வானம் நோக்கியும், வாழ்வு நோக்கியும் – தேவா,ஜேர்மனி,

ஒவ்வொரு 2ஆண்டுகளுக்கு ஒருதடவை எங்கள் நகரத்தின் அண்மையிலுள்ள சிறு நகரமொன்றில் வீதிநாடகங்கள் என்ற தலைப்பில் நடனங்கள்,சர்க்கஸ்கள், நாடகங்கள் ,நகைச்சுவையோடிணைந்த நாடகங்கள்,இசைகள் என கலை-அரசியலை உள்வாங்கி நிகழ்வுகள் நடாத்தப்படுகிறது.  பிரபலங்களோ அல்லது கண்ணைபறிக்கும் கவர்ச்சிகாட்சியமைப்புக்களோ இன்றி யாவரும் நுகரும் வகையில் அந்த நகரத்தின் முக்கிய,மக்கள் கூடும் மையப்பகுதிகளில் பல கலைஞர்களும் தம் திறமைகளை முன்வைக்கின்றனர். 3-4நாட்களாக தொடரும் இந்த வீதித்திருவிழாவின் நிகழ்வுகள் நகரின் பல்வேறுபட்ட பகுதிகளில் நிகழ்வதால் அங்கு கூடும் மக்களுக்கு தாம் விரும்பும் கலைநிகழ்வுகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கலைஞர்கள் பார்வையாளர்களை பங்குபெற வைப்பதும் அதன் சிறப்பு.  தனியாளாகவோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குழுவாகவோ இயக்கப்படும் காட்சிகளில் மொழி தேவையற்று ஆனால் யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய உடல்அரசியலால்  உருவாக்கம் பெற்றிருக்கிறது. உடலின் ஆற்றல்கள் வியக்கவைக்கின்றன. கூட்டத்தினிடையே வண்ண முகமூடிஅலங்காரங்களோடும், உடைக ளோடும் கால்களில் மிக நீண்ட தடிகளை(Stillt walking) பொருத்தியபடி சில கலைஞர்கள் தெருவில் வலம் வருகின்றனர். கலை-கற்பனைத்திறமை யின் சிறப்பு பல கோணங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. நேரடியாக பார்க்கஅனுபவிக்க முடிந்த அந்த உடல் திறமைகள் பார்வையாளர்களின் ஓங்கிய கைதட்டலால் பாராட்டப்படுகிறது


கலையால் இனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய ஆற்றல் இருக்கிறது. மதத்தால்,மொழியால்,கொள்கைபிடிப்பால் இணையவே முடியாதபோதும் உடல்மொழியால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இயலும்.மனிதர்க்கு பொதுவான மொழி என ஒன்று உண்டாயின் அது உடல்மொழிதான். இங்கு உடலரசியல் பேசப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் பெறுமதி பல்லின மக்கள் இணைந்து வாழும் சூழலில் சகிப்புத்தன்மை, சமத்துவம், போன்றவைகளால் அறியப்படும்.கலை பல இன,நிற,மொழி,மதபேதங்களையும் மறக்கவைத்து,அது ஒவ்வொருத்தர் மனதுள்ளும் புகுந்து உலுக்கும் சக்தியை கொடுக்கிறது.  ஓவியத்துக்கும்,கைவினைஞருக்கும் இது பொருந்தும்.

நாடுகளுக்கிடேயான பிரபலகால்பந்து விளையாட்டுகளிலே இன,நிறவெறுப்பை உமிழும்சந்தர்ப்பங்களை அறிந்திருக்கின்றோம்.. பொதுவெளியில் தமக்கு மேல் எறியப்பட்ட துவேசத்தைப்பற்றி விளையாட்டுக்காரர்கள் மீடியாவில் கூறியிருக்கின்றனர். உலகத்தின் இன,மத,நிற ஒற்றுமைக்கு விளையாட்டுக்கள் வழிவகுக்கின்றன என்பது பொய். அது ஒரு போலிப்பார்வை. ஆனால் இசைக்கு,அங்கஅசைவு நாடகத்திற்கு, நடனத்திற்கு ,ஓவியத்திற்கு, சிற்பத்திற்கு,கைவினைஞருக்கு சகலரையும் அணத்துப்போகும் வலிமை உண்டு.       

மொழியற்ற அங்கஅசைவுகளின் வழியே புரியக்கூடிய உலகுமொழி எனில் அது உடல்மொழிதான். இம்மொழியின் உன்னதபரப்பே இவ் விழாவின் அடிநாதமாக தெரிகிறது.

பிரான்ஸ்நாடு இச்சிறு நகரின் அண்மையில் இருப்பதால், அந்நாட்டு கலைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனாலும் மற்ற ஐரோப்பிய நாட்டுதிறமைகளும் இங்கு பங்கு பெறுகின்றனர்.

கலைநிகழ்வுகள்மூலம் சிக்கலான பல விடயங்களை எளிதாக மக்கள் மனதில் உறையவைக்கவும்-சிந்திக்கதூண்டவும் முடியும். இந்த வீதிவிழாவில் என்னை மிகவும் கவர்ந்த இரு நாடகங்களை குறிப்பிட்டாகவே வேண்டும்

ஒன்று முதுமை பற்றியது சோகமான இசை பிண்ணனியில் ஒலிக்கிறது. ஒருவரின்பின் ஒருவராக 60 க்கும் 70க்கும் இடைப்பட்ட ஆண்களும்,பெண்களுமாக ஏழுபேர். கையில் பெரியசாப்பாட்டுதட்டை(அதிலே ஆயத்தப்படுத்தப்பட்ட பாண், குடிநீர்,பழம் உள்ளன)ஏந்தியபடி வானத்தை நோக்கியபடி வரிசையாக வருகின்றனர். திடீரென வரிசையிலுள்ள மூன்றாமவர் வரிசையைவிட்டு விலகி இடதுபுறமாக நடக்கிறார்.அவருக்கு பின்னால் வந்தவரும் அவரையே தொடர்கிறார்.ஐந்தாவதாக வந்துகொண்டிருந்தவர் முன்னால் போய்க்கொண்டிருந்தவரை காணக்கிடைக்காததால் மற்றவர்களை தேடி வலதுபக்கமாக திரும்புகிறார். இன்னும் சிலபேர் அவரை தொடர்கின்றனர். இவர்கள் மீண்டும் திரும்பி நடக்கும்போது கூடிநிற்கும் கூட்டத்தை பார்த்து புன்னகைக்கின்றனர்.உணவுத்தட்டில் இருக்கும் உணவை, பானத்தை மக்களுக்கு அன்போடு வழங்க முயல்கின்றனர்.  வரிசை குலைந்து ஆளுக்கொரு பக்கமாக போகின்றனர். மீண்டும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண்டுபிடிக்கின்றனர். சிலசமயம் அவசரமாக நடக்க முயல்கின்றனர். கால்கள் தடுமாற சமாளித்துக் கொள்கின்றனர்.  திரும்பவும் வரிசைக்கு வந்து வந்தவழியே திரும்புகின்றனர்.

பிண்ணனியில் இசை இன்னும் சோகத்தை தந்தபடி.

முதுமையின் அர்த்தம் என்ன?மரணம் நெருங்கும் பயமா? அதேசமயம் அதன் பெறுமதி.அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற கேள்விகள் அவர்களை கவனிக்கும் சமயத்தில் நமக்குள் பெருகிக்கொண்டே போகின்றன.  சமூகத்தை பார்த்து இரந்துநிற்கும்- அன்பு தேடும் கண்கள் என இன்னும் பல வினாக்களை இந்நாடகம் கவிதையாக முன்வைத்தது.

முதியோரை பற்றிய அக்கறையை சமூகத்துக்கு உணர்த்த துணிகிறது. வானத்தை நோக்கியபடி, உணவிணை கையேந்தி, வரிசை குலைந்து பார்வையாளர்களைப்பார்த்து புன்னகைத்தல் போன்ற நாடகபாணி நமக்கு வயோதிகத்தின் அன்பை மனதுள் அள்ளி தெளிக்கிறது.இழந்துபோன பெற்றோரை ,அவர்களின் பெற்றோரை நம்மூள் மீள நினைவூட்டி நெஞ்சை கனக்கவைத்தது.கண்ணீரையும் நிறைத்தது.

வயோதிகத்தை, மரணத்தை இயல்பாக ஆனால் காத்திரமாக முன்மொழிந்தது இவ்வீதிநாடகம். மிக சாதாரணமாக சொல்லவேண்டியதை சொல்லி இந்த அசைவுகள் உணர்த்தின.

இன்னொன்று அகதிப்பயணமும் ஐரோப்பாவின் வெறுப்புசெயல்களும்

ஒரு பெரிய தகரப்பெட்டி குழுமியிருந்த கூட்டத்துக்கு முன்னால் நகர்ந்து வருகிறது.  உள்ளே குழந்தைகள்,பெண்கள்குரல்கள் மெலிதாக கேட்கின்றன.ஒரு ஆண்மட்டும் அடிக்கடி வெளியில் தலைநீட்டி நாலாபக்கமும் பார்க்கிறான்.சிலசமயங்களில் பெட்டிக்குள்ளிருந்து நீளும் கரங்களில் சிலபணநோட்டுக்கள்.அவன் அவைகளை பிடுங்குகின்றான். கடல்அலைகளின் சத்தம் பிண்ணனியில் ஒலிக்கிறது. தீடீரென இரைச்சல்.பலரும் பெட்டிக்குள்ளிருந்து வெளிவருகின்றனர். பச்சிளங்குழந்தையோடு ஒரு தாயும் காணப்படுகின்றார். குழந்தை அழ மற்றவர்கள் பயந்து வெளியாருக்கும் தங்கள் வரவு தெரிந்துவிடுமோ என நடுங்குகின்றனர். பெட்டிக்கு பக்கவாட்டில் மணல் வீசப்படுகிறது. இப்போ. இவர்கள் பயத்தோடு பதுங்கி பதுங்கி வெளிவருகின்றனர். நிற்கின்றனர். குழந்தையின் குரல் மேலோங்கி வர வேட்டுச்சத்தம் கூடுகிறது. இன்னொரு பெட்டிக்குள் அனைவரும் புகுந்துகொள்கின்றனர். அதற்குள்ளே மேலும் இரைச்சல்கள்.அது அசைந்து விலங்குகளை அடைத்துவைக்கும் ஒரு கூண்டுக்கு முன்னால் நிறுத்தப்படுகிறது. பெட்டிக்குள்ளிருந்து அகதிகள் வெளிவர உத்தரவு வருகிறது. பலரும் பெரும் தடிகளோடு அவர்களுக்கு முன்னால் நிற்கின்றனர். அகதிகள் பெரும் பீதியோடு பலதிசைகளிலும் தப்பியோட முனைகின்றனர். ஆனால் ஆயுதமேந்திய அரசுராணுவம் அவர்கள் தப்பமுடியாதபடி அரணாய் நிற்கின்றனர். அகதிகள் மண்ணில் புரண்டு அழுகின்றனர்.பேச்சற்று திகைத்து நிற்பதோடு நாடகம் முடிவடைகிறது.

ஒவ்வாரு நிகழ்விறுதியிலும் கைதட்டி பாராட்டும் பார்வையாளர்கள் இந்நாடகம் முடிந்தும் சில நிமிடங்கள் மெளனமாய் அமர்ந்திருந்தது இக்கலைவடிவத்துக்கு கிடைத்த பாராட்டு என்றே சொல்லவேண்டும்.

இந்த இருபது நிமிடவீதிநாடகம் ஒரு பத்து பேரோடு மொழியே அற்று பிண்ணனி இசையில் நடந்தது. பார்வையாளர்கள் மிக மிக மெளனமாக நாடகத்தை நோக்கியிருந்தனர்.சிறுவர்கள் கூட முண்ணனியில் தரையில் அமர்ந்து நாடகத்தை அவதானித்தனர்.

அகதிப்பயணத்தின் அவலங்களை, ஐரோப்பாவின் கெடுபிடிகளை நாம் மீடியா வழியாக தெரிந்திருந்தாலும், நேரடியாக நடிப்புவழியாக அவைகளை அனுபவிக்கும்போது மனதுக்குள் அத்துன்பம் நுழைந்து கண்ணீரை பெருக்குகிறது.

பிரச்சாரஉத்தியின்றி மிக எளிமையாக இயலாமைகளை-துன்பங்களை-வேதனைகளை பக்குவமாக உணரவைப்பதில் இவ்வீதிநாடகங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன.

27.07.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *