நூல் அறிமுகம்
நூல் :- இசை பிழியப்பட்ட வீணை
ஒரு குறிஞ்சிக் குரல்
வெளியீடு :- ஊடறு வெளியீடு
www.oodaru.com
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
அண்மையில் ஊடறு வெளியீடாய் வெளிவந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘இசை பிழியப்பட்ட வீணை| என்று பெயரிடப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதியவர்கள் அனைவரும் பெண்கள் 47 பெண் படைப்பாளிகளின் எண்ணங்கள் எழுத்தாகிக் கவிதையாய் தொகுப்பாய் அரங்கேறியுள்ளன. குறிஞ்சி நிலத்துப் பெண்களின் வாழ்வியலைக் கவிதையாய் வடித்துச் சென்ற அன்றைய சங்கச் சான்றோரின் வாரிசுகள் இவர்கள். ஆனால் காலத்தின் கோலங்கள் கவிதைகளில் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியெனப் பேசப்பட்ட பண்டைய அகப்பொருள் மரபு பாடிய வரலாற்றின் செல்நெறியை மாற்றிய புதிய கவிஞர்கள். பாடுபொருளில் பெண்மையின் வாழ்க்கை நிலையை வரைந்து காட்டும் முயற்சி முன்னிற்கிறது. கவிதையை ஆய்வுசெய்யும் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்ய முனைவர். ஆனால் இப்படைப்பாளிகளின் மனதில் ஊற்றெடுத்த உணர்வலைகள் தமிழ்மொழி என்னும் ஊடகத்தில் நுழைந்து வெளிவரும் போது வாய்மொழி இலக்கியம் என்ற பழைய மரபை உடைத்து எழுத்துமொழி இலக்கியம் என்ற பெருங்கடலுள் பாய்வதை உணரமுடிகிறது. முன்னுரையை எழுதிய தினகரன் இதனை நன்கு பதியவைத்துள்ளார். இன்றைய மலையகப் பெண்களின் வாழ்க்கையை எடுத்தியம்;ப வேண்டும் என்ற இலக்கு எல்லாக் கவிதைகளிலும் செறிந்துள்ளது. பெண்ணியம் பற்றிய கருத்துநிலைகள் வளர்ச்சியடைந்து வரும் இந்நூற்றாண்டில் மலையகப்பெண்களின் மனதுட்புகுந்து பார்க்கும் முயற்சியிது. எழுத்தறிவற்ற தேயிலைச் செடியைக் கிள்ளி வாழ்ந்த பெண்களின் உள்ளத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சில கவிதைகள் நயமாகக் கூறுகின்றன.
‘பெண்ணே உன் நிறமென்ன – நீ
பேசும் மொழியென்ன’
வினவும் குரலாய் வரும் கவிதை பெண்ணை உணரவைக்கும் அறிவுரையாய் அணிசெய்கிறது.
‘நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’
எனப் பாரதி கேட்ட கேள்வியை விளங்கிக்கொள்ள ‘இசைபிழியப்பட்ட வீணைகளாய் வாழும் மலையகப் பெண்கள் வாழ்வியல் உதவும் என்பதைப் பலகவிதைகள் உணர்த்துகின்றன. கவிதையின் தலைப்புகள் உள்ளடக்கத்தை ஊடுருவிப் பார்க்கத் தூண்டுகின்றன. ‘சிறகுவிரி’ , ‘புறப்படுவிடியலைநோக்கி’, ‘பெண்ணே உன் நிறம் என்ன?’, ‘தீக்குள் விரலை வைத்தால்’, ‘புதியதலாட்டு’ என்பன குறிப்பிடத்தக்கவை கவிதைகளின் கருக்கள் எழுதவேண்டும் என்ற உணர்வைத் தூண்டியுள்ளன. பெண்மையின் அவலத்தைப் பிறரும் அறிய வைக்க வேண்டுமென்ற ஆவேசம் சிலபடைப்பாளிகளில் வெளிப்பட்டு நிற்கிறது.
‘எங்களின் ஏக்கங்களை
புரிந்து கொள்ளாத சமூகமே
இனி எங்களின்
ஏவுகணைகளை ஏற்றுக்கொள்ளத்
தயாராகுங்கள்.’
மௌனமொழிபேசி வாழ்ந்த மலையகப் பெண்கள் கவிதை மொழிபேச முற்பட்டமை தலைமுறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. கொழுந்துகிள்ளிய விரல்களிடம் வீணையைக் கொடுத்து இசை மீட்டச் சொல்லும் நிலை வந்துவிட்டது. மலையகப் பெண்கள் தங்கள் இருப்பை நிலைநாட்ட வாழ்க்கையை வளம் படுத்த மலைக்குயில்களாய் மாறிவிட்டார்கள். அவர்களின் கவிதைகளில் பாடும் குயில்களின் கன்னிக்குரலின் கவர்ச்சி தெரிகிறது. இருளுக்குள் கிடக்கும் பெண்களை ஒளியைப் பார்க்கத் தூண்டும் சிறிய அகல்விளக்குகளாக இவர்களுடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
‘வீணைகளின் நரம்புகளாய்
பெண்ணினம்
இனிய இசையைத் தரும்’
என்ற பூங்கொடியின் கவிதை பெண்மையின் உன்னதமான இருப்பை எல்லோருக்கும் எடுத்துக் கூறுகிறது. எலுமிச்சையாகப் பிழியப்படும் பெண்மையை வீணையின் இனிய ஒலியாக மாற்றவேண்டி உழைக்க இக்கவிதைப் படைப்பாளிகள் புறப்பட்டு விட்டார்கள். குறிஞ்சியின் குரல் உலகெங்கும் கேட்கும் குரலாகிவிடடது.
‘தேயிலைக்காக வாழ்ந்த நாங்கள்
வாழ்க்கைக்காக
வாழ்வோமா இனி’
என்ற ரா.ஸ்ரீபிரியாவின் கவிதை வழிகாட்ட ஈழத்தில் மலையகப் பெண் படைப்பாளிகளின் இலக்கியப்பயணம் தொடங்கிவிட்டதை இக்கவிதைத் தொகுப்பு உலகிற்கே பறை சாற்றும்.
யாழிலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனம் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-04 00:00