தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர்.
தமிழில் நடைபெறும் சிந்தனைப் பரிமாற்றங்கள் விவாதங்கள் புலம்பெயர் பின்னணியில் மிகுந்த தாக்கம் செலுத்துபவவையாகவும் உள்ளன. மறுபுறம் புலம்பெயர்ந்த வாழ்வியல் அனுபவங்கள் தமிழுக்கு புதுவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.
தமிழ்ச் சிந்தனை முறையில் கோலோச்சும் ஆதிக்க அதிகார கூறுகளுக்கு எதிரான உரையாடல் பன்முக தளங்களில் ஊடுபாவு கொண்டு வருவது தவிர்க்க முடியாததாயிற்று. மார்க்சியம், அமைப்பியல், பின்அமைப்பியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் போன்ற சிந்தனாவளங்களின் ஊடாட்டம் தமிழில் புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கி வருகிறது.
பெண்ணியத்தின் வருகை நமது இதுகாறுமான சமூக அசைவியக்கத் தொழிற்பாட்டிலும் மொழிக்கட்டமைப்பிலும் அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிரான பெண்ணிய நோக்குவயப்பட்ட பார்வையை வளர்தெடுக்கின்றது.
பெண் எழுத்துக்கள், பெண் விமரிசனம், பெண்ணியக்கோட்பாடுகள் யாவும் புதுவகையான பார்வைக்கும் சிந்தனைக்குமான தளத்தை உருவாக்குகின்றன. அந்தவகையில் பெண் எழுத்துக்கள் பெண் படைப்புகள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கும் தொகுப்புதான் ‘ஊடறு’.
இது பெண்படைப்புகளின் பதிவாக தமிழ் இலக்கிய உலகுடன் ஊடறு செய்ய முனையும் தொகுப்பு. தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை ஆண் நோக்கிலான கட்டமைப்பிலிருந்து விடுவித்து பெண் நோக்கு வயப்பட்ட பார்வையின் அடியாகவும், ஊடறுத்துச் செல்லும் செல்நெறிப்போக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியின் பாற்பட்டதுதான் ஊடறு தொகுப்பு.
பெண் அனுபவங்கள், பெண்மொழி, பெண்நோக்கு யாவும் தமிழ் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்கும் நிலையிலும் முன்னைய பாரம்பரியங்களை கேள்வி கேட்கும் உந்துதல்களையும் தரக்கூடிய தொகுப்பாக அதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. பெண் நோக்கு பற்றிய விழிப்புணர்வுக்கு பிரக்ஞைக்கும் உந்துதலாகவும் இத்தொகுப்பு நூல் உள்ளது.
கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இதழியல் பிரிவுகள், ஓவியங்கள் என்று பெண் அனுபவங்களின் ஆளுமைகளின் திரட்சியாகவே ஊடறு வெளிப்பட்டுள்ளது. தமிழுக்கு இது புதுவரவு. தமிழ்ச் சிந்தனையின் தமிழ்ப்படைப்புலகின் அகற்சிப் பரிமாணமாகவும் உள்நோக்கிய விசாரணைகான கூறுகளைக் கொண்டதாகவும் உள்ளது.
பெண் அனுபவம் பலதரப்பட்டதாகவே உள்ளது. ஆண் அதிகாரத்தால் பாதிக்கப்படும் பெண் அனுபவம் விரிவாக அவரவர் அனுபவத்துக்கும் ஆளுமைக்கும் ஏற்ப பதிவாகியுள்ளன. இன்னொருபுறம் யுத்தம் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக சுமைகளை அனுபவங்களை கொடுத்துள்ளது. புலம்பெயர்வதிலும் பெண்கள் அனுபவங்கள் வித்தியாசமாகவும் நெருக்கடிமிக்கதாகவும் உள்ளது. இவை யாவும் ‘ஊடறு’ தொகுப்பில் பதிவாகியுள்ளன.
படைப்புகளின் மொத்த அனுபவங்களின் திரட்சியில் உள்ளீடாக அரசியல் நோக்கும், ஜனநாயகவேட்கையும், கலகத்தன்மையும், எதிர்ப்பும், இழையோடியிருக்கிறது. இவை வெறும் பெண்களின் புலம்பல் என்று ஒற்றைவரியில் நிராகரிக்கக்கூடியவை அல்ல. சமூகம் பால் நேயமும், சமூகம் பற்றிய விமரிசனமும், விடுதலை அரசியலும் என பன்முகக் குரல்கள் ஒலித்துக் கொள்ளக்கூடிய தொகுப்பாகவே ‘ஊடறு’ வெளிப்பட்டுள்ளது.
மொத்த மானுட அனுபவங்களை பெண் அனுபவங்கள் ஊடறுத்துப் பார்க்கும் முயற்சிக்கான அவசியத்தை வலியுறுத்திக் கொள்ளும் விதத்தில் ஊடறு வெளிப்பட்டுள்ளது. காலத்தின் அவசியம் கருதியும் சமூகப் பொறுப்புடனும் ஊடறு தொகுக்கப்பட்டுள்ளமை கவனிப்புக்குரியது. இத்தொகுப்பின் தொகுப்பாளர்கள் தமிழ்ச்சூழலுக்கு புதிய தளமாற்றம் உருவாக்கப்பட வேண்டியதற்கான பாதையை அமைத்துள்ளனர்.
நன்றி: ஆறாம்திணை
Thanks https://yarl.com/forum2/archive/index.php?thread-8101.html