சிங்களக் கவிதைகள் – ‘நன்றி: கலைமுகம் இதழ் 78’
சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், ஓவியரும், மொழிபெயர்ப்பாளருமான சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் விளம்பரத் துறையில் பணிபுரிகிறார். கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு கொடகே சாகித்திய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது
1.நான் : தனித்த சிறு தீவு – விசாலமான பெருநிலம் : நீ
பேரதிர்வு மிக்க பூகம்பமொன்றின் பின்னர்
பெருநிலத்திலிருந்து பிரிந்த
சிறியதொரு நிலப் பகுதிக்கு
தீவெனப் பெயரிட்டு
வசிக்கிறேன் நான் அதில்
சிறியதென்றாலும் இத் தீவில்
குறைவேயில்லை
எரிமலைகளுக்கும், அக்கினி ஆறுகளுக்கும்,
மண் சரிவுகளுக்கும்
அவ்வப்போது சூறையாடிப் போகும்
காட்டாற்று வெள்ளங்களும்,
புயலும்இ சூறாவளியும் கூட
அவ்வாறாக அதிர்ந்து போயிருக்கும்
அந்தி வேளைகளில்
கடற் தீரத்துக்கு வந்து பார்த்திருப்பேன்
உனது பெருநிலத்தில் வீற்றிருக்கும் பெருமலையை
இங்கு போல எதுவும் அங்கில்லை என்பது மாத்திரம் புலப்படும்
தொலைவில் தென்படும் உனது கூரை முகட்டில் கூட
ஒரு துளி மாற்றம்
ஒருபோதும் நேர்ந்திருக்காது
திறந்திருக்கும் ஜன்னல்களின் திரைகள் கூட
ஒருபோதும் திறப்பதுமில்லை மூடுவதுமில்லை
அவ்வப்போது எனது இச் சிறு தீவு
மெதுமெதுவாக பாதிப்புகளுக்கு இலக்காகும்
மென்மையான கடற்கரையின் எல்லைகள்
காணாமலே போயிருக்கும்
கடலோ வெண்நுரைகளைக் கொண்டு வரும்
உடனே கைகளைப் பொத்தி
அவற்றை மீள எடுத்துச் செல்லும்
கவலையை வெளிக்காட்டாமல் புன்னகைக்கிறேன்
எஞ்சியிருக்கும் கடற்கரையில் பாதம் பதிக்கிறேன்
உனது பெருநிலத்தில் வீற்றிருக்கும்
நிச்சலனமான மலையையே பார்த்திருக்கிறேன்
அங்கு எதுவுமே நிகழ்வதில்லை
காற்று தென்றலாகவே வீசுகிறது
தோன்றும்போதெல்லாம் பூக்கள் பூக்கின்றன
உனது வீட்டுச் சாடிகளிலும் பூக்கள் இருக்கின்றனவா
போன்றவை எவையும்தான் தென்படுவதில்லையே
முட்டி மோதி தப்பிப் பிழைத்து
வாழ்வது எனப்படுவதுதான் வாழ்க்கை
நீயோ வாழ்வதில்லை
ஏதோ இருக்கிறாய்
அதுதான் நானறிந்திருக்கும்
நீ
முட்டி மோதுகிறேன்
உடைந்து போகிறேன்
ஒன்று போலவே எப்போதும் இருக்காமல்
வேதனையில் ஆழ்கிறேன்
சாகிறேன்
பிறக்கிறேன்
அதுதான்
நான்
2.துருவங்களிடையே கண்டெடுக்கப்பட்ட கவிதை
நாட்கள் மிக வேகமாகச் சுருங்குகின்றன
சூரியன் கூட மிகத் தாமதமாகவே பிறக்கிறது
பகலோ அகாலத்தில் மரிக்கிறது
தொலைவிலெங்கோ ஈருதடுகள்
ஒன்றாகப் பிணைகின்றன
குளிர்கிறதாம்!
‘இப்போதுதான் மாலை நான்கு மணி இங்குஇ
என்றாலும் ஏழு மணி போல
சூழ்ந்திருக்கிறது இருள்’
‘எமக்கோ இவ் விடிகாலையிலேயே
வெயில் கொதிக்கிறது தீப்பிழம்பாய்
அடித்துப் பெய்கிறது மழை அந்திகளில்
நேற்றும் நனைந்து விட்டோம் நாம் தொப்பலாக’
என்கிறாய் நீ
‘அங்கென்றால் பனிக்காலம்தானே?’
என்றும் கேட்கிறாய்
சர்வதேசத் திரைப்படங்கள், பொன்மாலைப் பொழுதுகள்,
அவ்வப்போது மதுபோதையில் சலசலப்புகள்,
நாட்டுநடப்புகள் – காலநிலைகள் அனைத்துமே
வெறும் தகவல்களாக மாறும்
‘அங்கே இப்போது என்ன நேரம்?’ என்று கேட்கிறாய்
எந்த நேரமானாலும் இரவாகத்தான் இருக்க வேண்டும்
இருள்தானே சூழ்ந்திருக்கிறது
தொலைதூர அழைப்புகளிடையேயான காலம்
மெதுமெதுவாகத் தொலைவாகிறது
மணித்தியாலக் கணக்கில் நீண்ட உரையாடல்கள்
ஹாய், ஹலோ, எப்படியிருக்கிறாய் போன்ற
ஒற்றைச் சொற்களாகச் சுருங்குகின்றன
துயரம், தனிமை, குளிர்இ ஏகாந்தம் அனைத்துமே
‘நன்றாக இருக்கிறேன்’ எனும் வாக்கியத்துக்குள்
ஒளிந்து கொள்கின்றன
துயரத்திலிருந்து மீண்ட பிறகு
ஒருபோதும் தரித்திருக்காது கோபம்
மீள்தல் எனப்படுவது
தப்பித்தல் என்பதற்கான
மற்றுமொரு பெயர் மாத்திரமல்ல
சில குளிர்காலங்களில்
அலையடிப்பதிலிருந்தும் மீண்டு விடுகின்றன
கடலலைகள் கூட