மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள் – அன்பாதவன் – (இந்தியா)

“வாசகரே உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும் போதுஇ அதற்காக முந்தைய ஆண்டுகளில் உங்களுடையவற்றை விட எளியஇ ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன. அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்” (பி.எச்- டேனியல், எரியும் பனிக்காடு- இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையில்)

ஊடறு வெளியீயாக, வந்திருக்கும், ‘மலையகா’ மலையகப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பாக, வாசகர் கரங்களில், 23 பெண் படைப்பாளிகளின் 42 கதைகள் அனைத்து கதைகளும் இலங்கையின் தேயிலைத் தோட்ட வாழ்வினைப் பின்புலமாகக் கொண்டவை. அதனாலேயே பல கதைகளின் கருக்கள் / கதைப் பின்னணியில் ஒன்று போலவே இருப்பதுபோலத் தோன்றுகிறது. உன்னதமான வெளிப்பாட்டுத் தன்மையில் வாசகரை ஈர்க்கும் அழகியல் குறைவெனினும், எளிய மக்களின் அவல வாழ்வினை, கதையின் கருப்பொருளாகத் கொண்டு, எளியோரின் நல்வாழ்வினை நோக்கியப் புத்துலகப் பயணம் என்ற உன்னத நோக்கந்தான், மலையகா’ கதைகளின் சிறப்பு பெருமிதம் எல்லாமும்!

‘மலையகா’ கதைகளின் அடிநாதம் தேயிலைத் தோட்டம், அதன் உற்பத்தி, தனியார் முதலாளிகளின் வளர்ச்சி, எளியத் தோட்டத் தொழிலாளர்களின், வயிற்றுப்பாடு, மருத்துவச் சிகிச்சை, மற்றும் கல்விக்கானப் போராட்டமெனில், இக்கதைகளுக்கு மூலசக்தியாக, ஆணிவேராக இருப்பது ‘சிறுகதை சிற்பி’ புதுமைப் பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி.’ சிறுகதை எனலாம். திருநெல்வேலி ஜில்லா, வாசவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வறுமையின் சாட்டையடி தாளாமல், பிழைப்பு தேடி இலங்கையின் மலையகத்துக்கு பயணப்படும் கதை தான் ‘துன்பக்கேணி’.
மலையகா-வின் பெரும்பான்மையாளக் கதைகளும் துன்பக்கேணியில் சிக்குண்டு போராடி, அல்லது கிடைத்த வாழ்வை ஏற்று, அங்கேயே அட்டைகளுக்கு தம் ரத்தத்தைக் கொடுத்து, மழை, பனி, வெய்யில் என இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளவியலாமல் அங்கேயே சாவது தான்! ஆம்! மரணம் ஒன்றே அம்மக்களுக்கு பெரு விடுதலையாக அமைகிறது.

19ம் நூற்றாண்டின், கிராமத்து வாழ்க்கையை, தலித் மக்களின் வறுமையைப் படம் பிடித்து காட்டும் புதுமைப்பித்தன், மலையகத்தின் தேயிலைத் தோட்டம் எனும் எஸ்டேட், மருத்துவமனை, அதிகாரிகளின் குடியிருப்புகள், கோழிக்கூடு மாதிரியிலானக் கூலித் தொழிலாளிகள் வாழ்விடங்களோடு கூடவே, அன்றைய நாட்களில் அங்கு நிலவிய ஏற்றத் தாழ்வு ஆதிக்க அடக்குமுறை ஆகியவற்றை தன் எழுத்தால் காட்சிப் படுத்துகிறார். ‘மலையகா’ – வின் 42 கதைகளும் கூறியக் செய்தியைத் தான், மிகச் சமீபத்தில், தமிழகத்தின் கடை கோடியில் இருக்கின்ற, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளாரின் அவல வாழ்வு உறுதி செய்கிறது. காலங்கள் மாறினாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் மாறாத ‘அதே ருசி’ அதே தரம், தான்.

உள்நாட்டு மக்களுக்களின் நுகர்வுக்கென விநியோகிக்ப்படும் ‘ ‘DUST TEA – எனும் மட்டரகத் தேயிலைத் தூளைப் போலவே, இலைக் கிள்ளுபவர்களுக்கும் DUST LIFE – யே முதலாளிகள் இன்றும் சாத்தியப் படுத்துகின்றனர்.பெரும்பாலானப் கதைகளின் நடை, மொழி, வடிவம், செய்நேர்த்தி ஆகிய நுணுக்கங்கள் யாவும் படைப்பாளியின் உள்ளுக்குள் இறங்கிய வாழ்வின் சாரமும், அனுபவமும் முடிவு செய்யும், மட்டுமின்றி, அவர்தம் அனுபவமும் OBSERVATION- – ம் தீர்மானிக்கின்றன என்பதையே இச்சிறுகதைகளின் வழியாக வெளிப்படுகின்றன.

இந்தியாவைப் போலவே, இலங்கையும் ஆங்கிலேயர்களின ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட 19ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரையிலும் தேயிலைத் தோட்டத்து வாழ்வியலான உழைக்கும் கூலிகளான தமிழ் மக்கள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடனான வாழ்வு, உழைப்புக்கேற்ற ஊதிய மறுப்பு, சுகாதாரக் குறைபாடுகள், போதுமான மருத்துவ வசதியின்வீமை, உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதமின்மை, பாலியல் வன்கொடுமை, உழைப்பு சுரண்டல், தாயகம் செல்ல அனுமதி மறுப்பு என குறிப்பிட்ட அடைவுகளுக்குள்ளேயே மலையகா-வின் கதைகள் சுழல்கையில் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கையில், கூறியது கூறலும்,சில சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருப்பதும், படைப்பில் பலவீனக் கதைகளும் இணைக்கப்பட்டிருப்பதும் வாசகனுக்கு சலிப்பூட்டினாலும், அந்த கசந்த வாழ்வு தான் நிஜம் என்பதும் புரிகிறது.


குடும்பத் தலைவனானக் கணவன் அகால மரணம் தழுவிட, மனைவியே, குடும்பம், குழந்தை என சிலுவை சுமப்பது பல கதைகளிலும் நிகழ்கிறது, கூலித் தொழிலாளர்- கங்காணி – துரை (முதலாளி அல்லது முதலாளியின் பிரதிநிதி) – இம் மூவருக்குள் சுற்றி வருகிற கதைகளில், முதலீடு, இலாபம், குறைந்த கூலி என்பவை சொல்லப்படாமல் உணர்த்தப்படுகின்றன. தேயிலைத் தோட்ட வாழ்வியலில், ஆண்களின் வாழ்க்கைப்பாடு, உழைப்பு, உடலின்பம், மது, நோய், போராட்டம் என்ற திசைகளில் பயணிக்கிறதெனில், பெண்கள், அதே வாழ்வியலில் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் ஒடுக்குமுறைகளையும், மலையகா-வின் பல்வேறு கதைகள் உளவியல், உடலியல், சமூகவியல், பண்பாட்டுவியப் பின்னணியில் பேசுகின்றன. சமூகக் காரணிகள் உழைக்கும் பெண்கள் மீது மிக வலுவான தாக்கத்தினைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. “தேயிலைப் பூக்க ஆரம்பித்து விட்டது என்றால் மலேரியா தேவதைக்குப் பசி என்று அர்த்தம். நீர் வீழ்ச்சியிலும் ஜலம் வற்றி விடும். வேலையும் அதிகம். எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல கூலிகளும் மடிவார்கள். அங்கேயே பல காலம் தங்கிப் பழகிப்போன கூலிக்காரர்களைப் புலி அடித்துத் தின்றால் அதற்கும் மலேரியாக் காய்ச்சல் வந்து விடும்” (புதுவீப் பித்தன் – துன்பக்கேணி – சிறுகதையில்)

‘மலையகா’ காட்டுகிற தேயிலைத் தோட்ட வாழ்வியல் அனுபவங்கள் பெருவாரியானத் தமிழ் வாசகர்களுக்கு புதியன, யதார்த்த வகை, நடை, எளியவர்களின் வாழ்வை வாசகர் கண்முன் நிறுத்துகிறதெனில், மொழி வாசனுக்குள் ஊடாக சென்று புதிய தரிசனங்களைக் காட்டுகிறது.
‘மலையகா’ கதைகளின் பின்புலமாகிய ‘தோட்டங்கள்’ எனப்படும் ESTATE – இயங்கி கொண்டே இருக்கிறது. அது சிக்மகளுர் பிரதேசத்தில் காஃபி தோட்டங்களாக ,கேரளத்தில் ஏலக்காய், இரப்பர் தோட்டங்களாக…. வேறு முகம் காட்டக் கூடும். ஆனால் வாழ்வியல் என்றும் ஒன்று தான். அந்த உலகத்தின் இயக்கம் நிற்கவோ, மாறவோப் போவதில்லை.

‘மலையகா’ – கதைகள் வழியாக, வாசகன் நோக்குங்கால், இந்தக் கதைகள் மட்டும் தேயிலைத் தோட்டத் தொழிலை பெருமிதமாகவும், தோட்டத் தொழிலாளர்களை, பெருமை மிக்க கதாபாத்திரங்களாக, ஆளுமை நிறைந்த மனிதர்களாக, சிறந்த பேராளிகளாக, மாற்றுப் பண்பாடுகளுடன் இசைந்து வாழும் விசால மனங்கொண்டவர்களாக தேயிலைத் தோட்டத்தின் ஆண்களையும், பெண்களையும் அவர்களின் வாழ்க்கையையும் கடைசி மனிதன் கோணத்திலிருந்து பார்க்கின்றன “இன்றும் ஒரு நாளைக்ககு 18 கிலோவிலிருந்து 22 கிலோ தேயிலைக் கொழுந்து எடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் மலையகப் பெண்கள், ஆண்களை விட இரண்டு மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது” (மீனாள் நித்தியானந்தன், இலக்கியங்களில் பெண்மொழியும் புனைவும் பக்- 256) உழைக்கும் மகள் ஒருத்தி, தன் மீதான அடக்குமுறைகளை, அலட்சியபாவங்களை அவமான வலிகளைத் தாங்கிக் கொண்டால் ‘தெய்வம்’ எனக் கொண்டாடும் சமூகமே, அவள் கோபத்தை, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினால அடங்காப் பிடாரி என்றும் பேய் என்றும் அழைக்கப் படுகிறாள். மலையகப் பெண்களின் வாழ்க்கையும் இவ்வாறே கழிகிறது. மலையகத்தின் பிரத்யேக மொழியாளுமை வாசகனை கதைகளுக்குள் ஈர்ப்பதில் வியப்பேதுமில்லை.

லொரி (Lorry)
கல்வித் திணைக்களம் (Edication Department))
டொக்டர் (Doctor)
கதிரை (Chair)
எம்புலன்ஸ் (Ambulance)
இயக்கி (Remote)
ரோயல் (Royal)
கேம்பிரா ( CAMRA )

தீவிரமானப் போராட்டம் குறித்த அரசியல் அறிவின் பின்புலம் இல்லாதவர்களாய், மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை பல கதைகளிலும் பதிவாகின்றது. கருத்தரவர்க்க மனோபாவத்துடன் கும்பல் மனோபாவத்துடனும் பிரச்னைகள் பெரிதாகும் போது விலகி, ஓடி, ஒளியும் பல கதை பாத்திரங்கள் சிங்களச் சிறுவனோ தமிழனோ, மானுடர்க்குள் மொழிபேதம் இல்லாமையை- செந்தாமலை- கதை விவரிக்க.“வீட்டிலுள்ள குளிர்ச் சாதனப் பெட்டி நவீனரக அலமாரிகள் அவற்றை நிறைத்துள்ள அலங்காரப் பொருட்கள் யாவும் அவளுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை” – தாய்ப் பாசம் கதை நாயகிக்கு பிள்ளைகளின் முகங்களைக் காண்பது தான் இன்பம் எனும் உறவுமேன்மையின் உன்னதம் விளக்குகிறது. போதுமான மருத்துவ சிகிக்கைகளும், ஆம்புலன்ஸ் உதவிகளும் கிடைக்காத சூழலே மலையகத்தில் எனினும், … கடும் நோய்களுக்கும் பூசாரியை அழைத்து விபூதி பூசினால் சரியாகி விடும் என நம்பும் அப்பாவி மக்களின் மூட நம்பிக்கையும், தாய் மண்ணிலிருந்து கொண்டு சென்ற மாரியம்மன் வழிபாடு போன்ற பண்பாட்டு பதிவுகளும் நூலில் உண்டு.. கூடவே, ஒரு படைப்பாளியின் பெயர் சற்றே அதிர்வையும் தந்தது ‘சுகந்தி வெள்ளையக் கவுண்டர்’ எங்கே சென்றாலும் தம்மோடு சாதியையும் துணைக்கழைத்தது செல்லும் போக்கு மலையகத் தமிழர் மத்தியிலும் இருப்பது வேதனையா… விநோதமா…?

உழைப்பு சுரண்டலுக்கெதிரான உதிரிகளின் கதைகளில், முறையான சரியான அரசியல் பார்வையின்மையால், போராட்ட அரசியலின்றி, வெறும் கூச்சல்களாக, கூட்டங்களின் கோஷங்களாக தோல்வியில் முடங்கிப் போகின்றன. தமிழிலக்கியத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சீந்துவாரற்ற ஜனங்களின் கதைகளை தொகுப்பாக கொண்டு வந்ததற்காக ஊடறு வரலாற்றில் இடம் பிடிக்கிறது.

நன்றி – புதிய புத்தகம் பேசுது, இதழ் மலர் 22 , செப்டம்பர் 2024


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *