசியாவில் வாழும் மலையக மக்கள் அதாவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறிய அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை மக்களின் வாழ்நிலைபற்றியும் மலேசியத் தமிழ் பெண்கள் அவதியுறும் நிலையும் அவர்களது இக்கட்டான நிலை பற்றியும் தமிழ் பெண்கள் மிகவும் பின்தங்கிய வாழ்க்கை முறையினால் அவதியுறுகிறார்கள் என்பதையும் விளக்கத்துடன் எடுத்துரைத்தார். அத்துடன் சம்சுன் என்ற குடிவகைக்கு கீழ்தட்ட மக்கள் அடிமையாவதால் குடும்பங்கள் சிதைந்து போவதையும் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் பத்திரிகைகளின் ஆதாரங்களுடனும் அங்கு செயற்படும் பெண்கள் ஆண்கள் சேர்ந்த அமைப்புக்கள் எப்படி இவர்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கின்றன போன்ற கருத்துக்களை பத்திரிகைகள் மூலமும் தனது அனுபவங்கள் மூலமும் விளக்கினார்.

கடைசி நிகழ்ச்சியாக சிவகாமியினால் எடுக்கப்பட்ட துறு ( THROUGH ) விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.

ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கும் பெண்கள் மனம் திறந்து தங்களது
அனுபவங்களையும், சொந்த வாழ்க்கையில் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டவைகள் இன்றைய காலகட்டத்தில் அந்தரங்கமானவை. அவற்றையெல்லாம் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ எழுதுவது என்பது இனித் தொடரும் சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் பெண்கள் மீண்டும் தங்களது அனுபவங்களை பகிர்வதைப் பாதிக்கும் என்பதினாலும் மேலும் பல பெண்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைப்பையும் வேண்டியும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட பெண்கள் மனம் திறந்து பேசப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் பெண்கள் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வுகளை ஓரளவுக்கேனும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் நிகழ்வுகள் சுருக்கமாக சக்தி வாசகர்களுக்காகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

(அடுத்த பெண்கள் சந்திப்பு 2001 ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது.)

தொகுப்பு
றஞ்சி (சுவிஸ்)

நன்றி சக்தி நோர்வே 2001 மே இதழ் 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *