நவீனமயமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளோடு ஊடகப் பரப்பும் நவீனமேற்றுக் கொள்வது ஏற்கக் கூடியதாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. பத்திரிகைகள், தினசரிகள் தயாரிப்புக்குட்பட்டு கைதவழும் நேரத்தைவிட இணையம் வழி கிடைப்பது வெகு துரிதமாகவே சாத்தியப்படுகிறது. ஆனாலும் பதிவு என்று வரும்போது, பாதுகாக்கப்படுவதற்கும், கீழ்மட்டம்வரை எடுத்துச் செல்லப்படுவதற்கும் இணையத்தின் பங்கு நிறைவாக இருக்கும் என்று கொள்வதற்கில்லை.
இதைக் கருத்தில் கொண்டு பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, பெண்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இணைய இதழான ‘ஊடறு’ தனது தொடக்க காலம் (2004) முதல் ஜூன் 2007 வரையிலான காலத்தில் தம் இணைய இதழில் வெளிவந்த 35 கவிஞைகளின் கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பாதுகாக்கும் பொருட்டு “மை” யை வெளியிட்டுள்ளது.
பெண்கவிஞைகளின் கவிதைகள் பல்வேறு கூறுகளில் பல செறிவானக் கருத்துக்களைத் தாங்கி வெளிப்படுகிறது. பெண்ணியம் கடக்கும் பாதையில் வாழ்க்கை இருப்பின் வலிகளும் இலங்கைப் பெண்களின் போர்ச்சூழல் புலம்பெயர் வாழ்வின் அவலத்தில் ஊடாடும் ரணங்களையும் ஆணாதிக்கம் மிகுந்த இடங்களில் அடிமையாக்கப்பட்டு சகிக்கும் வேதனைகளையும் கண்டுணரும் உள்ளுணர்வை மொழிகளாக்கி தத்தம் கவிதை வழியே ஆற்றுப்படுத்துதலோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
மதனியின் கவிதையான “பதுங்கும் பரம்பரைகள்” போர்ச்சூழல் வாழ்வு ஏற்படுத்தும் வலிகளையும் வாழ்வின் இருத்தலுக்காய் புலம் பெயர்வதையும் பறைசாற்றும் வெளிப்பாடு வாசிப்பவர்களையும் பார்வையாளர்களாக மட்டுமல்லாது பங்கெடுப்பவர்களாகவும் மாற்றிவிடுகிறது,
“என் மகன்
நாட்டின் ஏதோவொரு மூலையில்
இன்னொரு கிடங்கிலிருந்து
எதிரிக்கு குறி வைப்பான்
மீண்டும் என் பரம்பரை
அடிக்கடி புலம்பெயரும்
குழிகளில் பதுங்கும்
மண்ணுக்காய் சண்டையிடும்
முடிவில் மண்ணை உண்ணும்”
அனாரின் “மேலும் சில இரத்தக் குறிப்புகளோ” தொடரும் போரையும் மரணங்களையும் நம் முன் காட்சிப்படுத்தி அவர்களின் வாழ் நாட்களையே கேள்விக்குள்ளாக்குகிறது,
“வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.”
உலகம் நவீனத்தின் விளிம்புவரை சென்றாலும், பெண் அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக்கூட ஏற்காத தன் சுற்றத்தின் வல்லாண்மையை எடுத்தியம்புகிறது. மாதுமையின் ‘அப்பா’ எனும் கவிதை வரிகள்.
“மனிதமும் காதலும் ரசனையும்
இன்னும், இன்னும்,இன்னும்
அப்பாவின் எல்லாமும் கொண்ட
வீரிய விந்தொன்றின்
வெளிப்பாடு நான்
எதிரிகளாய் முறைத்துக் கொள்கிறோம்
என் காதல் வயப்பாட்டின் மனிதத்தில்
தெரிந்திருந்தால் உருவாக்கியிருப்பாரோ நொய்ந்த விந்தொன்றின் மூலம்
அம்மா போன்ற சாதாரணப் பெண்ணாக.
பெண் வளர்ந்த நிலையில் மட்டுமல்லாது சிசுவாய்க் கருத்தரிக்கும்போதே அவளுக்கு ஏற்படும் துயர நிலையையும் அலைக்கழிப்பையும் தோலுரித்துக் காட்டுகிறது சத்தியாவின்
இன்னும் பிறக்காத எனது குழந்தைக்கு’ எனும் கவிதை வரிகள்,
நீ ஒரு பெண் சிசுவாகக் கிழக்கில் உதித்திருந்தால்
கள்ளிப்பால் கொண்டு கொல்லப்பட்டிருக்கவும் கூடும்
மேற்கில் பிறந்திருப்பாயானால் பிரிவுறும்
பெற்றோரின் இடையினில்
துயருற்று அதற்கே பலியாகிப் போயிருப்பாய்.
ஆணாதிக்கச் சூழலில் பெண்ணின் வாழ்வுநிலையை, வாழ்வுரிமையைக் கூட மறுக்கும் போக்கு காணப்படுகிறது. மூடநம்பிக்கைகளை உட்செலுத்தி இந்நிலையை மேலும் கீழ்நிலைக்கே கொண்டுசெல்லும் போக்கு நீடிக்கிறது. சுகந்தி சுதர்சனின் ‘தாயம்’ என்னும் கவிதை இந்நிலையைக் கேள்விக்குட்படுத்தி பெண்ணின் மனசஞ்சலத்திற்கு மருந்தாகிறது.
சாதகத்தை எத்தனை நாளைக்குத்தான்
நீங்கள் சூடிக்கொள்வீர்கள்
செவ்வாயையும் சனியையும் எத்தனை நாளைக்குத்தான்
மாட்டிக் கொள்வீர்கள்
தோஷமென கன்னிகளை வாட்டியெடுப்பீர்கள்.
பெண்ணின் வாழ்நிலை ஆதாரம் ஆணைச்சார்ந்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் திருமணம் மூலம் கட்டமைக்கப்படும் உறவு இன்னும் கூடுதலான ஆதாரமாகவே கருதப்படுகிறது. இத் திருமண உறவே சில சமயங்களில் அவள் வாழ்வை ஆதாரமற்றதாக்குவதோடு அவளை வெற்று பிம்பமாக்கி வேடிக்கை பார்க்கும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும் பெண் தன் வெற்றுத்தன்மையை ஏற்று, சுயகௌரவம் தொலைத்து சமூக அந்தஸ்துக்காகவும் தன் வாரிசுகளின் நிலை கருதியும் திருமண பந்தத்தைத் தக்கவைக்கும் நிலையே தொடர்கிறது. இதனை, சாரங்காவின் ஒரு கவிதாமரத்தின் இறப்பு’ என்னும் கவிதை வரிகள் உணர்த்திச் செல்கிறது,
எனினும்
முன்பொருநாளில்
மனசு தேங்கிய
பச்சிலைகளின்
வாசத்தில் மயங்கி
விழிமூடிக் கிடக்கிறேன்
வாயில் மணி
உன் விரல் தொட்டு
அழும் வரைக்கும்.
பெண் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி தன் நிலையை மேலேடுத்துச் சென்றாலும் அவளை பாலுணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சூழலே நிலவுகிறது. இக்கவிதை வரிகள் இதனைத் தெளிவாக விளக்குவதோடு அவளை அந்நிலையில் காணும்போக்கு அவளுக்கு ஏற்படுத்தும் வலிகளை எடுத்தியம்புகிறது குட்டி ரேவதியின் ‘உனக்கான கடிதங்கள்’ என்னும் கவிதை வரிகள்.
பாலுணர்ச்சி விழித்துக்கொண்ட சொற்களை
அடைக்காமல் அனுப்பும் கடிதங்களையும்
முகர்ந்து பார்க்கிறாய் நீ
மல்லிகையின் கமழும் நாற்றமும்
இதயப் பாலையில் நிர்வாணமுறுத்துகிறது என்னை.”
பெண்கள் மையிட்டு அலங்கரிப்புக்கு மட்டுமே ஆட்பட்டுப் போகாமல் தம் எழுதுகோளிலும் மை நிரப்பி தன் காத்திரமான கருத்துக்களையும் உணர்வுகளையும் ஊடறுவின் வெண்பரப்புகளில் கவியாளுமை உள்ள மொழிகளை, கோடையிடையிலும் வருடிச் செல்லும் சிறுதூறலின் உணர்வோடு வெளிப்படுத்தி பெண்ணிய நிலைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் தம் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்கள் கவிஞைகள்.
உலகத்தின் பல பாகங்களிலிருந்தும்.பெண்கள் எழுதுவது அரிதாகியிருந்த காலம் சற்றே மாறினாலும் தயக்கம் தன் திரையை இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை. இந்நிலையில் பெண்களின் படைப்புகளை வரவேற்று, ஊக்கப்படுத்தி வெளியிட்டதோடு மட்டுமின்றி தொகுப்பாக்கி அப் பெண்கவிஞைகளுக்கு மகுடம் சூட்டிப் பார்த்திருக்கிறது ஊடறு. அந்த வகையில் ‘ஊடறு’வின் பங்கு பாராட்டுதலுக்கு உரிய பணியாகும்.
மை (35 கவிஞைகளின் கவிதைத் தொகுப்பு);
தொகுப்பாசிரியர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜெர்மனி),
வெளியீடு: ஊடறு. இணைய முகவரி:
www.oodaru.com ,http//:udaru.blogdrive.com
விற்பனைக்கு (இந்தியா) :
விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்கல்பாளையம் (வடக்கு), கோவை – 641 015. விலை ரூ. 1 பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-02- 00:00