1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 விழுக்காடு. சனத்தொகையில் 2வது இடம் இந்த நிலை 1965ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதற்குக் காரணம் இவர்கள் கட்டாயமாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதேயாகும். இதன் காரணமாக இலங்கையில் மொத்தத் தமிழர் தொகையே குறைந்தது. எடுத்துக்காட்டு:
ஆண்டு சிங்களவர் தமிழர்
1971 66% 32%
1981 72 % 27%
ஆங்கிலேயர் 1820ம் ஆண்டுகளின் பின்னர் தாம் இலங்கையில் புதிய பணிபுரிவதற்குத் தென்னிந்தியத் தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்து வந்தனர்.
குறிப்பாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் குறைந்த வேதனத்தில் தொழிலாளிகளாக மதுரை, திருநெல்வேலி ,இராமநாதபுரம் , தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அப்போது நிலவிய கடுமையான பஞ்சத்தைப் பயன்படுத்தி வறுமையில் வாடிய மக்களை இங்கு அழைத்து வந்தனர். ‘நில பிரபுக்களின் கொடுமைகளால் தாங்கவியலாத வேதனையை அனுபவித்தும், சமுதாய ஒழுங்கு முறைகளால் அந்நியப்படுத்தப்பட்ட நிலையிலும் தீண்டாமைக் கொடுமையினால் பாதிக்கப்பட மக்களே பெரும்பாலும் ஆசைவார்த்தைகள் காட்டி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்கள்’ என்கிறார் சி.புஸ்பராஜா.
இங்கு மட்டுமல்ல பர்மா, மலேசியா , மேற்கிந்தியத் தீவுகள் , பிஜித்தீவுகள் போன்ற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இங்கு வந்த மக்கள்பட்ட துயரங்கள் கணக்கற்றவை. இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து பின்னர் தலைமன்னாரிலிருந்தும் கால் நடையாகக் கொண்டு செல்லப்பட்ட இம்மக்கள் தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40 வீதம் வரை மடிந்தனர். 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1வது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) 14 மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர் கோப்பிக்கு ஏற்பட்ட நோயொன்றின் காரணமாக அது வீழ்ச்சியடைய 1867ம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை இலங்கையில் ஆரம்பித்தார். இதன் பின்னர் மலையக மக்களின் தொகை வெகு வேகமாக அதிகரித்தது. 1827ம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.
1931ம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். மு .நடேசு ஜயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர். அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்.
1947ம் ஆண்டு சோல்பரி திட்டத்தின்படி நடந்த 1வது நாடாளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் 20 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு இம்மக்களது வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன.
தேர்தலில் வலதுசாரி தொழிலாளியக் கட்சியான ஜ. தே. க 93 இடங்களில் 42 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் தமது நலன்கள் பாதிக்கப்படும் என அச்சமடைந்த ஜ. தே. க மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குத திட்டமிட்டது. 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் தமிழ்மக்கள் மீதான 1வது ஒடுக்குமுறைச் சட்டமாக இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதற்குத் துணயாக 49ம் ஆண்டு இன்னும் 2 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1949ல் இந்தியர், பாக்கிஸ்தானியர் பிரசாவுரிமைச் சட்டம் 1949ல் தேர்தல் திருத்தச்சட்டம் எனவே அவையாகும்.
1948ம் ஆண்டு இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் மிகக் கொடிய மனிதவுரிமை மீறல்ச் சட்டமாகும்.. 48ம் ஆண்டு மாசிமாதம் 4ம் திகதி வரை எல்லாருமே பிரித்தானியப் பிரசைகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இதன்பின் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்க வேண்டியேற்பட்டது.
சிங்களப் பெயரை உடையவர் இலங்கைப் பிரசையாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது தமிழ், முஸ்லீம் பெயரையுடைய இம்மக்கள் இலங்கைப் பிரசைகளாகக் கருதப்படவில்லை. இதன் பின்னர் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்கவேண்டி ஏற்பட்டது. அவர்கள் தமது தந்தை தந்தைவழிப்பாட்டன் இலங்கையில்ப் பிறந்ததை நிரூபித்தல் வேண்டும்.
அக்காலகட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் வழக்கம் இம்மக்களிடையே இருக்கவில்லை. இச்சட்டத்தை இப்போதைய தமிழ்த் தலைவர்களான பு. பு. பொன்னம்பலம் , சுந்தரலிங்கம் போன்றோர் ஆதரித்தனர். சிங்கள இடதுசாரிக் கட்சியினரும் வெறுமனே பேச்சளவில் எதிர்த்தனரே அன்றி வேறெதுவும் செய்யவில்லை.
தந்தை செல்வா மட்டுமே இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு என்று கூறி பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து பிரிந்து 49ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பிரசாவுரிமை பறிக்கப்பட்டபின்னர் 49ம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டமூலம் மலையக மக்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
பிரசாவுரிமைச் சட்டப்படி 1951ம் ஆண்டில் 8,25,000 பேருக்குப் பிரசாவுரிமை கோரி விண்ணப்பித்தனர். 62ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 வருடங்கள் கழிந்த பின் 1,34,000 பேருக்கு மட்டுமே அதாவது விண்ணப்பித்தவர்களில் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே பிரசாவுரிமை வழங்கப்பட்டது. எனவே இவ்வாறாக முதலில் வம்சாவளி மக்கள் என அழைக்கப்பட்டவர்கள் இப்பொழுது நாடற்ற மக்கள் என்று அழைக்கப்படலாயினர்.
இம்மக்களின் கலை, வாய்மொழி இலக்கியம், நம்பிக்கைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் கலை நாட்டுப்புற இலக்கியத்துடன் தொடர்புடையது. இந்தத் தொடர்பை அறுந்துவிடாமல் பாதுகாத்தவர்கள் அவர்களை கூலிகளாக அழைத்துவந்த கங்காணிகள் என்பதுதான் விந்தை. இலங்கை மலையக மக்களின் வாழ்க்கை மிகவும் துன்பியலான பக்கங்களால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் பிறந்த மண்ணில் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லை. அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த மண்ணில் அவர்களின் உழைப்பால் தேயிலை ஏற்றுமதியில் வயிறு புடைத்த அரசாங்கம் அவர்களை நாடற்ற வீடற்ற அகதிகள் ஆக்கியது. இந்தச் சமுதாயப் பின்னணியில் வாசிக்கப்பட வேண்டிய கவிதைகள் ‘இசை பிழியப்பட்ட வீணை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இலங்கை மலையகக் கவிஞைகளின் கவிதைகள். இந்தக் கவிஞர்கள் மலையகத்தின் மூன்றாவது தலைமுறையைத் தாண்டியவர்கள். இவர்களுக்கும் இந்திய மண்ணுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதையும் இந்தியவம்சா வழியினர் என்பது இவர்களைப் பொறுத்தவரை ஒரு கடந்தகால சரித்திரம் என்பதையும் இவர்களின் கவிதைகளின் சொல்லாத சேதிகளில் பொதிந்து கிடக்கும் உண்மைகள்.
நாட்டுப்புறக் கவிதையின் சாயலை இவர்களின் ஒன்றிரண்டு கவிதைகளில் மட்டுமே காண முடிகிறது. கூடைக்கு வெளியே, (பக் 54, ) புதியதாலாட்டு (பக் 74). அரசியல் வாதிகளும், தலைவர்களும் இசங்களும் இவர்களை எப்போதும் ஒதுக்கியே வைத்திருந்ததையும் அதனால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையும் இவர்கள் கவிதைக் கூடைகளை நிரப்பி இருக்கும் கொழுந்துகள்.
ஆயுத முனையில் நின்று
சமாதானப் பேச்சுவார்த்தை புரியும் அரசியல் வாதியோடு
அரசியலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
(-கவிஞை நா.மரியா எண்டனீட்டா. பக் 13)
தங்களின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று அறிந்தே இருக்கிறது இந்தத் தலைமுறை.
எவனோ ஒருவன்
மேல்தட்டில் வாழ
உன் உணவுத்தட்டை
ஏன் கொடுத்தாய்
சுவரமைக்க?
(-கவிஞை புனிதகலா, பக் 32)
என்ற கவிதை மகாகவி பாரதியின் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் இச் ஜகத்தினை அழித்திட’ வந்த ஆவேசத்தையும் தாண்டி இங்கே அவனுக்கு உணவு கிடைக்கவில்லை என்பது உணவில்லாமையில் ஏற்பட்டதல்ல என்பதை மிகவும் சூசகமாகச் சொல்லிவிடுகிறது. இங்கே அவனுக்கு உணவில்லை என்பது மட்டுமல்ல பிரச்சனை, அவனுக்கு உணவு உண்ணும் உரிமையே பறிக்கப்பட்டிருக்கிறது என்பதையே ‘உன் உணவுத்தட்டை ஏன் கொடுத்தாய்?’ என்ற கேள்வியில் தொக்கி நிற்கும் சமூக விழிப்புணர்வு.
பக்கத்திலிருப்பவன் வலியை
அறிந்து கொள்ள முடியாதவன்
எங்கோ துடித்துக் கொண்டிருக்கும்
சமூகத்திற்கு சன்மானம் கொடுக்கிறான், தன்
பெயர் பிரபல்யத்திற்கு.
என்னவென்பது
உள்ளதை எழுதச் சொல்கிறது உள்மனது’
என்ற கவிதைவரிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் அவர்களின் உரிமைகளையும் விடுதலையையும் பேசி தன்னைத் தலைவர்களாக்கிக் கொண்டவர்களின் கதையும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. தென்னாப்பாரிக்காவில் காந்தி நடத்திய சத்தியாகிரகத்தைப் பற்றி எழுத வந்த பண்டித அயோத்திதாசர் ‘இந்தியாவில் தீண்டாமை பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா?’ என்று கேட்டது இதைத்தானே!
புதுக்கவிதை தொன்மங்களிலிருந்து குறியீடுகளை எடுத்துக் கொண்டு அதையும் தாண்டி இன்னொரு முகத்துடன் அரங்கேறும் என்பது மட்டுமல்ல சில நேரங்களில் தொன்மங்களைப் புரட்டிப் போட்டு இதுவரை எழுதப்பட்டிருந்த அகராதியின் அர்த்தங்களை ஊமைகளாக்கி புதியதொரு தளத்திற்கு இட்டுச் செல்லும். கவிஞை எம்.புனிதகுமாரியின் ‘நல்வரவு’ கவிதையில் வாழைமரம், மாவிலை, நல்வரவு என்பதில் எல்லாம் புதுக்கவிதையின் இந்த வீரியத்தை நாம் உணர்கிறோம்.
‘மதுரையை எரித்த கண்ணகியாய்
வாழைமரம் வாசலில்
தலைவிரித்து நிற்க
இருப்பிடமிழந்து நகரும்
அகதிகளாய்
தோரண மாவிலைகள்.
இவற்றின் நடுவே
கொட்டை எழுத்தில்
‘நல்வரவு’
இன்முகத்துடன்
எல்லோரையும் வரவேற்றது
வெறித்து வெறித்துப் பார்க்கிறான்
பிச்சைக்காரன்.
வாழைமரம், மாவிலைத் தோரணம் . நல்வரவு அனைத்தும் மங்கலத்தின், மகிழ்ச்சியின் குறியீடுகள். இக்கவிதையில் வாழைமரத்தைப் பார்க்கும்போதும் மாவிலைத் தோரணத்தைப் பார்க்கும்போதும் மங்கல காரியம் நினைவுக்கு வராமல் மதுரையை எரித்த கண்ணகியும் அகதிகளும் நினைவுக்கு வருவது கவிதைகளை கவிஞன் மட்டும் எழுதுவதில்லை, அவன் வாழும் இடமும் காலமும் சேர்ந்தே எழுதுகின்றன என்ற கவிதையின் படைப்பு சூட்சமத்தை உணர்த்துகின்றன.
நான் தாயா? கூலியா? என்ற மலைமதியின் கவிதை புலம்பெயர்ந்த அவர்களின் வாழ்க்கையின் பிறிதொரு பக்கத்தை, வலிநிறைந்த யதார்த்தத்தை ஒரு தாயின் பார்வையில் பதிவு செய்துள்ளது.
‘ மாதாந்தம் பணம் அனுப்புவதால்
நிலம் வாங்கி வீடு கட்டுவதாய்
வீட்டுக் கன்னிகளை
கரைசேர்ப்பதாய் காகிதம்
எழுதியிருந்தாய்.
உன் வாக்குறுதிகள்
தொழிற்சங்க தலைவர்களை
கண்முன் கொண்டுவந்தன.
உன் பாட்டனும் பூட்டியும்
பாட்டியும் பாட்டனும்
அம்மாவும் அப்பாவும்
காத்து வளர்த்த மண்ணை
தண்ணீரில் மூழ்கடிக்க
தரகர்கள் முயல்கிறார்கள்
நம் மண் மீதான
லட்சுமணனின் ஓர்மம்
உன்னில் காணாது
கவலை அடைகிறேன்
கோபம் கொள்கிறேன்
சுயநலத்துடன்
உனைக் கருவில் சுமக்காத
மகிழ்வில் வாழ்ந்த என்னை
நீயும்
கூலி என்றா நினைத்தாய்?
(பக் 29)
புலம் பெயர்ந்து வாழும் ஒரு சிலரின் மனப்பாங்கினை மட்டுமல்ல, அவர்கள் அனுப்பும் சில்லறை டாலர்களில் பகட்டான பெருமிதம் கொண்டு தன் சொந்த மண்ணைப் பற்றிய, மக்களைப் பற்றிய அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையைப் பற்றிய கவிதையாக அமைந்துள்ளது
.இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் மலையகப் புகைப்படங்கள் கவிதைகளுக்கு அணிசேர்க்கின்றன.
இத்தொகுப்பு மட்டுமல்ல இக்கவிஞைகளின் கவிதை முயற்சிகளும் ஒரு கன்னிமுயற்சி . பல கவிதைகளை வாசிக்கும் போது ஏற்கனவே எங்கேயோ வாசித்த அனுபவம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒவ்வொரு பக்கங்களிலும் கவிதைகளுக்கான தளம் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இந்த மலையகத்திலிருந்து தென்னாப்பிரிக்கா கறுப்புக்கவிதைகளுக்கு ஈடான கவிதைகளை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்க வைக்கிறது இத்தொகுப்பு.ஊடறுவின் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியர்கள் தோழியர் றஞ்சி, தேவா இருவரின் முயற்சிக்கும் இப்படி ஒரு தளத்திலிருந்து வெளிவரும் கவிதைகளை நூலாக்க வேண்டும் என்று எண்ணிய அவர்களின் சமூக கடப்பாட்டுணர்வுக்கும் அவர்களுடன் துணைநின்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்.
குறிப்புகள்:
மலையக மக்கள் வரலாறு, பதிவுகள் இணையதளம்,
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், சி.புஸ்பராஜா. பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-14 00:00