பேரழகி…- கவிதா லட்சுமி – நோர்வே

மூலம் – மாயா ஏஞ்சலோ
மொழியாக்கம் – கவிதா லட்சுமி

ஒப்பற்ற பெண்ணழகி
. . .
எனது ரகசியங்களை,
எனது ஒப்பற்ற பேரழகை,
அறிந்து
உலகத்தின் அழகிய பெண்களெல்லாம்
ஆச்சரியப்படுகின்றனர்

சமூக வழக்கை ஒத்திருக்கும்
ஒரு விளம்பரப்பெண்ணின்
கவர்ச்சியோ கட்டழகோ
கொண்டவள் அல்ல நான்

ஆனால்,
நான்
ஒப்பற்ற பேரழகியென்று
சொல்லும் போது,
அதை
அவர்கள் பொய்யென நினைக்கிறார்கள்

இங்கே
என் கைக்கெட்டிய
தூரத்திற்தான் இருக்கிறது
எனது ஒப்பற்ற பேரழகு..
எனது இடையின் நிலையில்
எனது துடுக்கு நடையில்
எனது உதட்டின் வளைவுகளில் இருக்கிறது

ஒப்பற்ற அழகி
நான் ஒரு பெண்.
நான் ஒப்பில்லாப் பேரழகி.

மிக இயல்பாக, உங்களுக்கு ஏற்றபடி
நான் ஒர் அறைக்குள்
நுழைகிறேன்.
அங்கிருக்கும்
ஒரு மனிதனை நோக்கி நகர்கிறேன்.
அம்மனிதனின் அருகே
இருந்தவரெல்லாம்
எழுகின்றனர்
மண்டியிடுகின்றனர்
பின்னர்
தேன்கூட்டின் தேனீக்களாய்
என்னை மொய்க்கின்றனர்.

ஏனென்பதற்குக் காரணமாக,
என் கண்களில் தகிக்கின்ற நெருப்பையும்
என் பற்களில் எழுகின்ற ஒளிர்வையும்
என் இடை தருகின்ற அசைவையும்
என் கால்களில் இயைந்திருக்கும் இன்பத்தையும்
நான் காட்டுகிறேன்

ஒப்பற்ற அழகி – நான்
ஒரு பெண்.
நான் ஒப்பில்லாப் பேரழகி.

என்னிடம் என்ன உள்ளது என்று
ஆண்களெல்லாம்
ஆச்சரியப்பட்டுகின்றனர்
அவர்கள் பலவாய் முயற்சித்தும்
என் உள மர்மத்தை,
புதிரை, இரகசியத்தை அறிந்துகொள்ள
முடியாதவர்களாக இருக்கின்றனர்.
எனது உள மர்மத்தை அவர்களுக்குக்
காட்டவே முயற்சிக்கிறேன்
ஆனாலும்
அவர்கள் புரிந்தபாடில்லை.

ஏனென்பதற்குக் காரணமாக
என் முதுகின் நிமிர்வை
என் சிரிப்பில் ஒளிரும் சூரியனை
என் மார்பகங்களில் எழும் அலைகளை
என் பாங்கில் உள்ள நளினங்களை
நான் காட்டுகிறேன்

ஒப்பற்ற அழகி – நான்
ஒரு பெண்.
நான் ஒப்பில்லாப் பேரழகி.

ஏன் நான் தலைகுனிவதில்லை என்பதை
நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள்.
நான் சத்தம் செய்வதில்லை
துள்ளி ஆர்ப்பரிப்பதில்லை
குரல் அதிர அரற்றும் தேவை எனக்கில்லை
உன்னை நான் கடந்து செல்கையில்
நீயாகவே எனக்காய்ப்
பெருமிதப் படும்படி செய்கிறேன்

ஏனென்பதற்குக் காரணமாக,
எனது குதிக்கால் ஓசையை
எனது மயிற்கற்றைகளின் சுருளை
எனது விரிந்த உள்ளங்கைகளை
எனக்கான எனது அக்கறையின் அவசியத்தை
நான் காட்டுகிறேன்

ஏனென்றால்,
ஒப்பற்ற அழகி – நான்
ஒரு பெண்.
நான் ஒப்பில்லாப் பேரழகி.
🖤
பாரதியின்
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
என்ற பாரதி வரிகளின் அதிர்வினைத் ஒத்து
இருக்கிறது மாயா ஏஞ்சலோவின் “Phenomenal Woman” ” என்ற கவிதை.
. . .


Thanks https://www.facebook.com/KavithaNorway

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *