Thanks Boopathi Raj
எத்தனை முறை வாசித்தாலும் முதல்முறை வாசிப்பதுபோன்ற அனுபவத்தைத் தரும் ஒரு படைப்பை எழுதுவதும், காட்சிப்படுத்தப்படும்போது அசுரபலம் கொண்ட காட்சி ஊடகத்தை வீழ்த்தி எழுத்தின் குரலாக மட்டுமே வெற்றிபெற்று ஒரு படைப்பு நிற்பதும் கற்பனைசெய்து பார்ப்பதற்கு மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் யுவான் ரூல்போவின் பெட்ரோ பராமோ. கல்லூரி காலத்தில் செந்தமிழ் கல்லூரி நூலகத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்த போது எதர்ச்சையாக விடியல் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை வாசிக்கத் துவங்கி நூலகத்தில் இருந்த விடியலின் மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் வாசித்த பிற மொழிபெயர்ப்பு நூல்களைவிடவும் நேர்த்தியாகவும் நெருடல் இல்லாமலும் நம்மை நெருக்கமாக உணரவைக்கும் படியான மொழிபெயர்ப்பாக விடியலின் மொழிபெயர்ப்புகள் இருந்தன. அப்போது நான் வாசித்த விடியல் பதிப்பகத்தின் நூல்களின் வரிகளை மனப்பாடமாகச் சொல்லு அளவிற்கு அவை எனக்கு நெருக்கமாக அமைந்தன. இளங்கலை தமிழ் பயிலும் மாணவனுக்கு ஒரு மிகப்பெரிய திறப்பாக விடியலின் நூல்கள் அமைந்தன.
அகஸ்டோ ரூவா பஸ்டோஸ், யுவான் ரூல்போ, ஃபிரான்ஸ் ஃபனானின், அமில்கர் கப்ரால், துணைத்தளபதி மார்கோஸ், நுக்ருமா, லுமும்பா, சால்வதார் அலாண்டே, போர்க்குதிரை, பெல்டியர், முமியா அபு ஜமால் போன்ற பெயர்களும் அவர்களின் எழுத்துக்களை தமிழில் அதுவும் எவ்வித அந்நியத் தன்மையும் இல்லாமல் நெருக்கமாக வாசிக்கவும் கிடைத்தது விடியலின் வழியாகத்தான். விடியலின் மொழிபெயர்ப்புகளைப் பற்றி எனக்குத் தெரிந்த எல்லோரிடமும் நான் பேசியிருக்கிறேன், தமிழின் மொழிபெயர்ப்புகள் குறித்து பேசும் பொழுதெல்லாம் விடியல் குறித்துதான் அதிகம் பேசியிருக்கிறேன். அப்படி என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது விடியலின் மொழிபெயர்ப்பு நூல்கள். அதே வரிசையில்தான் விடியல் வெளியிட்ட தலித் தன்வரலாறுகளையும் வாசித்திருந்தேன். ஒவ்வொரு முறை விடியலின் நூல்களைத் திறக்கும்போதும் அந்த நூலின் அட்டைப் படங்கள், வடிவமைப்பு, மொழிபெயர்ப்பு என ஒவ்வொன்றும் என்னை ஆச்சர்யப்படவைப்பதாகவே இருந்தன.
பிற பதிப்பகங்களின் மொழிபெயர்ப்பு நூல்களின் மொழிபெயர்ப்பாளர் என்ற ஒரு நபரின் பெயர் மற்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் விடியலின் நூல்களின் நூலின் மொழிபெயர்ப்பைச் செழுமைப்படுத்த உதவிய என்று ஒரு பட்டியல் இருக்கும் அந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு நபர்களின் உழைப்பும் பங்களிப்பும் அந்த மொழிபெயர்ப்பை முழுமையாக்கியிருக்கின்றன என்ற அந்தப் பதிவு பின்நாட்களில் மொழிபெயர்ப்பு அறியத் துவங்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்ற புரிதலைத் தந்தது. அந்த கூட்டு உழைப்பின் பயன்தான் காலம் கடந்தும் அந்த நூல்கள் பேசப்படுவது. அந்த வகையில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் பெட்ரோ பராமோ திரைப்படமாக வெளியானபோது தமிழகத்தில் பலரும் விடியலின் பெட்ரோ பராமோ நூலின் அட்டைப் படத்தைப் பதிவிட்டு அதன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்கள். வெளியிடப்பட்டு 25 வருடங்களைக் கடந்து அது பேசப்படுவது என்பது அந்த நூல் குறித்த ஆர்வத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது. பலருக்கு அந்த நூல் கிடைக்காது தேடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்,
அப்படி தேடிக் கண்டடைந்து வாசித்த பலரும் அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை பெரிதும் பாராட்டி எழுதியிருந்தார்கள். இதற்கு முன்னரும் பலர் சிற்றதழ்களில் ரூல்போவின் பேரில் பைத்தியம் பிடித்து கோமாலவிலேயே காணாமல் போயும் சுற்றியிருக்கிறார்கள், இணையமோ, அமேசானோ, கூகுள் டிரான்ஸ்லேட்டோ (இன்று பலராலும்பயன்படுத்தப்படும்) இல்லாத காலத்தில் அன்றைய தமிழ் இலக்கிய உலகம் கண்டிராத ஒரு மொழி நடையை, ஒரு உலகத்தை தமிழ் வாசகனின் கைகளில் தருவதற்காக உழைத்த அந்தக் குழுவின் உழைப்பை நான் இன்றும் வியந்துதான் பார்க்கிறேன். பின் நாட்களில் பெட்ரோ பராமோவை மொழிபெயர்த்த குழுவுடன் அதுகுறித்த அவர்களின் அனுபவத்தை கேட்டபோது அது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என்பதை அறிய முடிந்தது. ரூல்போவின் குரலை தமிழில் அப்படியே கொண்டுவந்திருப்பது என்பது அசாத்தியமான ஒன்று. அந்த அசாத்தியத்தை கனவுகண்ட அதை சாத்தியமக்கிய விடியல் சிவா, எஸ். பாலச்சந்திரன், வி. நடராஜ். கண்ணன். எம், வெ. கோவிந்தசாமி என விடியலின் குழுவின் உழைப்பிற்கான வெற்றிதான் 2001 ல் வெளியான ஒரு மொழிபெயர்ப்பு குறித்து 2024 ல் நம்மைப் பேசவைத்துக்கொண்டிருப்பது. ரூல்போவின் பெட்ரோ பராமோவை மட்டுமல்ல அதைத் தொடர்ந்து ரூல்போவின் மற்றொரு நூலான எரியும் சமவெளியையும் விடியல் வெளியிட்டிருந்தது. பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டிலும் முதல் படியை பாலச்சந்திரன் அவர்கள் மொழிபெயர்க்க விடியல் குழுவின் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள்தான் அதை வரிக்குவரி திருத்தி செப்பனிட்டார்கள். அப்படி குழுவின் உழைப்பால்தான் ரூல்போ தமிழுக்கு வந்தது.விடியலின் குழுவுடன் இருந்த எஸ். பாலச்சந்திரன். வெ. கோவிந்தசாமி போன்றவர்கள் பின்னர் மொழிபெயர்ப்புகள் எதையும் வெளியிடவில்லை.
ஆனால் ரூல்போவை தமிழில் வெவ்வேறு வகையில் வி. நடராஜ் அவர்களும் கண்ணன். எம் அவர்களும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.யுவான் ரூல்போவின் பேரழிவின் நாள் என்ற கதையை வி. நடராஜ் மொழிபெயர்ப்பில் கல்குதிரை இதழில் வெளிவந்தது. (கல்குதிரை 30, மழைக்கால இதழ். அக்டோபர் 2018), பின்னர் கண்ணன். எம் மொழிபெயர்ப்பில் ருல்போவின் கவிதைகள் கல்குதிரை 28 ஆவது இதழிலும், மரணத்திற்கு பின் கல்குதிரை 32 ஆவது இதழிலும் வெளியானது.யுவான் ரூல்போவை மீண்டும் தமிழ் எழுத்துலகம் பேசத் துவங்கியிருக்கிறது, ரூல்போவை மீண்டும் பதிப்பிக்கப்போகிறார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு யுவான் ரூல்போவை அறிமுகப்படுத்திய விடியல் குழுவும், தோழர் விடியல் சிவாவும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்கள்என் முன் அமர்ந்திருக்கிறார் அவர். வேறுயாரும் இல்லை அறையில். அவரிடம் நான் தருகிறேன் கறுப்பு அட்டையிட்ட ஒரு சிறு புத்தகத்தை, கையெழுத்திடும்படி அவரை நான் கேட்கிறேன். அவர் எழுந்து நிமிர்ந்து நிற்கிறார், தன் பேனாவையும் அந்தப் புத்தகத்தையும் எடுக்கிறார்.
இப்பொழுது அந்தப் புத்தகம் உயர்ந்து, பரந்து விரிகிறது, சுவரை எதிர்கொண்டு திறக்கிறது, அவர் தன் பதறும் கைகளால் புத்தகத்தைப் புரட்டத் தொடங்குகிறார். இலைகளின் இடத்தில் மேகங்களைத் தாங்கி மேலெழுந்து வரும் மரங்கள், நிலத்தை விழுங்கும் வன விலங்குகள், மௌனக்காற்றில் நிச்சலனத்தில் வல்லூறுகள், அடிவானத்தை நோக்கிச் செல்லும் துருப்பிடித்த தண்டவாளங்கள். யுவான் ருல்ஃபோ புத்தகத்தை மூடுகிறார், தன் பேனாவை கீழே வைத்துவிட்டு அமைதியுடன் என்னிடம் சொல்கிறார்: “கனவு காண்பதை நிறுத்து- இதுதான் என் பெயர்.”ஃப்ரான்ஸிஸ்கோ ஹெர்னாண்டஸ் (ஆங்கிலம் வழி தமிழில்: விடியல் குழு).