பெயர் : மீரா நாயர்
தொழில் : திரைஇயக்குனர் / தயாரிப்பாளர் (’மீராபாய் பிலிம்ஸ்’).
விருது : மீரா நாயரின் முதல் திரைப்படமான ’சலாம் பாம்பே’ 1988 வெளிவந்து அவரை இந்தியாவின் முக்கியமான இயக்குனராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் உலகளாவிய புகழும் பல விருதுகளையும் அவருக்குக் கிடைக்கச் செய்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா எனும் விருதினையும் பெற்றுத் தந்தது. தவிர சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதெமி வருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. இதைத் தவிர பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பெருமை மீரா நாயரின் கலைத்துறை சேவைக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்கிறது இந்தியா அப்ராட் எனும் பத்திரிகை. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் இந்திய நாளிதழான ’இந்தியா அப்ராட்’, ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதர் ஒருவரை தேர்ந்தெடுத்து கவுரவிக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான விருதை மீரா நாயருக்கு வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.
அவர் இயக்கியுள்ள் திரைப்படங்களில் காமசூத்ரா, சலாம் பாம்பேயும், மான்சூன் வெட்டிங்க்கும் குறிப்பிடத் தக்கவை.
‘காமசூத்ரா’ ஆண்களே எடுக்கத் தயங்கும் கதையை சிறிதும் விரசமின்றி திரைகதை எழுதி இயக்கியுள்ளார். 16 நூற்றாண்டை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதுவ் வெளிவந்த காலகட்டத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
’சலாம் பாம்பே’ வீதியோரத்துச் சிறுவனின் துயர் மிகுந்த முகத்தில் அறைந்தாற் போல் பதிவு செய்திருப்பார். இத்திரைப்படம் முக்கியமான trend setter ஆகவும் இவ்வகையான திரைப்படங்களுக்கு முன்மாதிரியாகவும், இன்றளவும் கிளாசிக்காக கருதப்படுகிறது, சலாம் பாம்பே வெற்றியில் கிடைத்த பணத்தை அவர் வீதியோர சிறுவர்கள் நலனுக்காக பாலக் ட்ரஸ்ட் எனும் அமைப்பைத் துவக்கி தெருவோரக் குழந்தைகனின் நலனுக்காக அதை பயன்படுத்தினார்.
’மான்சூன் வெட்டிங்’ குறைந்த செலவில் இரண்டு நாட்கள் ஒத்திகையும், முப்பது நாட்கள் படப்பிடிப்பில் திரையாக்கம் செய்யப்பட்ட படம். தில்லியின் உயர்மட்ட பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் நடைபெறும் திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
மீரா நாயர் தன் தன்னுடைய டாகுமெண்ட்ரி படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில்,
கேள்வி : எது உங்களை திரைப்படங்கள் இயக்கத் தூண்டியது? உங்களுடைய குடும்பத்தார் இதை எப்படி எதிர் கொண்டார்கள்?
மீரா நாயர் : நான் ஆவணப் படங்களை இயக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எங்கள் வீட்டாருக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. டாகுமெண்ட்ரி என்றால் என்ன? யாருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. என்னுடைய அமமாவிற்கு நான் செய்து கொண்டிருந்த வேலையைப் பற்றி எதுவுமே புரியவில்லை இப்படி டாகுமெண்டரி படங்கள் எடுப்பதற்காகவா இவளைப் படிக்க வைத்தேன் என்று குறைபடுவார்கள் ஐந்து வருடங்கள் அப்படியே பறந்துவிட்டது. கிட்டத்தட்ட நான் ஒருத்தி இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டார்கள். என்னுடைய முதல் திரைப்படம் ’சலாம் பாம்பே’ வெளிவந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு என்னுடன் வந்த என் பெற்றோர்கள் அப்போதுதான் நான் செய்து கொண்டிருந்த விஷயங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டார்கள் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளார்கள்.”
கேள்வி : உங்களுடைய திரைப்படங்கள் அழகியலுடன் நிறைய கதாபாத்திரங்களையும் ஆழமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. வெகு இயல்பாக சம்பவங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. எப்படி இது சாத்தியமாகிறது?
மீரா நாயர் : ஆமாம்….. சர்க்கஸைப் போன்ற இந்த வாழ்க்கையை நான் மிகவும் விரும்புகிறேன். டாக்குமெண்ட்ரி படங்களின் பின்னனியிலிருந்து நான் வந்ததால் எனக்கு புனைவே விட உண்மைகளே எப்போதும் வலிமையாக இருப்பதாகத் தோன்றும். அப்படியே அசாதாரண கற்பனை விஷயங்கள் எடுக்க நேர்ந்தாலும் சாதாரண உண்மையின் சாயல்கள் அதில் கலந்திருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
கேள்வி : எது உங்களை திரை இயக்குனராக ஆக்க விரும்பியது?
மீரா நாயர் : அரசியல் நாடகக் குழுவொன்றில் புரட்சிக் கருத்துக பேசும் நடிகையாகத்தான் முதலில் இருந்தேன். எப்போதுமே ஒரு கேள்வி என்னை அரித்துக் கொண்டிருந்தது. கலையை வைத்துக் கொண்டு உலகை மாற்ற முடியுமா என்பதுதான் அது. ஆனால் ஒரு நடிகையாக் அதை செயல்படுத்தவே முடியாது என்று தெரிய வந்தது. ஏனென்றால் நடிகைகள் எப்போதும் மற்றவர்களுடைய பார்வையைத் தான் வெளிப்படுத்துவார்கள். நம்முடைய சொந்த கருத்துக்கள் எடுபடாது. அப்போதுதான் ஹார்வர்ட்டுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து படிக்கவந்தேன். அதில் நடிப்புத் துறை தான் கிடைத்தது ஆனால் எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஹார்வேர்டடில் அடுத்து முக்கியமான துறை டாக்குமெண்ட்ரி திரையாக்கம் என்று தெரிந்து நிம்மதியாக உணர்ந்தேன். உடனே அதில் சேர்ந்து விட்டேன். எனக்கு எப்போதும் உள்ளுணர்வு செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அதன் பார்வையில்தன் எல்லா மனிதர்களோடு வேலை செய்கிறேன், அந்த பார்வையின் வெளிச்சத்தில்தான் வாழ்க்கைப் பற்றிய கதைகள் சொல்லி வருகிறேன். அதனாலேயே டாகுமெண்டரி படங்களை ஏழு வருடங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதன் பின் இத்தகைய படங்களுக்கான ஆடியன்ஸைத் தேடி களைத்துவிட்டேன். எனக்கு நிறைய ஆடியன்ஸ் வேண்டியிருந்தது. எனவே திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்
கேள்வி : பெண் இயக்குனராக அதிக போராட்டங்களை சந்தித்திருக்கிறீர்களா?
மீரா நாயர் : போராட்டம் பெண் என்ற வகையில் இருந்ததில்லை. கனவுகளை, ஆர்வங்களை தக்க வைத்துக் கொள்வதுதான் பெரும் போராட்டமாக எப்போதும் இருக்கிறது. என் மனசு என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியுமா முடியாதா என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய வளர்ப்பு முறையோ என்னவோ எதற்கும் அஞ்சாத தன்மை எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இவை இரண்டும் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
கேள்வி : உங்களுக்கான திரைப்படங்களை எப்படி தேர்வு செய்கிறீங்கள்?
மீரா நாயர் : திரைப்படம் இயக்கும் வாய்ப்பு தேடி வரும் போது அதில் என்னால் ஒன்ற முடியவில்லை எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று தோன்றிவிட்டால் அதில் நான் ஈடுபடவே மாட்டேன். அதை செய்ய வேறு யாராவது இருப்பார்கள். அதை நான் தொடவே மாட்டேன். ஆனால் என்னால் மட்டுமே செய்யக் கூடியது என நான் நினைத்துவிட்டால், மற்றவர்கள் யாராலும் அதை செய்ய முடியாது என்றும் நம்பினால், அதை உடனே செய்துவிடுவேன்.
கேள்வி : எது உங்களை இயக்க ஆர்வப்படுத்தும்? தவிர்க்க முடியாத அளவிற்கு எது உங்களை திரைப்படங்கள் எடுக்கத் தூண்டுகிறது?
மீரா நாயர் : உண்மை எப்போதும் என்னை ஈர்க்கும். நீங்கள் அதை நோக்கிச் சென்றால் எங்கிருந்தோ அது தானே வந்து சேரும். என் திரைப்படங்களின் ஆதாரமாக இருப்பது இதுவே. என்னால் இதை தவிர்க்கவே முடியாது. ஒரு வசனம் அல்லது அந்த முழுக் கதையும் உண்மைச் சம்பவமாக இருந்தால் அது ஒரு பெரிய விஷயம். வாழ்க்கையின் சுழற்சியை நான் ரசிக்கிறேன். அதை என்னுடைய பார்வையில் சொல்ல ஆசைப்படுகிறேன். என் திரைப்படங்கள் காண்பவரின் ஆன்மாவைத் தொடவில்லையென்றால் அதை முழுக்க முழுக்க தோல்விப் படமென்றே சொல்வேன்.
மீரா நாயர் மாற்றுச் சினிமா முயற்சிகள் ஈடுபடுவதில்லை மாறாக அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கத்தக்க படங்களை இயக்குவதையே விரும்புகிறார். கலைத்தன்மை சற்றும் குறையாத வருவாய் தரத் தக்க படங்களே அவரின் வெற்றியின் ரகசியம்.
ஹாலிவுட் திரைப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்புப் பெற்ற ஒரே இந்தியப் பெண் இயக்குனர் இவர். ஆனால் தன்னால் சுயமாக அங்கு செயல் பட முடியாது விருப்பமில்லாத உடன்படிக்கைகள் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்பட நேரும் என்று யோசித்து அந்த வாய்ப்புக்களை மறுத்துவிட்டார்.
இந்திய இயக்குனராக மட்டும் இல்லாமல் உலகத் திரைப்பட இயக்குனரான மீரா நாயர் தன் கனவுகளை பின்பற்றி தன் பயணத்தை அர்த்தமாக்கியுள்ளார். சினிமா எனும் அற்புத ஊடகத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை அழ வைக்கவும் புன்னகைக்கவும் செய்ய அவரால் முடிந்திருக்கிறது.
மீராநாயர் தானே மிசிசிப்பிமசாலா எடுத்தவர் அந்தப்படம் நான் பார்த்தேன் மிகவும் அற்புதமான படம் உகண்டா சம்பநற்தமாக எடுக்கப்பட்ட படம் உண்மையில் மிசிசிப்பிமசாலா வந்து கிட்டதட்ட 15 வருடங்கள் இருக்கும் என் நினைக்கிறேன். நன்றி