இந்த நூலைப் பற்றி எழுத முன்னர் ‘மலையகம்’ , ‘மலையக இலக்கியம்’ என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
‘மலையகம்’ என்பது தரைத் தோற்ற அடிப்படையில் இலங்கையின் மலைப் பிரதேசங்களைக் குறிப்பதாக இருப்பினும் ‘மலையக இலக்கியம்’ எனும் போது இந்த வரையறை பொருந்திவராமல் உள்ளது.காலனித்துவ ஆட்சியின் போது, பெருந்தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்குக் கொண்டுவரப் பட்ட இந்திய வம்சாவழித் தமிழரே மலையக மக்களாவர். மலையகத்தில் வாழ்வோரை மாத்திரமன்றி மேல், வடமேல், தென் மாகாணங்களில் இறப்பர் தோட்டத் தொழிலைச் சீவனோபாயமாகக் கொண்டவர்களையும் மலையகத்தைப் பூர்விகமாகக் கொண்டு தொழில் நிமித்தம் மலையகத்துக்கு வெளியே வாழ்பவர்களையும் ‘மலையக மக்கள்’ என்ற பதம் உள்ளடக்குகிறது.
எனவே, ‘மலையக இலக்கியம்’ எனும் போது தனியே தேயிலைத் தோட்ட மக்களின் குரலாக அன்றி விரிந்த தளம் கொண்டே நோக்கப்பட வேண்டியுள்ளது. எனினும், மலையக இலக்கியத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி,பொருளாதார,வாழ்வியல் பிரச்சினைகளே முனைப்புப் பெற்றுத் திகழ்வதாயுள்ளன.மலையக இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு மிகப் பரந்த ஆய்வு தேவைப் படுகிறது. மலையகப் பெண்களின் கவிதைகள் எந்தளவுக்குத் தமது பிரச்சினைகளின் அடியாழங்களைத் தொட்டுள்ளன? என்ற வினாவுக்கு விடை தேடுவதும் இந்தத் தொகுப்பினூடாகச் சாத்தியப் படுவதாயில்லை. இந்த “இசை பிழியப் பட்ட வீணை” யிலுள்ள கவிதைகள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் துயரின் மூலங்களை அணுகியுள்ளன? என்பது பற்றிய சில குறிப்புகளை முன்வைக்க விழைகிறேன்.
“இசை பிழியப்பட்ட வீணை” யில் உள்ள கவிதைகளை மலையகப் பெண்களின் கவிதைகளின் சாரமாகக் கொள்ள முடியாவிட்டாலும் மலையக இலக்கியத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க முடிகிறது. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே பதிலின்றிப் புறந்தள்ளப் பட்டவர்களிடமிருந்து நாம் எவற்றை எதிர்பார்க்க முடியுமோ அவையே இத் தொகுப்பில் விரவிக் கிடக்கிறதெனலாம்.இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை எடுத்து நோக்கும் பொழுது “கற்கள் -கவண்கள்-தாவீது” தமது பிரச்சினைகளுக்குள் இருந்து வெளிப் பட்ட கவிதையாக உள்ளது. ஒடுக்கு முறையின் மீதான கோபத்தின் வெளிப்பாட்டை இந்தக் கவிதையில் காண முடிகிறது.
“சவால்” கவிதையின் பெண் மலையகத்தை விட்டு வெளியேறி மத்திய கிழக்குக்குச் சென்று உழைக்கிறாள். பின்னர் நாடு திரும்பி மனதுக்குப் பிடித்த துணையுடன் குடும்ப வாழ்வில் இணைகிறாள்.எனினும் மலையக வாழ்வு தான் விட்டோட நினைத்த வறுமைக்குள்ளேயே மீளவும் அவளைச் சிக்கவைத்துள்ளது.”கற்பகதருக்கள்” கவிதை பெண் சிசுக்களைக் கருவில் வைத்தே கொலை செய்தல், பெண்கள் வல்லுறவுக்குள்ளாதல், விளம்பரப் பொருள்களாக விலை போதல் போன்ற பல விடயங்களுக்கெதிரான கோபத்தை வெளிப்படுத்துகிறது.
“மனிதம் புனிதம் பெறுவது பெண்ணால்
பெண் புனிதம் கெடுவது யாரால்?”
என்ற வரிகள் இந்தக் கவிதையின் மையப் பொருளாக உள்ளதெனலாம்.
“எரியூட்டப் பட்ட தலைப்பு” கவிதை மலையகத்தில் நடந்தேறும்(ஏனைய பிரதேசங்கள் விதிவிலக்கானவையல்ல) இன்னுமொரு அவலத்தைத் தொடுகிறது.
பெண்கள் தமக்குத் தாமே தீயிட்டுக் கொள்வதும் திருமணத்தின் பின்னர் வாய்க்கும் உறவுகளால் தீயூட்டிக் கொல்லப்படுவதும் இது எழுதப்படும் வாரத்தில் கூட மலையகத்தில் நடைபெற்று வருவதை ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.இத்தகைய எரியூட்டல்களுக்கும் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக ஆணே திகழ்கிறான்.வறுமைக் கோட்டுக்குள் சிக்கி வாழும் பெண்கள் இந்தக் கொடூரத்தைத் தமக்குத் தாமே இழைத்துக் கொள்ள முற்படுவதன் பின்னணி குறித்துப் பேச நாம் மறந்து விடுகிறோம். இந்தப் பெண்கள் மரணத்தை நாடியதற்கான காரணங்கள் கூட பெருமளவில் சிக்கலானவை அல்ல: தீர்வு காண முடியாதவையும் அல்ல.எனினும் பெண் வீழ்ந்து கிடக்கும் இருள் கிடங்கு அவள் வெளியேறி வருவதற்கான ஒளியை வழங்காமல் இருப்பதால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள்.
“உன்னில் இல்லாத நான்” கவிதையில் மலையேறி, கொழுந்து சுமந்து, மாலையில் வீடு வரும் இளம் மனைவி தனது கணவனிடமிருந்தாவது அன்பு கிடைக்காதா? என எதிர்பார்க்கிறாள். அவன் மனதிலும் ஈரமில்லை.வறுமையின் கோடுகள் இல்லத்தினுள் மட்டுமல்ல அவள் ஆன்மாவுக்குள்ளும் இழையோடிக் கிடக்கின்றன.”நான் தாயா?கூலியா?” கவிதை அரசாங்கத்தின் நீர் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரமும் நீரில் மூழ்கடிக்கப் படப் போவதைப் பதிவு செய்துள்ளது.
தலை நகரில் வாழும் மகன் குடும்பத்துக்கான அவனது பொறுப்புக்களை உதாசீனப் படுத்தி வாழ்வதைப் போலவே தொழிற் சங்கத் தலைவர்களும் தமது பொறுப்புக்களைக் கண்டு கொள்ளாமல் வாழ்வதாகத் தாய் கூறுகிறாள்.தனது மூதாதையர் வாழ்ந்த பூமியைத் தண்ணீரில் மூழ்கடித்து அந்த மண்ணின் புதல்வர்களைப் பிடுங்கியெறியும் திட்டத்தை அறிந்த பின்பும் எதிர்வினைகள் ஏதுமின்றி இருப்பதை எண்ணிக் கோபப்படுகிறாள்.மலைகளைக் காப்பாற்றச் சென்ற லட்சுமணன் போல தன் மகனும் வீரனாகத் திகழ வேண்டும் என எதிர்பார்த்தவளுக்கு அவனது அலட்சியம் கோபத்தை வரவழைக்கிறது.தாயின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாத மகன் கூடத் தன்னைச் சாதாரண கூலித் தொழில் புரிபவளாகவே கருதுவதை எண்ணிக் கவலையடைகிறாள்.
“என் அன்னையும் இப்படித்தான்” கவிதை மலையகத் தாயொருத்தியின் தியாகங்களைப் பேசுகிறது.அவள் தான் வயிறார உண்ணவோ நல்ல ஆடைகளை அணியவோ செய்யாது தனது மகளைக் கற்றவளாக்குவதற்காக அரும்பாடுபடுகிறாள்.அவள் சொல்லொணாத் துயரங்கள் சுமந்து பனியிலும் பட்டினியிலும் உழன்று தனது மகளின் உயர்வுக்காகத் தன்னையே தியாகம் செய்கிறாள். அவளைச் சாறு பிழிந்து வழங்கப் படும் அற்பக் கூலியை நம்பியே வாழ வேண்டிய அவலத்தைக் கவிதை சொல்கிறது.தினமும் பாடுபட்டு உழைத்த பொழுதும் பட்டினியில் வாழ வேண்டிய கொடுமையான நிலைமை பதிவு செய்யப் பட்டுள்ளது.”தூங்காத இரவில் நீங்காத நினைவு” கவிதையும் கொழுந்தெடுக்கும் மக்களின் அன்றாட வாழ்வுத் துயரங்களைப் பதிவு செய்கிறது. “துட்டுப் பணம் பெற்று தம் துயர் துடைக்க” வேண்டுமென்பதே ஆண்டாண்டு காலமாக அவர்களுக்குச் சொந்தமாக்கப் பட்ட அநீதியாகித் தொடர்வது கூறப்படுகிறது.
“தொழிலாளிப் பெண்ணின் சோக கீதம்” கவிதையில்
“மாலை ஆனதும்
கூடையை முதுகிலும்
குடும்ப பாரத்தை மனதிலும்
சுமந்து கொண்டு
கால் கடுக்க நடக்கிறாள்
வீட்டை நோக்கி”
“பகல் முழுவதும் பட்டினியால்
வாடும் குழந்தைகள்
சாப்பாடில்லாவிட்டாலும்
சாராயமே வாழ்க்கையாகிவிட்ட கணவன்”
என்ற வரிகள் போதும் பெண்ணின் துயரத்தை உணர்த்த.முதலில் அவள் தன் கால்களைச்
சுற்றியுள்ள துயர்களில் இருந்தே விடுதலை பெற வேண்டியுள்ளது.ஆனாலும் அவள்
“பொறுப்பில்லா கணவனுக்கு
கள்ளும்
குற்றமில்லாக் குழந்தைகட்கு
கல்வியும்
பெற்றுக் கொடுக்க”
உழைத்துக் கொண்டிருக்கிறாள்.அவளைப் பிணைத்துள்ள கண்ணிகளில் இருந்து அவளால் தப்பிக்க முடியாதவளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.”விடியலுக்காகக் காத்திருந்த அன்று” கவிதையானது பேரினவாதிகளால்
வேட்டையாடப் பட்ட மலையக மக்களைப் பற்றியும் மக்களின் துயர் துடைக்காது தமது
சுய நலன்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மலையகத் தலைமைகள்
பற்றியும் பேசுகிறது.
“புதிய அறிமுகம்” கவிதையில் இன்றைய மலையக வாழ்வின் இன்னுமொரு முகம் காட்டப்பட்டள்ளது.குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தந்தையும் மகனும் தன் இச்சைகளின் வழி போய்விட மனைவியும் பிள்ளைகளும் நிர்க்கதியுற்று வாழ நேர்கிறது.இத்தகைய இடர்களில் இருந்து மீள வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.கல்வி கற்ற பின்னரும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்ற பின்னரும் தமது பெற்றோரையும் சமுகத்தையும் மறக்கும் பிள்ளைகளும் மக்கள் ஆதரவைப் பெற்றுப் பதவிகளையடைந்து கொண்ட அரசியல்வாதிகள் பின்னர் தம்மை ஆதரித்து நின்ற மக்களைத் தூக்கியெறியும் போக்கும் என நம்பிக்கையளிக்காத ஒரு மக்கள் தொகுதியே இன்றைய மலையகம் என இக்கவிதை விபரித்துச் செல்கிறது.
“ஏழைகளின் ஓலம்” கவிதை, தேயிலைத் தோட்டங்கள் தனியார் கைகளுக்கு மாறிய பின்னர் காலங் காலமாக எட்டடிக் காம்பறாக்களுக்குள் தேயிலையையே நம்பி வாழ்ந்த ஏழைத் தொழிலாளருக்கு இருந்த அற்ப வருமானமும் பறிபோனதைப் பதிவு செய்கிறது.தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்படுவதும் தொழில் வாய்ப்புக்களை மக்கள் இழக்க வேண்டியிருப்பதுவும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பயனளிக்காமல் உழைப்புக்கு வேறு வழியும் இன்றி பட்டினியால் வாடும் மக்களின் துயரமும் இக் கவிதையில் எடுத்துக் காட்டப் படுகிறது.”புதிய தாலாட்டு” எனும் தாலாட்டுப் பாடலில் கூட தாய் அனுபவிக்கும் துயரங்களே அடுக்கடுக்காக வருகின்றன. மலையக வாழ்வின் சீரழிவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஆண்களும் பிரதான காரணமாக இருக்கின்றனர். அந்தக் குடிதான் அங்குள்ள பெண்களின் மீளாத துயரங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது.தனது குழந்தையாவது தன்னைக் காப்பாற்றாதா? எனத் தாய் ஏங்குகிறாள்.
“உணவு உடை தந்திடுவேன்-நல்
உயர்கல்வி தந்திடுவேன்-என் சொத்தே
நீ எனக்குத் தருவாயோ-நம்
இனத்தின் விடிவுதனை என்றென்றும்
என் கருவறைக் கூலியாய்”
குடிகார அப்பனுக்குப் பிறந்த தன் குழந்தை இனத்துக்கு விடிவெள்ளியாகத் திகழ வேண்டுமெனக் கூறித் தாலாட்டுகிறாள்.
“மலையகச் சிறார்கள்” கவிதையானது மிக முக்கிய கவனிப்பைப் பெற வேண்டிய சிறுவர் சிக்கியுள்ள சீரழிவுகளைப் பட்டியல் இடுகிறது.அங்குள்ள சிறுவர் அற்பக் கூலிகளாக மாறிவிடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மலையகத்தில் மாத்திரமன்றி மலையகத்துக்கு வெளியே கூட்டிச் செல்லப் படும் ஏராளமான மலையகச் சிறார்கள் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு ஊமைகளாக வாழ்கின்றனர் நகரங்களில் வாழ்வோர் வேலைக்காரச் சிறுவர்களாக மலையகப் பிள்ளைகளையே நாடுகின்றனர்.அவ்வப் பொழுது ஊடகங்கள் மூலம் ஓரிரு அவலங்களே வெளிக் கொண்டுவரப் பட்ட பொழுதும் மிக அதிகமான மலையகச் சிறார்கள் சாத்தான்களிடமே சிக்கியுள்ளனர்.
இந்தத் தொகுப்பில் உள்ள 47 படைப்பாளிகளின் கவிதைகளில் இருந்தும் மலையக மக்களின் பிரச்சினைகளின் மையத்தை அணுகியுள்ள சில கவிதைகளை எடுத்து நோக்கியுள்ளேன். இக் கவிதைகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத்தையும் பெண்களையும் மையப் படுத்தியே எழுதப் பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பாலும் பல பிரச்சினைகள் அவர்களை அரித்துக் கொண்டே இருக்கின்றன.கல்வி , சுகாதாரம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகள் அங்கு புரையோடிப் போயுள்ளன.அங்குள்ள சிறார்களுக்கு முறையாகக் கல்வி வழங்கப் படுவதில்லை.நாட்டின் ஏனைய பிரதேசப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைப்பதுமில்லை.ஆசிரியர் அற்ற பள்ளிக்கூடங்கள், படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறைகளோ சூழலோ இன்மை,பள்ளிக் கூடத்தைச் சென்றடைவதில் உள்ள இடர்கள் என ஏராளம் பிரச்சினைகளால் கட்டுண்டவர்களாக மலையகச் சிறார்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் வாழும் லயன்கள் கூட மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.கூறைகள் சிதைவடைந்து சுவர்கள் கரைந்து விழுந்துவிடக் கூடிய இருப்பிடங்களுக்குள் அவர்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.தண்ணீர் வசதி, மலசலகூட வசதி, பாதை,மின்சாரம் என எதுவுமே அவர்களின் வாழ்விடங்களில் இல்லை. அவற்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றர். ஏனெனில் லயன்களைச் சுற்றியுள்ள நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை. அந்த லயன்களைச் சூழவும் காணப்படும் காட்டுச் செடிகளை வெட்டித் துப்புரவு செய்யும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை.எனவே விச ஜந்துக்களின் தொல்லைகளாலும் அவர்கள் அவதியுறுகின்றனர்.அவ்வாறே மருத்துவ வசதிகள் கூட அவர்களைவிட்டும் தொலைவிலேயே உள்ளன.தோட்டங்களைத் தனியார்மயப் படுத்திய பின்னர் அங்கு நடைபெறும் சமுக மற்றும் சூழல் சீர் கேடுகள் உக்கிரமடைந்துள்ளன. மக்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதோடு மண்ணரிப்பு ,இருப்பிடங்களை இழத்தல் , சூழல் மாசடைதல் எனப் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
மலையக இளைஞர்களில் பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் தலைநகரில் வாழ்ந்து வருகின்றனர். தமது அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஆவணங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருந்த பொழுதும் கைது செய்யப் படுகின்றனர்; அதன் தொடர்ச்சியாக மலையகத்தில் வாழும் அவர்களது குடும்பமும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறது. இனவாதம் மலையக இளைஞர்களை வகை தொகையின்றி வேட்டையாடி வருகிறது.இவற்றுக்குச் சமாந்தரமாகவே இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் மக்களின் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.ஏன் இவை தொடர்பான பதிவுகள்; எடுத்துக் கொள்ளப் படவில்லை? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மலையகப் பெண்கள் தம்மைச் சூழவுள்ள சிறு வெளியை கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். மலையகப் பெரு வெளியை தமது எழுத்தில் கொண்டு வரும் முயற்சியில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது.தமது முன்னோர் வாழ்வு நீளவும் அனுபவித்த அவலங்களும் ஏமாற்றங்களும் இந்தப் பெண்களிடத்தே எதிர்ப்புணர்வையும் கோபத்தையும் தோற்றுவித்துள்ளன.பெண்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்களின் தலை நிமிர்வதையும் அனேக கவிதைகளில் கண்டு கொள்ள முடிகிறது.
இந்தப் படைப்பாளிகளிடம் தமது துயரங்களுக்கு எதிரான கோபம் உள்ளது.அவற்றைக் கவிதையாக்கும் முயற்சியில் மேலும் தம்மை ஈடுபடுத்தினால் இவர்களிடமிருந்து தரமான படைப்புகளை எதிர்பார்க்க முடியும்.வெறும் வார்த்தைப் பிடகடனங்களைத் தவிர்க்க வேண்டியிருப்பதையும் சில படைப்பாளிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.”இசை பிழியப் பட்ட வீணை” தொகுதியின் அட்டைப் படம் ,பக்க வடிவமைப்பு என்பன நேர்த்தியுடன் செய்யப் பட்டிருப்பது நிறைவைத் தருகிறது.தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ள நிழற்படங்களில் அதிகமானவை தேயிலைத் தோட்டங்களையே மையப் படுத்தியுள்ளன.தேயிலைத் தோட்டங்களைக் கடந்தும் மலையகம் விரிந்து செல்வதை நினைவூட்ட விரும்புக்கிறேன்.
(பனிக்குடம் இதழுக்காக எழுதப்பட்டது)
பஹீமாஜஹான் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11 00:00